WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
பங்களாதேஷ்
Bangladesh: Factory fire kills 21 garment workers
வங்காளதேசம்: ஆலையில் ஏற்பட்ட தீயில் 21 ஆடைத் தயாரிப்பு தொழிலாளர்கள்
கொல்லப்பட்டார்கள்
By Wimal Perera
4 March 2010
Use this
version to print | Send
feedback
பெப்ருவரி 25-ம்
தேதி வங்காளதேச தலைநகரம் டாக்காவிற்கு 30 கி.மீ. தெற்கே உள்ள காஜிப்பூர் கரிப்பிலுள்ள கரிப் ஸ்வெட்டர்
ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14
பெண்கள் உட்பட குறைந்தது 21 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும்
30 பேர் காயமுற்றனர். மின்சாரக் கசிவு, தீ விபத்திற்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் வெளிக்
கதவுகள் பூட்டப்பட்டதுதான் அதிக இறப்புக்களுக்கு முக்கிய காரணம் ஆகும்.
ஏழு மாடிக் கட்டிட ஆலையில் முதல் மாடியில் தீ தோன்றி விரைவில் மற்றய மாடிகளுக்கும்
பரவியது. பல தொழிலாளர்கள் அதனால் பொறியில் அகப்பட்டுக் கொண்டனர். பெரும்பாலான இறப்புக்கள் புகை
மூட்டத்தால் ஏற்பட்டதாகத் தோன்றுகிறது. தீயணைப்புப் படையினர் 11 இயந்திரங்களை கொண்டு தீயைக் கட்டுப்பாட்டில்
கொண்டுவருவதற்குள் தீ குறைந்தது 2 மணி நேரமாவது பற்றி எரிந்திருந்தது.
ஜய்தேவ்பூர் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பாளரான அப்துர் ரஷிட் பைனான்ஸியல்
எக்ஸ்பிரஸிடம் கூறினார்: "பெரும்பாலான தொழிலாளர்கள் தீயினால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் முச்சுத்
திணறி இறந்தனர். ஏனெனில் அவர்கள் இரவுப் பணி முடிந்த பின் ஆலை அறையில் பூட்டப்பட்டிருந்தனர்." டெய்லி
ஸ்டாரிடம் பேசிய தீயணைக்கும் அதிகாரிகள் ஆலையில் இருந்த தீத் தடுப்பு கருவிகள் "முற்றிலும் பயனற்றவை",
கட்டிடம் மோசமான காற்றோட்டத்தை கொண்டிருந்தது என்றனர்.
தீயைத் தொடர்ந்து நன்கு அறியப்பட்ட, இழிந்த வாடிக்கையான நிகழ்வுதான்
நடந்தது.
தொழிற்சங்கங்கள் காஜிப்பூர் மத்திய டாக்காவில் தீவிபத்திற்கு மறு தினம் சில
எதிர்ப்புக்கள் நடத்தி ஆலைச் சொந்தக்காரர் உடனடியாக கைது செய்யப்படவேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு
இழப்பீடு வேண்டும் என்று கோரின. ஆனால் நாட்டின் தொழிற்சாலைகளில் ஒரு பாதுகாப்பான நிலைமைகளுக்காக
தொழிற்சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்வதில் எந்த விருப்பத்தையும் காட்டவில்லை.
வங்காளதேச ஆடைகள் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (BGMEA)
தலைவர் அப்துஸ் சலாம் முர்ஷெடி 200,000 டாகா (2,900
அமெரிக்க டாலர்) இறந்த தொழிலாளர்கள் குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் கொடுப்பதாகவும் காயமுற்றவர்களுக்கு
உதவி உண்டு என்றும் அறிவித்தார். BGMEA
இறந்தர்களுக்கு அனுதாபம் தெரிவிக்க மூன்று நாட்களை அறிவித்து தன்
உறுப்பினர்கள் தங்கள் ஆலைகளில் கறுப்புக் கொடி ஏற்ற வேண்டும் என்றும் அறிவித்தார்.
பிரதம மந்திரி ஷேக் ஹசினா இறப்புக்கள் பற்றி "ஆழ்ந்த அதிர்ச்சியை" கூறி தன்னுடைய
பரிவுணர்வை சோகத்தில் உள்ள குடும்பங்களுக்குத் தெரிவித்து, இறந்தவர்களின் ஆன்மா முக்தியடைய பிரார்த்தனையும்
செய்தார். இத்தகைய நிகழ்வுகள் வருங்காலத்தில் வராதபடி தடுக்குமாறு கவனத்துடன் இருக்குமாறு அதிகாரிகளைக்
கேட்டுக் கொண்டார்.
தீ விபத்து பற்றி விசாரிக்க குறைந்தது மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒரு
அரசாங்க விசாரணை, ஒரு தீயணைப்புப்படை விசாரணை, மூன்றாவது
BGMEA- வினால்.
முன்கூட்டியே இதன் முடிவுகளை கணிக்க முடியும்: அதாவது ஒரு சில பலிகடாக்கள் அடையாளம் காணப்பெறுவர்,
நல்ல பாதுகாப்புத் தரங்களின் தேவை பற்றி பொது அறிக்கைகள் விடப்படும் மற்றும் அறிக்கைகள் சடுதியில்
புதைக்கப்பட்டுவிடும்.
காஜிப்பூர் மாவட்ட அதிகாரிகள் நியமித்திருந்த விசாரணைக்குழுவின் அறிக்கை
செவ்வாயன்று வெளிவந்தது. இறப்பிற்கு முக்கிய காரணம் ஆலை சட்டவிரோதமாக கட்டப்பட்டதால் இருந்த
மோசமான காற்றோட்டம்தான் என்று கண்டறிந்துள்ளது. அதைத்தவிர அவசரமாக வெளியேறுவதற்கு வெளிச்சம்
இல்லாததும் தொழிலாளர்கள் தப்பிப்போக முடியாமல் செய்துவிட்டது. தீயணைப்புக் கருவிகள் எப்படி
செயல்படுத்துவது என்பது பற்றியும் தொழிலாளர்கள் அறிந்திருக்கவில்லை. நிர்வாகத்திற்கு எதிராக சட்டபூர்வ
நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை பரிந்துரைத்தது.
ஸ்வீடன் நாட்டு அழகுப் பொருள் தொடர் நிறுவனமான
H & M-ற்கு கார்டிகன்கள், ஜம்பர்களை காஜிப்பூர் ஆலை
தயாரித்துவந்தது. அந்த நிறுவனம் இது பற்றி தன்னுடைய கைகளை சடுதியில் கழுவி விட்டது. "நாங்கள் அறிந்துள்ள
விதத்தில் மட்டமான பணிநிலைகளோ பாதுகாப்பு நடவடிக்கைகளோ கொடூரமான விபத்திற்குக் காரணம் இல்லை.
வங்காளதேசத்தில் பொதுப் பணி நிலை என்று வரும்போது, நாட்டில் நாங்கள் இருப்பது நீண்ட காலத்தில்
மாற்றத்திற்கு வகை செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று நிறுவன அறிக்கை கூறியுள்ளது.
கடந்த வார தீ ஸ்வெட்டர் ஆலையில் முதல் விபத்து அல்ல கடந்த ஆகஸ்ட் மாதம்
இரண்டாவது மாடியில் பின்னிரவில் தீவிபத்து ஒன்றில் ஆடைகள், நூல்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவை
அழிக்கப்பட்டன. ஆறு தீயணைப்புப் பிரிவுகள் தீயை அணைக்க முற்பட்டிருந்தன. ஒரு தீயணைப்புவீரர் அப்துல் கலாம்
வெப்பத்திலும் புகை மூட்டத்திலும் துயருற்று மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துபோனார். இன்னும் ஐந்து
தீயணைப்பு வீரர்கள் காயமுற்றனர்.
ஆலைகளில் தீவிபத்துக்கள் மற்றும் சரிவுகள் என்பது வங்காளதேசத்தில் வாடிக்கையான
நிகழ்வுகள் ஆகும். 1990-ல்
இருந்து குறைந்தது 240 பேராவது ஆடைகள் ஆலை தீவிபத்துக்களில் இறந்துள்ளனர். 2006-ம்
ஆண்டு சிட்டகாங் ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 54 தொழிலாளர்களை கொன்றும் 100-க்கும்
மேற்பட்டவர்களை காயப்படுத்தியும் இருந்தது. இருந்தும்கூட பரந்த முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள்
மீறப்படுதல் தொடர்கின்றன. அதேபோல் தக்க முறையில் தீயணைப்பு கருவிகள் பராமரிக்கப்படுவதில்லை,
வெளியேறும் வழிகள், அவசரகால வெளிச்சம் மற்றும் தீயணைப்பு பயிற்சிகள் ஆகியவையும் உரிய முறையில்
கவனிக்கப்படுவதில்லை.
பாதுகாப்பு தரங்கள் மோசமான நிலையில் இருப்பது இலாப உந்துதலின் நேரடி
விளைவு ஆகும். வங்காளதேசம் அதிகம் ஆடைத் தொழிலை நம்பியுள்ளது. இது ஆண்டு ஒன்றிற்கு அமெரிக்க டொலர்
10 பில்லியனை பெறுகிறது. இத்துறையில் 2 மில்லியன் தொழிலாளர்கள் உள்ளனர். பெரும்பாலானவர்கள் பெண்கள்
ஆவார்கள். வங்காளதேசம் இப்பொழுது உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஆடைகள் உற்பத்தி செய்யும் நாடு
ஆகும்.
தனிப்பட்ட நாடுகளுக்கு ஒதுக்கீட்டைக் கொடுத்து வந்த 2005-TM
Multi-Fiber Agreement
முடிவிக்கு வந்தபின், வங்காளதேசமானது சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து பெரும் போட்டியை
சந்தித்தது. டாக்காவின் தொடர்ச்சியான அரசாங்கங்கள் ஆடைத் தொழிலை போட்டியை எதிர்கொள்ள குறைந்த
செலவுகளை ஏற்படுத்துதல் அதாவது ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மூலம் இவைகளை நிலைநிறுத்தத்தான்
செயல்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு Online
Knowledge Centre ஆனது உலகளாவிய மதிப்பீடு ஒன்றை
உலகின் ஆடைத் தொழில்கள் பற்றி அமெரிக்காவை தளமாகக் கொண்ட
Jassin-O'Rourke Group
மூலம் நடத்தியது. அது வங்காளதேசத்தில் மிகக் குறைந்த ஊதியங்கள் இருப்பதை சுட்டிக் காட்டியது. ஒரு வங்காளதேச
ஆடைத் தொழிலாளர், அமெரிக்க சென்டுகள் 22-ஐத்தான்
ஒரு மணி நேரத்திற்கு பெறுகிறார். இது கம்போடியாவில் 33 சென்டுகள், வியட்நாமில் 38 சென்டகள், பாக்கிஸ்தானில்
37 சென்டுகள், இலங்கையில் 43 சென்டுகள், இந்தோனேசியாவில் 44 சென்டுகள், இந்தியாவில் 51 சென்டுகள்,
பிலிப்பைன்ஸில் $1.07 மற்றும் மலேசியாவில் $1.08 இவற்றுடன் ஒப்பிடத்தக்கது ஆகும்.
தற்போதைய ஆவாமி லீக் அரசாங்கம் அதற்கு முன் இருந்தவற்றைப் போலவே,
தொழில்துறை ஊதிய, பணிநிலைமை நடவடிக்கைகளை பொலிஸ் அடக்குமுறை மூலம்தான் செய்கின்றது. கடந்த ஜூன்
மாதம் இது ஆடைத் தொழிலாளர்களிடையே அமைதியின்மையை அடக்குவதற்கு பாதுகாப்பு படைகளை பயன்படுத்தியது.
பொலிஸ் மற்றும் துணை இராணுவப் படையினர் எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில்,
இரு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர், 150 பேர் காயமுற்றனர். ஜனவரி மாதம் அரசாங்கம் தொழிலாளர்கள்
உரிமை அமைப்பான Sramik Karmachuari
Oikya Parishad தொழிலாளர்களுக்கு குறைந்த மாத ஊதியம்
5,000 டாக்காக்கள் அல்லது அமெரிக்க டொலர் $72 என்று கோரியதை கடுமையாக எதிர்த்தது.
தொழில்துறை பாதுகாப்பு பற்றிய அரசாங்கத்தின் நடவடிக்கையும் இதே விதத்தில்தான்
உள்ளது. பிரதம மந்திரி, காஜிப்பூர் தீ விபத்தில் இறந்த ஆன்மாக்கள் முக்தியடைய பிரார்த்தனை செய்தாலும்,
ஆடைத்தொழிலில் செலவுகளை செய்து தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்துவதின் மூலம் செலவை
அதிகரிப்பதற்கு விருப்பம் கொண்டிருக்கவில்லை.
|