WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
ஆப்கானிஸ்தான்
Gates visits Afghanistan to prepare US offensive
against Kandahar
காந்தகாருக்கு எதிரான அமெரிக்க தாக்குதலுக்கு தயாரிப்பு நடத்த கேட்ஸ் ஆப்கானிஸ்தானுக்கு
செல்லுகிறார்
By Joe Kishore
9 March 2010
Use this
version to print | Send
feedback
அமெரிக்க பாதுகாப்பு மந்திரி முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் திங்களன்று ஆப்கானிஸ்தானிற்கு
பயணித்து, அந்நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரமான காந்தகாருக்கு எதிரான பெரும் இராணுவத் தாக்குதல்
பற்றி விவாதிக்க சென்றார்.
காபூலில் ஆப்கானிய ஜனாதிபதி ஹமித் கர்சாயுடன் சேர்ந்து நடத்திய ஒரு கூட்டு செய்தியாளர்
கூட்டத்தில், ஆப்கானிய மக்களுக்கு எதிரான ஒரு புதிய சுற்றுக் குருதி தோய்ந்த வன்முறை பற்றி எச்சரித்தார். "இங்கு
கடுமையான போர் நடக்க உள்ளது, கடினமான நாட்கள் வரவிருக்கின்றன என்பதை மக்கள் அறிய வேண்டும். மக்கள்
பொறுமையை இழக்கக்கூடும், நிலைமை உண்மையில் இருப்பதைவிட சிறப்பாக உள்ளது என்று நினைக்கக்கூடும் என்று
கவலைப்படுகிறேன்." என்று அவர் கூறினார்.
ஒபாமா நிர்வாகத்தின் இயக்கத்தில் தெற்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ஒரு "விரிவாக்கத்தின்"
மத்தியில் உள்ளது. தலிபான் தோன்றிய இடமும், 900,000 மக்களும் இருக்கும் காந்தகார் நகரம் முக்கிய இலக்காகும்.
தாக்குதலுக்கு அமெரிக்கா பெரும் படையைத் திரட்டி வருகிறது. ஒபாமா உறுதியளித்த கூடுதல் 30,000 துருப்புக்களில்
6,000 படையினர்தான் இதுவரை வந்துள்ளனர்.
"காந்தகார் தலிபானின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்றாலும், தலிபான் ஆபத்து
நிறைந்து உள்ளது" என்று கேட்ஸ் எச்சரித்தார். இன்னும் கூடுதலான வன்முறையை கட்டவிழ்த்துவிடும் வரை தலிபான்
பிரிவுகளுடன் பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை. "தங்களுக்கு இனி நிலைமை சாதகமாக இராது" என்பதை எதிர்த்தரப்புக்
குழுக்கள் தெளிவாக தெரிந்து கொள்ளும் வரையில் சமாதான உடன்பாடு காத்திருக்க வேண்டியதுதான் என்று அவர்
கூறினார்.
கர்சாயைச் சந்தித்ததை தவிர கேட்ஸ் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தளபதியாக
இருக்கும் ஸ்டான்லி மக்கிரிஸ்டல் உடனும் விவாதித்தார். வரவிருக்கும் மாதங்களில் காந்தகாரை சுற்றி இருக்கும்
பகுதியில் அடக்குமுறை அதிகரிக்கும் என்று மக்கிரிஸ்டல் குறிப்புக் காட்டினார். "அங்கு உச்சகட்ட
வெற்றிகொண்டாடும் நாள் (D-Day)
என்று வராது. வரும்போது பாதுகாப்பு உயர்ந்த அளவிற்கு இருக்கும்" என்று தெரிவித்தார்.
கேட்ஸின் பயணம் ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் வரவிருந்த பயணத்தை
ஒத்திப்போடும் நோக்கத்தை வெளிப்படையாக கொண்டிருந்தது. அஹ்மதிநெஜாத் அதே தினத்தில் கர்சாயுடன்
பேச்சுவார்த்தைகள் நடத்துவதாக முன்னதாக ஏற்பாடு ஆகியிருந்தது. திங்கள் காலையில் அஹ்மதிநெஜாட் தன்
பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக ஈரான் அறிவித்தது.
ஈரானுக்கு எதிராக புதிய அச்சுறுத்தல்களை அறிவிக்கவும் கேட்ஸ் தன்னுடைய
பயணத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார். "ஆப்கானிஸ்தானத்தில் ஒரு இரட்டை விளையாட்டை
மேற்கொண்டுள்ளது" என்று ஈரான் மீது ஆப்கானிஸ்தானிற்கு வரும் வழியில் அவர் குற்றம்சாட்டினார். "அவர்கள்
ஆப்கானிய அரசாங்கத்துடன் நல்ல உறவுகளை நீடிக்க விரும்புகின்றனர். நம்மை வேதனைக்கு உட்படுத்தக்கூடிய
அனைத்தையும் அவர்கள் செய்ய விரும்புகின்றனர்; இல்லாவிடில் நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்றும் அவர்கள்
நினைக்கின்றனர்" என்று அவர் தொடர்ந்து கூறினார்.
"பணம் கொடுப்பதின் மூலமோ அல்லது வேறு குறைந்தவித ஆதரவிலோ",
எப்படியோ தலிபானுககு ஈரான் உதவுகிறது என்று கேட்ஸ் குற்றம் சாட்டினார். வழக்கம் போல் அத்தகைய உதவி
பற்றி இவர் சான்றுகள் ஏதும் கொடுக்கவில்லை.
ஆக்கிரோஷ நடவடிக்கை பற்றிய தெளிவான அச்சுறுத்தல் என்ற விதத்தில் கேட்ஸ் எச்சரித்தார்:
"அவர்கள் இதில் மிக ஆக்கிரோஷமாக ஈடுபட்டால் நம்முடைய விடையிறுப்பினால் என்ன நேரிடும் என்று நினைத்தும்
பார்க்க முடியாது என்பதையும் அவர்கள் அறிவர்." இந்த அறிக்கையை பற்றி பின்னர் பென்டகன் இது ஆப்கானிஸ்தானில்
அமெரிக்க நடவடிக்கைகள் பற்றிக் கூறுவது என்றும் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை இல்லை என்றும்
தெளிவுபடுத்தியது.
ஆனால் இக்குற்றச்சாட்டுக்கள் ஈரான்மீது அழுத்தத்தை அதிகரிக்கும் தொடர்ந்த
நடவடிக்கைகளில் சமீபத்தியதாகும். கடந்த மாதம் அமெரிக்க வெளிவிவகார செயலர், ஹில்லாரி கிளின்டன் ஈரான்
"ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லுகிறது" என்று அறிவித்தார். ஒபாமா நிர்வாகம் தற்பொழுது
ஐ.நா.வில் ஈரானுக்கு எதிராக இன்னும் கடுமையான பொருளாதார நடவடிக்கைகள் எடுக்க முயல்கிறது. அதே
நேரத்தில் ஈரான் அணுவாயுதங்கள் தயாரிப்பை தொடர்கிறது என்ற குற்றச்சாட்டுக்களையும் தீவிரமாக்கியுள்ளது.
ஈராக்கில் தேர்தல்கள் நடந்த மறுதினம் கேட்ஸின் வருகை வந்துள்ளது. அங்கு
ஒபாமா நிர்வாகம் ஈரானிய சார்புடைய பிரிவு என்று தான் கருதும்
United Iraqui Alliance
கூட்டணியை குறைமதிப்பிற்கு உட்படுத்த முனைகின்றது.
காந்தகாருக்கு எதிரான புதிய தாக்குதல் மர்ஜாவில் பெரிய மோதல்
தயாரிப்புக்கள் முறையாக முடிந்ததை அடுத்து தொடர்கிறது. அந்த நகரம் காந்தகாரை விட மிகச்சிறிய நகரம்,
தெற்கு நடவடிக்கைகளில் முதல் படியாக அது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் இறப்புக்களை பெரிதும்
குறைக்க முற்பட்டுள்ளது என்ற அமெரிக்க கூற்றுக்கள் இருந்தேபோதும், மோதலின் போக்கில் டஜன் கணக்கான
சாதாரண மக்கள் கொல்லப்பட்டனர்.
வார இறுதியில் கர்சாய் மர்ஜாவிற்கு பயணித்தார். அங்கு அவர் அமெரிக்க
இராணுவம் மற்றும் ஆப்கானிய அரசாங்கத்தின் ஊழல் பற்றி நிறைய புகார்களை எதிர்கொண்டார்.
உள்ளுர் ஆப்கானிய தலைவர் ஒருவர் ஹாஜி அப்துல் அஜிஸ் கூறிய கருத்துக்களை, ஆப்கானிய
அரசாங்கம் போர்ப்பிரபுக்களுடன் தொடர்பு கொண்டிருப்பதை கண்டித்தவை பற்றி நியூ யோர்க் டைம்ஸ்
மேற்கோளிட்டுள்ளது: "கடந்த எட்டு ஆண்டுகளாக எங்களை ஆண்டு
வந்த போர்ப் பிரபுக்கள், தங்கள் கரங்களில் மக்கள் குருதியை கொண்டுள்ளவர்கள்--அவர்கள் இன்னும் இந்த
நாட்டை ஆண்டு வருகின்றனர்" என்று அவர் கூறியிருந்தார்.
அமெரிக்க தாக்குதல் கொண்டுவந்துள்ள பேரழிவைக் குறிக்கும் வகையில், டைம்ஸ்
உள்ளுர் அதிகாரிகள் "புதிய புகார்களை கோடிட்டனர்: நிரபராதியான விவசாயிகள் அமெரிக்கர்களால்
கைது செய்யப்படுகின்றனர். வைத்தியர்கள் இல்லை. பாசனக் கால்வாய்களை அவர்கள் அழித்துள்ளனர். பள்ளிகளும்
வீடுகளும் அமெரிக்க துருப்புக்களால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. மற்ற வீடுகள் நாசமாகியுள்ளன."
"நீங்கள் வானொலியில் எங்கள் குழந்தைகள் கற்க வேண்டும் என்று விரும்புவதாகக்
கூறுகிறீர்கள். அவர்கள் பள்ளிகள் இராணுவத் தளங்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில் எப்படி எங்கள் குழந்தைகளுக்கு
நாங்கள் கல்வி அளிக்க முடியும்? தலிபான் ஒருபோதும் பள்ளிகளில் இராணுவத் தளங்களை கட்டமைத்தது இல்லை."
என்று அஜிஸ் கூறினார்.
மர்ஜா மாவட்டத்திற்கு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜஜ்ஜி அப்துல்
ஜாகிர் முன்பு ஜேர்மனியில் தன்னுடைய வளர்ப்பு மகனை குத்திய குற்றத்திற்கு கைது செய்யப்பட்டார் என்றும் தகவல்கள்
வெளியாகியுள்ளன. இந்தத் தகவல்களை ஜாகிர் மறுத்தாலும், அமெரிக்க, நேட்டோ அதிகாரிகள் அத்தகைய குற்றத்தன்மை
ஒருவிதத்தில் நல்லதுதான் என்று குறிப்புக் காட்டினர். "இந்த நாடு ஒன்றும் திருச்சபை பாட்டுக்குழுவால் ஆளப்படப்
போவதில்லை" என்று காபூலில் உள்ள மூத்த நேட்டோ அதிகாரி கூறியதாக மேற்கோளிடப்பட்டுள்ளது.
கேட்ஸ் மேலும் கூறினார்: "இப்பொழுது பிரச்சினை, ஒரு நபர் குற்றம் செய்து
அதற்கான தண்டனையையும் அனுபவித்துவிட்டால், அதனால் அவரை கைவிட்டுவிட வேண்டுமா?"
காந்தகார் தாக்குதல்களுக்கான தயாரிப்பு அமெரிக்கா ஒரு நீடித்த, விரிவாகும்
ஆக்கிரமிப்பிற்கு இடையே உள்ளது என்பதையும் இது ஆப்கானிய மக்களுக்கு பேரழிவு தரக்கூடிய விளைவுகளை அளிக்கும்
என்பதையும் தெளிவாக்கியுள்ளது. |