World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Wall Street Journal cites Chilean earthquake to praise Pinochet

சிலி நிலநடுக்கத்தை மேற்கோளிட்டு வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பினோசேயை பாராட்டுகிறது

By David Walsh
2 March 2010

Back to screen version

திங்களன்று "இரு நிலநடுக்கங்களின் கதை" என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் சனிக்கிழமையன்று சிலியை தாக்கிய பெரும் நிலநடுக்கத்தின் விளைவுகளை ஹைட்டியில் ஏற்பட்ட பெரும் மனிதப் பேரிழப்பின் பரிமாணங்களுடன் ஒப்பிட்டுள்ளது.

ஹைட்டியில் ஏற்பட்ட மிகப் பெரிய இறப்புக்கள், அழிவைச் சுட்டிக்காட்டி, செய்தித்தாள் ஒப்புமையில் சிலியில் இத்தகைய பேரிடரை எதிர்கொள்ள தயாராக இருப்பது பற்றி பாராட்டி எழுதியது. "இத்தகைய தயாரிப்புக்கள் பொதுவாக வறிய, மோசமான ஆட்சி உள்ள ஹைட்டி போல் நாடுகளில் இருந்து மாறாக வளமான நாடுகளில்தான் இருக்கும். சமீபத்திய தசாப்தங்களில் சிலி 1970 களில் சர்வாதிகாரி ஒகுஸ்டோ பின்னோசேயின் கீழ் இயற்றப்பட்ட தடையற்ற சந்தைச் சீர்திருத்தங்களால் பெரிதும் பயன் பெற்றுள்ளது''.

"பொய், குறைந்தபட்சம் பொருளோடு பேசு" என்ற சொற்றடரைப் பயன்படுத்தி இதற்கு பதில் கூறவேண்டும்.

ஹைட்டிய மக்கள் பெரும் வறுமையில் வாழ்வதற்குக் காரணம், எல்லாவற்றிற்கும் மேலாக, சிறிய தீவு அமெரிக்க பிடியின் கீழ் நூறாண்டுகளாக இருக்கிறது. இராணுவ ஆக்கிரமிப்புக்கள் பல தசாப்தங்கள் பல நேரங்களிலும் அங்கு மக்களால் அனுபவிக்கப்பட்டுள்ளன. மிகவும் வெறுக்கப்பட்ட, மிருகத்தனமான தந்தையும் மகனுமான கொள்ளைக்கார ஆட்சிகளை 1957ல் இருந்து 1986 வரை அமெரிக்கா அங்கு முட்டுக் கொடுத்து நிறுத்தியிருந்தது.

மிக அண்மைக் காலத்தில், வாஷிங்டனும் உலக நிதியச் சமூகமும் ஹைட்டியின்மீது "தடையற்ற சந்தை" முறையை சுமத்தின. இதே கொள்கைகள்தான் சிலியை பாரிய உயிரிழப்புக்களில் இருந்து நிலநடுக்கத்தின்போது காப்பாற்றின என்று ஜேர்னல் கூறுகிறது. அவை ஹைட்டிய மக்களுக்கு பேரிழப்பை கொடுத்தன. ஹைட்டியின் சிறு விவசாயிகள் அழிக்கப்பட்டு Port-au-Prince ன் கொடூரமான சேரிகளில் நெரிசலில் வாழ்கின்றனர். முன்னதாக இருந்த கட்டுமானங்களும் சமூகத் தன்மையும் பேரழிவிற்கு உட்பட்டுவிட்டன. ஜனவரி 12 நிலநடுக்கத்தின் இறப்பு, அழிவு எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டது.

சிலியின் வரலாறு, சமூக வளர்ச்சி மாறுபட்ட தன்மை உடையதாகும். ஸ்பெயினில் இருந்து இது 1818ல் விடுதலை பெற்றது. ஆனால் சமூக கட்டமைப்பு பெரிதும் பாதிப்பில்லாமல் சுதந்திரத்தில் இருந்து மக்கள் குறைந்த நலன்களைப் பெற்றாலும், நாடு ஹைட்டி அமெரிக்க மேலாதிக்கத்தில் இருந்தது போல் இல்லை.

செல்வந்தர்கள் நிலையை மட்டும் குவிப்பு கொண்டால், சிலி "வளமையான" நாடு என்று கூறப்படலாம். CIA ஆதரவுடைய இராணுவச் சர்வாதிகாரம் செப்டம்பர் 1973ல் அதிகாரத்திற்கு அலெண்டேயின் "மக்கள் ஐக்கிய" அரசாங்கத்தை அகற்றி, ஆயிரக்கணக்கான அரசியல் எதிரிகளை கொன்று, அதே எண்ணிக்கை அல்லது இன்னும் கூடுதலான எண்ணிக்கையை காட்டுமிராண்டித்தனமான முறையில் சித்தரவதை செய்தது. இந்த ஆட்சியைத்தான் ஜேர்னல் முன்மாதிரியாகக் காட்டுகிறது.

பினோசேயின் இழிந்த சித்தரவதைகள் ஆட்சி (பொருளாதார வல்லுனர் மில்டன் ப்ரீட்மன் மற்றும் பிற "தடையற்ற சந்தை" கோட்பாட்டுக்காரர்கள் ஆலோசனைக்கு உட்பட்டிருந்தது), "சிலிய அற்புதத்திற்கு" தளத்தை தோற்றுவித்தது. இது மீண்டும் நாட்டின் செல்வந்தர்களுக்குத்தான் அற்புதம் ஆகும்.

பினோசே ஆட்சிசதிக்கு பின்னர் நாடு வேலையின்மையில் பெருக்கத்தை கண்டது. தென்னமெரிக்க வரலாற்றிலேயே கடுமையான ஊதியக் குறைப்புக்கள் நிகழ்ந்தன. 1974-75ல் ஆயிரக்கணக்கான இடதுசாரிகள், கல்வியாளர்கள் மற்றும் தொழிற்சங்கவாதிகள் உறுப்புக்களை இழந்தபோதும், இரகசிய சிறைகளில் கொல்லப்பட்டபோதும், வேலையின்மை விகிதம் இரு மடங்கு ஆயிற்று. 1983 ஐ ஒட்டி, கிட்டத்தட்ட நாட்டின் தொழிலாளர் தொகுப்பில் 35 சதவிகிதம் வேலையின்மையில் வாடியது. இது பல வேலைநிறுத்த அலைகளுக்கு வழிவகுத்தது; மீண்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பினோசேயின் படைகளால் காவலில் வைக்கப்பட்டனர்.

1970, 1980களில் சிலி பற்றி ஜேர்னல் பெரிதும் மதிப்பது அங்கு நடந்த செல்வப் பங்கீடு பற்றித்தான். இது இராணுவத்தாலும் இரகசிய பொலிசாலும் செயல்படுத்தப்பட்டது. பினோசே 1990ல் பதவியை விட்டு நீங்கும் கட்டாயம் நேர்ந்தபோது, சராசரி சிலி குடிமகன் உண்ணும் உணவின் கலோரி அளவு 20 சதவிகிதம் குறைந்துவிட்டது.

1980ல் இருந்து 1989க்குள், மக்களில் மிகஅதிக செல்வம் படைத்த 10 சதவிகிதத்தினர் தேசிய வருமானத்தில் தங்கள் பங்கை 36.5 சதவிகிதத்தில் இருந்து 46.8 என்ற அதிகரித்துக் கொண்டனர். கீழ் மட்டத்தில் இருந்த 50 சதவிகித மக்கள் அவர்களுடைய வருமானம் 20.4ல் இருந்து 16.8 சதவிகிதம் என்று சரிந்ததைத்தான் கண்டனர்.

இரு தசாப்தங்களுக்கு பின்னர் சிலி உலகில் சமூக அளவில் மிகுந்த சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக உள்ளது. 2009 பொருளாதார அபிவிருத்திக்கும் ஒருங்கிணைப்பிற்குமான அமைப்பின் (OECD) ஆய்வு குறிப்பிட்டுள்ளதுபோல், "மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது சிலி உயர்ந்த வருமானத்தரத்தை கொண்டுள்ளது... வருமான சமத்துவமின்மை சிலியில் இலத்தின் அமெரிக்க தரத்திலேயே கூட மிக அதிகம் ஆகும். உலகிலேயே இப்பகுதியில்தான் மிக அதிக சமத்துவமற்ற வருமானத் தரங்கள் இருக்கும்."

கடந்த தசாப்தத்தின் ஆரம்பத்தில் வருமான சமத்துவமற்ற தரத்தில் இக்கண்டத்தில் பிரேசில், கொலம்பியா ஆகியவற்றிற்கு அடுத்தாற்போல் சிலி வந்தது.

எப்படியும் ஜேர்னல் சிலியப் பேரழிவு பற்றி கொடுத்தள்ள சிறந்த சித்திரம் பல தகவல்களாலும் வினாவிற்கு உட்படுத்தப்படுகிறது. கனடாவில் Globe and Mail சிலிய அதிகாரிகள் "இப்பொழுது ஆயிரக்கணக்கில் இறப்பு எண்ணிக்கை இருக்கக்கூடும்" என்கின்றனர் என்று எழுதியுள்ளது. "மீட்புக் குழுக்கள், சேதத்தை மதிப்பீடு செய்யத் திணறுகின்றன, தப்பியுள்ளவர்கள் பல சிறிய, ஒதுக்கமாக இருக்கும் கடலோர சிறுநகரங்களில் இருக்கின்றனர்; அவைதான் சனி காலை நிலநடுக்கத்தின் பாதிப்பை அதிகமாக கண்டன.":

ஜேர்னலில்,"சிலியின் உறுதியான கட்டிடங்கள் நிறுவுவும் விதிகளைப் பற்றிய" சுயதிருப்தி உடைய குறிப்பு பற்றி Globe and Mail நிருபர் குறிப்பிடுவது: "சுற்றுலா, மற்றும் மீன்பிடித்தல் அதிகம் உள்ள கான்ஸ்டிடூசியன் போன்ற சிறு நகரங்களில் உண்மை முற்றிலும் வேறானது. வீடு வாங்கும் வசதி இங்கு குறைவு.... மக்கள் தாங்கள் இருக்கும் இடங்களில் சேரிகள் போல் மரங்கள், சிமென்டுகளை வைத்து வீடுகளைக் கட்டினர்."

இதற்கிடையில் சிலிய ஆட்சி, "கொள்ளை அடிப்பவர்களை" அதாவது "நீருக்கும் பிற வசதிகளுக்கும் நாடி அலையும் திகைப்பில் இருக்கும் மக்களில் வெறுமையாகவும் பாதிக்கப்பட்டும் இருக்கும் பெரும் கடைகளை தேடுபவர்களை" அடக்குவதற்கு பொலிசையும், இராணுவப் பிரிவுகளையும் அனுப்புகிறது என்று CNN எழுதியுள்ளது. மக்கள் கூட்டத்தைக் கலைக்க "நீர் பீய்ச்சுதல், கண்ணீர் குண்டு போடுதல் ஆகியவற்றை அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர்."

தொலைக்காட்சி நிலையம், மாநிலத்தலைநகரான Concepcion ல் "உணவு மற்றும் பிற விநியோகங்களை கடைகளில் இருந்து பெற முயல்வோரைக் கட்டுப்படுத்த போதிய பொலிஸ் இல்லை. பல்பொருள் அங்காடிகள் மூடப்பட்டு எரிபொருளும் இல்லாத நிலையில் பலர் வெறுப்படைந்துள்ளனர்" என்று கூறியுள்ளது.

பினோசேக்கான பாராட்டு ஜேர்னலுக்கு ஒன்றும் புதிதல்ல. அதன் பல பெருமித அடையாளங்களில் ஒன்று பிரிட்டனின் முன்னாள் பிரதம மந்திரி மார்கரெட் தாட்சர் ஆவார். அவரைப் போல் வோல் ஸ்ட்ரீட்டும் கொலைகார சிலிய ஆட்சி மற்றும் அதன் தலைவரை பலமுறையும் புகழ்ந்துள்ளது.

அக்டோபர் 1998ல் பிரிட்டிஷ் அதிகாரிகள் (தற்காலிகமாக) பினோசேயை காவலில் வைத்தபோது, ஜேர்னல் பல்லைக் கடித்து தளபதி "நாட்டைக் காப்பாற்றிய ஆட்சிமுறைக்கு" தலைமை தாங்கினார் என்று அறிவித்தது. இராணுவத்தின்கீழ் சிலி "ஒரு கம்யூனிச கடற்கரை என்பதில் இருந்து வெற்றிகர தடையற்ற சந்தைச் சீர்திருத்தத்திற்கு முன் மாதிரி ஆயிற்று." என்று உறுதியாகக் கூறியது.

பினோசேயிற்கு ஜேர்னல் கொட்டும் நேசம் இத்தாலிய பாசிச சர்வாதிகாரி பெனிடோ முசோலினியை பற்றிய சொற்றொடரை நினைவிற்கு கொண்டுவருகிறது: "அவர் இரயில்களை குறித்த நேரத்திற்கு ஓடுமாறு செய்தார்." செய்தித்தாளின் ஆசிரியர்கள், வன்முறை ஆட்சி, சர்வாதிகாரத்திற்கு இயல்பான ஆதரவைக் கொடுக்கின்றனர்.

அமெரிக்காவிலும் தொழிலாள வர்க்கம், மற்றும் முதலாளித்துவத்தின் அரசியல் எதிர்ப்பாளர்கள் பினோசேயின் வழியில் நடத்தப்படமுடிந்தால், இவை பெரிதும் மகிழ்ச்சி அடையும். மிகப் பெரிய நிதியக் கொள்ளையர்களுக்காக பேசும் ஆசிரியர் குழு, பொலிஸ், இராணுவம் தெருக்களுக்கு வந்து, சோசலிஸ்ட்டுக்களுக்கு சிறை முகாம்கள் வருமென கனவு காண்கிறது.

இந்த பாசிச சார்புடைய இழிந்தவை எதுவுமே அமெரிக்க தாராளச் செய்த ஊடகத்திடம் இருந்து எவ்வித எதிர்ப்பையும் தூண்டவில்லை. நியூயோர் டைம்ஸ் மற்றும் தாராளாவாதத்தின் அதேபோன்ற தூண்களும் ஏனையவும் அவற்றின் பெருகிய முறையிலான ஜனநாயக எதிர்ப்பு உணர்வுகள் மற்றும் முழு கோழைத்தனத்தையும் ஜேர்னல் கருத்தில் கொண்டுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved