World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French unions end air traffic controllers' strike

பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடைய வேலைநிறுத்தத்தை முடிக்கின்றன

By Pierre Mabut
1 March 2010

Back to screen version

சனிக்கிழமை காலை, தங்கள் சங்கங்கள் அரசாங்கத்திடம் இருந்து பயனற்ற உறுதிமொழிகளை ஏற்றபின், வேலைகளுக்கான பாதுகாப்பு மற்றும் அரசாங்க ஊழியர் அந்தஸ்து ஆகியவற்றிற்காக தொடங்கப்பட்ட நான்கு நாள் வேலைநிறுத்தத்தை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கைவிட்டுவிட்டு பிரெஞ்சு விமான நிலையங்களுக்கு வேலைக்கு திரும்பினார்கள்.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் வேலைநிறுத்தத்தில் ஏயர் பிரான்ஸின் விமானிகளும் சேர இருக்கும் நேரத்தில், தொழிற்சங்கங்களின் வெளிநடப்பை நிறுத்தும் முடிவு வந்தது. இது நிர்வாகம் மற்றும் அரசாங்கத்துடன் வெள்ளியன்று நடைபெற்ற கூட்டு பேச்சுவார்த்தைகளின் முடிவு ஆகும். FO எனப்படும் தொழிலாளர் சக்தி தொழிற்சங்கம் "ஒரு முக்கியமான முன்னேற்ற நடவடிக்கை" சாதிக்கப்பட்டது என்று அறிவித்தது.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஐரோப்பிய சிவில், இராணுவ, வான்வழிக் கட்டுப்பாடு சீரமைப்பு பற்றிய திட்டம் ஒன்றை எதிர்க்கின்றனர். "FABEC எனப்படும் மத்திய ஐரோப்பிய வான்வழி செயல் பிரிவு, "ஒற்றை ஐரோப்பிய வானம்" என்னும் திட்டத்தில் ஜேர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், ஹாலந்து, லுக்சம்பேர்க் மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகியவை இருக்கும். தொழிலாளர்கள் இத்தகைய திட்டம் ஏராளமான வேலை இழப்புக்களுக்கு வகை செய்யும், பணிநிலைமைகளைப் பாதிக்கும் என்று நியாயமான கவலைப்படுகின்றனர்.

4,400 விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உட்பட 12,000 ஊழியர்களைக் கொண்டுள்ள பிரெஞ்சு சிவில் விமான அமைப்பு நடத்திய ஜூலை 2008 ஆய்வானது 2025-க்குள் 7 பில்லியன் சேமிப்புக்கள் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டில் 50 சதவிகித ஆட்குறைப்பினால் வரும் என்று கணக்கீடு செய்துள்ளது. இந்த சேமிப்புக்களின் ஒரு கூறுபாடு 4,400 ஓய்வு பெரும் அரசாங்க ஊழியர்களுக்குப்பதிலாக பாதிப் பேரைத்தான் வேலைக்கு எடுப்பது என்பதாகும்.

பிரெஞ்சு அரசாங்கமானது வேலைப் பாதுகாப்பு பற்றி வாய்வழி உத்தரவாதங்களைத்தான் கொடுத்துள்ளது. சுற்றுச்சூழல், எரிசக்தி மற்றும் வளர்ச்சித்துறை மந்திரியான Jean-Louis Borloo, மற்றொரு அரசாங்க "சமூகப் பங்காளி" வகை ஆலோசனைக் குழு நியமிக்கப்பட வேண்டும், இதில் தொழிற்சங்க ஒத்துழைப்பு FABEC பற்றி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவைபோன்ற முற்றிலும் உபயோகமற்ற கருத்தின் அடிப்படையில் தொழிற்சங்கம் வேலைநிறுத்த நீடிப்பை வெள்ளியன்று கைவிட்டது. Force Ouvriere உடைய பிரதிநிதியான Didier Pennes புதிய குழுவிற்கான வழிகாட்டி "அனைத்துக் கருத்துக்களையும் இணைத்தல்" என்பதாகும் என்றார். வேறுவிதமாகக் கூறினால், தொழிற்சங்க அதிகாரிகள் தங்கள் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தீவிரமாக முயல்கின்றனர்.

இரு நாட்களின் முன்பு அரசாங்கத்துடன் ஒரு கூட்டத்திற்கு பின்னர், தொழிற்சங்கக் குழு வேலைநிறுத்தமானது "தேவையான உத்தரவாதங்களைப் பெறும் வரை" தொடரும் என்று கூறியது. குழுவின் செய்தித் தொடர்பாளர் Pierre Meybon அறிவித்தார். "சுற்றுச் சூழல், போக்குவரத்து அமைச்சரகங்கள் முன்வைத்த உறுதிமொழிகள் போதாது என்பதை அறிந்துள்ளோம். குறிப்பாக DGAC அரசாங்கப் பொதுப்பணியின் ஒரு பிரிவாக வைப்பது என்பது பற்றி."

சோசலிஸ்ட் கட்சியின் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் Gilles Savary- வை குழு தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயற்படும் அமைப்பிற்கு தலைமை தாங்குவதற்கு போர்லூ நிமித்துள்ளார். இதற்குரிய வேலையானது தங்கள் வேலைகள் மற்றும் பணிநிலை காப்பு பற்றி விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இனி எந்த எதிர்ப்புக் காட்டினாலும் அதை நெரிப்பது ஆகும்.

இதே காட்சிதான் கடந்த வாரம் CGT தலைமையில் வழிநடத்தப்பட்ட தொழிற்சங்கங்கள் டோட்டலின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் தேசிய வேலைநிறுத்தத்தை நிறுத்தியபோதும் ஏற்பட்டது. அதில் டன்கிர்க் தொழிலாளர்கள் தங்கள் ஆலைகளை மூடாமல் வைத்திருக்க நடத்திய போராட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். தொழிற்சங்கங்கள், அரசாங்கம் மற்றும் டோட்டலுடன் "வட்டமேசைக்கு" வாய்ப்பு பெற்றன. அதில் அடுத்த கட்டமாக தேசிய எரிபொருள் இருப்புக்கள் பற்றிய விவாதம் நடக்கும்.

ஐரோப்பாவில் அரசாங்கக் கடன் என்னும் பெரிய நெருக்கடி மற்றும் பல விமான நிறுவனங்களின் திவால் தன்மையின் பின்னணியில் திட்டமிடப்பட்டுள்ள வான்வழி கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பானது விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வேலைகள், விமானப்பணியாளர்கள் குழு மற்றும் பொதுவாக விமானப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைகள் இழப்பு மற்றும் பயணிகளின் இழப்பில்தான் அடையமுடியும். இதையொட்டித்தான் விமானப் பயணங்களின் கட்டணங்கள் குறையும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவத் திறன் விரிவாக்கத்தின் செலவிற்குப் பணம் கிடைக்கும்.

ஏயர் பிரான்ஸின் விமானிகள் தங்கள் சிறுபான்மை சங்கங்கள் தொடங்கிய வேலைநிறுத்தமானது வேலைகளை காப்பாற்றவும், பணிநிலையை தக்கவைக்கவும் தொடர்கின்றனர். விமானப் பயணங்களில் 5-ல் இருந்து 10 சதவிகிதம் வரை பாதிக்கப்பட்டுள்ளன. Air France-KLM ஐந்தாவது தொடர்ச்சியான காலாண்டின் பற்றாக்குறையை கண்டுள்ளது. இது 2009-10-ல் 574 பில்லியன் யூரோக்கள் நஷ்டத்தை எதிர்பார்க்கிறது. விமானத்துறை பகுப்பாய்வாளர்கள் ஏயர் பிரான்ஸ் 120 மில்லியன் யூரோக்கள் சேமிப்புக்களை ஒவ்வொரு ஆண்டும் விமானம் பறக்கும் ஊழியர் பிரிவில் இருந்து விரும்புகிறது என்றும், இதுதான் அதன் Easyjet மற்றும் Ryanair உடன் குறைந்த கட்டண போட்டியின் விலை என்றும் கூறுகின்றனர். இது 2010-ல் 1,700 ஊழியர்கள் "விரும்பி விலகும்" திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

வேலைநிறுத்தத்தை முடித்ததில், தொழிற்சங்க கூட்டமைப்பின் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் குழு, CGT, FO மற்றும் Unsa ஆகியவற்றை அடக்கியுள்ளன. இப்பொழுது ஜனாதிபதி சார்க்கோசியின் விமானப் போக்குவரத்து அதிகாரிகளின் மேல் சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதுடன் விமானிகளின் போராட்டத்தையும் தனிமைப்படுத்திவிட்டது.

வேலைநிறுத்தங்கள் மிகத் திறமையுடன் நடைபெற்று வந்த கட்டத்தில் டோட்டலிலும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிலும், தொழிற்சங்கங்கள் மீண்டும் பெருநிறுவனங்கள் மற்றும் சார்க்கோசியின் வலதுசாரி அரசாங்கத்தை மீட்பதற்கு உதவியுள்ளன.

ஐரோப்பாவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு அறிவார்ந்த முறையில் சீரமைக்கப்படுவது என்பது ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கைதான். ஆனால் முதலாளித்துவத்திற்கு இதற்காக விலை கொடுப்பவர்கள் ஐரோப்பிய தொழிலாளிகள் ஆவார்கள். அவர்கள்தான் நோய்வாய்ப்பட்டிருக்கும் விமானத்துறைக்கு முட்டுக் கொடுக்கும் வகையில் இலாபத்தை கொடுப்பார்கள். ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு இராணுவத் தயாரிப்புக்களுக்கும் கொடுப்பார்கள். தொழிலாளிகளின் திறமை, பொதுமக்கள் பாதுகாப்பு இவற்றை மதிக்கும் ஒரே அறிவார்ந்த, உண்மையான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்கான திட்டமானது கண்டம் முழுவதும் நிறுவப்படும் தொழிலாளர் அரசுகளின் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசை தொழிலாள வர்க்கத்தின் கீழ் அமையும் அரசுகளின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ்தான் இது சாத்தியமாக இருக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved