World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா New strikes called as more social cuts are prepared in Greece இன்னும் அதிகமான சமூக உதவி வெட்டுக்கள் தயாரிக்கப்படுகையில் கிரேக்கத்தில் புதிய வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது By Alex Lantier கிரேக்கத்தில் உள்ள கடன் நெருக்கடிக்கு இடையே, வங்கிகளும் ஐரோப்பிய நிறுவனங்களும் இன்னும் கூடுதலான வரவு-செலவு திட்ட வெட்டுக்களைக் கோருகையில், கிரேக்கத் தொழிற்சங்கங்கள் நேற்று புதிய வேலைநிறுத்தங்கள் பற்றி அறிவித்தன. பெப்ருவரி 24-ம் தேதி கிட்டத்தட்ட 2 மில்லியன் தொழிலாளர்கள் பங்கு பெற்ற வரவு-செலவு திட்ட வெட்டுகளுக்கு எதிரான ஒரு நாள் வேலைநிறுத்தம் நடந்து ஒரு வாரத்திற்குள் இந்த அறிவிப்பு வந்துள்ளது. கிரேக்க அரசாங்க ஊழியர்கள் தொழிற்சங்கங்களின் தலைமை நிர்வாகமான ADEDY (பொதுத்துறை தொழிற்சங்கம்) மார்ச் 16-ம் தேதி ஓர் ஒரு நாள் தேசிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது--கிரேக்கப் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ மற்றும் ஐரோப்பிய நிதி அமைச்சர்கள் பாப்பாண்ட்ரூ திட்டமிட்டுள்ள வெட்டுக்களை விவாதிப்பதற்கான கூட்டத்திற்கு ஒரு நாள் பின்பு. இன்றும் மார்ச் 8 மற்றும் 12 தேதிகளிலும் ADEDY ஊர்வலங்களுக்கு அறிவித்துள்ளது. வரிவிதிப்புத்துறை தொழிற்சங்கமும் மார்ச் 8 மற்றும் 9 தேதிகளில் இரு நாள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. நேற்று கிரேக்கத்தில் கிட்டத்தட்ட 30,000 டாக்ஸி டிரைவர்கள் மத்திய அரசாங்கம் கூடுதலான வரிமூலம் வருமானத்தை அடைவதற்கு அவர்கள் பற்றுச்சீட்டுக்களையும் கணக்குகளையும் வைத்திருக்க வேண்டும் என்று கூறும் திட்டத்தை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்தனர். இந்த நடவடிக்கைகளுக்கு தொழிற்சங்கங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளமைக்கு காரணம் பெருகிய முறையில் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வந்துள்ள அழுத்தங்கள்தான். சர்வதேச வங்கியாளர்கள் மற்றும் அவர்களுடைய அரசியல் ஆதரவாளர்களினால் கிரேக்க அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்படுத்திய நிதிய நெருக்கடிக்கு தாங்கள் விலை கொடுப்பதற்கு, தங்கள் வாழ்க்கைத் தரங்களில் குறைப்பு ஏற்படுத்துவதற்கு அது எதிர்ப்பை தீவிரமாக வெளிப்படுத்துகிறது. தொழிற்சங்க தலைவர்கள் குறைந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களை தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை கட்டுப்படுத்தவும் பாப்பாண்ட்ரூவின் சமூக ஜனநாயக PASOK அரசாங்கம் கடும் சிக்கன நடவடிக்கைகளை எடுக்க அவகாசத்திற்கும் பயன்படுத்துகின்றனர். பாப்பாண்ட்ரூவிற்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு உறுதி கொடுத்துள்ளன. அவருடைய அரசாங்கத்தை கிரேக்க முதலாளித்துவத்தின் பிரதிநிதி என்பதைவிட சர்வதேச நிதியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவத்தின் செயல்களுக்கு பலிக்கட ஆகிவிட்டது என்று சித்தரிக்கின்றன. இது வெகுஜன மக்கள் எதிர்ப்பை ஒரு தேசியவாத திசையில் திருப்பும் முயற்சிகளுடன் இணைந்துள்ளது. 2009-ல் கிரேக்க அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவிகிதத்திற்கும் மேலான வரவு-செலவு திட்ட பற்றாக்குறையை கொண்டிருந்தது. இதையொட்டி ஐரோப்பிய அதிகாரிகள் மற்றும் நிதியச் சந்தைகளில் இருந்து செலவினங்களைக் குறைக்கும் அழுத்தத்தை பெற்று மகத்தான சமூகநல செலவுக் குறைப்புக்களுக்கு தயார் செய்கிறது. ஏப்ரல் 20 அன்று ஏதென்ஸ் 8.2 பில்லியன் யூரோக்கள் கடனை புதுப்பிக்கும், ஏப்ரல் 23-ம் தேதி 1.92 பில்லியன் யூரோக்கள் கடனைப் புதுப்பிக்கும் மற்றும் மே 19 அன்று 8.5 பில்லியன் யூரோ கடனைப் புதுப்பிக்கும். நிதியச் சந்தைகள் இவ்வளவு தொகையை தக்க குறைந்த வட்டி விகிதத்தில் கொடுக்குமோ என்பதுதான் கிரேக்க அரசாங்கம் திவாலாகாமல் இருக்குமா அல்லது பிணை எடுப்பிற்கு உட்படுத்தப்படுமா என்பதை நிர்ணயிக்கும் முக்கிய கருத்தாக இருக்கும். கிரேக்க பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ மார்ச் 5-ம் தேதி ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெலை சந்திக்க பேர்லினுக்கு செல்கிறார். மார்ச் 9-ம் தேதி வெள்ளை மாளிகையில் அவர் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவையும் சந்திப்பார். கிரேக்க அரசாங்கம் ஏற்கனவே பொதுத்துறையில் ஊதிய முடக்கத்தை செயல்படுத்தி, ஓய்வூதியம் பெறும் வயதையும் 62 என்று உயர்த்தும் திட்டத்தை அறிவித்துள்ளது. மரபார்ந்த வகையில் பொது மற்றும் சில தனியார் துறை தொழிலாளர்களுக்கு 12 மாத சம்பளங்களுடன் கொடுக்கப்படும் இரு கூடுதல் மாதச் சம்பளங்களில் ஒன்றை அகற்றக்கூடும். மார்ச் 1-ம் தேதி ஏதென்ஸிற்கு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார ஆணையர் ஒல்லி ரெஹ்ன் செலவுகளைக் குறைக்க "கூடுதல் நடடிக்கைகள்" வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். "யூரோ பகுதியில் எந்த உறுப்பு நாடும் தன் வருமானத் தகுதிக்கு மீறி வாழக்கூடாது. உங்கள் கடன்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருங்கள் அல்லது உங்கள் கடன்கள் உங்களைக் கட்டுப்படுத்த தொடங்கிவிடும்" என்றார் அவர். கிரேக்கத் தொழில்துறை மந்திரி Andreas Loverdos-ஐ ரெஹ்ன் சந்தித்த கட்டிடத்தை 200 ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட முற்பட்டனர். ஆனால் பொலிஸ் கலகப் பிரிவினரால் தடுக்கப்பட்டுவிட்டனர். ஒரு பக்கப் புற கதவின் வழியாக உள்ளே நுழையும் கட்டாயத்திற்கு ரெஹ்ன் உள்ளானார். கிரேக்கப் பொருளாதாரம் சுருங்குகையில், வரவு-செலவு திட்டப் பற்றாக்குறையை பொருளாதார உற்பத்தியில் ஒரு நிலையான சதவிகிதத்திற்கு கீழ் நிறுத்துவதற்கு மிக அதிக குறைப்புக்கள் தேவைப்படும். ஐரோப்பிய ஆணைக்குழு, ஐரோப்பிய மத்திய வங்கி (ECB), சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவை பெப்ருவரி 25 நடத்திய தணிக்கைப்படி இன்னும் அதிக வரவு-செலவு திட்ட செலவினக் குறைப்புக்கள் 4.8 பில்லியன் யூரோக்களுக்கு தேவை என்பதையும் கூறியுள்ளது. தாங்கள் இத்தகைய பிற்போக்குத்தன நடவடிக்கைகளை மதிப்புக்கூட்டு வரிகள், எரிபொருள் வரிகளிலும் செயல்படுத்த போவதாக கிரேக்க அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர். மார்ச் 1-ம் தேதி வரவு-செலவு திட்ட பற்றாக்குறைகளை 11.4 சதவிகிதத்தில் இருந்து உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதமாக குறைப்பதற்கு பொதுநலச் செலவினங்களை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ள ஸ்பெயினின் பிரதம மந்திரி ஜோஸ் லூயி ரோட்ரிக்ஸ் ஜாபட்ரோவைச் சந்தித்தபின், மேர்க்கெல் ஐரோப்பிய பொது நாணயம் "பெரும் சவால்களை" எதிர்கொண்டுள்ளது என்றார். ஐரோப்பிய வரவு-செலவு திட்ட பற்றாக்குறைகள் விரைவில் ஐரோப்பிய உறுதிப்பாடு, வளர்ச்சி உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளபடி 3 சதவிகிதத்திற்கு கீழ் குறைக்கப்படாவிட்டால், "யூரோ தாக்குதலுக்கு உட்படும், அது நம் அனைவரையும் பாதிப்பிற்கு உட்படுத்தும்" என்றார். பெப்ருவரி 26-ம் தேதி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அமெரிக்க hedge நிதி அமைப்புக்கள் யூரோ சரிவு பற்றி ஊகிக்கின்றன. இது டிசம்பர் மாதம் 1.51 டாலருக்கு என்பதில் இருந்து கடந்த மாதம் 1.35 டாலருக்கு என்று குறைந்துவிட்டது, இன்னும் $1.00 எனக் குறையக்கூடும் என்று தகவல் கொடுத்துள்ளது. அத்தகைய சரிவு பெரிய அளவு பணவீக்கத்தை தொடக்கிவிடும். பொருளாதார வல்லுனர் Jacques Attali, Le Monde இடம் அத்தகைய சூழ்நிலையில் "ஐரோப்பிய ஒன்றியம் வெடிப்பிற்கு உட்படும்" என்றார். கிரேக்கத்தைப் பிணை எடுப்பதற்கு நிதி கொடுப்பது பற்றி சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. தற்பொழுது கிரேக்கம் பணத்தை தாமதப்படுத்தலாம் என்று எந்த அதிகாரமும் கூறவில்லை. 300 பில்லியன் யூரோக்கள் என்ற நிலையில் கிரேக்கத்தின் பொதுக்கடன்கள் மிக அதிக அளவில் உள்ளன. இதையொட்டி நிதியளிப்பவர்கள் கிரேக்கம் தாமதப்படுத்தினால் 2008 செப்டம்பரில் அமெரிக்க முதலீட்டு வங்கி லெஹ்மன் பிரதரஸ் சரிந்தபோது ஏற்படுத்தப்பட்ட முறையின் ஆபத்தைக் கொடுக்கும் என்று கூறுகின்றனர். பெப்ருவரி 26-ம் தேதி ப்ளூம்பேர்க் நியூஸ் 16 யூரோப்பகுதி நாடுகளும் ஒன்றாக சேர்ந்து 25 பில்லியன் பிணையெடுப்பு தொகுப்பை கிரேக்கத்திற்கு கொடுக்கலாம், ஜேர்மனி 4 முதல் 5 பில்லியன் யூரோக்கள் வரை கொடுக்கலாம் என்று எழுதியது. ஆனால் அத்தகைய திட்டங்கள் ஏதும் இல்லை என்பதை பெப்ருவரி 28 கூட்டத்தில் மறுத்த விதத்தில், மேர்க்கெல் "மற்ற நாடுகளுக்கு பிணை எடுப்பு கொடுக்கும் வாய்ப்பை நிராகரிக்கும் ஒப்பந்தத்தைத்தான் நாங்கள் கொண்டுள்ளோம்." என்றார். Le Monde கூறியது: "மேர்க்கெல் தன்னுடைய பணப்பையை திறக்கத் தயார், ஆனால் பொது மக்கள் கருத்து மற்றும் அரசியல் சமூகத்தின் கருத்து பற்றி சிந்திக்க வேண்டும் அவை பெரும்பாலும் அத்தகைய நடவடிக்கையை எதிர்க்கின்றன. ஜேர்மனியில் சீர்திருத்தங்களும் ஊதிய முடக்கமும் மக்களிடம் இருந்து தியாகங்களைக் கோரியிருக்கையில், கிரேக்கத்திற்கு உதவி அளிப்பது என்பது நினைத்தும் பார்க்க முடியாதது." பிணை எடுப்புத் திறன் நடவடிக்கையில் தனியார் தொடர்பு பற்றிய சில விவாதங்கள் உள்ளன. பெப்ருவரி 28 அன்று பிரெஞ்சு நிதி அமைச்சர் Christine Lagarde கிரேக்கம் அதன் கடன்களைப் புதுப்பிக்கும் வகையில், "நாங்கள் ஆய்வுநடத்தும் முறையில் சிந்திக்கிறது....இதில் தனியார்துறை பங்காளிகள், பொதுத்துறை பங்காளிகள் அல்லது இருபுறத்தில் இருந்தும் பங்கு பெறுபவர் இருக்கலாம்." என்றார். இரு நாட்களுக்கு முன்பு Deutsche Bank-ன் தலைமை நிர்வாக அதிகாரி Joseph Ackerman கிரேக்கத்திற்கு பாப்பாண்ட்ரூவுடன் இன்னும் பேச்சுக்கள் நடத்த பயணித்தார். பெருகிய முறையில் ஐரோப்பிய அரசியல்வாதிகள், IMF ஆனது கிரேக்க பிணை எடுப்பை நடத்தி அந்நாடு கடுமையான சிக்கன நடவடிக்கைகள் எடுக்கவும் ஏற்பாடு செய்யவேண்டும் என்ற கருத்தை கொண்டுள்ளனர். உலகப் பொருளாதார நெருக்கடி வெடித்த காலத்தில் இருந்து IMF ஆனது ஹங்கேரி, லாட்வியா, ருமேனியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு பிணை எடுப்பை ஏற்பாடு செய்துள்ளது. இன்னும் பரந்த முறையில் IMF, ஆபிரிக்கா, ஆசியா, இலத்தின் அமெரிக்கா ஆகியவற்றில் பெரும்பகுதிகளில் கடந்த மூன்று தசாப்தங்களாக கடுமையான சிக்கன நடவடிக்கைகளை வற்புறுத்தியுள்ளது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் எழுதியது: "இன்னும் அதிகமான முறையில் IMF-இன் பங்கு இருப்பது மேர்க்கலுக்கு உடன்பாடுதான் என்று அவர் கருத்தை அறிந்தவர்கள் கூறுகின்றனர்... மேர்க்கெல் IMF இடம் இதுபற்றி அதிக தெளிவும் அனுபவமும் இருப்பதாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக பிரிவான ஐரோப்பிய ஆணைக்குழுவை விட பொதிகளை நிறுவ முடியும் என்று நம்புகிறார்." ஆனால் பல ஐரோப்பிய அதிகாரிகளும் வாஷிங்டன் ஆதிக்கத்திற்கு உட்பட்ட IMF-ம் கிரேக்கத்தை பிணை எடுத்தால், அது அமெரிக்காவிற்கு யூரோப் பகுதி மற்றும் யூரோமீது கூட உறுதியான செல்வாக்கை அளித்துவிடும் என்று கவலைப்படுகின்றனர். சீனாவிற்கும் IMF-ல் வாக்களிக்கும் உரிமைகள் உள்ளன. கடந்த மாதம் பெயரிடப்படாத உயர்மட்ட ஐரோப்பிய அதிகாரிகள், "IMF தனியே தலையிட்டால், பிணை எடுப்பு பற்றிய நிபந்தனைகள் மீது நாம் அனைவரும் கட்டுப்பாட்டை இழந்துவிடுவோம். வரவு-செலவுத் திட்டம் மற்றும் நிதி ஒருங்கிணைப்பிற்கான முயற்சிகள் யூரோப்பகுதிக்குள் பின்னர் பொருளற்று போய்விடும்." திங்களன்று லுக்சம்பேர்க் தலைவர் Jean-Claude Juncker டெர் ஸ்பீகலிடம் கூறினார்: "IMF முயற்சி, தொழில்நுட்பத் தேவைக்குமேல் தேவையிராது என்று நான் நம்புகிறேன்." ஜேர்மனிய நிதி மந்திரி வுல்ஃப்காங் ஷெளபெலும் கிரேக்கத்தை IMF பிணை எடுப்பது பற்றி விரோதப் போக்கு கொண்டுள்ளார். "பேர்லினின் ஆனது எவரும் அமெரிக்கா மறைமுகமாகக்கூட ஐரோப்பிய பகுதியில் தொடர்பு கொள்ளுவதை விரும்பவில்லை" என்றார். பிரான்சின் ஜனதிபதி நிக்கோலா சார்க்கோசி கிரேக்கத்தில் பிணை எடுப்பு பற்றி IMF பங்கிற்கு விரோதமாக உள்ளார். IMF தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான், எதிர்க்கட்சியான பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்தவர், 2012 பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் சார்க்கோசிக்கு எதிர் வேட்பாளராகும் திறன் உடையவர். ஸ்ட்ராஸ் கான் தற்பொழுது கருத்துக் கணிப்புக்களில் சார்ககோசியைவிட முன்னணியில் உள்ளார். ஆனால் பிணை எடுப்பிற்கு கடுமையான, ஆழ்ந்த மக்கள் விரோத சிக்கன நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக எடுக்க வேண்டும் என்பதால், ஐரோப்பிய ஒன்றியம் இதைச் செயல்படுத்த அதிக வலுவற்று இருக்கும் என்ற அச்சங்கள் உள்ளன. தேர்ந்தெடுக்கப்படாத வாஷிங்டனின் IMF அதிகாரிகள், ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு பதிலாக, நிதிய மீட்பை நடத்துவது பிணை எடுப்பை மக்கள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் செயல்படுத்தப்பட முடியும், ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே உள்ள அழுத்தங்களையும் கரைத்தவிடும். நிலைமையில் உள்ள வெடிப்புத்தன்மையின் ஒரு அடையாளமாக, கிரேக்க அதிகாரிகள் இரண்டாம் உலகப் போரின்போது நாஜி ஆக்கிரமிப்பிற்கு ஜேர்மனி இழப்பீடு தரவேண்டும் என்ற பிரச்சினையை எழுப்பியுள்ளனர். இதேபோன்ற கருத்துக்கள் கடந்த வாரம் கிரேக்க துணைப் பிரதம மந்திரி தியோடோர் பங்கலோஸால் எழுப்பப்பட்ட போது, கிரேக்க பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ கூறினார், "இரண்டாம் உலகப்போர் ஜேர்மனிய இழப்பிட்டுத் தொகைகள் முடிவாக தீர்க்கப்படவில்லை. நாங்கள் எங்களுக்கு வர வேண்டிய பணத்தை ஒருபோதும் இழக்க மாட்டோம்." ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார வல்லுனர் ஓட்மர் இஸிங் ZDF தொலைக்காட்சியிடம் திங்களன்று கூறினார்: "IMF கிரேக்க பிணை எடுப்பிற்கு உகந்தது, ஏனெனில் இதற்காகத்தான் அது உள்ளது... IMF இடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டால் கிரேக்கத்திற்கும் ஜேர்மனி போன்ற மற்றய தனி நாடுகளுக்கும் இடையே எதிர்ப்பு வருவதை நாம் தடுத்துவடலாம்." வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் எழுதியது: "ஒபாமா நிர்வாகத்தில் முன்னாள் சர்வதேச நிதித்துறை அதிகாரியாக இருந்த டெட் ட்ரூமன், ஐரோப்பிய ஒன்றியம் IMF-ஐ இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்--இது கிரேக்கம் மற்றும் பிற இடங்களில் உள்ள வாக்காளர்களுக்கு பிரஸ்ஸல்ஸ், பாரிஸ், பேர்லின் தவிர வேறு ஒரு அரசியல் தாக்குதல் இலக்கைக் கொடுக்கும்." |