World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan election: Tamil party splits in four

இலங்கை தேர்தல்: தமிழ் கட்சி நான்காக உடைந்தது

By W.A. Sunil
3 March 2010

Use this version to print | Send feedback

ஏப்பிரல் 8 இலங்கையில் நடக்கவுள்ள தேர்தலானது தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த மே மாதம் இராணுவத் தோல்வியடைவதற்கு முன்னதாக, அதன் அரசியல் குரலாக இயங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிளவை துரிதப்படுத்தியுள்ளது. போட்டியிடும் நான்கு பிரிவுகளில் எதுவும் தமிழ் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மாறாக, நடப்பது என்னவெனில், கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தில் நிலைமைகளையும் சலுகைகளையும் மீண்டும் ஸ்தாபித்துக்கொள்வதற்கான தமிழ் ஆளும் தட்டின் பகுதியினர் மேற்கொள்ளும் வெறுக்கத்தக்க முயற்சிகளேயாகும்.

புலிகளுக்கும் மற்றும் அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்துக்கும் இடையிலான யுத்த நிறுத்தமும், மற்றும் அதற்கு அடுத்த ஆண்டு நடந்த, சர்வதேச ரீதியில் அனுசரணையளிக்கப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளும் தொடங்குவதற்கு முன்னதாக, 2001ல் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் ஒரு கூட்டணியாகவே தமிழ் கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. "தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாமே" என்ற புலிகளின் போலி உரிமைகோரலை ஏற்றுக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, கொழும்பு பாராளுமன்றத்தில் புலிகளின் குரலாக செயற்பட்டதோடு எந்தவொரு சமாதான கொடுக்கல் வாங்கலிலும் ஒரு அரசியல் வகிபாகத்தை எதிர்பார்த்தது.

சமாதானப் பேச்சுக்கள் 2003ல் குழம்பிப் போனதோடு, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா மற்றும் ஏனைய சக்திகளதும் தந்திரோபாய ஆதரவுடன் 2006 நடுப்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தீவை மீண்டும் யுத்தத்துக்குள் தள்ளினார். இராணுவம் ஈவிரக்கமற்ற முற்றுகை யுத்தத்தை முன்னெடுத்தது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டு காயமும் அடைந்தார்கள். புலிகளின் தோல்வியின் பின்னர், இராணுவம் 280,000 தமிழ் பொது மக்களை தடுப்பு முகாங்களுக்குள் அடைத்து வைத்திருந்ததோடு இன்னமும் அங்கு 100,000 பேர் உள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏறத்தாழ உடனடியாகவே புலிகளிடமிருந்து தம்மை தூர வைத்துக்கொள்ளத் தொடங்கியது. ஜனவரி 26 நடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே அதன் உறுப்பினர்களிடையே பிளவு வெடித்தன. தமிழ் கூட்டமைப்பு, யூ.என்.பி. மற்றும் ஏனைய எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்த அதே வேளை, பல தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் இராஜபக்ஷவை ஆதரித்தனர். அதே சமயம் எம்.கே. சிவாஜிலிங்கம் ஒரு சுயாதீன வேட்பாளராக போட்டியிட்டார். இராஜபக்ஷ மீதும் மற்றும் யுத்தத்தின் போது இராணுவத்துக்குத் தலைமை வகித்த பொன்சேகா மீதும் வெறுப்பு கொண்ட, யுத்தத்தால் அழிக்கப்பட்ட வடக்கில் உள்ள 74 வீதமான வாக்காளர்கள், வாக்களிக்காமல் இருந்து விட்டார்கள்.

அப்போதிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மேலும் பிளவுபட்டது. இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை அமைப்பு (டெலோ), அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எஃப்.) ஆகிய கட்சிகள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகித்தன. இரு பகுதியினர் உத்தியோகபூர்வமாக பிரிந்துவிட்டனர். தமிழ் காங்கிரசும் மற்றும் சிவாஜிலிங்கம் தலைமையில் டெலோவில் ஒரு பகுதியினரும் பிரிந்துவிட்டனர். அதற்கும் மேலாக, மூன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துகொண்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் திசையமைவை, அதன் தலைவர் ஆர். சம்பந்தன் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் விளக்கினார். தீவின் தமிழ் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு "அரசியல் தீர்வு காண்பதற்காக" தேர்தலின் பின்னர் ஸ்தாபிக்கப்படும் "எந்தவொரு அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்த" கட்சி தயாராக உள்ளது எனத் தெரிவித்தார். இலங்கையின் இனவாத அரசியல் சூழ்நிலையில், "ஒரு அரசியல் தீர்வு" என்பது, வடக்கு மற்றும் கிழக்குக்கு அதிகாரத்தைப் பரவலாக்குவது சம்பந்தப்பட்ட, சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுக்கு இடையிலான ஒருவித அதிகாரப்-பகிர்வு ஏற்பாட்டையே குறிக்கின்றது.

சிங்கள மேலாதிக்கவாதத்தின் பரிந்துரையாளரான இராஜபக்ஷ, குறைந்தபட்சம் மாகாண மட்டத்தில் கூட எந்தவொரு கனிசமான அதிகாரப் பகிர்வையும் நிராகரிக்கின்றார். சுதந்திர முன்னணியின் முகாமில் வெட்கமின்றி நுழைந்துகொண்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமன், "நாட்டின் சிறுபான்மையினரின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய தன்னால் ஆன அனைத்தையும் ஜனாதிபதி இராஜபக்ஷ செய்வார்" என்ற எதிர்பார்ப்பை பற்றி பேசினாரே அன்றி, ஒரு "அரசியல் தீர்வு" பற்றி பேசவில்லை.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் இந்தியாவும் அரசியல் தீர்வொன்றை காணுமாறு கொழும்பு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. புது டில்லி இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை ஆதரித்த அதே வேளை, இலங்கையில் தொடரும் இனவாத முரண்பாடானது தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டின் ஸ்திரநிலைமைக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடும் என பீதி கொண்டுள்ளது. இந்தியா, தனது பிராந்திய எதிரிகளான சீனா மற்றும் பாகிஸ்தானும் கொழும்பில் செல்வாக்குச் செலுத்துவதை எதிர்ப்பதையிட்டும் அக்கறை காட்டுகிறது.

ஞாயிற்றுக் கிழமை திருகோணமலையில் உரையாற்றிய சம்பந்தன், கட்சி புது டில்லியுடன் கலந்துரையாடல் நடத்தி வருவதாகவும் இந்தியாவின் உதவியில் தங்கியிருப்பதாகவும் தெளிவுபடுத்தினார். "நீங்கள் எதிர்வரும் தேர்தலில் உங்களது மக்களிடமிருந்து பிரமாண்டமான மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டு எங்களிடம் வாருங்கள். நாங்கள் உங்களுடன் பேச தயாராக உள்ளோம். சுய மரியாதையுடன் வாழ உங்களுக்கு நாங்கள் வழி செய்வோம். நாங்கள் இந்தப் பணியில் இருந்து தவற மாட்டோம்," என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான இந்தியாவின் செய்தி என அவர் விளக்கினார்.

இந்தியாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுக்கும் வேண்டுகோள், கூட்டமைப்பின் அரசியல் வங்குரோத்தை மட்டுமன்றி, புலிகளது அரசியல் வங்குரோத்தையும் கோடிட்டுக் காட்டுகிறது. ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் முன்னெடுத்த தசாப்த கால தமிழர்-விரோத பாரபட்சங்களுக்கு எதிராகவே புலிகள் அமைப்பு தோன்றிய போதிலும், வடக்கு மற்றும் கிழக்கில் தனியான தமிழ் அரசுக்கான அதன் கோரிக்கை, தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்தது. தொழிலாள வர்க்கத்துக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்க இயல்பிலேயே இலாயக்கற்ற புலிகள், தமது திட்டத்தை யதார்த்தமாக்க எப்பொழுதும் "சர்வதேச சமூகத்திலேயே" தங்கியிருந்தனர்.

யுத்தத்தின் கடைசி மாதங்களின் போது, இராணுவத் தாக்குதல்களை நிறுத்த சர்வதேச அழுத்தத்தை கோரி அற்ப வேண்டுகோள் விடுக்குமளவுக்கு புலிகள் இறங்கி வந்தனர். அவர்கள் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு இராணுவ உதவி உட்பட இராஜதந்திர ஆதரவும் உதவியும் வழங்கிய இந்தியா உட்பட பெரும் சக்திகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இப்போது, தமிழர்களின் உரிமைகளில் அக்கறை இல்லாத, ஆனால் கொழும்பில் இந்தியாவின் செல்வாக்கை பெருக்கி கொள்வதற்காக தமிழர்களின் உரிமைகள் பற்றிய பிரச்சினையை பயன்படுத்திக்கொள்ளும் புது டில்லியின் பக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் திரும்பியுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை ஆற்றிய உரையில், இலங்கை அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்கள், தமிழ் பொது மக்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது, அல்லது இராஜபக்ஷவின் யுத்தத்தை இந்தியா ஆதரித்தமை போன்ற விடயங்கள் பற்றி சம்பந்தன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கடந்த மே மாதம், இலங்கை யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி ஐ.நா. மனித உரிமைகள் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணையை தோற்கடிப்பதில் இலங்கை, சீனா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியாவும் இணைந்துகொண்டது.

எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையிலான டெலோ பிரிவு, தமிழ் தேசிய விடுதலை கூட்டணி என புதிதாகப் பெயரிடப்பட்டுள்ளது. அது தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் உரிமையை பாதுகாக்கும் போராட்டங்களை கைவிட்டுவிட்டதாக குற்றஞ்சாட்டியது. கடந்த வாரம் நடந்த பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில், தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் "கைப்பொம்மையாக" செயற்படுவதாக சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டினார்.

எவ்வாறெனினும், சிவாஜிலிங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அடிப்படை வேறுபாடுகளைக் கொண்டிருக்கவில்லை. அவரது "அரசியல் தீர்வும்" ஒரு விதமான சமஷ்டி வடிவத்தையே கொண்டிருக்கின்றது. அவர் ஊடகங்களுக்கு விளக்கியது போல்: "நாட்டைப் பிரிக்காமல், ஒரு ஐக்கியப்பட்ட நாட்டுக்குள் சுயநிர்ணயத்தை நாம் எதிர்பார்க்கின்றோம்: ஒரு நாடு இரு இனங்கள்."

புது டில்லியுடனான தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறவை கண்டனம் செய்த அதே வேளை, சிவாஜிலிங்கம் இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சியுடன் உறவு வைத்துள்ளார். கடந்த ஆண்டு இந்திய பொதுத் தேர்தலில் பாரதீய ஜனதாக கட்சியின் பிரச்சாரத்தில் செயலூக்கத்துடன் பங்கேற்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. தமிழ் நாட்டில், தமிழ் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பல கட்சிகளுடன் அவருக்கு தொடர்பு உண்டு.

முன்னாள் இடதுசாரிகளான நவசமசமாஜக் கட்சியினரும் தமிழ் தேசிய விடுதலை முன்னணியுடன் இன்றுமொரு சந்தர்ப்பவாத கூட்டை அமைத்துக்கொண்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கத்தை ஆதரித்த நவசமசமாஜக் கட்சி, தமிழ் தேசிய விடுதலை முன்னணியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைசாத்திட்டுள்ளதோடு அதில் இரு தரப்பினரும் "தமிழர்களின் சுய நிர்ணயத்தை" முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

தமிழ் காங்கிரசும் இதே போன்ற நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், "சுய நிர்ணய உரிமை, சுயாட்சி மற்றும் தாயகம் போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆரம்ப கொள்கைகளுடன்" தொடர்வதாக யாழ்ப்பாணத்தில் ஞாயிரன்று நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். "தமது கோரிக்கைகளை அடைய இந்தியாவுடனும் சர்வதேச சமூகத்துடனும்" சினேகப்பூர்வமான முறையில் செயற்படுவதாக அவர் உறுதியளித்தார். "சர்வதேச சமூகம் இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கின்றது, அதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்," என அவர் மேலும் குறிப்பிட்டார்.

"சுயநிர்ணய உரிமைக்காக" அறைகூவல் விடுப்பது, தமிழ் வெகுஜனங்களின் உரிமைகளை காக்க எதுவும் செய்யப்போவதில்லை. தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழ் காங்கிரசின் இலக்கு, தொழிலாள வர்க்கத்தின் மீதான தமது சுரண்டலை உக்கிரப்படுத்த தமிழ் முதலாளித்துவத்தின் பகுதிகளுக்காக வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு தனியிடத்தை அமைத்துக்கொள்ளவேயாகும். இந்த வேலைத் திட்டம் ஒரு ஆபத்தான மரண முடிவு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும், புலிகளின் தோல்வியில் இருந்து அவசியமான பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இந்தத் தோல்வி இராணுவத் தோல்வி என்பதை விட அடிப்படையில் அரசியல் தோல்வியாகும். உழைக்கும் மக்களுக்கு வர்க்க ரீதியில் வேண்டுகோள் விடுப்பதற்கு மாறாக, புலிகள் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க ஜனநாயக-விரோத வழிமுறைகளை மேலும் மேலும் நாடினர். சிங்கள பொது மக்கள் மீதான புலிகளின் பிற்போக்குத்தனமான தாக்குதல்கள், கொழும்பு அரசாங்கத்துக்கு பயன்பாடாக இருந்ததோடு தீவில் இனவாத பதட்ட நிலைமைகளையும் ஆழமாக்கியது.

சோசலிச சமத்துவக் கட்சியின் முன்நோக்கு, ஜனநாயக உரிமைகளுக்கான உறுதியான போராட்டத்தை முன்னெடுக்க இயலுமை படைத்த ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அதன் தேர்தல் பிரச்சாரம், தொழிலாளர்களின் பொது நலன்களுக்கும் மற்றும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்குமான போராட்டத்தில் இன, மொழி மற்றும் மத பேதமற்று தொழிலாளர்களை அணிதிரட்டுவதை இலக்காகக் கொண்டதாகும். சோசலிச சமத்துவக் கட்சி, தமிழர்களின் உரிமைகளை காக்குமாறும், வடக்கு கிழக்கில் இருந்து சகல பாதுகாப்பு படைகளையும் திருப்பியழைக்கக் கோருமாறும் மற்றும் சகல தமிழ் கைதிகளையும் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய கோருமாறும் சகல தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது.

ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமானது, சில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அன்றி, வெகுஜனங்களின் தேவைகளை அடையும் பொருட்டு சமுதாயத்தை சோசலிச முறையில் மாற்றியமைக்கும் பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும் என சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. நாம் தெற்காசியா மற்றும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான பரந்த போராட்டத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடுகிறோம்.