World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The Tiger Woods episode: Money, the media, and the "path to redemption"

டைகர் வூட்ஸ் நிகழ்வு: பணம்,ஊடகம், மற்றும் " பாவத்திலிருந்து மீட்புக்கான வழி "

By David Walsh
16 December 2009

Back to screen version

அமெரிக்க செய்தி ஊடகமே பொதுவாக முழுக் குப்பையாகத்தான் இருக்கின்றது. ஆனால் சமீபத்தில் வேறு எந்த விடயத்தையும் விட அதிக குப்பை போன்ற தகவல்கள் டைகர் வூட்ஸ் பற்றியும் அவரது விவகாரங்கள் பற்றியும் எழுதப்பட்டுள்ளன மற்றும் ஒளிபரப்பப்பட்டுள்ளன. பணம், புகழ் பெற்றவர்கள், உத்தியோகபூர்வ பக்தி மற்றும் செய்தி ஊடகம் அளிக்கும் காமம் நிறைந்த தகவல்கள் என்று அமெரிக்காவில் இன்று உத்தியோகபூர்வ பொது வாழ்வில் மேலாதிக்கும் செலுத்தும் வருந்தத்தக்க கூறுபாடுகள் பலவற்றை ஒருமித்து இந்த நிகழ்வு கொண்டுவந்துள்ளது.

உலகின் முன்னணி கோல்ஃப் விளையாட்டுக்காரரும், உலகின் முக்கிய விளையாட்டு நபர்களில் ஒருவருமான வூட்ஸ் ஏராளமான காதலிகளைக் கொண்டிருந்தார் என்ற இரகசியம் வெளிப்பாடானது அவருடையதும், அவருடைய மனைவி மற்றும் அவரைச் சுற்றியுள்ள மிக நெருங்கிய நபர்களுடைய விவகாரம்தான். இதை எப்படி அவர்கள் தீர்க்கப்போகிறார்கள் என்பது முற்றிலும் அவர்களுடைய சொந்த விடயம். வூட்ஸ் ஒன்றும் குற்றத்தை செய்துவிடவில்லை. இடைவிடாமல் செய்தி ஊடகம் கவனம் காட்டுவது கண்டிக்கத்தக்கதாகும். பரபரப்புச் செய்தியாளர்களின் அனைத்து வாதங்களும் அதாவது, "புகழ் பெற்றவர்கள்" அந்தரங்க உரிமையை இழந்தவர்கள் என்பது அர்த்தமற்ற சுயநல வாதம் ஆகும்.

இந்தப் பிரச்சினை பல காரணங்களுக்காக மிக அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு உடனடித் தன்மையில், கோல்ஃப் விளையாட்டில் வூட்ஸ் கொண்டுள்ள மகத்தான திறமையானது முக்கியத்துவம் அதிகம் இல்லாத கூறுபாடுகளில் ஒன்றாகும். அந்தத் திறமை இல்லாவிட்டால் தற்பொழுது அவருடைய வணிகச் சின்னப் பெயரில் பிணைந்துள்ள நிதிய நலன்கள் இருக்காது என்பது உண்மை. ஆனால் அவர் தன்னுடைய கோல்ஃப் மட்டையினால் அதிக தூரம் அல்லது துல்லியமாகப் பந்தை தன் போட்டியாளர்களைவிட அடிக்க முடியுமா என்பது தற்பொழுது பிரச்சினை அல்ல.

பல ஆண்டுகளாக ஒரு சுதந்திரமான மனித ஆளுமை படைத்தவர் என்று இல்லாமல் ஒரு பண்டம் போல் "டைகர் வூட்ஸ்" இருந்து வந்துள்ளார். இப் பண்டத்தைப் பல பிரிவுகளாக பல நிறுவனங்களால் வாங்கப்பட்டுள்ளன. நைக் ஒரு பகுதி, பிராக்டர் & காம்பிள் (கில்லட்) மற்றொரு பகுதி, பெப்சிகோ (காடேரடே) மற்றொரு பகுதி, AT&T நான்காம் பகுதி என்று இப்படி செல்லுகிறது. PGA (Professional Golfers Association Tour), விளையாட்டுச் செய்தி ஊடகம் மற்றும் தொலைக்காட்சி வலையமைப்புக்கள் ஆகியவையும் தங்களுக்கு சொந்தமான பங்கை கொண்டுள்ளன.

கடந்த தசாப்தத்தில் வூட்ஸ் தன்னை செல்வக் கொழிப்பு உடையவராக ஆக்கிக் கொண்டுள்ளார் அதாவது சில மதிப்பீடுகள் அவருடைய மொத்த வருமானங்களானது 1 பில்லியன் டாலரையும் விட அதிகமானது (அதில் பெரும்பாலானது நுகர்பொருட்களுக்கு ஆதரவு கொடுத்தல் மூலம்) என்று மதிப்பிட்டுள்ளனர். ஆனால் இந்த பல வர்த்தக நலன்களைப் பெற்றுக் கொண்டதைவிட அதிகமாக பெற்றுள்ளார். இப்பொழுது இவற்றுள் சில அதாவது PGA Tour மற்றும் தொலைக்காட்சி வலையமைப்புக்கள் குறிப்பாக மற்றய சில நிதி உத்தரவாதம் அளிக்கும் அமைப்புக்கள் பெரும் இழப்பிற்கு உட்படக்கூடும். PGA-ஐப் பொறுத்தவரையில் மந்த நிலையினால் அது ஏற்கனவே 2009-ல் வருமானத்தில் சரிவைக் கொண்டது. நைக் கோல்ஃப் 77 மில்லியன் டாலர் அல்லது 11 சதவிகித வருமான இழப்பை மே மாதம் முடிந்த அதன் நிதியாண்டில் கண்டது.

தற்காலிகமாக (அப்படி வைத்துக் கொள்ளுவோம்) வூட்ஸ் விளையாட்டில் ஈடுபடாதது இந்தச் சித்திரத்தை இன்னும் இருண்டதாக்கும். 2008-09-ல் அவர் ஒரு முழங்காலில் அறுவை சிகிச்சையை ஒட்டி எட்டு மாதங்கள் விளையாட்டில் கலந்து கொள்ளாதபோது, கோல்ஃப் போட்டிகள் தொலைக்காட்சிகளில் பார்க்கப்பட்டமையானது 47 சதவிகிதம் சரிவுற்றது. சன் டியாகோ போட்டி நடத்தும் டோம் வில்சன் கூற்றுப்படி, "இத்தகைய போட்டிகளில் இருந்து கூடுதலாகக் கிடைக்கும் 15-20 சதவிகிதம் டைகருக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு ஆகும்." ஜனவரி கடைசியில் சன் டியாகோ நிகழ்வு நடக்கும் டோரி பைன்ஸ் கோல்ஃப் மைதானம் "கிட்டத்தட்ட 500,000 டாலரை இழக்கும்" என்று CBS News தெரிவிக்கிறது.

தொலைக்காட்சி வலையமைப்புக்களுடன் கோல்ஃப் போட்டிகள் ஒளிபரப்புதல் பற்றி ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்போது, "விளையாட்டில் டைகர் ஓர் உறுப்பினராக இருப்பார் என்பது வலையமைப்பு கொடுக்கத்தயாராக இருக்கும் பணத்தை நிர்ணயிக்கும்" என்று ஒரு ஆலோசனை நிறுவனத்தின் தலைவரும், CBS Sports-ன் முன்னாள் தலைவருமான நீல் பில்சன் ரெய்ட்டரிடம் தெரிவித்தார்.

லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸிடம் மைக்கேல் ஹல்ஜிக் கூறியபடி, "டைகரின் வேலை கோல்ஃப் ஆடுதல், ஆனால் அவருடைய வணிகமோ ஒரு பொதுமக்கள் விரும்பும் தோற்றத்தைக் கொடுத்தல். அவ்வாறு அவர் செய்யக்கூடிய திறமையைப் பொறுத்து கணிசமான பொருளாதாரம் அதை நம்பியுள்ளது அதாவது PGA நிகழ்ச்சிகளானது டைகர் வாணிபச் சின்னத்தை பொருட்களின் விற்பனையாளர்கள், கோல்ஃப் மட்டை தயாரிப்பவர்கள், கார்கள் மற்றும் அவர் ஒப்புதல் கொடுக்கும் பல பொருட்களில் ஈடுபாடு உடையவர்கள் என."

இணையத்தில் விளையாட்டுக்களை பற்றி எழுதும் யாகுவைச் சேர்ந்தவர், "தன் சொந்த நேரத்தில் வூட்ஸ் என்ன செய்கிறார் என்பது அவரைச் சார்ந்த விடயம் மட்டும் இல்லை, அவருடைய பொதுத் தோற்றத்தில் நூறாயிரக்கணக்கான மில்லியன்களை முதலீடு செய்துள்ளவர்களுக்கு அவருடைய நடவடிக்கைகள் தீமைபயக்கக்கூடும். அந்த நிதியப் பாதிப்புத்தான், "அதிக பெண்களா அல்லது அதிக போட்டிகளா" என்பது வினாவல்ல என்பதுதான் இந்நிகழ்வின் உண்மையாகும்." என்று அப்பட்டமாக வாதிட்டுள்ளார்.

உண்மையில் வுட்ஸும் ஒரு மனிதர்தான் என்பதை வெளிப்படும்போது, அவருக்கு நிதி உத்தரவாதம் கொடுப்பவர்கள் மற்றும் முதலாளிகளுக்கு இது இடர்பாடுகளை ஏற்படுத்துகின்றன. சிலர் அவருடன் தொடர்ந்து இருக்கலாம் (உதாரணமாக நைக்கும் மற்றும் EA Sports-ம்). தற்போதைய பரபரப்பு அடங்கிவிடும் என்ற கருத்தில் மற்றவர்கள் அதாவது (ஆலோசனைப் பெருநிறுவனம் Accenture, AT&T மற்றும் ஸ்விஸ் கடிகாரத் தயாரிப்பாளர்Tag Heurer போன்றவை) விலகிக் கொள்ளுவார்கள். அத்தகைய முடிவை ஒழுக்கநெறி என்று இல்லாமல் துல்லியமான நிதிய நிலைமைகள்தான் நிர்ணயிக்கும்.

அமெரிக்க செய்தி ஊடகத்தின் பிரிவுகளானது விளையாட்டு வீரர்கள் மற்றும் பொழுது போக்குத்துறையில் இருப்பவர்களை உயர்த்திக் காட்டுவதிலும், வாழ்க்கையைவிட பெரிய தன்மை கொண்டவர்கள் என்று காட்டுவதில் தீய பங்கைக் கொண்டுள்ளன. ஒலிபரப்பு/ஒளிபரப்பு நேரத்தை விற்கின்றனர், ஏடுகள், செய்தித்தாட்கள் ஆகியவை தவறுகள் செய்யக்கூடிய மனிதர்களை சிறப்புத் திறமை இருப்பதாகக் காட்டி விற்கப்படுகின்றன. சில சமயம் திறமை அற்றவர்களையும் அவ்வாறு தூக்கிவிடும். கிட்டத்தட்ட அரைக் கடவுளர் நிலைமைக்கு உயர்த்துகின்றன. ஆனால் அத்தகைய நபர்களை அழிக்கும் உரிமையையும் அவை கொண்டுள்ளன. அந்த வழிவகையிலும் விற்பனைப் பெருக்கம் உண்டு. அது மிக உயர்ந்த ஊதியம் பெறும் விளையாட்டு வீரர்கள், ஹாலிவுட் நட்சத்திரங்கள், பிரபல பாடகர்கள் பற்றி மக்களுடைய சந்தேகத்திற்கு உரிய உறவில் விளையாடுவார்கள். புகழ்பெற்றவர்களைப் போற்றுதல் என்பது எப்பொழுதுமே பொறாமை, மறைக்கப்படாத எதிர்ப்பு உணர்வு என்ற இரு கூறுபாடுகளின் கலவையையும் கொண்டுள்ளது. தக்க நேரத்தில் செய்தி ஊடகம் இதைத் திரிக்கும் முயற்சிகளில் ஈடுபடும்.

டைகர் வுட்ஸிற்கு உண்மையில் "மக்கள் எதிராகப் போய்விட்டனரா" என்பது வினாவிற்கு உட்பட்டது. பலரும் செய்தி ஊடகமானது அவரைத் தனியே விட வேண்டும் என்றும் அவருடைய சொந்த வாழ்வு அவருடைய அந்தரங்கம் என்றும்தான் கருதுகின்றனர். ஒரு தசாப்பத்திற்கும் மேலாக பல அரசியல் உந்துதலினால் நடந்த பாலியல் இன்னும் பல ஊழல்கள் அதில் கிளின்டன்-லெவின்ஸ்கி விவகாரம் முக்கியமானது, மக்களை இத்தகைய செயற்பாடுகள் பற்றி அதிகம் பொருட்படுத்தாமல் விடுகின்றன.

ஆனால் முக்கிய பதிப்பக வெளியீடுகளானது பரபரப்பானாலும் மற்றவையானாலும், அமெரிக்காவில் தொலைக்காட்சி வலையமைப்புக்களும் தொடர்ந்து சகதியில் ஆழ்கின்றன. அவற்றால் வேறுவிதமாக இருக்க முடியாது, அவை அவ்வாறு இருக்கவும் விரும்பவில்லை. பல நேரம் இதுபற்றி மார்பில் அடித்துக் கொண்டாலும் நிலைமை இதுதான். செய்தி ஊடகத்திற்கு பரபரப்பு பற்றிய பொருளாதார மற்றும் அரசியல் உந்துதல்கள் தொடர்வதற்காக உள்ளன. மேலும் முக்கிய நபர்கள் (பெருநிறுவன உயர்நிர்வாகிகள், செய்தித்துறை தலைவர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர்கள், முக்கி நிருபர்கள் போன்றவர்கள்) தாங்களே ஊழல் நிறைந்த, இழிந்த கருத்துக்களில் அதிகம் ஈடுபாடும் கொண்டவர்கள்.

ஆனால் நாணயத்தின் மறுபுறம் பாசாங்குத்தன பக்தித் தோற்றம் ஆகும். பொதுவாகவே விளையாட்டுத்துறை எழுத்தாளர்கள் வருத்தத்திற்குரிய பிரிவினர், மிக மேம்போக்கான மற்றும் சந்தர்ப்பவாத தொழிலில் மிக அதிக மேம்போக்கும் மற்றும் சந்தர்ப்பவாதமும் கொண்டவர்கள். வூட்ஸ் சம்பவம் போன்ற தற்போதைய நிகழ்வு அவர்களுக்கு எப்படி பிறர் வாழ வேண்டும் என்பதைக் கூறும் வாய்ப்பாக அமைந்து விடுகிறது. "வூட்ஸ் மோசமாக நடந்து கொண்டுவிட்டார்", "நேர்மையற்றவர், பலவிதங்களில் கோழைத்தனமானவர்", "மகத்தான இரட்டை வேட வாழ்வு வாழ்பவர்" என்று இவர்கள் தங்கள் வாசகர்கள், தங்கள் பேச்சுக்களைக் கேட்பவர்களுக்கு, பார்ப்பவர்களுக்கு உபதேசிக்கின்றனர்.

மிகவும் எதிர்ப்புத் தெரிவிக்கும் கட்டுரைகளில் ஒன்றை நியூயோர்க் டைம்ஸின் வில்லியம் ரோடன் எழுதினார். இதன் தலைப்பு "வூட்ஸ் மன்னிப்புக் கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்பதாகும். இது மொத்த இழிவுப்போக்கையும் சுருக்கமாகக் காட்டுகிறது. கோல்ஃப் வீரர் நிலைப்பாட்டில் பேசாமல் இருந்து, ஒரு பொது மன்னிப்பை இதுவரை கோரும் விருப்பம் இல்லாத வுட்ஸின் போக்கை ரோடன் குறைகூறுகிறார். மேலும் அவர் அளிக்க வேண்டிய அறிவிப்பு கீழ்க்கண்டபடி இருக்க வேண்டும் என்கிறார். "என்னுடைய மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள், PGA அமைப்பு, ஆதரவாளர்கள், ஏராளமான டைகர் வுட்ஸின் விசிறிகள் ஆகியோரிடம்--அனைவரும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்திருப்பர் என்பது எனக்குத்தெரியும்--நான் மன்னிப்புக் கோருகிறேன். உங்களை ஏமாற்றிய வகையில், நான் என்னையே ஏமாற்றிக் கொண்டுவிட்டேன்."

எத்தகைய இழிந்த அறநெறி உபதேசம்! இத்தகைய ஆலோசனையை கூறுவதற்கு ரோடன் யார்?

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் ஜோன் போல் நியூபோர்ட்டும் இவ்வளவு அபத்தமாகத்தான் எழுதியுள்ளார். "நாம் அறிந்தவர் என்று நினைத்திருந்த டைகர் வூட்ஸ் என்ற தலைப்பில் அவர் எழுதுவது: "பல கோல்ஃப் விளையாட்டு ரசிகர்களைப் போல் தானும் ஏமாற்றம் அடைந்து திரு வூட்ஸால் காட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டதாக உணர்ந்தேன்." என்ன? வூட்ஸ் தன்னுடைய பந்தை 18-வது தடத்தில் சமீபத்திய வீரர்கள் போட்டியில் கொண்டு சென்ற போது இது கண்டுபிடிக்கப்பட்டதா?

நியூபோர்ட் தொடர்கிறார்: "ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 2004 ஜனாதிபதி பிரச்சாரத்தின்போது, ஒரு கோல்ஃப் ஏட்டிற்கு திரு வூட்ஸ் எப்படி ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கான திறனைக் கொண்டுள்ளார் என்று எழுதினார். உடனடியாக என்று இல்லை, ஆனால் அவர் கோல்ஃபில் இருந்து ஓய்வு பெற்ற சில காலத்திற்குப் பின்னர்." இப்பொழுது ஏமாற்றமடைந்துள்ள கட்டுரையாளர் அத்தகைய முட்டாள்தனமான துஷ்பிரயோக கருத்துக்களுக்குத் தன்னைத்தான் குறைகூறிக்கொள்ள வேண்டும்.

லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸில் எழுதிய தன் கட்டுரையில், ("Tiger Woods' Path to Redemption has been Blazed by Many who Preceded Him"), ஹில்ட்ஜிக் வெறுக்கும் முறையில் அமெரிக்காவில் மக்களிடையே பிரபலமானவர்கள் மீண்டும் மக்களின் பரிவைப் பெறுவதற்கு செய்ய வேண்டிய வாடிக்கையான வழியைக் கோடிட்டுக் காட்டுகிறார்.

"பொது மன்னிப்பு என்னும் கருவி பல தசாப்தங்களில் வளர்ச்சியுற்றிருக்கிறது. அதன் செயற்பாடுகள் அதைச் செய்பவர்கள், பார்வையாளர்களால் நன்கு அறியப்பட்டுள்ளன... வூட்ஸ் மீண்டும் வருவது என்பது அவருக்கு முன்னால் பலர் ஒளிவீசிச் சென்றதில் உள்ளது. உண்மையில் முதலில் இருந்தே அந்தப் போக்கு வெளிப்படையாக உள்ளது. தேவைப்படுவது பொது ஒப்புதல் வாக்குமூலம். நம்முடைய பண்பாட்டில் அதிகமாக இருப்பது பொது மன்னிப்புக் கோருபவர்கள் இருப்பதுதான்.

"என்னுடைய கணிப்பு டைகர் இறுதியில் ஒரு தேசியத் தொலைக்காட்சி நிகழ்வில் பங்கு பெற்று எல்லாவற்றையும் ஒப்புக் கொள்ளக்கூடும் என்பதுதான்... தான் செய்தது பற்றி பெரிதும் வருந்திய நிலையில் அவர் Oprah Winfrey உடன் பேசலாம். பாசாங்கு செய்திக்கு லாரி கிங்கை நாடலாம். பெருந்தன்மையாக அக்கறை காட்டுவதற்கு Diane Sawyer உடன் பேசலாம். உணர்வுபூர்வமான, மனிதத்தன்மை நிறைந்த வருத்தம் தெரிவித்தலுக்கு Mat Lauer இடம் கூறலாம். உள்ளக் கொந்தளிப்பு மற்றும் சொந்த வளர்ச்சி பற்றி உரையாட Barbara Walters இடம் செல்லலாம்."

செய்தி ஊடகத்தையும் விளையாட்டு உலகத்தையும் எக்கேடாவதுடு கெட்டுப்போங்கள் என்று வூட்ஸ் சொல்ல வேண்டும். ஆனால் துரதிருஷ்டமாக அத்தகைய நடவடிக்கையை அவர் மேற்கொள்வது என்பது அவரால் ஒருபோதும் செய்யக்கூடியதாக இருக்காது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved