World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
Stampede at Indian temple kills 63 இந்திய கோயில் நெரிசலில் சிக்குண்டு 63 பேர் இறப்பு By Arun Kumar கடந்த வியாழனன்று உத்தரப் பிரதேச மாநிலம் குந்தா நகரில் நடந்த துன்பியல் சம்பவம் மீண்டும் இந்தியா முழுவதும் பல மில்லியன் மக்கள் மோசமான வறுமையை கொண்டிருக்கும் தன்மையை உயர்த்திக் காட்டியுள்ளது. சுற்றுப் புறத்தில் இருக்கும் பிரதாப்கர் மாவட்ட கிராமங்களில் இருந்து 10,000 பேருக்கும் மேலாக இலவச உணவு, உடைகள், பாத்திரங்கள் மற்றும் 20 ரூபாய்கள் (அமெரிக்க 45 சென்ட்) கொடுக்கப்பட உள்ளன என்பதைக் கேட்டு ஒரு ஆசிரமத்தின் முன் கூடியிருந்தனர். இழந்துவிடக்கூடாது என்ற திகைப்பில் கூட்டத்தில் இருந்த மக்கள் முண்டியடித்து முன்னேறினர். நுழைவாயில் கதவு சரிந்து ஒரு முண்டியடித்தல் ஏற்பட்டது. குறைந்தது 63 பேர் அதில் 37 குழந்தைகள், 26 பெண்மணிகள் நெரிசலில் இறந்து போயினார்கள். இன்னும் 64 பேர் காயமுற்றுள்ளனர். காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட சீதா தேவி பாஸ்வான் மக்கள் பொறுமையிழந்து ஓடினார்கள் என்றார். "காலை 9 மணியில் இருந்து காத்திருந்தோம். 500 பேருக்கு பின்னால் நான் காத்திருந்தேன். கதவுகள் திறந்தபின், மக்கள் முண்டியடித்துக் கொண்டு விரைவில் உள்ளே நுழைய முற்பட்டனர். ஒரு சரிவின் ஓசை கேட்டது. மக்கள் அலறியடித்து ஓடத் தொடங்கினர்." என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார். பெரும் சோகத்தின் செய்தி பரவியதும், அரசாங்கத்தின் அனைத்து மட்ட அதிகாரிகளும் பொறுப்பை தட்டிக் கழிக்கும் விதத்திலும் மற்றவர்களுக்கு எதிராக திறமையானவர்கள் என்பதை காட்டிக் கொள்ளவும் ஒரு பலிகடாவைக் காண முற்பட்டனர். கடந்த வெள்ளியன்று பேரழிவிற்கு ஒரு நாளைக்கு பின்னர் மாநில அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட ஆரம்ப அறிக்கை ஆச்சிரம நிர்வாகம்தான் இறப்புக்களுக்கு காரணம் என்று குறைகூறியது. இந்த அறிக்கையின்படி, அமைப்பாளர்கள் போதுமான கூட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்க தவறினார்கள் அதாவது பொது அறிவிப்பு முறை இல்லை. மாநில பொலிஸுக்கு நிகழ்ச்சி பற்றி கூறப்பட்டிருந்தது, ஆனால் 10 முதல் 15 பொலிசார் மட்டுமே போதும் என்று கூறப்பட்டது. நுழை வாயில் கதவுகள் சரியான நிலையில் இல்லை என்று ஒரு பொறியியலாளர் கூறினார். அற்ப அன்பளிப்பிற்காக வளாகத்திற்கு வெளியே பல மணி நேரமாக காத்திருந்த கிராமப்புற ஏழைகள் பல்லாயிரக்கணக்கானவர்கள் நிலைமை பற்றி ஆச்சிரம நிர்வாகிகள் பொருட்படுத்தாத தன்மையை காட்டினர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த அறிக்கை மாவட்ட, மாநில, மைய நிர்வாகங்களின் பொறுப்பை தட்டிக்கழிக்கும் ஒரு வெளிப்படையான முயற்சி ஆகும். இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சி பற்றி மட்டும் இல்லாமல், இவ்வளவு திகைப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்கள் நிலைபற்றிய பொருட்படுத்தாத தன்மையும்தான். ஆச்சிரமத்தின் செய்தித் தொடர்பாளர் ரஜ்நீஷ் பூரி கருத்துப்படி மாவட்ட நிர்வாகத்திற்கு அன்னதானம் பற்றி ஒரு வாரம் முன்பே கூறப்பட்டிருந்தது. ஆனால் எந்த உதவியும் கொடுக்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஆச்சிரம தலைவரின் மனைவி இறந்ததின் நினைவாக நடத்தப்படுகிறது. மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் செய்தி ஊடகத்திடம் "ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு பெரிய கூட்டம் கூடுகிறது என்று பிரதாப்கரில் அனைவரும் அறிவார்கள்." ஆரம்ப அறிக்கை கொடுக்கப்பட்ட அன்றே, பொலிசார் ஆச்சிரம நிர்வாகத்திற்கு எதிராக கவனமின்மை குற்றச்சாட்டு ஒன்றைப் பதிவு செய்தனர். ஆச்சிரமத் தலைவர் கிருபாளுஜி மகராஜ் நெரிசலை அடுத்து அந்த இடத்தை விட்ட ஓடிவிட்டார். அவருக்கு தக்க பாதுகாப்பு உண்டு என்று பொலிசார் உறுதியளித்த பின்னர்தான் மீண்டும் வந்தார். மக்கள் கோபத்தை திசைதிருப்பும் வகையில் ஆச்சிரம் காயமுற்றவர்களுக்கும் இறந்தவர் குடும்பங்களுக்கும் பணம் கொடுத்ததுடன் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பிற்கு உதவுவதாகவும் உறுதியளித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி (BSP), உத்தரப் பிரதேசத்தை ஆளும் கட்சி, தலித்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்கிறது. முன்பு அவர்கள் "தீண்டத்தகாத" சாதியினர் என்று கருதப்பட்டிருந்தனர். அடக்கப்பட்ட சமூக அடுக்குகளில் ஒன்றாக இருந்தனர். உண்மையில் BSP ஒப்புமையில் சலுகைகள் கொண்ட தலித்துக்களின் கருவிதான். இவர்கள் வேலை வாய்ப்புக்களுக்காக சாதி ஒதுக்கீட்டு திட்டத்தை பயன்படுத்தியவர்கள் (தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு ஆதரவான உடன்பாட்டு நடவடிக்கை). வறியவர்களை பிரதிபலிப்பதாக கூறிக் கொண்டாலும், BSP பெருநிறுவன சந்தை சார்புடைய உயரடுக்கின் செயற்பட்டியலை ஆதரிக்கிறது. நிலமில்லாதவர்களில் அதிக விகிதத்தில் இருக்கும் தலித்துக்களுக்கு நிலம் கொடுப்பதற்கு தீவிர நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இன்னும் சமீபத்தில் இக்கட்சி தன்னுடைய தளத்தை விரிவுபடுத்திக் கொள்ள "தலித்-பிராமணர் சகோதத்துவம்" என்ற உயர்சாதி பிராமணர்களுடன் முயற்சி செய்தது. BSP தலைவரும் உத்தர பிரதேச முதல் மந்திரியுமான மாயாவதி செய்தி ஊடகத்திற்கு கொடுத்த அறிக்கையில் தேசிய அரசாங்கம் "தன்னுடைய அரசாங்கம் "மாநிலத்தில் தற்போது தீவிர நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதால் உதவியைக் கொடுக்க முடியவில்லை என்பதால், துரதிருஷ்டவசமான நெரிசலில் சிக்கித் தங்கள் உயிர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமுற்றவர்களுக்கும் கெளரவமான இழப்பீடு கொடுக்க வேண்டும்" என்று முறையிட்டுள்ளது.மாயாவதியின் அரசியல் போட்டியாளர்கள் இந்த அறிக்கை பற்றி விரைவில் எதிர்ப்புத் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எந்த இழப்பீடும் கொடுக்க மாயாவதி மறுப்பது "உண்மையில் வெட்ககரமானது" என்றார். "பூங்காக்கள் அமைக்க, யானைகள் மற்றவர்களின் சிலைகளை அமைக்க மில்லியன் கணக்கில் மாயாவதியிடம் பணம் உள்ளது, ஆனால் தங்கள் உயிர்களை இழந்த வறிய பெண்கள், குழந்தைகளுக்கு பணம் இல்லை." என்றார் அவர். காங்கிரஸ் கட்சி தற்பொழுது புது டெல்லியில் உள்ள மத்திய அரசாங்கத்தை வழிநடத்துகிறது. சற்றும் சளைக்காமல் ஹிந்து மேலாதிக்க பாரதிய ஜனதாக் கட்சி (BJP) மாயாவதியின் கருத்தை "அப்பட்டமான மனிதத்தன்மை அற்றது" என்று கண்டித்தது. "நெரிசிலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் இல்லை என்று மாயாவதி அரசாங்கம் எப்படிக் கூறலாம்? உத்தரப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலத்தில் இழப்பீடு கொடுக்க பணம் இல்லை என்பது நம்பத்தகுந்தது அல்ல" என்று BJP செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறினார். தன்னுடைய சிலைகளை வைப்பதற்கு எவ்வளவு பணம் செலவழித்துள்ளார் என்றும் அவர் வினாவை எழுப்பினார். மாயாவதி நினைவுப் பூங்காக்கள், அரசியல் அடையாள சிலைகள் வைப்பதற்கு தாராளமாக செலவு செய்தார் என்பது உண்மை. இவை பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவது போல் ஆகும். ஆனால் காங்கிரஸும் BJP யும் இழிந்த முறையில் இந்த சோகத்தை தங்கள் அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தப் பார்க்கின்றன. தன்னுடைய இரங்கலை தெரிவித்த பிரதம மந்திரி மன்மோகன் சிங் தேசிய உதவி நிதியத்தில் இருந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு 200,000 ரூபாய்கள் (4,400 அமெரிக்க டாலர்) மற்றும் அதிகம் காயமுற்றவர்களுக்கு 50,000 ரூபாய்களும் இழப்பீடாக அறிவித்தார். இந்த நிகழ்வை பயன்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சி, அதன் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை பிரதாப்கார் மாவட்டத்திற்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க அனுப்பியது. இந்தப் பெரும் சோகம் காந்தியும் அவருடைய தாயார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கொண்டுள்ள பாராளுமன்ற தொகுதிகளின் எல்லையில் உள்ளது. புது டெல்லியில் ஆட்சி செலுத்துவதை தவிர காங்கிஸ் கட்சி உத்தரப் பிரதேசத்தை 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் 40 ஆண்டுகள் ஆண்டது, மாநிலத்தில் உள்ள இழிந்த சமூக நிலைமைகளுக்கு நேரடிப் பொறுப்பை அது கொண்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸிற்கு ஆதரவுச் சரிவு 1990 களில் அது சந்தை சார்பிற்கு மாறிய பின் சரிந்தது. அச்சார்பின் மறுகட்டமைப்பு வறியவர்கள் நிலையை மோசமாக்கியதுடன் பரந்த அதிருப்தியையும் தோற்றுவித்தது. இது BJP இன்னும் பல பிரதேச, சாதித் தளமுடைய கட்சிகளால் பயன்படுத்தப்பட்டன. உத்தர பிரதேசத்தில் தலித் கிராமங்களுக்கு ராகுல் காந்தியின் வருகைகள் அம்மாநிலத்தில் காங்கிரசிற்கு மீண்டும் ஆதரவை கட்டமைக்கும் தீவிர முயற்சியாகும். முஸ்லிம்கள் உட்பட, இந்தியாவின் அனைத்து ஒடுக்கப்பட்ட அடுக்குகளை பிரதிபலிப்பதாக கூறிக் கொண்டாலும், BSP ஹிந்து மேலாதிக்க BJP உடன் கூட்டை வைத்துக் கொள்ளுவதில் எந்த உறுத்தலையும் கொள்ளவில்லை. BSP இரு முறை உத்தரப் பிரதேசத்தில் BJP உடன் கூட்டணி அரசு அமைத்தது, சமீபத்தில் 2002ல் 2000 முஸ்லிம்கள் இறந்துவிட்ட BJP தூண்டிவிட்ட குஜராத் வகுப்புவாத கொலை வெறி நடந்த ஒன்பதே மாதங்களுக்குள் மாயாவதி முதல் மந்திரி நரேந்திர மோடியுடன் ஒன்றாக 2002 குஜராத் மாநிலத் தேர்தலில் BJP க்கு ஆதரவாக தோன்றினார். கடந்த வார சோகம் நிறைந்த நெரிசலின் அடிபடைக் காரணம் பற்றி எந்த அரசியல் கட்சியும் குறிப்பிடவில்லை: அதாவது இந்தியா முழுவதும் பரந்த மக்கள் அடுக்குகளில் உள்ள பெரும் வறுமைதான் இதற்குக் காரணம். 180 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேசம் இந்தாயாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்டது என்பதுடன் மிக வறிய மாநிலமும் ஆகும். உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டிற்குக்கீழ் 42 சதவிகித மக்கள் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஆச்சிரமத்து வாயிலில் வரிசையில் நின்ற கிராமப்புற தொழிலாளர்கள், நிலமற்ற விவசாயிகளின் மனைவிகள் மிக வறியவர்களில் ஒரு பிரிவு ஆவார்கள். உத்தரப்பிரதேசத்தின் நிலைமை பற்றி ஜனவரி 2009ல் கொடுத்த அபூர்வ உரை ஒன்றில் இந்தியாவின் துணை ஜனாதிபதி மொகம்மது ஹமித் அன்சாரி கேரளாவின் 74 வயதுடன் ஒப்பிடுகையில் அங்கு ஆயுட்கால எதிர்பார்ப்பு 54 வயது தான் என்றார். 2005-06 ல் நடத்தப்பட்ட சுகாதார கணிப்பீடு ஒன்று 15ல் இருந்து 50 வயது வரை உள்ள பெண்களில் பாதிபேர், மற்றும் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 85 சதவிகிதம் பேர் இரத்த சோகை உடையவர்கள் என்றும், குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதி பேர் போதிய வளர்ச்சி இல்லாதவர்கள் என்றும், குறைந்த எடை உடையவர்கள் என்றும் கண்டறிந்தது. குழந்தைப் பருவ இறப்பு விகிதம் 1000 பிறப்பிற்கு 73 இறப்பு என்று மாநிலத்தில் உள்ளது. இந்தியா முழுவதற்குமாக விகிதம் 57 ஆகும். மொத்த குடும்பங்களில் 10 சதவிகிதத்திற்கும் குறைவானவைதான் குழாய்மூலம் குடிநீர் பெறுகின்றன. இந்தியா முழுவதும் இந்த எண்ணிக்கை 42 சதவிகிதம் ஆகும். மின்வசதி, கழிப்பறை வசதிகள் ஆகியவையும் தேசிய சராசரியை விடக் குறைவு ஆகும். இப்பிரச்சினைகள் எதுவுமே கடந்த வாரப் பேரழிவை ஒட்டி எந்த அரசியல் கட்சியாலும் அக்கறை காட்டப்படவில்லை. அவை அனைத்துமே இந்த சமூகப் பேரழிவிற்கு கூட்டாக பொறுப்புடையவை. |