WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The “Hitler” option in Afghanistan
ஆப்கானிஸ்தானில் “ஹிட்லர்” போன்ற விருப்புரிமை
Patrick Martin
29 June 2010
Back to screen version
ஆப்கானிஸ்தானத்தில் ஜெனரல் ஸ்டான்லி மக்கிறிஸ்டலை அமெரிக்கத் தளபதி பதவியில் இருந்து நீக்கியதும் அவருக்குப் பதிலாக ஜெனரல் டேவிட் பெட்ரீயசை நியமித்ததும், ஒபாமாவின் அரசியலுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் சித்தரிப்பது போல் இராணுவத்தின் மீதான சிவிலியக் கட்டுப்பாடு என்ற கொள்கையைக் காப்பதற்கு அல்ல. அதே போல் வெள்ளை மாளிகை விரும்பும் விதத்தில் உத்தியோகபூர்வ நிலைப்பாடு எனக்கூறக்கூடிய கொள்கை மாற்றம் அல்லாமல் நபர் மாற்றம் என்பதும் அல்ல.
கட்டுப்பாட்டில் மாற்றம் என்பது மக்கிறிஸ்டலின் எழுச்சி-எதிர்ப்பு வழிவகைகள் ஆப்கானிஸ்தானின் தெற்கிலும் கிழக்கிலும் பெரும் பகுதிகளைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள தலிபான் தலைமையிலான கெரில்லா சக்திகளை அகற்றத் தவறிவிட்டன என்பதால் ஏற்பட்ட பெருகிய அதிருப்தியின் விளைவு என்பதற்கான அனைத்துக் குறிப்புக்களும் உள்ளன. அமெரிக்க இராணுவ வன்முறையின் அளவில் அதிகரிப்பு இருக்கும், குறிப்பாக ஆப்கானிய மக்களிடையே பொதுமக்கள் இறப்புக்கள் அதிகமாகும் என்று வரவிருப்பதைக் காட்டுகிறது. அம்மக்களுடைய “குற்றம்” அமெரிக்க எதிர்ப்பு எழுச்சிக்கு பரிவுணர்வு காட்டுதலும், ஆதரவு கொடுத்தலும்தான்.
செய்தி ஊடகத் தகவல் ஒன்றின்படி, ஏற்கனவே பெட்ரீயஸ் இன்னும் கூடுதலான சக்தியைப் பயன்படுத்த அனுமதிக்கும் போர் விதிகளை மாற்றுவதற்கான தயாரிப்புக்களில் ஈடுபட்டுள்ளார்.
ஞாயிறன்று பிரிட்டிஷ் Independent பத்திரிகையில் வந்துள்ள தகவல்படி, குறிப்பாக ஒரு தலிபான் கோட்டையான தெற்கே உள்ள முக்கிய காந்தகார் நகரத்தின்மீது திட்டமிடப்பட்ட தாக்குதலை ஒத்திவகைக்கும் கட்டாயத்திற்கு அவர் உள்ளான பின்னர் மக்கிறிஸ்டல் வெற்றி பற்றிய நினைப்புக்களில் அதிகளவு அவநம்பிக்கை கொண்டுவிட்டார். நேட்டோ பாதுகாப்பு மந்திரிகளிடம் இந்த மாதம் முன்னதாக அதைப்பற்றி அவர் கூறியதாகவும் “இன்னும் ஆறு மாதங்களுக்கு எந்த முன்னேற்றத்தையும் எதிர்பார்க்க வேண்டாம்” என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
செய்தித் தாள் மேலும் எழுதுகிறது; “இந்தத் தகவல்தான், Rolling Stone கட்டுரையைப் போலவே முக்கியமான ஆதாரங்கள்படி திரு.ஒபாமாவை மக்கிறிஸ்டலுக்கு எதிராகச் செயல்பட நம்பவைத்தது.” கட்டுரை மேலும் கூறுகிறது: “விரைவான முடிவுகளை எதிர்பார்க்க வேண்டாம் என்றும் தாங்கள் “எதிர்ப்புக் காட்டும், பெருகிய எழுச்சிகளை எதிர்கொண்டிருப்பதாகவும்” மந்திரிகளிடம் எச்சரித்ததில் ஜெனரல் “பிறழ்ந்த தகவல்” கொடுத்ததாக மதிப்பிடப்பட்டார்.”
அமெரிக்காவில் நியூயோர்க் டைம்ஸ் தலைமையில் மக்கிறிஸ்டல் அமெரிக்க, நேட்டோ படைகளுக்கும் தலிபான் தலைமையிலான கெரில்லாப் படைகளுக்கும் பெருகிய முறையில் நடக்கும் போரின் நடுவே ஆப்கானிய பொதுமக்கள் இறப்பு பற்றி மிகஅதிகமாகக் கவலைப்படுகிறார் என்று சித்தரித்து தகவல் சாதனப்பிரச்சாரம் ஒன்று தொடங்கியது.
ஜூன் 22 அன்று C.J.Shivers எழுதிய கட்டுரை ஒன்றில் தொடங்கியது: இதில் களத்தில் உள்ள உயரதிகாரிகள், அதிகாரி அந்தஸ்து இல்லாத படையினர்கள் மற்றும் சாதாரண படையினர்கள், ஆப்கானிஸ்தான் படையினர் ஆகியோர் மக்கிறிஸ்டலால் கைகளில் “விலங்கிடப்பட்டது போல்” உணர்ந்துள்ளனர் என்று விவரிக்கப்பட்டது. தளபதியின் தந்திரோபாயங்கள் “மேற்கின் சுடுதிறனை, தரைப்படையினர்களுக்கு ஆதரவு கொடுப்பதில்-வான்வழித் தாக்குதல்கள், இயக்கப்படும் ராக்கெட் தாக்குதல்கள், பீரங்கிப் தாக்குதல்கள், வெடிகுண்டுகள் போடுதல் உட்பட அனைத்தையும் தடைக்கு உட்படுத்தின.
இந்தப் பல்லவி உடனே பல டைம்ஸ் நிருபர்களால், செய்தித்தாளின் பல ஆன்லைன் வர்ணனைகளில் எடுத்துக் கொள்ளப்பட்டன-ரோபர்ட் மக்கீ, ஜான் பர்ன்ஸ், டெக்ஸ்டர் பில்கின்ஸ் அனைவரும் ஒன்றாக இசைத்தனர். இதன் பின் தாராளவாதிகள், கன்சர்வேடிவ்கள் என்று செய்தித்தாளின் ஆசிரியர் தலையங்க எதிர்ப்பக்க கட்டுரையாளர்கள் அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஒரு தாராளவாதக் கட்டுரையாளரான பாப் ஹெர்பர்ட், திடீரென சனிக்கிழமைக் கட்டுரை ஒன்றில் தன்னை இராணுவத் தந்திரோபாய ஆலோசர் என்ற தொழிலில் கண்டறிந்து, “தீய கனாவை விட மோசமானது” என்ற தலைப்பில் எழுதினார். மக்கிறிஸ்டல் மற்றும் பெட்ரீயஸ் இருவரின் எழுச்சி-எதிர்ப்பு மூலோபாயத்தைக் கண்டித்து, “இதை வாதிடுபவர்கள் போரின் அடிப்படைக் கூறுபாட்டைக் காணவில்லை; நாம் ஒன்றும் பாதித் தூக்கத்தில் போருக்குச் செல்வதில்லை. எதிரியை நசுக்குவதற்கு செல்லுகிறோம். இது கடுமையாக, விரைவாகச் செய்யப்பட வேண்டும். அதைச் செய்ய முடியாவிட்டால், அதைப்பற்றி மன உறுத்தல் இருந்தால், அல்லது எப்படிச் செய்வது என்று தெரியாவிட்டால், போருக்குச் செல்லக்கூடாது. நோர்மண்டி கடற்கரையைத் தாக்கியவர்கள் அங்குள்ள மக்களின் இதயங்களையும், மனங்களையும் வெற்றி பெற முயலவில்லை.”
அவர் தொடர்ந்தார்: “இப்போர்க்கள எச்சரிக்கையின் குறைந்த தன்மைகள் நம்முடைய போரிடும் துருப்புக்களுக்கு ஆதரவு கொடுக்கும் வான்வழித்தாக்குதல்கள், பீரங்கிப் படை உதவி ஆகியவை தேவை என்று உணருகின்றனர்.”
ஒரு கன்சர்வேடிவ் டைம்ஸ் கட்டுரையாளரான Ross Douthat இதே பிரச்சினையை திங்களன்று எழுப்பி, ஆப்கானிஸ்தானில் இருந்து “வெளியேறுவதற்கு வெற்றி ஒன்றுதான் நமக்கு வழி” என்று வாதிட்டார். ஒபாமா நிர்வாகம் “ஆப்பானிஸ்தானில் இருப்பதற்கும் போரில் இருந்து திரும்ப வருவதற்கும் இடையே முடிவெடுக்கவில்லை. அது இருவிதமாக அங்கு தங்குவது பற்றி முடிவெடுக்க விரும்புகிறது.” அதாவது ஒரு நீடித்த தேக்க நிலை அல்லது உடனடி இராணுவ வெற்றி என.
Rolling Stone கட்டுரை, மக்கிறிஸ்டல் வெளியேறுவதற்கு கூறப்படும் காரணத்தை அளித்தது, “வெளிப்படையாக ஒரு இடதுசாரி, போர் எதிர்ப்பு, எழுச்சி எதிர்ப்பு குறைகூறும் குழுவாகும்.” ஆனால் அது உண்மையில், “தற்போதைய மூலோபாயம் நிரபராதிகளான ஆப்கானிய உயிர்களுக்கு அதிக மதிப்பு கொடுப்பதாகக் குறைகூறுகிறது.” என்று Douthat குறிப்பிட்டார். மற்றொரு பகுப்பாய்வாளரையும் மேற்கோளிட்டு தற்போதைய மூலோபாயத்தை கட்டுரை குறைகூறுவதாகவும், “அதற்குக்காரணம் அது படையினர் போதிய மக்களை கொல்லுவதை அனுமதிக்கவில்லை.”
ஜெனரல் மக்கிறிஸ்டல், நீண்டகாலம் சிறப்புப் படைகள் பிரிவின் தளபதியாக இருந்தவர், ஈராக்கில் அவர் இருந்த ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான எழுச்சியாளர்களின் படுகொலைகளுக்கு பொறுப்பாக இருந்தவர், போதுமான குருதி வெறி இல்லாமல் இருந்தவர் என்று தோன்றலாம். ஆனால் அத்தகைய குறைபாட்டின் தர்க்கம் Washington Quarterly என்ற சர்வதேச ஆய்வுகளுக்கான அமெரிக்க மையம் (Center for Strategic and International Studies) எனப்படும் அமெரிக்க தலைநகரின் முக்கிய கொள்கை இயற்றும் சிந்தனைக் குழுவின் ஏட்டில் ஜூலை 2010ல் வெளிவந்த ஒரு முக்கியமான பகுப்பாய்வில் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
இப்பொழுது அமெரிக்காவில் பணிபுரியும் Lorenzo Zambemardi என்னும் இத்தாலிய உயர்கல்வியாளரால் எழுதப்பட்ட அக்கட்டுரை “எழுச்சி எதிர்ப்பின் இயலாத பெரும் சங்கடம்” என்பது பற்றி விவாதிக்கிறது.
Zambermardi வாதிடுகிறார்: “எழுச்சி எதிர்ப்பு மூன்று முக்கிய இலக்குகளைக் கொண்டுள்ளது; உண்மை நடைமுறையில் எழுச்சி எதிர்ப்பு மூற்றில் இரண்டைத் தேர்தெடுக்க வேண்டும்…. எழுச்சி எதிர்ப்பில் இயலாத சங்கடமான இத்தகைய மோதலில் ஒரே நேரத்தில் 1) படைகள் பாதுகாப்பு, 2) விரோதிகள் போராளிகள் மற்றும் போரில் ஈடுபடாதவர்களை வித்தியாசப்படுத்துவது 3) எழுச்சியாளர்களை உடல்ரீதியாக முற்றிலும் அளித்தல் என்பது முடியாத செயல் ஆகும்”
இத்திட்டத்தின்படி, மக்கிறிஸ்டல் இரண்டாம், மூன்றாம் இலக்குகளை தேர்ந்தெடுத்தார்; இதையொட்டி அமெரிக்க-நேட்டோ இறப்பு எண்ணிக்கை அதிகமாயிற்று; பொதுமக்கள் இறப்புக்களை தவிர்ப்பதற்கு கூடுதலான இடர்களைச் சந்திக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதில் படையினர்களிடையே பெருகிய அதிருப்தி ஏற்பட்டது. இதற்கு மாற்றீடு முதல் மற்றும் மூன்றாம் இலக்குகளின் மீது குவிப்புக் காட்டுவதுதான். “ஒரு அரசாங்கம் அதன் ஆயுதப் படைகளை எழுச்சியாளர்களை அடக்கும்போது காப்பாற்றலாம், ஆனால் இது பொறுப்பற்ற முறையில் பொதுமக்களைக் கொல்வதின் மூலம்தான். அப்படித்தான் ஒட்டோமன்கள், இத்தாலியர்கள் மற்றும் நாஜிக்கள் பால்கன்கள், லிபியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் முறையே செய்தனர்.”
கட்டுரையாளர் “காட்டுமிராண்டித்தனக் கொள்கை” என்று பின்னர் விவரிக்கும் இந்த விருப்புரிமை “ஹிட்லர் விருப்புரிமை” என்று அழைக்கப்படலாம்.
இதை நோக்கித்தான் ஆப்கானிஸ்தானில் இப்பொழுது அமெரிக்க கொள்கை செல்லுகிறது. போரில் ஒரு வியத்தகு விரிவாக்கத்தைக் கொண்டுவந்து, நிரபராதியான உயிர்களை அழித்தல் பற்றிப் பொருட்படுத்தாத்தன்மையும், தீவிர மிருகத்தனமும் அப்போரின் குணநலன்களாக இருக்கும்.
வாஷிங்டனின் புதிய காலனித்துவப்போர் மற்றும் ஆக்கிரமிப்பிற்கு ஆப்கானிஸ்தான மக்கள் எதிர்ப்பை அடக்குவதில் தோல்வி அடைந்துள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம் இத்தகைய விடையிறுப்பைக் கொடுக்க விரும்புகிறது. குருதிப் பாதையை அகலமாக்க விரும்பும் உந்துதல் அமெரிக்காவிற்கு எதிரான எழுச்சிக்கு வெகுஜன ஆதரவு இருப்பதால் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிய மக்கள் வெளிநாட்டு ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடத்தும் போராட்டம் முற்றிலும் நியாயபூர்வமானது.
பல்லாயிரக் கணக்கான ஆப்கானிய பொதுமக்கள் ஒன்பது ஆண்டு போர்க்காலத்தில் கொல்லப்பட்டுள்ளனர்; அமெரிக்க வரலாற்றிலேயே இது நெடிய இராணுவ ஈடுபாடாகும். அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் திருமண நிகழச்சிகள், குடும்பங்கள் வெளியேறுதல், ஏன் மரண ஊர்வல நிகழ்ச்சிகள் மீது கூட நடைபெற்றுள்ளன.
ஆயிரக்கணக்கான ஆப்கானிய மக்கள் கைப்பற்றப்பட்டு, காவலில் அடைக்கப்பட்டு இழிந்த பக்ராம் சிறை முகாமிலும் மற்ற அத்தகைய இடங்களிலும் நாடு முழுவதும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அமெரிக்க பிரிடேட்டர் ஏவுகணைகள் ட்ரோன் விமானங்களில் இருந்து ஆப்கானிஸ்தான்-பாக்கிஸ்தான் எல்லைகளின் இரு பக்கங்களிலும் உள்ள கிராமங்கள் மீது செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில் நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்துவிட்டனர்.
இந்த இரத்தக் குளியலைத்தான் ஒபாமா “நல்ல போர்” என்று தன் ஜனாதிபதிப் பிரச்சாரத்தின்போது ஆதரவு கொடுத்திருந்தார். அமெரிக்காவிற்குள் மக்கள் எதிர்ப்பு பெருகிய நிலைக்கு எதிராக, இதைத்தான் ஜனநாயகக் கட்சியின் தாராளவாதப் பிரிவும் ஆர்வத்துடன் இன்றளவும் தழுவுகிறது. போரைத் தொடர்ந்து, விரிவாக்க நினைக்கும் முடிவுகளை எடுப்பவர்கள் போர்க்குற்றங்கள் புரிபவர்களாவர். இதற்கு அரசியல் காரணங்களை கற்பித்து அளிப்பவர்கள், இப்போரை அமெரிக்க மக்களுக்கு “விற்க” முயல்பவர்கள் அவர்களுடைய உடந்தையாளர்கள் ஆவர்.
|