World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

WSWS speaks with leader of GSSE union federation

The Greek trade unions: Partners in the government's austerity program

WSWS, GSSE தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவருடன் உரையாடுகிறது

கிரேக்க தொழிற்சங்கங்கள்: அரசாங்கத்தின் கடும் சிக்கன நடவடிக்கைகளில் பங்காளிகள்

By Markus Salzmann and Robert Stevens
27 February 2010

Back to screen version

கிரேக்கத்தில் கடன் நெருக்கடி தீவிரமாகையில், நாட்டின் தொழிற்சங்கங்கள் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் சமூக ஜனநாயக அரசாங்கம் அதன் கடும் சிக்கன நடவடிக்கை திட்டத்தை செயல்படுத்துவதில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியம் (EU), மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF), ஆகியவை கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரியுள்ளன.

கிரேக்கத்தின் மொத்தக் கடன் 300 பில்லியன் யூரோக்களுக்கும் மேல் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2010ல் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 120 சதவிகிதத்திற்கு உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை தற்பொழுது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.7 சதவிகிதமாக உள்ளது. அரசாங்ம் இதை 2012க்குள் ஐரோப்பிய விதிகளுக்கு இணங்க 3 சதவிகிதமாகக் குறைக்க உறுதியளித்துள்ளது. இந்த ஆண்டு ஆண்டு பற்றாக்குறையை 8.7 சதவிகிதத்தால் குறைத்துவிடுவதாகவும் இருக்கிறது.

இதைச் சாதிக்கவும், நிதியச் சந்தைகளை திருப்தி செய்யவும், பாப்பாண்ட்ரூ சமீபத்தில் இதற்காக "குருதி சிந்தவேண்டியிருக்கும்" (கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்) என்றார். அதைக் கருத்திற் கொண்டு சமூகநல செலவுகளில் உடனடியாக 2.5 பில்லியன் யூரோக்கள் குறைப்பு செயல்படுத்தப்படுகிறது. இதில் பொதுத்துறை முழுவதும் ஊதியத் தேக்கம், அரசு ஆட்சிப்பணி ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் மேலதிக கொடுப்பனவுகளில் 20 சதவிகிதக் குறைப்பு மற்றும் சராசரி ஓய்வு பெறும் வயது இரு ஆண்டுகளாக அதிகரிப்பு ஆகியவை அடங்கும்.

மதிப்புக்கூட்டு வரியில் (VAD) அதிகரிப்பு (தற்பொழுது இது 9 சதவிகிதம் என்று உள்ளது), எரிபொருள், மதுபானம், புகையிலை வரிகள் அதிகரிப்பு ஆகிய நடவடிக்கைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் ஏதென்ஸ் பொதுத்துறை ஊழியர்கள் இப்பொழுது பெரும் 12 மாத ஊதியத்துடன் இரு மாதங்கள் அதிகம் பெறும் ஊதியத்திற்குப் பதிலாக ஒரு மாத ஊதியம்தான் அதிகம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.

இரு முக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களான தனியார்துறை கிரேக்க தொழிலாளர்கள் பொதுக்கூட்டமைப்பு (GSEE), பொதுத்துறை அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு (ADEDY) இரண்டும் பாப்பாண்ட்ரூவின் PASOK அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கு கடந்த அக்டோபர் தேர்தலில் ஆதரவு அளித்திருந்தன.

நிதியச் சந்தைகளுக்கு "இணங்விடுவதற்காக" பாப்பாண்ட்ரூவின் ஆட்சியின்மீது ஜனரஞ்சனக விமர்சனங்களை அவ்வப்பொழுது கூறினாலும், தொழிற்சங்கத் தலைவர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் செலவுக் குறைப்புக்களை சுமத்துவதற்கு வெகு நெருக்கமாக ஒத்துழைக்கின்றனர்.

முன்னோடியில்லாத கடும் சிக்கன நடவடிக்கைகள் பற்றி பரந்த அளவில் மக்கள் சீற்றம் உள்ளது. ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகக் குறைந்த வாழ்க்கைத் தரங்களை கொண்டுள்ள மக்கள் மீது இன்னும் தாக்குதல்கள் சுமத்தப்படுகின்றன. அனைத்து வேலைபார்ப்பவர்களிலும் கால் பகுதியினர் குறைந்தபட்ச ஊதியம் மட்டுமே பெறும் நாட்டில் பல தொழிலாளர்கள் வறிய நிலையில் வாழ்கின்றனர்.

இதுதான் புதனன்று இரு தொழிற்சங்க கூட்டமைப்புக்களும் ஒருநாள் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததின் பின்னணி ஆகும். தொழிற்சங்கங்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டதற்கு காரணம் பொது மக்களின் எதிர்ப்பை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு தங்கள் சீற்றத்தை வெளியிட ஒரு வாய்ப்பு கொடுத்து அதையொட்டி நெருக்கடியில் ஆழ்ந்துள்ள கிரேக்க அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுத்தல் என்பது ஆகும்.

1990களில், முக்கிமாக PASOK அரசாங்கங்களின்கீழ், தொழிற்சங்கங்கள் அரசுடமையாக இருந்த தொழில்கள் தனியார்மயமாக்கப்படுவதற்கு கருவியாக இருந்தன. பிரதம மந்திரி கான்ஸ்டன்டின் சிமிட்ரிஸ் 1996ல் இருந்தபோது, PASOK பொதுத் துறையின் பல பரந்த பிரிவுகள் கட்டுப்பாட்டுத் தளர்ச்சி, தனியார்மயமாக்கப்படல் என்ற வழிவகை துவக்கப்பட்டது. இந்தத் தடையற்ற சந்தைக் கொள்கைகளை தொடர்வதில், PASOK தொழிற்சங்கங்களுடன் அதன் கொண்டிருந்த நெருக்கமான உறவுகளை, குறிப்பாக GSEE உடனானதை பயன்படுத்திக் கொண்டது. பெயரளவிற்கு ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றை தவிர, GSSE, ADEDY இரண்டுமே தனியார்மயமாக்கப்படலை எதிர்க்க ஏதும் செய்யவில்லை.

இன்று பெரிதும் கடினமாக மாறிவிட்ட சூழ்நிலையிலும் தொழிற்சங்க கூட்டமைப்புக்கள் அதே பிற்போக்குத்தன பங்கைத்தான் கொண்டிருக்கின்றன.

தொழிற்சங்கங்களின் பெருநிறுவன செயற்பட்டியல் ஜனவரி மாதம் GSEE செய்தித் தொடர்பாளரும், தொழிற்சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினருமான ஸ்டாதிஸ் அனெஸ்டிஸ் கொடுத்த கருத்துக்களில் சுருக்கமாக வந்துள்ளது. "நாம் மிக முக்கிய பிரச்சினைகளை கொண்டிருக்கிறோம் என்ற உண்மையில் இருந்து தப்பிக்க முடியாது. அவை நியாயமாக இருந்தால் கடினமான நடவடிக்கைகளை ஏற்கத் தயாராக இருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

Wall Street Jourmal கருத்துப்படி ஜனவரி 29ம் தேதி அனெஸ்டிஸ் அதன் தற்போதைய சுற்றுப் பேச்சுவார்த்தைகளில், மில்லியன் தொழிலாளர்களுக்கும் மேலாக பிரதிநிதித்துவப்படுத்தும் GSEE தனியார்துறை ஊதியங்களில் ஊதியத் தேக்கத்திற்கு ஆதரவை, பணிநீக்கும் இல்லை என்று முதலாளிகள் உறுதி கொடுத்தால் பரிசீலிக்கத் தயார் என்று அறிவித்ததாக தெரிகிறது. GSEE யின் துரோக வரலாறு பற்றி அறித்துள்ள நிலையில், பணிநீக்கம் கூடாது என்ற உத்தரவாதத்தை கோரியது என்பது தொழிலாளர்களால் உதறித் தள்ளப்பட்டுள்ளது.

பெப்ருவரி 25 அன்று, பொது வேலைநிறுத்தத்திற்கு மறுநாள், உலக சோசலிச வலைத் தளத்தில் இருந்து நிருபர்கள் அனெஸ்டிஸுடன் பேட்டி நடத்தினர். அவர் தன் தொழிற்சங்கம் அடிப்படையில் வேலைநிறுத்தத்தை எதிர்க்கிறது என்பதை உறுதிபடுத்தினார். "கூட்டுமைப்புக்களும் தொழிற்சங்கங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். நாங்கள் ஒன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட விரும்பவில்லை." என்று அனெஸ்டிஸ் வலியுறுத்தினார்.

தொழிற்சங்கங்கள் இந்த முக்கிய அரசியல் ஆதரவிற்கான காரணமாக, வெறுப்பிற்கு உட்பட்ட கோஸ்டாஸ் கரமனலிஸின் தலைமையில் இருந்த 2004-09 கன்சர்வேடிவ் புதிய ஜனநாயக அரசாங்க ஆட்சிக்கு PASOK ஒரு முற்போக்கான மாற்றீட்டை பிரதிபலிக்கிறது என்பதையே கொடுக்கின்றது.

கடந்த ஆண்டு தொழிலாளர்களின் ஊதியத்தில் வாங்கும் சக்தி 15 சதவிகிதம் சரிந்துவிட்டது என்பதை அனெஸ்டிஸ் சுட்டிக்காட்டினார். ஆனால் அதே நேரத்தில் தன் தொழிற்சங்கம் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார். அரசாங்கத்தின் வார்த்தைகளை எதிரொலிக்கும் வகையில் அவர் "இப்பொழுது நிலைமை மோசமாக உள்ளது. எனவே ஊதியங்களில் முழுமையாக 15 சதவிகித உயர்வைக் கோரமுடியாது" என்றார்.

GSEE ஊதியத்தில் 4 சதவிகித உயர்வைக் கேட்கும் என்று அனெஸ்டிஸ் தெரிவித்தார். அதே நேரத்தில் தொழிலாளர்கள் கிரேக்க வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் ஆகியவை தற்போதைய சங்கடத்தில் இருந்து வெளிவருவதற்கு "நியாயமான பங்கை" அளிப்பதற்கு இயன்றதை சங்கம் செய்யும் என்றும் கூறினார். இந்த அற்ப 4 சதவிகித உயர்வைக் கூட கைவிடுவதற்கு தொழிற்சங்க கூட்டமைப்பு தயார் என்பதற்கு இது அடையாளம் ஆகும்.

தொழிற்சங்கங்களின் கொள்கை PASOK ஆட்சியின் யின் கோரிக்கையான "அதிக ஊதியம் பெறும்" பொதுத்துறை ஊழியர்களில் மாதம் 2,000 யூரோக்களுக்கு மேல் பெறுபவர்கள் வருங்காலத்தில் ஊதிய உயர்வைக் கைவிட்டுவிட வேண்டும் என்பதுடன் பிணைந்துள்ளது.

"வலியை பகிர்ந்துகொள்ளுதல்" என்ற இதே தகவல்தான் ADEDY அரசாங்க ஊழியர்கள் சங்கத்தாலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதன் தலைவர் ஸ்பிரியோஸ் பாப்பாஸ்பிரயோ பைனான்சியல் டைம்ஸிடம் சமீபத்தில், நடவடிக்கைகள் விகிதத்திற்கு உட்பட்டு, பொதுத்துறை மட்டும் இல்லாமல் சமூகம் முழுவதையும் பாதிக்கும் என்றால், நிலைமையில் இருந்து மீள்வதற்கு நாட்டிற்கு உதவ நாங்கள் திரள்வோம்." என்றார்.

WSWS க்கு கொடுத்த பேட்டியில் தொழிற்சங்கக் கூட்டமைப்பு குறைப்புக்களுக்கு ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது என்று அனெஸ்டிஸ் வலியுறுத்தினார். "நாம் ஏற்பதும் மறுப்பதும் இருக்கக்கூடிய நிலைமையைப் பொறுத்தது. கழுத்தில் கத்தி இருக்கும்போது, அது கடின நிலைதான்" என்றார்.

தொழிற்சங்கம் உறுதி, ஒழுங்கு இவற்றின் சக்தி என்று கூறிய அனெஸ்டிஸ் தொழிலாளர்கள் தங்கள் நலன்களுக்காக சுயாதீனமாக செயல்படுவது இயலாத செயல் என்றார்; WSWS இடம், "தொழிலாளர்கள் இன்று அது உள்ள நிலையில் இந்த அரசியல் முறையை தூக்கிவீச முடியாது" என்று அப்பட்டமாக கூறினார்.

அனெஸ்டிஸின் வாதங்கள் முற்றிலும் நேர்மையற்றவை. "கழுத்தில் கத்தியை" கிரேக்கத் தொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கின்றனர் என்றால், பல தசாப்தங்கள் பாப்பாண்ட்ரூ மரபினருக்கு ஆதரவு கொடுத்ததின் மூலம் கத்தியின் வேட்கைக்கு தொழிற்சங்கங்கள் ஊக்கம் கொடுத்துள்ளன.

பல ஆண்டுகளாக தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் PASOK உடன் தங்கள் நெருக்கமான உறவுகளில் இருந்து இலாபத்தை, சலுகைகள், பளுவற்ற உயர்பதவிகள், அதிக ஊதியங்கள் போன்றவற்றை பெற்றுள்ளன. இப்பொழுது அவற்றின் முக்கிய கவலை தொழிலாள வர்க்க எதிர்ப்பை பாதுகாப்பான திசையில் திருப்பிவிடும் தங்கள் பங்கிற்கு உரிய அங்கீகாரம் மற்றும் வெகுமதிகள் கிடைக்க வேண்டும் என்பதாகும்.

நெருக்கடிக் காலங்களில், கிரேக்க முதலாளித்துவம் பல முறையும் தொழிற்சங்கங்களின் ஆதரவு கூடிய சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கங்களைத் தங்கள் நலன்களைக் பாதுகாக்க நம்பியுள்ளன. இன்று கிரேக்கக் கடன் நெருக்கடி PASOK உலக நிதிய அமைப்புக்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு கருவியேதான், வேறு ஒன்றும் இல்லை என்பதைத்தான் காட்டியுள்ளது.

இலாபமுறைக்கு உறுதியான ஆதரவைக் கொடுப்பவையாக தொழிற்சங்கங்கள் உள்ளன. தேசிய முன்னோக்கின் அடிப்படையில், அவை தொழிலாள வர்க்கம் "தியாகங்களை" செய்ய வேண்டும் என்று கோருகின்றன--இதன் பொருள் முன்பு கிடைத்த அனைத்து சமூக நலன்களையும் தகர்த்தல் என்பதாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved