World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The German media's chauvinist campaign against Greece

ஜேர்மனிய செய்தி ஊடகத்தின் கிரேக்கத்திற்கு எதிரான தேசியவாதப்பிரச்சாரம்

Ulrich Rippert
10 March 2010

Back to screen version

கிரேக்கத்திற்கு எதிராக சர்வதேசசெய்தி ஊடகத்தின் சில பிரிவுகளில், குறிப்பாக ஜேர்மனிய ஊடகத்தில் இயக்கப்படும் தேசியவாத பிரச்சாரம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வங்கிகள் ஆணைக்கேற்ப வந்துள்ள கடும்சிக்கன திட்டத்திற்கு எதிராக ஏராளமான எண்ணிக்கையில் கிரேக்க தொழிலாளர்கள் தெருக்களில் ஆர்ப்பரித்த பின்னர், பெருகிய முறையில் அச்சுறுத்தும் குரலைக்கொண்டுள்ளது.

அத்தகைய கருத்துகளில் குரல் எப்பொழுதும் ஒன்றுதான். கிரேக்க மக்கள் மீது முதலிலும் முக்கியமானதுமாக கிரேக்க நிதிய நெருக்கடிக்கான குற்றத்தை கூறுதல், அவர்கள் சோம்பேறிகள், தன்முனைப்பு உடையவர்கள் என்று கூறுதலாகும். பல ஆண்டுகளாக அவர்கள் தங்கள் தகுதிக்கு மேலாக வாழ்கின்றனர். அரசாங்கத்தின் மோசமான வழக்கங்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர், ஓய்வூதியம் பெறுவதை ஊதியத்துடனான வருமானத்திற்கான முதல் வாயப்பாக பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் குறிப்பிட்டன.

இத்தகைய தம் நாட்டு மக்களை திருப்தி செய்யும் பிரச்சாரத்தில், செய்தி ஊடகம் இழிவானமுறையில் பல நேரமும் இருப்பதைப் போலவே, Springer வெளியீட்டு நிறுவனத்தின் தயாரிப்பான German Bild நாளேடு முன்னணியில் உள்ளது. கடந்த வெள்ளியன்று கிரேக்க பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ பேர்லினுக்கு வந்தபோது, Bild ன் ஆசிரியர்குழு ஒரு தீய, திமிர்த்தன பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டது. "அன்புள்ள பிரதம மந்திரி அவர்களே" என்ற தலைப்பில், "இந்த சொற்களை நீங்கள் படிக்கையில் உங்கள் நாட்டில் இருந்து பெரிதும் வேறுபட்ட ஒரு நாட்டில் காலடி வைத்திருப்பீர்கள். நீங்கள் ஜேர்மனியில் உள்ளீர்கள்." என்று செய்தித்தாள் எழுதியது.

கிரேக்கத்தில் போலல்லாமல் ஜேர்மனியில் பெரும்பாலான மக்கள் சோம்பேறிகளாக திரிவதில்லை என்றும் 67 வயது வரை வேலைக்குச் செல்கின்றனர் என்றும் தலையங்கம் கூறியது. மருத்துவமனையில் ஒரு படுக்கையில் இடம் பெற கிரேக்க மக்கள் ஆயிரம் யூரோக்கள் இலஞ்சம் கொடுக்க வேண்டும், "கணவரை அடையமுடியாத தளபதிகளின் மகள்களுக்கு" கிரேக்க அரசாங்கம் ஓய்வூதியம் கொடுக்கிறது" என்ற குற்றச்சாட்டுக்களும் மற்றைய அவதூறுகளில் அடங்கியிருந்தன.

"நாங்கள் காலையில் சீக்கிரம் எழுந்து நாள் முழுவதும் உழைப்பதால்", ஜேர்மனிக்கும் அதிக கடன் இருந்தாலும், அதைத் தீர்த்துவிடுகிறோம் என்று Bild எழுதியது.

சராசரி கிரேக்க அல்லது ஜேர்மனிய தொழிலாளி பெரும் ஊதியத்தை விட பல மடங்கு அதிகம் நல்ல ஊதியம் பெறும் Bild ஆசிரியர்களுக்கு பதில் எழுதத் தோன்றுகிறது. Bild இல் இருக்கும் நபர்கள் பெருமையடித்துக் கொள்ளும் "ஜேர்மனிய நல்லியல்புகள்" எளிதில் விரிவாகப்பட முடியும்.

சமூகநல விரோத ஹார்ட்ஸ் விதிகளின் காரணமாக, ஜேர்மனியில் சராசரி ஊதியம் வியத்தகு முறையில் குறைந்துவிட்டது. மக்கள் இப்பொழுது மணிக்கு 5 யூரோக்களுக்கும் குறைவான ஊதியத்திற்கு வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

அதே நேரத்தில் சுகாதார பாதுகாப்பு முறையில் இரு அடுக்குகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அது குறைவூதியக்காரர்களை தரம்மிக்க பாதுகாப்பில் இருந்து அண்ணளவாக ஒதுக்கிவிடும்.

ஓய்வூதியங்கள் என்று வரும்போது, ஜேர்மனி தளபதிகளின் மகள்களுக்கு கொடுக்கமால் இருக்கலாம், ஆனால் ஜேர்மனிய அரசாங்கம் அதிக அக்கறை எடுத்து போர்க்குற்றவாளிகளும் மற்றும் நாஜி கையாட்களும் வசதியாக வாழ்வதற்கு உதவியளித்துள்ளது. இரண்டாம் உலகப் போரின் இறுதி நாட்களில் குண்டுத்தாக்குதலில் இறந்து போன நாஜிச நீதிமன்றத்தின் தலைவர் ரோலான்ட் பிரைஸ்லரின் விதவை மனைவி 1997ல் இறக்கும் வரை அரசாங்கத்தின் தாராளமான பராமரிப்பை பெற்றார். இன்னும் பல உதாரணங்கள் கொடுக்கப்பட முடியும்.

கிரேக்கத்திற்கு எதிரான செய்தி ஊடகப் பிரச்சாரம் ஐரோப்பிய மக்களை பிரித்தல், ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் அரசாங்கங்கள், வங்கிகள் இவற்றிற்கு எதிராக ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் கூட்டுப் போராட்டத்தை நடத்துவதை தவிர்க்க ஒருவருக்கு ஒருவரை எதிராக தூண்டிவிடுகின்றன. இவ்வாறான மக்கள் எதிர்ப்பு குறித்து ஐரோப்பிய சர்வதேச நிதிய உயரடுக்கினாலும் அவர்கள் வாடகைக்கு எடுத்துள்ள செய்தி ஊடகத்தின் பேனா எழுத்தாளர்களாலும் பெரிதும் அஞ்சப்படுகிறது.

ஒரு சில அடிப்படை உண்மைகளைக் கூறுவது முக்கியமாகும்.

கிரேக்க ஆளும் வர்க்கம் முழுப்பொறுப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றாலும், நெருக்கடிக்கான காரணத்தை கிரேக்கத்தில் முதன்மையாக காணப்பட முடியாது. மாறாக ஐரோப்பிய, சர்வதேச நிதிய மூதலனத்தில்தான் காணப்பட முடியும். பொருளாதார சீர்கேட்டிற்குப் பொறுப்பானவர்கள் கிரேக்க தொழிலாளர்களோ அல்லது எந்த நாட்டின் தொழிலாளர்களோ அல்ல. மாறாக பெரும் செல்வத்தை ஆபத்தான, பல நேரமும் ஊக வணிகத்தின் குற்றம் சார்ந்த வழிவகைகள் மூலம் திரட்டிய பெரும் செல்வத் தட்டு ஆகும்.

ஒன்றைரை ஆண்டுகளுக்கு முன்பு நெருக்கடி வெடித்து, சர்வதேச நிதிய முறை சரிவை எதிர்கொள்கையில், வங்கியாளர்கள் அரசாங்கங்கள் தலையிட்டு தங்கள் இழப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரின. உலகம் முழுவதும் அவர்கள் வங்கிகள் மீட்புத் திட்டங்களுக்கு விதிகளை ஆணையிட்டனர். அதன்படி நூறாயிரக்கணக்கான பில்லியன் யூரோக்கள் தங்கள் மோசமான கடன்களை சரிசெய்யவும், ஊக நடவடிக்கைகளை தொடரவும் வங்கிகளுக்குக் கொடுக்கப்பட்டன. முக்கிய தொழில் துறை நிறுவனங்களுக்கு இன்னும் கூடுதலான பில்லியன்கள் கொடுக்கப்பட்டன.

ஆரம்பத்தில் இருந்தே வங்கி, தொழில்கள் மீட்புத் திட்டங்கள் பொதுக் கடனில் பெரும் விரிவாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவுதான். இந்தக் கடன் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தி தேவையான இருப்புக்களை பெறுவதின் மூலம்தான் அடைக்கப்பட முடியும் என்பதும் தெளிவு. "கடன் தடை" என்று அழைக்கப்பட்ட அரசியலமைப்பு ரீதியான வரம்பு ஒன்றை அறிமுகப்படுத்தும் அளவிற்கு ஜேர்மனி சென்றது. இதன்படி அரசாங்கம் இனி வாங்கும் கடன்களில் உச்ச வரம்பு வைக்கப்பட்டது.

இந்த நெருக்கடி தேசிய குணநலன்களில் வேர்களைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் ஐரோப்பா மற்றும் உலகை ஆதிக்கம் கொண்டுள்ள வர்க்க பிரிவுகளில்தான் வேர்களை கொண்டுள்ளது. கிரேக்கத்தின் ஆளும் உயரடுக்கு ஐரோப்பிய சர்வதேச பெருநிறுவன-நிதிய உயரடுக்கின் ஒரு பகுதி ஆகும். அது சர்வதேச ஊகங்களில் தொடர்புடையது, பாப்பாண்ட்ரூவின் அரசாங்கததிற்கு ஆதரவு கொடுக்கிறது, தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கு முழு ஆதரவை அளிக்கிறது.

ஒரு உதாரணம் Latsis குடும்பமாகும். தன் கப்பல் நிறுவனத்தின்மூலம் வரும் பெறும் இலாபங்களை தளமாகக் கொண்டு, இக்குடும்பம் கிரேக்க யூரோ வங்கியை (Greek Eurobank) 25 ஆண்டுகளுக்கு முன் நிறுவி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க அரசாங்கத்திடம் இருந்து 10.3 மில்லியன் யூரோக்களை அதன் வணிக நடவடிக்கைகளுக்காக பெற்றது. இந்த உடன்பாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு இசைவு கொடுத்தது. தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய தலைவரான ஜோஸே மனுவல் பாரோசோ Latsisசின் குடும்பத்தின் நெருக்கமான நண்பர் ஆவார். நிறுவன உரிமையாளர் Spiros Latsis உடைய சொத்துக்களின் மதிப்பு 6.7 பில்லியன் யூரோக்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கிரேக்க பொருளாதாரத்தின் குறைந்த உற்பத்தித் திறன் பற்றி செய்தி ஊடகம் அடிக்கடி குறிப்பிடுகிறது. ஆனால் கூறப்படாதது, ஐரோப்பிய வங்கிகளும் பெருநிறுவனங்களும் 2001ல் யூரோ அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே கிரேக்க பொருளாதாரத்தின் போக்கை நிர்ணயித்தன என்பதுதான். கிரேக்கத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் ஜேர்மனி, பிரெஞ்சு உணவுப் பொருட்கள் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. அவை குறிப்பிடத்தக்க வகையில் சராசரி ஐரோப்பிய விலைகளைவிட அதிகமாகும். ஆனால் ஐரோப்பிய ஊதியங்களைவிட சராசரி கிரேக்க ஊதியங்கள் குறைவாகும்.

ஜேர்மனியின் ஆளும் வர்க்கங்கள் மற்றும் கிரேக்க ஊழல் நலிந்த செய்தி ஊடகத்தில் எழுந்துள்ள கண்டனங்கள் முற்றிலும் பாசாங்குத்தனமானவை ஆகும். ஜேர்மனிய நிறுவனம் Siemens கிரேக்கத்தில் ஏழு ஆலைகளைக் கொண்டுள்ளது. சமீபத்திய விசாரணைகளின் போக்கில், 1999ம் ஆண்டு இந்த நிறுவனம் பாப்பாண்ட்ரூவின் கட்சியான PASOK க்கு சமூக ஜனநாயகக் கட்சியின் ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒரு மில்லியன் ஜேர்மனிய மார்க்குகளை கொடுத்துள்ளது வெளிப்பட்டுள்ளது. அவ்வாறு செய்கையில், PASOK ன் தொழில்துறை கொள்கையான கட்டுப்பாடுகளை தளர்த்துதல் மற்றும் தனியார்மயமாக்குதலில் Siemens முழுமையாக ஆதரவு கொடுத்துள்ளது.

ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா இன்னும் மற்ற ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளர்கள் ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிடும் திட்டத்தின் சரியான தன்மையை உணர வேண்டும். இது, அனைத்து தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக நலன்கள்மீது முன்னோடியில்லாத தாக்குதலின் தொடக்கம் என்பதுதான்.

கிரேக்க மக்களுக்கு எதிராக இயக்கப்படும் தேசியவெறிப் பிரச்சாரத்தை உறுதியாக நிராகரிப்பது முக்கியமாகும். கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல் இன்னும் உலகம் முழுவதும் இருக்கும் மக்களின் நெருக்கடியை தீர்க்க தேசியத் தீர்வு ஏதும் கிடையாது. ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கு போராடுவதற்கு ஒரு புதிய தலைமையையும், புதிய வெகுஜன அமைப்புக்களையும் அமைக்கவேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved