World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குThe Dubai assassination and the "war on terror" துபாய் படுகொலையும் "பயங்கரவாதத்தின் மீதான போரும்" Patrick O'Connor ஹமாஸ் உறுப்பினர் மஹ்மூத் அல்-மப்ஹூ கடந்த மாதம் துபாயில் கொலை செய்யப்பட்டதற்கு உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்களின் பிரதிபலிப்பு எந்த அளவிற்கு "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பெயரில் சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் கிழித்தெறியப்பட்டுள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அமெரிக்க அரசாங்கம் மற்றும் அதன் நட்பு அரசாங்கங்களை பொறுத்தவரை, நீதிக்கு புறம்பாக நடத்தப்படும் கொலைகள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட கொலைகள் இப்பொழுது முறையான அரசாங்க நடவடிக்கை என்று ஆகிவிட்டன. அவை பற்றி கண்டனம் ஒருபுறம் இருக்க, கருத்துக்கள் கூட வெளிவருவதில்லை. இஸ்ரேலிய அரசாங்கம் இதில் தொடர்பு பற்றி உறுதிபடுத்தவோ, மறுக்கவோ செய்யவில்லை என்ற நிலையில், அதன் உளவுத்துறை அமைப்பு மொசட், துபாய் செயலுக்கு நேரடிப் பொறுப்பு என்று பரந்தமுறையில் ஏற்கப்படுகிறது. இந்த விஷயத்தைப் பற்றி ஒபாமா நிர்வாகம் கடும் மெளனம் சாதிக்கிறது. தங்கள் கடவுச்சீட்டுக்கள் மாற்றப்பட்டது பற்றி பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் அயர்லாந்து அரசாங்கங்கள் பெயரளவிற்கு எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளன. எவரும் மப்ஹூ கொலைசெய்யப்பட்டதை கண்டிக்கவில்லை. இப்படுகொலை இரக்கமற்ற வகையில் ஒவ்வொரு சிறு விபரமும் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகும். துபாய் பொலிஸின் கருத்துப்படி 27 ஆண்களும் பெண்களும் மப்ஹு ஒரு சதைத் தளர்வு மருந்து succinylcholine ஊசியாகப் போடப்பட்டதில் முடிந்த தயாரிப்பில் தொடர்பு கொண்டு, பின்னர் அவரை தலையணையால் மூச்சுத் திணறடித்தனர். உயர்ந்த இரத்த அழுத்தத்திற்கான மருந்தை கொலையாளிகள் விட்டுச் சென்றனர். இதற்குக் காரணம் ஒரு இயற்கை மரணம் போல் தோன்ற வேண்டும் என்பதுதான். "தொந்திரவு செய்ய வேண்டாம்" என்ற அட்டையையும் ஓட்டல் அறைக் கதவின்முன் ஒட்டினர். அதன் பின் மப்ஹூவின் மனைவி தன் கணவரோடு தொலைபேசித் தொடர்பு கொள்ள முடியாமல் போலிஸிற்கு தெரிவிக்க முன்பே துபாயை விட்டு நீங்கிவிட்டனர். தன்னுடைய விரோதிகளை உலகில் எங்கு இருந்தாலும் தேடிப் பிடித்து கொலை செய்யும் நீண்ட கால வரலாற்றை இஸ்ரேல் கொண்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் மேற்குக் கரையிலும் காசாவிலும் பாலஸ்தீன தலைமைக்கு எதிராக திட்டமிட்ட படுகொலை நிகழ்ச்சிக்களை நடத்தியது. மொசாட்டின் சமீபத்திய கொடுமையை வாஷிங்டனும் அதன் நட்பு அரசாங்கங்களும் அநேகமாக வெளிப்படையாக ஏற்றதற்கு காரணம் இப்பொழுது இதேபோன்ற வழிவகைகள் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதின் மையக்கூறுபாடாகிவிட்டதுதான். விசாரணை ஏதும் இல்லாமல் காலவரையின்றி காவலில் வைப்பது மட்டும் இல்லாமல், அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று அடையாளம் காணப்படும் தனிநபர்கள் வாடிக்கையாக ஆப்கானிஸ்தான், ஈராக், பாக்கிஸ்தான், யேமன் ஆகிய நாடுகளில் கொலை செய்யப்படுகின்றனர். பாக்கிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவில் இராணுவ நடவடிக்கைகள் விரிவாக்கப்படும் என்று கூறப்பட்ட பிரச்சார உறுதிமொழியின்படி ஜனாதிபதி பாரக் ஒபாமா ஆப்-பாக் அரங்கில் ஆளில்லா டிரோன் வான்வழித் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டு அவை இலக்கு வைக்கப்பட்டுள்ளவர்களை தவிர சாதாரண குடிமக்களையும் கொல்கின்றன. அமெரிக்க துருப்புக்கள், உளவுத்துறை முகவர்கள் மற்றும் அவர்கள் சார்பில் செயல்படுபவர்கள் ஈராக்கியர்கள், ஆப்கானியர்கள் என்று தங்கள் நாடுகள் மீதான வெளி ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஆயுதமேந்திய எழுச்சியில் தொடர்புடையவர்களை தேடிப்பிடித்துக் கொல்கின்றனர். சர்வதேச அளவில் ஆளும் வட்டங்களில் மத்திய உளவுத்துறை அமைப்பு மற்றும் மொசாட் உட்பட, அதன் நடப்பு உளவுத்துறை அமைப்புக்கள் பயங்கரவாத செயலில் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படுபவர்கள் மீது நீதிபதி, நடுவர்கள், கொலையை செயல்படுத்துபவர்கள் என்று மூன்றுவிதத்திலும் செயல்படுகின்றன. பனிப்போர்க் காலத்தில் CIA இன் கொலை நடவடிக்கைகளான 1961ல் காங்கோலின் தலைவர் பாட்ரிஸ் லுமும்பா படுகொலை செய்யப்பட்டது, கியூபாவின் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ மீது கொலை முயற்சி உட்பட சர்வதேச சீற்றத்தை தூண்டின. 1976ம் ஆண்டு சர்வதேச அளவில் CIA இன் படுகொலைகள் பற்றி தெரியவந்து பொதுமக்கள் எதிர்ப்பு அலையென வந்தபோது, ஜனாதிபதி கெரால்ட் போர்ட் CIA நேரடியாக படுகொலைகள் செய்தலையோ, பிறருக்கு ஒப்பந்தம் கொடுத்து அதன் மூலம் படுகொலைகள் செய்வதையோ நிர்வாக ஆணை வெளியிட்டுத் தடுத்தார். ஆனால் இப்பொழுது "இலக்கு வைத்து கொலைகள்" பற்றிய மன உறுத்தல்கள் ஏதும் இல்லை. CIA மற்றும் இராணுவத்தின்மீது அதிக தடைகள் இல்லை. தேசிய பாதுகாப்பு அமைப்பின் அமெரிக்க இயக்குனர் டெனிஸ் பிளேயர் கடந்த மாதம் உலகெங்கிலும் அமெரிக்க குடிமக்கள் படுகொலை செய்யப்படுவதை அனுமதிக்கும் வரையறுக்கப்பட்ட "கொள்கை, சட்ட விதிமுறைகள்" உள்ளன என்று கூறினார். வாஷிங்டனுடன் நட்பு கொண்டுள்ள ஒவ்வொரு தேசிய அரசாங்கமும் இதற்கு உடந்தையாக உள்ளன. பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் அயர்லாந்து நாடுகளின் இராஜதந்திர எதிர்ப்புக்கள், அவற்றின் கடவுச்சீட்டுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டது குறித்து, பெரும் போலித்தனத்தை தவிர வேறு ஒன்றுமில்லை. போலியாக தயாரிக்கப்பட்ட ஐரோப்பிய ஆஸ்திரேலிய கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி ஈரானிய உளவுத்துறை முகவர்கள் வேறு ஒரு நாட்டில் படுகொலையை நடத்தியிருந்தால் இவற்றின் விடையிறுப்பு எப்படி இருக்கும் என்ற வினாவைத்தான் எழுப்ப வேண்டும். இராஜதந்திர நல்லணிக்க கருத்துக்களுக்குப் பதிலாக முழு அளவு போர் வேண்டும் என்று முரசுகள் கொட்டப்பட்டிருக்கும். இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நேடன்யாகுவின் அரசாங்கத்துடன் இந்நிகழ்வு பற்றி விவாதித்து தொடர எந்த தேசிய அரசாங்கத்திற்கு ஆர்வம் இல்லை. இவை அனைத்துமே சியோனிச அரசின் போர்க் குற்றங்களுக்கு உடந்தையாகும். கடந்த நவம்பர் மாதம் ஒரு ஐ.நா.பொதுமன்ற தீர்மானம் இஸ்ரேல் காசா நடவடிக்கைகளில் போர்க்குற்றம் நடத்தியுள்ளது என்று Goldstone Report அறிக்கைக்கு பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் ஜேர்மனி ஆகியவை ஒப்புதல் கொடுத்த 16 நாடுகளில் அடங்கியிருந்தன. மேலும், கடந்த ஆண்டு ஒரு பிரிட்டிஷ் நீதிமன்றம் முன்னாள் இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி Tzipi Livni போர்க்குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்ய ஆணையை பிறப்பித்தபோது, தொழிற்கட்சி அரசாங்கத்தின் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் இஸ்ரேலிய அதிகாரிகள் பாதுகாப்பு பெறுவதற்காக குறிப்பிட்ட சட்டத்தை மாற்றுவதாக உறுதியளித்தார். பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகையின் கருத்துப்படி, பிரெளன் அரசாங்கத்திடம் இஸ்ரேல் இதைப்பற்றி "மரியாதையின் நிமித்தம்" முன்கூட்டி எச்சரித்திருந்தது. இந்தத் தகவல் உறுதிபடுத்தப்பவில்லை என்றாலும், அமெரிக்கா உட்பட மற்ற நாடுகளும் முன்கூட்டி எச்சரிக்கை பெற்றனவா என்ற வினாவை இது எழுப்புகிறது. எப்படி இருந்தபோதிலும், துபாய் கொலைக்கு பொறுப்பானவர்கள் தாங்கள் கடவுச்சீட்டுகள் போலியாக தயாரிக்கும் அரசாங்கங்களில் பெரும்பாலானவை படுகொலை நடவடிக்கைகளை பற்றி நெருக்கமாக அறிந்தவை என்பதை உணர்ந்திருந்தனர் என்பதில் சந்தேகமில்லை. பிரதம மந்திரி கோர்டன் பிரெளனின் தொழிற்கட்சி அரசாங்கம் பல ஆண்டுகளாக ஈராக்கில் இலக்கு வைத்து கொலைகளை பரந்த அளவில் நடத்தியுள்ளது. BBC நிருபர் மார்க் அர்பன் எழுதியுள்ள ஒரு புதுப் புத்தகத்தின்படி, பிரிட்டின் உயரடுக்கு SAS துருப்புக்கள் ஈராக்கில் 350 முதல் 400 "பயங்கரவாதிகள்" தலைவர்களை கொன்றுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் மற்ற அமெரிக்க நட்பு நாடுகளாலும் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் SAS வாஷிங்டனால் பெருமதிப்பு கொடுக்கப்படுவதற்கு காரணம் அது ஆப்கானிஸ்தானில் மூத்த எழுச்சியாளர்களை தேடிப்பிடித்து கொலை செய்யும் பங்கை கொண்டுள்ளது. ஜேர்மனிய துருப்புக்களும் தலிபான் நபர்கள் என்று கூறப்படுபவர்கள் மீது இத்தகைய கொலைகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே துபாயில் மஹ்மூத் அல்-மப்ஹூ படுகொலைக்கு உத்தியோகபூர்வ பிரதிபலிப்பு சர்வதேச குற்றவாளிகள் கூட்டம் அதன் பிளவுகளை மூடிமறைக்கும் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது என்பதில் வியப்பு ஏதும் இல்லை. அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் உள்ள முக்கிய கட்சிகள, ஊடகங்கள் ஆகியவற்றின் இழிந்த அரசியல், அறநெறித் தன்மைக்கு சான்றாக, சர்வதேச சட்டம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது துபாய் படுகொலை கொண்டுள்ள தொலைவிளைவுடைய தாக்கங்கள் பற்றி எந்த விவாதமும் இல்லை. அக்கறைகள் எழுப்பப்பட்ட அளவில் அவை தந்திரோபாயங்கள்தான் --செயற்பாடு அதிக எதிர்மறை விளம்பரத்தை பெற்றுவிட்டது, இஸ்ரேலிய அரசாங்கம் அதன் நட்பு நாடுகளின் கடவுச்சீட்டுகளை போலியாக தயாரித்திருக்கக்கூடாது போன்றவைதான் கூறப்பட்டன. ஆனால், மற்ற வர்ணனையாளர்கள் வெளிப்படையாக கொலையை வரவேற்றுள்ளனர். "இதைக் கூறுவது உகந்தது அல்ல, ஆனால் இஸ்ரேலியர்கள் செயல்படும் முறையைப் பற்றி எனக்கு கணிசமான மதிப்பு உண்டு" என்று பெப்ருவரி 18 அன்று லண்டன் டைம்ஸில் மெலனீ ரீட் எழுதினார். "அவர்கள் எதை விரும்பினாலும், அதைச் செய்கின்றனர். தங்கள் பெரும் விரோதி என்று ஒருவரை உணர்ந்தால், அவர்களை கொல்கின்றனர். அவர்கள் தாக்கப்பட்டால், பதிலுக்கு தாக்குகின்றனர். விளக்க, நியாப்படுத்த, வேதனைப்பட அவர்கள் நேரத்தை வீணடிப்பதில்லை; அதேபோல் தங்களை குறைகூறுபவர்கள் தங்கள் நாட்டில் நுழைய அனுமதிப்பதில்லை, அவர்களுக்கு தாராளமான உதவி பணம் கொடுப்பதில்லை. அவர்கள் செவ்வனே செயல்படுகின்றனர். எந்தக் குழப்பமும் இல்லை. மன உறுத்தல்கள் இல்லை. போலித்தனமான மறுப்பும் இல்லை; மாறாக எதைப்பற்றியும் திறமையாக விவாதிக்க மறுக்கின்றனர்." மஹ்மூத் அல்-மப்ஹூ படுகொலை செய்யப்பட்டது மற்றும் சர்வதேச உத்தியோகபூர்வ பிரதிபலிப்பும் பெரும் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இலக்கு வைக்கும் கொலைகள் என்பவை பெருகிய முறையில் அரசாங்கங்களால் சர்வதேச அளவில் வரவிருக்கும் காலத்தில் நம்பப்படும்; இவை பயங்கரவாதிகள் என்று குற்றம்சாட்டப்படுபவர்களுக்கு எதிராக மட்டும் இல்லாமல், இருக்கும் சமூக, அரசியல் ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் என்று அடையாளம் காணப்படும் எந்த நபருக்கும் எதிராகவும் செயல்படுத்தப்படும் சாத்தியத்தை கொண்டுள்ளது. |