WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
Gulf Coast residents outraged at BP, government response
பிரிட்டிஷ் பெற்றோலியம், அரசாங்கத்தின் பிரதிபலிப்பிற்கு வளைகுடா கடலோர மக்களின் சீற்றம்
By Andre Damon and C. W. Rogers in Louisiana
25 June 2010
Back to screen version
பிரிட்டிஷ் பெற்றோலியத்தாலும் மற்றும் மத்திய அரசாங்கத்தாலும் எண்ணெய்க் கசிவு மற்றும் அதன் விளைவுகளை கட்டுப்படுத்த முடியாத குறித்து வளைகுடாக் கடலோரப் பகுதிவாழ் மக்கள் சீற்றமுடன் உள்ளனர்.
பிரிட்டிஷ் பெற்றோலியம் நடத்தும் தூய்மைச் செயற்பாடுகள் குறித்தும் அப்பகுதிவாழ் மக்கள் ஒருமனதாக அதிருப்தி அடைந்துள்ளனர். பலரும் அரசாங்கத்தின் பிரதிபலிப்பு திறமையற்றது, ஊழல் மலிந்தது என்று காண்கின்றனர்.
கசிவின் அளவை மக்களிடம் தெரிவிக்காமல் இருக்க பிரிட்டிஷ் பெற்றோலியத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு சதி இருப்பதாகப் பரந்த முறையில் சந்தேகங்கள் உள்ளன.
பெட்ரோலிய தொழில்துறையில் உள்ள தொழிலாளர்கள் மிகவும் வெளிப்படையாகக் குறைகூறுபவர்களாக உள்ளனர். EMI பெட்ரோலியம், ஹூஸ்டனில் ஊழியராக உள்ள டெனீன் அரசாங்கமும் பிரிட்டிஷ் பெற்றோலியமும் இணைந்து மூடிமறைப்பதில் ஈடுபட்டுள்ளனர் என்று தான் நினைப்பதாகக் கூறியுள்ளார்.
“எந்த அளவு எண்ணெய் அக்கிணற்றில் இருந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் உடனடியாக அறிந்திருந்தனர். ஒரு போக்குடைய குழாயில் இருந்து எந்த அளவு திரவப் பொருள் வரும் என்பதை எவரும் அறிய முடியும். அது ஒரு அடிப்படைக் கணக்கு ஆகும். எண்ணெய், எரிவாயுத் தொழிலுடன் தொடர்பற்ற மக்களை அவர்கள் ஏமாற்ற முற்பட்டனர். ஆனால் அதில் வேலைபார்ப்பவர்களை அவர்கள் ஒருபொழுதும் ஏமாற்ற முடியாது” என்றார் அவர்.
பிரிட்டிஷ் பெற்றோலியமும் ஒபாமா நிர்வாகமும் எண்ணெய் வெளிப்பாடு விகிதம் பற்றிய மதிப்பீட்டை முறையாக உயர்த்தும் கட்டாயத்திற்கு உட்பட்டனர்; தொடக்கத்தில் அவர்கள் கசிவு இல்லை என்றனர், பின்னர் தொடர்ந்து 1,000, 5,000, 12,000, 25000 என்றும், இறுதியில் 30,000 முதல் 60,000 பீப்பாய்கள் நாளொன்றிற்கு என்றனர்.
பிரிட்டிஷ் பெற்றோலியம் வேண்டுமென்றே சில கிடைக்கும் நடவடிக்கைகளை கூட கசிவை நிறுத்தப் பயன்படுத்தவில்லை, ஏனெனில் அது கிணற்றில் இருந்து எண்ணெயை தொடர்ந்து எடுக்க விரும்புகிறது என்று தான் நினைப்பாதக டெனீன் கூறினார்.
“என்னைக் கேட்டால், பிரிட்டிஷ் பெற்றோலியம் குழாயை இப்பொழுதிற்குள் மூடியிருக்க முடியும்” என்று டெனீன் கூறினார். “ஆனால் அதைச் செய்ய அவர்கள் விரும்பவில்லை. ஒரு கிணற்றை மூடிவிட்டால், அது அவருக்குச் சொந்தமல்ல. மற்றொரு நிறுவனம் அதை எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் கிணற்றின்மீது கட்டுப்பாட்டைக் கொள்ள விரும்புகின்றனர், எனவேதான் இத்தனை நாட்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். ஒரு கிணறு மூடப்பட்டுவிட்டால், அதைப் பழையபடி ஒருவர் எடுத்துக் கொள்ள முடியாது” என்று அவர் கூறினார்.
அப்பகுதிவாழ் மக்களிடையே வெள்ளை மாளிகையின் பிரதிபலிப்பு, குறிப்பாக ஒபாமாவின் செய்தியாளர் கூட்டங்கள், வளைகுடாவிற்கு வருகைகள் ஆகியவை வெறுப்புடன் காணப்படுகின்றன.
எண்ணெய்த் தொழிலை சுற்றி ஈடுபட்டுள்ள ஒரு போக்குவரத்து ஒப்பந்தக்காரரான செஸ்டர், ஒபாமா ஜூன் 15 அன்று ஓவல் அலுவலகத்தில் இருந்து பேசியது பற்றி ஆர்வம் கொள்ளவில்லை என்றார். “எவ்வளவு மிருதுவாக மிருதுத் தன்மை இருக்கமுடியுமோ அப்படி ஒபாமா உள்ளார். ஆனால் வரலாறு படைக்கப்பட்டுவிட்டது, அவர் அத்துடன் இணைந்து செயல்பட முடியவில்லை” என்று அவர் கூறினார்.
டெனீன் இத்துடன் உடன்பட்டார். “ஒபாமா தகுந்த பிரதிபலிப்பை காட்டவில்லை. அவர் புகைப்படக் கருவிகளுக்குத்தான் நாடகம் ஆடுகிறார். வளைகுடாப் பகுதிக்கு நான்கு முறை அவர் வந்ததே, பொது மக்களிடையே பெரும் குறைகூறல்கள் எழுந்ததனால்தான்.”
“ஒபாமாவிடம் அதிகாரம் இல்லை. அவர் பெருநிறுவனங்களுக்காக வேலை பார்க்கிறார். இது அனைத்தும் பணத்தைப் பற்றியது. அரசாங்கம், கட்டுப்பாடு செய்பவர்கள், நிறுவனங்களுக்கு இடையே ஒரு முக்கூட்டு உள்ளது.
“முன்னதாகவே அரசாங்கம் இதைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்க வேண்டும்” என்று லூயிசியானா, பூத்வில்லேயில் உள்ள பாமீலா கூறினார். “பிரிட்டிஷ் பெற்றோலியம் நோக்கமற்று இயங்கிக்கொண்டிருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன்.”
பொதுமக்களின் கோபத்திற்கு பெரிய காரணம் தூய்மைப்படுத்தும் முறையில் காணப்படும் சர்வாதிகாரப்போக்கிற்கு விடையிறுப்புத்தான். “மீட்பு பற்றி தங்களுக்கு கட்டுப்பாடு ஏதும் இல்லை என்ற உண்மையில் மக்கள் சீற்றம் கொண்டுள்ளனர்.” என்று எண்ணெய்க் கசிவை எதிர்கொண்டிருக்கும் மையங்களில் ஒன்றான லூயிசியானா கிராண்ட் தீவில் உள்ள West Jefferson Medical Center ல் செவிலியராக உள்ள லவ்ரா லக்ஹெல்ட் கூறினார்.
“பிரிட்டிஷ் பெற்றோலியம் வளைகுடாக் கரையோரத்தை ஒரு சிறைபோலும் தங்கள் சிறைக் காவலர்கள் போலும் நடத்தி வருகிறது” என்றார் சுற்றுச் சூழல் மனித உரிமைகளுக்கு வாதிடும் குழுவின் உறுப்பினரும் ஒரு வக்கீலுமான நத்தாலி வி்ல்லியம்ஸ் “என்ன செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் ஆணையிடுகின்றனர்.”
“ஏராளமான விவரம் தெரிந்தவர்கள் உதவுவதற்குத் தயார். ஆனால் பிரிட்டிஷ் பெற்றோலியம் அனைத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ளது. உங்களுக்கு உதவி வேண்டும் என்றால் அவர்களை நாட வேண்டும், அவர்கள் உங்களைத் துரத்தி விடுகின்றனர்.”
“தூய்மைப்படுத்தும் தொழிலாளர்களும் மற்றவர்களைப் போல் கோபத்தில் உள்ளனர் என்று நினைக்கிறேன். ஆனால் அவர்கள் அதுபற்றிப் பேசுவதற்கு அஞ்சுகின்றனர். ஏனெனில் அவர்கள் அதில் சேர்ந்தபோது செய்தி ஊடகத்துடன் பேசுவதில்லை என்ற உடன்பாட்டைக் கொண்டுள்ளனர். அவர்கள் பேசினால் அவர்களுடைய வேலை போய்விடும்.”
செல்வி.லெக்கெல்ட் மீனவர்கள் மனைவிகள் தங்கள் கணவர்கள் எதிர்கொண்டுள்ள நிலைமை பற்றி குறிப்பாக பேசுகின்றனர். பலரும் நகர அரங்குக் கூட்டங்களில் பேசியுள்ளனர்; அவற்றுள் ஒன்று கிராண்ட் தீவில் கடந்த வாரம் நடந்தது; அதில் கசிவினால் ஏற்பட்ட சுற்றுச் சூழல் பிரச்சினைகளைப் பற்றிய விவாதம் இருந்தது.
லூயிசியானா கிராண்ட் தீவின் கடலோரப் பகுதியில் திரட்டுக்கள் படர்ந்து நிற்றல்
கசிவுடன் தொடர்புடையவை என்று உத்தியோகபூர்வமாக நம்பப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட சுகாதாரப் பிரச்சினைகள் தெரியவந்துள்ளன. இன்னும் ஆயிரக்கணக்கில் இவை தொடரக்கூடும்.
ஏற்கனவே கசிவு கடலில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருள் தொழிலை தெற்கு லூயிசியானாவில் பேரழவிற்கு உட்படுத்திவிட்டது. கடந்த வாரம் பிராங்களின் நகரை தளமாக கொண்ட $20 மில்லியன் மதிப்புடைய ஒரு நிறுவனம் மூடப்பட்டு கடல் உணவுப்பொருள் நூற்றுக்கணக்கானவர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.
Dean Blanchard Seafood Inc., நிறுவனத்தின் உரிமையாளரான Dean Blanchard தெற்கு லூயிசியானாவில் அவருடைய நிறுவனம் கசிவால் இந்தப் பருவத்தில் $3 மில்லியன் இழப்பு அடைந்ததைத் தொடர்ந்து மூடப்பட இருப்பதாகக் கூறினார். “நாங்கள் எங்கள் இரண்டாம் படகில்தான் உள்ளோம். நிலைமை இயல்பாக இருந்திருந்தால் நாங்கள் 75 படகுப் பயணத்தில் இருப்போம்.” என்றார் அவர்.
நிர்வாகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் பிரிட்டிஷ் பெற்றோலியத்தை கட்டுப்படுத்துவதில் தோல்வியுற்றதற்குத் தான் குறைகூறவதாக பிளான்சர்ட் கூறினார். “அமெரிக்க அரசாங்கம் நேர்மையாக இல்லை. அவர்கள் பிரிட்டிஷ் பெற்றோலியித்திடம் இருந்து பணம் பெற்றனர். என்ன செய்ய விரும்பினாலும் அனுமதித்தனர்; அந்நிறுவனத்தை எவரும் கட்டுப்படுத்தவில்லை.
“பிரிட்டிஷ் பெற்றோலியம் மத்திய தாதுப்பொருட்கள் நிர்வாகத் துறைக்கு, செனட்டர்களுக்கு, பிரதிநிதிகளுக்கு-ஜனாதிபதிக்கு,காங்கிரஸிற்குப் பணம் கொடுத்தது. முழு முறையும் வாங்கப்பட்டது, பணம் கொடுக்கப்பட்டது” என்றார் அவர்.
அரசாங்கம் முன்னதாகவே பொறுப்புக்களை பிரிட்டிஷ் பெற்றோலியத்திடம் இருந்து எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார். தற்பொழுதைய நிலையில், “எவரும் பொறுப்பில் இல்லை, எவரும் பொறுப்பேற்கவில்லை, என்ன நடக்கிறது என்று எவருக்கும் தெரியவில்லை. இது பெரிய பணத்தின் செயலாகிவிட்டது” என்றார் அவர்.
பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் சொத்துக்கள் பேரழிவை அடுத்து பறிமுதல் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று பிளான்சர்ட் கூறினார். “அவர்கள் போதைப் பொருளில் ஈடுபட்டிருந்தால், அரசாங்கம் அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்திருக்கும். பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் நிர்வாகிகள் ஒன்றும் சாதாரணப் போதை கடத்துபவர்களைவிட சிறந்தவர்கள் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். போதைப் பொருள் விற்பனையாளர்கள் உயிர்களை அழிக்கின்றனர், பிரிட்டிஷ் பெற்றோலியமும் அதைத்தான் செய்துள்ளது. இதில் என்ன வேறுபாடு உள்ளது?” என்றார்.
|