World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குJobless benefits cut off for a million US workers ஒரு மில்லியன் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு வேலையின்மை உதவிகள் வெட்டப்படுகின்றன Patrick Martin கடந்த வாரம் அமெரிக்க செனட்டின் செயலற்ற தன்மையினால், ஒரு மில்லியனுக்கும் மேலான தொழிலாளர்களுக்கு COBRA சுகாதார பாதுகாப்பு காப்பீடும் கால நீட்டிப்பு செய்யப்பட்ட வேலையின்மை உதவிகளும் வெட்டுகளுக்கு உள்ளாகும். ஞாயிறு இரவு தொடங்கிய இந்த வெட்டுக்களானது தொழிலாள வர்க்கத்திற்கும் ஜனநாயக, குடியரசுக் கட்சிகளின் கபிடோல் ஹில் பிரமுகர்களுக்கும் இடையே சீர்படுத்த முடியாத சமூகப் பிளவைத்தான் நிரூபிக்கிறது. வேலையின்மை உதவிகளுக்கும் COBRA காப்பீட்டுக்குமான கால நீட்டிப்பிற்கான சட்ட வரைவானது குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர் ஜிம் பன்னிங்கினால் தடை செய்யப்பட்டது. இவர் கென்டக்கி மாநிலத்தில் இருந்து வரும் ஒரு பெரும் பிற்போக்குவாதியான இவர், செனட் ஒழுங்குமுறை விதிகளான வார இறுதிக்கு முன் சட்டவரைவு மீதான ஒரு வாக்கெடுப்பு ஒருமனதாக ஒப்புதல் அளிப்பை கொண்டுவர வேண்டும் என்பதை பயன்படுத்திக் கொண்டார். மறு தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று உள்ள பன்னிங், ஒரு மில்லியன் தொழிலாளர்களுக்கும் மேல் தன் நடவடிக்கையினால் கஷ்டப்படுவார்கள் என்பது பற்றி அவமதிப்பைத்தான் கொண்டுள்ளார். அதில் அவருடைய சொந்த மாநிலத்திலேயே 60,000 பேர் உள்ளனர். புதிய கடனை ஏற்படுத்தாமல் கால நீட்டிப்பு செய்யப்பட்ட உதவிகளுக்கு செனட் ஜனநாயகக் கட்சியினர் பணம் கொடுக்க ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அவர் கோரியதுடன், அவருடைய நடவடிக்கைகள் "அமெரிக்க மக்களுக்கு ஒரு தகவலைக் கொடுக்கும்" நோக்கத்தை உடையவை என்றும் அறிவித்தார். செனட்டின் பெரும்பான்மைக் கட்சித் தலைவர் ஹாரி ரீட், பெரும்பான்மை கட்சியின் கொரடா ரிச்சர்ட் டர்பின் இருவரும் சட்டவரைவு மீது வாக்கெடுப்பு வேண்டும் என்று பலமுறை கோரினர். ஒவ்வொரு முறையும் அது பன்னிங் எதிர்ப்புத் தெரிவித்ததால் தடுக்கப்பட்டது. ஆனால் ஜனநாயக செனட் தலைவர்கள் அவருடைய நடவடிக்கை வேண்டுமேன்றே தாமதம் (filibuster) என்பதற்கு ஒப்பாகும் என்று அறிவிக்க மறுத்து, 60 வாக்குகள் பெரும்பான்மையாக எளிதில் கிடைக்கும் என்றாலும் உடனடி வாக்கை கோரவும் மறுத்தனர். செனட் விதிகளின்படி, cloture சட்டவரைவு மீது 30 மணி நேர விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு நடத்தலாம். இந்த வழிவகை உதவிகள் நீக்கப்படுவதை தவிர்த்திருக்கும். ஆனால் வார இறுதியில் செனட்டர்கள் வீடு திரும்ப விமானத்தில் ஏறியிருக்க முடியாது. ஜனநாயகக் கட்சித் தலைமை பன்னிங்கின் கால நீட்டிப்பை தடுக்க அனுமதித்தால் தாங்கள் குடியரசுக் கட்சியின் சிறுபான்மையை இகழ்ந்த முறையில் காட்ட நேரிடும் என்று கணித்தனர். ரீட், டர்பின், துணை ஜனதிபதி ஜோசப் பிடென் ஆகியோர் பன்னிங்கை பாசாங்குத்தனமாக கண்டித்து அறிக்கைகளை விட்டனர். ஆனால் cloture நடவடிக்கை எடுக்க ஒருவரும் முன்வரவில்லை. மாறாக ஜனநாயகக் கட்சியினர் இந்தச் சட்டவரைவை அடுத்த வாரம் கொண்டுவருவதாகக் கூறினர். அரசியல் சங்கடத்திற்கு விடையிறுக்கும் வகையில் குடியரசுக் கட்சியின் கொரடா ஜோன் கைல் ஞாயிறன்று கொள்கையளவில் பன்னிங்கிற்கு தான் ஆதரவு கொடுத்தாலும், குடியரசுக் கட்சியினர் வேலையின்மை திட்டத்திற்கு 30 நாள் கால நீட்டிப்பு ஒப்புதலுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். அதே நேரத்தில் இரு கட்சியும் இணைந்து முழு ஆண்டிற்கும் திட்டத்தை விரிவாக்க பேச்சு வார்த்தைகளை நடத்தும் என்றும் கூறினார். வேலையின்மை உதவிகள் கால நீட்டிப்பிற்கான அவகாசம் முடிந்ததானது தொழிலாளர்களிடையே பெரிய பாதிப்பைக் கொடுக்கும். குறிப்பாக உற்பத்தித் தொழில் வேலைகள் சரிந்துள்ள மாநிலங்களில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக மிச்சிகனில் 300,000 தொழிலாளர்கள் கால நீட்டிப்பு உதவிகளை கூட்டாட்சித் திட்டத்தின்கீழ் பெற்று வருகின்றனர். இவை இப்பொழுது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவிட்டன. 400,000 என்று மதிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர்கள், நீடிப்பு விரைவில் இசைவு பெறாவிட்டால் அவர்களுடைய வேலையின்மை உதவிகளை மார்ச் மாதம் முதல் இரு வாரங்களுக்கு இழந்துவிடுவர். சட்டமன்ற செயலற்ற தன்மை தொடர்ந்தால், அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக மே மாதத்திற்குள் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் என ஆகும் என்று தொழிலாளர் துறை தெரிவிக்கிறது. தற்பொழுது வேலையின்மை இழப்பீட்டை கிட்டத்தட்ட 5.4 மில்லியன் தொழிலாளர்கள் பெறுகின்றனர். முதல் 26 வாரங்கள் அவர்களுடைய மாநில அரசாங்கத்திடம் இருந்தும் அதற்குப் பின்னர் கூட்டாட்சியின் நீடிக்கப்பட்ட நலன்கள் திட்டத்தில் இருந்தும். கடந்த வாரம் வெளியிடப்பட்ட பொருளாதாரப் புள்ளி விவரங்கள் எதிர்பார்க்கும் வருங்காலத்தில் தொடர்ந்து உயர்ந்த வேலையின்மை தொடரும் என்றுதான் காட்டுகின்றன. புதிய வீடுகள் விற்பனை 11.2 சதவிகிதம் ஜனவரி மாதம் டிசம்பரில் இருந்து சரிந்தது. இது 50 ஆண்டுகளில் மிகக் குறைவான அளவு ஆகும். பெப்ருவரியில் நுகர்வோர் நம்பிக்கைக் குறியீடு 1983-ல் இருந்த மோசமான தரத்திற்கு சரிந்தது. புதிய வேலையின்மை விண்ணப்ப மனுக்கள் பெப்ருவரி 19 முடிந்த வாரத்தில் 22,000 அதிகரித்தன. சரிவு என்று கூறப்பட்ட கணிப்புக்களை இது குழப்பியது. குறைந்தபட்சம், செனட் நீடிக்கப்படும் உதவிகளின்மீது இறுதி வாக்கை மார்ச் 8 திகதி வாரம் வரை வாக்களிப்பை எதிர்பார்க்காது. இதன் பொருள் நலன்களை பெறுபவர்கள் குறைந்தது ஒரு வாரமேனும் அதைப் பெற முடியாது. ஆறு மாதங்கள், அதற்கும் மேலாக வேலையில்லாமல் இருக்கும் தொழிலாளர்களின் வீட்டு வரவு செலவுத் திட்டத்தின் நலிந்த தன்மையானது ஒரு வார நலனுக்கான காசோலை இல்லை என்றால் தேவையான பொருள், வீட்டுக் கடன் இவற்றை கொடுக்க முடியாது என்பதுடன் பொருட்களை வாங்கவும் முடியாது. குளிர்காலத்தின் நடுவில் அல்லது முன்கூட்டிய வீட்டு ஏலவிற்பனை சட்ட நடவடிக்கை தொடங்கும் முன். செனட்டில் சட்டவரைவு இயற்றப்பட்டாலும், இது ஏப்ரல் 5 வரைதான் உதவிகள் நீடிக்க வகை செய்யும். இதன் பொருள் வேலையில்லாத தொழிலாளர்கள் புதிய நெருக்கடியை இன்னும் ஒரு மாத கெடுவிற்குப் பின்னர் எதிர்கொள்வர் என்பதாகும். எந்த செனட்டரும், குடியரசு அல்லது ஜனநாயகம் என்று எக்கட்சியாக இருந்தாலும், வீடு முன்கூட்டிய விற்பனைக்கு வந்துள்ளது அல்லது வெப்ப வசதியில்லாத வீட்டிற்கு திரும்ப மாட்டார்கள். செனட்டர்களில் பெரும்பாலானவர்கள் மில்லியனர்கள். அவர்கள் அனைவரும் நிதிய பிரபுத்துவத்திற்குத்தான் விசுவாசம் காட்டுவர். அமெரிக்காவின் பெருநிறுவன இலாபங்களை பாதுகாக்கும் வோல் ஸ்ட்ரீட் அல்லது தேசிய பாதுகாப்புக் கருவிகளின் முக்கிய நலன்களை பாதுகாப்பதற்கு எந்தப் பாராளுமன்ற தடைகளும் அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு உதாரணம்: "ஜனாதிபதி ஒபாமா தன்னுடைய தொலைகாட்சி சுகாதாரப் பாதுகாப்பு உச்சிமாநாட்டை வியாழனன்று ஒத்தி வைத்தார். அதையொட்டி மன்ற உறுப்பினர்கள் கபிடோலுக்குச் சென்று தங்கள் வாக்குகளை அமெரிக்க நாட்டுப்பற்றுச் சட்டம் நீடிப்பதற்கு ஆதரவாக வாக்களிக்க முடியும். அதுதான் தேசிய பாதுகாப்பு அமைப்பு, FBI, இன்னும் பிற கூட்டாட்சி பாதுகாப்பு அமைப்புக்களுக்கு முன்னோடியில்லாத ஒற்று வேலை பார்க்கும் அதிகாரங்களை கொடுக்கிறது. நீண்டகால வேலையில்லாதவர்களுக்கு, அவர்கள் நீடித்த உதவிகள் திட்டத்தின்கீழ் பெறும் அற்ப தொகை தொடரும் என்னும் இத்தகைய முன்னுரிமைக்கு உத்தரவாதம் ஏதும் அளிக்கப்படவில்லை. |