World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Obama and Cameron pledge to defend BP profits

ஒபாமாவும் காமெரோனும் பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் இலாபத்தைக் பாதுகாக்க உறுதியளிக்கின்றனர்

By Hiram Lee
29 June 2010

Back to screen version

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமெரோனும் இந்த வார இறுதியில் G20 உச்சிமாநாட்டின் போது கனடாவில் சந்தித்து BP யின் மெக்சிகோ வளைகுடா எண்ணெய்க் கசிவின் விளைவினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றி விவாதித்தனர். ஆனால் பேச்சுக்களின் நோக்கம் தூய்மைப்படுத்துதல், மீட்பு முயற்சிகள் பற்றி ஒருங்கிணைப்பது என்று இல்லாமல், மீண்டும் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அரசாங்கம், BP இன் இலாபங்களுக்கு உறுதி அளிப்பதாக இருந்தது.

ஞாயிறன்று காமெரோன் அலுவலகத்தில் இருந்து பேச்சுக்கள் பற்றி வெளியிடப்பட்ட அறிக்கை ஒபாமாவும் காமெரோனும் “கசிவை மூடுவதற்கு அதன் கடமைகளை BP நிறைவு செய்யவேண்டும், சேதங்களைத் தூய்மைப்படுத்த வேண்டும், சட்டரீதியான இழப்பீட்டுக் கோரிக்கைகளை சந்திக்க வேண்டும்.” என்று உடன்பட்டனர். அவர்கள் BP ஒரு வலுவான, உறுதியான நிறுவனமாகத் தொடர்தல் இரு நாடுகளுக்கும் நலன் பயக்கும் என்பதையும் ஒப்புக் கொண்டனர்.” என்று தெரிவிக்கிறது.

“சட்டரீதியான கோரிக்கைகள்” பற்றிய குறிப்பு இரு நிறுவனங்களின் அரசாங்கங்கள் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு இழப்பீடுகளைக் கொடுப்பதற்கு அழுத்தம் தராது என்பதற்குத் தெளிவான அடையாளம் என்று கொள்ளப்பட வேண்டும். கோரிக்கைகளை தாமதப்படுத்திய போது அல்லது நிராகரித்தபோது, இதே சொற்றொடரைப் பல முறை BP பயன்படுத்தியுள்ளது. இச்சொல்லாட்சி பேரழிவால் பாதிக்கப்பட்ட தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு தம் கோரிக்கை உண்மையில் “சட்டரீதியானதுதான்” என்று நிரூபிக்கும் பொறுப்பைக் கொடுத்துள்ளது.

BP யின் பொறுப்புக்களை வரம்பு கட்டுவதற்கான இங்கிலாந்து அரசாங்கத்தின் உறுதிப்பாடு கோரிக்கைளை பற்றி மத்தியஸ்தராக இருக்கும் பணி கொடுக்கப்பட்டுள்ள 20 பில்லியன் டொலர் இழப்பீட்டு நிதியின் நிர்வாகி கென்னத் பீன்பெர்க் வெளியிட்டுள்ள கருத்துக்களால் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகின்றன. லூயிசியான லாரோசில் ஜூன் 25ம் திகதி நகர அரங்கக் கூட்டத்தில் பீம்பேர்க் அறிவித்தார்: “BP யை திவால்தன்மைக்கு விரட்டுவது எவ்விதத்திலும் அறிவுடைமை ஆகாது. அது ஒரு பேரழிவு ஆகிவிடும்.”

BP தொடர்ந்து “வலுவாகவும், உறுதியாகவும்” இருக்கும் என்ற அறிக்கையை பொறுத்தவரையில், இதன் பொருள், நிறுவனம் அதன் முதலீட்டாளர்களுக்கு போதிய இலாபங்களைக் கொடுக்க வேண்டும் என்பதாகும். இவ்விதத்தில் BP பங்குதாரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல் உரத்தும், தெளிவாகவும் வரவேற்கப்பட்டது. கூட்டத்தின் முடிவுரைகளைப் பற்றிய தகவல்கள் BP யின் பங்குகளில் 3.99 சதவிகித ஏற்றத்தைக் கொடுத்தது. முன்னதாக அது 14 ஆண்டுகாலம் இல்லாத வகையில் குறைந்து போயிருந்தது.

G20 உச்சிமாநாட்டின் போது நடைபெற்ற பேச்சுக்கள் காமெரோன் மற்றும் ஒபாமா இருவரிடம் இருந்தும் வெளிவந்த தொடர்ச்சியான அறிக்கைகளில் சமீபத்தியதுதான். அவை தம் BP இலாபங்களுக்கான உறுதிப்பாட்டை அளித்திருந்தன. வாரத்தின் தொடக்கத்தில் காமெரோன் CBC உடன் நடத்திய பேட்டி ஒன்றில் “நம் நீண்ட கால நலன்கள் அனைத்திலும் இவை பற்றி ஒரு தெளிவு, உறுதிப்பாடு ஆகியவை இருந்துள்ளன. எனவே நாம் அதே நேரத்தில் நம் அனைவருடைய நலன்களுக்கும் முக்கியமான நிறுவனம் அழிக்கப்படுவதையும் காணக்கூடாது.” என்று எச்சரித்திருந்தார்.

BP யைக் குறைகூறுபவர்கள் மற்றும் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் விதத்தில் நிறுவனம் மக்களின் சிறந்த நலன்களைத் தன் இதயத்தானத்தில் கொண்டுள்ளது என்றும், “BP எண்ணெய் கசிவை மூட விரும்புகிறது, எண்ணெயை தூய்மைப்படுத்த விரும்புகிறது, மீனவர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் இடருறும் மக்களுக்கு இழப்பீடு கொடுக்க விரும்புகிறது, அது அதைச் செய்ய வேண்டும்” என்றார். உண்மையில் BP யின் நலன்கள் ஒரு தீவிரத் தூய்மை மற்றும் கட்டுப்படுத்தும் பொறுப்பிற்கு முற்றிலும் எதிரிடையானது, அதேபோல் பேரழிவிற்கு உட்பட்டுவிட்டவர்களின் வாழ்க்கைக்கு போதிய இழப்பீடு கொடுப்பதுடனும் முரணானது.

“நிறுவனத்தால் அதைச் செய்யமுடியும், அதைச்செய்யும் என்று நான் நம்புகிறேன், BP ஒரு வலுவான, உறுதியான நிறுவனமாக இருத்தல் பிரிட்டன், அமெரிக்கா இரண்டின் நலன்களுக்கும் உகந்தது என்று நான் நம்புகிறேன்.” என்று பிரதம மந்திரி சேர்த்துக் கொண்டார்.

ஒபாமாவின் நிர்வாகத்தைப் பொறுத்தவரையில், ஆரம்பத்தில் இருந்தே அதன் விடையிறுப்பு BP யையும், எண்ணெய் தொழில்துறையையும் பாதுகாப்பதுடன், ஆழ்கடல் எண்ணெய் எடுத்தல் விரிவாக்கத்தை பாதுகாத்தலாகவும் தான் இருந்து வருகிறது.

டீப்வாட்டர் ஹொரைசன் பேரழிவிற்கு எந்த நியாயமான, பகுத்தறிவார்ந்த விடையிறுப்பும் BP நிர்வாகிகள் மீது குற்ற விசாரணை, குற்றப்பிரிவு வழக்குகளைத் தொடர்தலை அடக்கியிருக்கும், அத்துடன் நிறுவனத்தின் சொத்துக்களை எண்ணெய்க் கசிவிற்கு உடனடி எதிர்கொள்ளல் என்ற விதத்தில் ஒரு நிதியத்தை அமைப்பதற்குப் பறிமுதல் செய்திருக்க வேண்டும் என்ற நிலையில், ஒபாமா நிர்வாகத்தின் விடையிறுப்பு பேரழிவின் பரப்பைக் குறைத்தல், மூடிமறைத்தல், BP யின் நிதியப் பொறுப்புக்களைப் பாதுகாத்தல், மக்கள் பெரும் எண்ணெய் நிறுவனத்தின் மீது கொண்டுள்ள சீற்றத்தைக் குறைத்தல் என்பவையாகத்தான் உள்ளன.

டீப்வாட்டர் கசிவு தொடங்கியவுடன், ஒபாமா நிர்வாகம் எந்தக் கைது நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன், மாறாக BP யை தூய்மை, கட்டுப்படுத்துதல் முயற்சிகளுக்குப் பொறுப்பாக்கியது. எண்ணெய் நிறுவனம் ஒன்று தான் கசிவை முடிவிற்குக் கொண்டுவரக்கூடிய தொழில்நுட்பம் மற்றும் வல்லுனர் தன்மையைக் கொண்டுள்ள அமைப்பு என்று தவறாகக் கூறியது. BP யின் கூற்றுக்களான கசிவிடத்தில் சேகரிக்கப்பட்ட அறிவியல் தகவல்கள் உடைமையாளரின் தகவல், பகிரங்கமாக்கப்பட தேவையில்லை என்பதையும் ஒபாமா நிர்வாகம் சவாலுக்கு உட்படுத்தவில்லை. இந்த உரிமைகளை BP க்குக் கொடுத்தது பேரழிவின் தன்மை கணிசமாக மோசமானதிற்குக் காரணமாயிற்று என்பதில் சந்தேகம் இல்லை.

பொது மக்கள் சீற்றம் அதிகரித்தபோது, நிர்வாகம் ஒருவேளை குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கூடிய வாய்ப்பு உண்டோ என்பது பற்றி குறுகிய, தற்காலிகப் பார்வையைக் காட்டியது. ஆனால் பின்னர் அது கைவிடப்பட்டது.

செய்தி ஊடகத்தில் முந்தைய வாரங்களில் பொது உறவை வளர்க்க ஒபாமா தோன்றியதானது ஜனாதிபதியை கசிவு, அதை BP கையாண்டவிதம் பற்றிச் “சீற்றமும், பெரும் திகைப்பும்” உடையவராக சித்தரிக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்ததது. அதே நேரத்தில் அவர் BP யின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஹேவர்டை BP யின் நிதியப் பொறுப்புக் கூறலை வரம்பிற்கு உட்படுத்தும் பணிகளைச் செய்வதற்கு தனியாகப் பேசினார். நான்கு ஆண்டு காலத்தில் அளிக்கப்படவுள்ள 20 பில்லியன் டொலர் நிதியம் தோற்றுவிக்கப்பட்டது, நிறுவனத்தின் ரொக்கப் பண இருப்பில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாத விதத்தில் வடிவமைக்கப்பட்டது. BP நிர்வாகிகளின் முழு ஒப்புதலுடன் பீன்பேர்க்கை தேர்ந்தெடுத்ததானது வோல் ஸ்ட்ரீட் மற்றும் City of London நிறுவனங்களின் முக்கிய தன்மை பாதுகாக்கப்படும் என்ற மற்றொரு அடையாளத்தை காட்டும் நோக்கத்தைக் கொண்டிருந்தது.

ஏப்ரல் 20 டீப்வாட்டர் ஹொரைசன் பேரழிவிற்கு முந்தைய நடவடிக்கைகளில் நிறுவனத்தின் நடவடிக்கைகள் குற்றம் சார்ந்த புறக்கணிப்பைக் கொண்டிருந்தவை என்பது நிரூபணமானால் —அது அப்படித்தான் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன— இழப்பீடு கொடுக்கும் கட்டாயத்தில் அதற்கு வரம்பு விதிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. கசிவின் உண்மையான நஷ்டத் தொகை 1 டிரில்லியன் டொலருக்கும் அப்பால் செல்லும், இது நிறுவனத்தின் மதிப்பை விட மிக அதிகம் ஆகும்.

காப்பு நிதி என்பது பேரழிவிற்கு விடையளிக்கக் கூடிய சமூக வளங்களைத் திரட்டவோ, தக்க இழப்பீடு கொடுப்பதை உத்தரவாதம் செய்வதற்கோ கூட்டாட்சி அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதையும் மூடிமறைப்பதற்கான ஒரு முயற்சிதான்.

இதற்கிடையில் எண்ணெய் பெருநிறுவனத்தால் ஏற்பட்ட கசிவு தொடர்ந்து படர்கிறது. மிசிசிபி கடற்கரைகளில் கணிசமான எண்ணெய் பெருக்கு நிறைந்துள்ளது. ஒரு பருமனான எண்ணைய்த் திரட்டு, தார்ப்பந்துகள் ஆகியவை ஞாயிறன்று குறைந்த அளவு மாநிலத்தில் பாதிக்கப்பட்ட ஏழு கடற்கரைகளில் திரண்டு நின்றன. மீன்பிடித்தல், சுற்றுலாத் தொழில்கள் என்று மாநிலத்திலும் லூயிசியானாவிலும், அலபாமா, ப்ளோரிடாவிலும் பேரழிவுகள் தாக்கியுள்ளன என்பது உத்தரவாதப்படுத்தப்படுகின்றன.