WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The World Cup and South Africa
உலகக் கோப்பையும் தென்னாபிரிக்காவும்
Ann Talbot
26 June 2010
Use
this version to print | Send
feedback
கால்பந்தும் இழிந்த சேரிகளும் ஒன்றுக்கொன்று புதியவை அல்ல. வெற்றுக்காலுடன் புழுதியில் விளையாடும் பல குழந்தைகளுக்கும், பந்தில் அவர்கள் காட்டும் திறமைகள் வறுமையில் இருந்து வெளியேற ஒரு வழி போல் காணப்படுகின்றன. இதைக் காணும் மற்றவர்களுக்கு இந்த விளையாட்டு அன்றாட கடின சூழ்நிலையில் இருந்தும் தங்கள் வாழ்வின் ஏமாற்றத் திகைப்புக்களில் இருந்தும் ஒரு குறுகிய கால நிம்மதியைக் கொடுக்கிறது.
எனவே புதுப்பிக்கப்பட்ட கேப் டௌன் விமான நிலையத்தில் இருந்து தங்கள் ஆடம்பர விடுதிகளுக்கு கார்ப் பாதையில் செல்லும் விளையாட்டு வீரர்களுக்கும் இரகசிகர்களுக்கும் மில்லியன் கணக்கான மக்கள் வசிக்கும் வறிய குடியிருப்புகளைக் கடந்து செல்லுதல் செல்வத்திற்கும் வறுமைக்கும் இடையே உள்ள அப்பட்டமான இடைத்தொடர்பு ஒன்றும் புதிதல்ல. ஆனால் புதியது எதுவென்றால், உலகக் கோப்பை கட்டணச் சீட்டுக்கள் விற்பனையில் இருந்தும், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகளில் இருந்தும், உபயங்களில் இருந்தும், பார்வையாளர்களின் தீவிர ஆர்வத்தைச் சுரண்டும் இழிந்த அரசியல்வாதிகள், வணிகர்கள் தோற்றுவிக்கும் பெரும் இலாபங்கள்தான்.
உலகின் கால்பந்துப் போட்டிகளை நடத்தும் அமைப்பான FIFA போட்டியில் இருந்து 3 பில்லியன் டாலர் இலாபத்தை அடையலாம் என்று எதிர்பார்க்கிறது. இப்பணத்தின் ஒரு பகுதி கூட நடத்தும் நாட்டின் மக்களுக்கு செல்லும் வாய்ப்பு இல்லை. தென்னாபிரிக்கர்கள் நீண்ட காலத்திற்கு போட்டியை நடத்துவதற்கான 4 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ள செலவிற்கு பணத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பர். இந்தப் புள்ளி விவரம் தெளிவில்லை எனத் தோன்றினால், அதற்கு காரணம் போட்டிகளின் செலவு எப்பொழுதும் திட்டங்களை தயாரிக்கும் வணிக ஆலோசகர்களால் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுவதால்தான்.
அதேபோல் கிடைக்கும் நலன்களும் வாடிக்கையாக கூடுதல் மதிப்பு அளிக்கப்படுகின்றன. FIFA தலைவர் Sepp Blatter உலகக் கோப்பை விளையாட்டுக்கள் மில்லியன் கணக்கான ஆபிரிக்கர்களின் வாழ்க்கையை மாற்றும் என்று கூறுகிறார். இது உலகத்தரம் உடைய விளையாட்டுத் திடல்கள், புதிய வேலைகள் மற்றும் சிறந்த போக்குவரத்து தொடர்புகளை விட்டுச் செல்லும் என்று கூறப்படுகிறது.
தென்னாபிரிக்க மனித அறிவியல்கள் ஆராய்ச்சிக் குழுவின் உதேஸ் பிள்ளே கட்டமைப்பின் போது 150,000 வேலைகள் தான் தோற்றுவிக்கப்பட்டன என்று மதிப்பிட்டுள்ளார். அவையும் வெகு குறுகிய காலத்திற்குத்தான். இவற்றில் நீண்ட கால வேலைகளின் நலன்கள் கிடையாது. பல போக்குவரத்துத் தொடர்புகளும் சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு பயன்படுமே ஒழிய, மிக அடிப்படை வசதிகள் இல்லாத சேரிகளில் வசிப்பவர்களுக்கு அல்ல.
சுற்றுலாத்துறைக்கு கிடைக்கும் எனக் கூறப்படும் அதிகரிப்புக் கூட நடைமுறையில் ஏற்படவில்லை. ஆரம்ப மதிப்பீடுகள் முக்கால் மில்லியன் பயணிகள் வருவர் என்று தெரிவித்தன. ஆனால் இப்பொழுது இந்த எண்ணிக்கை 200,000 ஐ ஒட்டித்தான் இருப்பது போல் தோன்றுகிறது.
இதற்கு எதிரிடையாக FIFA தொலைக்காட்சி உரிமைகள் மூலம் மட்டும் 3.5 பில்லியன் டாலர்களைப் பெற்றது. அமெரிக்க நிறுவனங்கள் புதிதாக வாங்குபவர்களாக வெளிப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 26 பில்லியன் மக்கள் உலகம் முழுவதிலும் இதைப் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Walt Disney யின் நிறுவனமான ESPN, ABC இரண்டும் 2010, 2014 உலகக் கோப்பைகளை அமெரிக்காவில் ஒளிபரப்பும் உரிமைகளுக்கு 150 மில்லியன் டாலர்களை கொடுத்தன. Univision அமெரிக்காவில் ஸ்பெயின் மொழி உரிமைகளுக்காக 325 மில்லியன் டாலர்களை கொடுத்தது.
கால்பந்து வணிகம் என்பது முறை தவறிய உறவு போன்றதாகும். செப் பிளாட்டரின் சகோதரரின் மகனான பிலிப் பிளாட்டர் Match Hospitality எனப்படும் நிறுவனத்தில் முக்கிய முதலீட்டாளர் ஆவார். இந்த நிறுவனம் கிடைக்கும் அனைத்து ஓட்டல் விடுதிகளிலும் மூன்றில் ஒரு பகுதி இடத்தை விளையாட்டுப் போட்டி நடப்பதற்கு முன்கூட்டியே பதிவு செய்துவிட்டது. இந்த அறைகளை அது அலையென எதிர்பார்க்கப்படும் கால்பந்து ரசிகர்கள் கூட்டத்திற்கு 10 மடங்கு அதிகமாக வாடகைக்கு விடும்.
ஆனால் எதிர்பார்த்ததைவிட வருகை தந்த ரசிகர்கள் கூட்டம் குறைந்த நிலையில், நிறுவனம் 400,000 அறைகளுக்கும் மேலாகத் திருப்பிக் கொடுத்துவிட்டது. அந்த நிலையில் விடுதிகளுக்கு மாற்று முன்கூட்டிப் பதிவு செய்தல் தாமதமாகிவிட்டது.
உலகக் கோப்பையுடன் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ள நைக், மக்டோனல்ட்ஸ் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் பெரும் இலாபங்களை அடையும் நிலையில் உள்ளன. நேரடித் தொடர்பு இல்லாத High Street, ஆன்லைன் மின்னணுப் பொருட்கள் சில்லறை விற்பனை நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள் கூட இலாபங்களில் பெரும் ஏற்றம் பெற்றன.
தென்னாபிரிக்க நிறுவனங்கள் செயற்பாட்டில் விரைவாக புகுந்தன. தென்னாபிரிக்க வாசனைப் பொருட்கள் நிறுவனமாக Optiphi இங்கிலாந்து வீரர்களின் மனைவிகளையும், பெண் தோழிகளையும் ஒரு அறக்கட்டளை நிகழ்விற்கு அழைத்திருந்தனர். இதற்கு ஈடாக தங்கள் பெரும் செலவுகளுக்காக அவப்பெயரைப் பெற்றுள்ள இப்பெண்மணிகள் வடிவமைக்கப்பட்ட சிறப்பு ஆடைகள், காலணிகள், தோல் பாதுகாப்புப் பொருட்கள் மற்றும் ஒரு சபாரியையும் பெறுவர்.
“இங்கிலாந்திற்கு தென்னாப்பிரிக்க விருந்தோம்புதல் பண்பைக் காட்ட விரும்புகிறோம்” என்று நிறுவனத்தில் செய்தித் தொடர்புப் பெண்மணி ஒருவர் கூறினார். “எனவே இங்கிலாந்து வீரர்கள் ஒவ்வொருவரின் துணைவியும் எங்கள் காக்டெயில் மாலையில் 100,000 ராண்டுகள் ($13,000) மதிப்புடைய பொருட்களை பெற்றுக் கொள்வார்கள்.”
உலகக் கோப்பை திடல்களைக் கட்டமைப்பதில் ஊழல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் வந்துள்ளன. தென்னாபிரிக்க கால்பந்து சங்கத்தின் ஒரு முன்னாள் துணைத் தலைவரான Jimmy Mohlala, Mbombela அரங்கு கட்டமைப்பு பற்றி சில வினாக்களை எழுப்பிய பின்னர் அவருடைய வீட்டிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
பெரும்பாலும் புதிய ஐந்து விளையாட்டு அரங்குகளும் வெள்ளை யானைகள் போல் விட்டுச் செல்லப்படும். அரை இறுதி ஆட்டம் நடப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Green Point Stadium 60,000 பார்வையாளர்களைக் கொண்டது. ஆனால் சாதாரணமாக தென்னாப்பிரிக்க லீக் விளையாட்டுக்கள் 10,000 பேருக்கு மேல் ஈர்ப்பதில்லை. இதைக் கட்டுவதற்கான செலவு $600 மில்லியன் ஆகும். FIFA நகரத்தை விட்டு நீங்கி வெளியேறிய பிறகும் உள்ளூர் மக்கள் இதற்கான செலவைக் கொடுத்துக் கொண்டிருப்பர்.
அருகில் இருந்த Athlone சிறுநகரத்தில் ஒரு அரங்கத்தைச் சீரமைத்துக் கட்டுவதற்கான மலிவான திட்டம் Green Point இடம்தான் வேண்டும் என்று FIFA வலியுறுத்தியதால் கைவிடப்பட்டது. ஏனெனில் இந்த இடம் தொலைக்காட்சிப் பார்வையில் Table Mountain பின்னணியை அளிக்கும். Athlone ஒரு பயிற்சிக்கான திடலாகப் பயன்படுத்தப்பட்டது, ஆனால் அதற்குப் புதிய போக்குவரத்துத் தொடர்பு கொடுக்கப்படவில்லை.
ஆபிரிக்கர்களுக்கு மொத்தத்தில் 0.5 சதவிகித நுழைவுச் சீட்டுக்கள் தான் விற்கப்பட்டன. உத்தியோகபூர்வ FIFA சீட்டு வழங்கும் முறையை அணுகுவதற்கான கடன் அட்டை அல்லது இணையத்தளத் தொடர்பை வெகு சில ஆபிரிக்க மக்களே கொண்டுள்ளனர்.
கால்பந்து ஒரு தேசியத் தீவிர ஆர்வ விளையாட்டாக உள்ள நைஜீரியா 700 கட்டணச் சீட்டுக்களை மட்டுமே வாங்கியுள்ளது. மிக மலிவான சீட்டுக்களே $20 என்று விலையிடப்பட்டுள்ளன. Bureau of Market Research மார்ச் மாதம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 75 சதவிகித தென்னாபிரிக்க மக்கள் நாள் ஒன்றிற்கு $20க்கும் குறைவாக சம்பாதிக்கின்றனர். முறைசாராப் பொருளாதாரத்தில் (informal economy ) உள்ளவர்களின் வருமானம், வேலையின்மையில் உள்ளவர்களின் வருமானங்கள் இதையும்விடக் குறைந்தவை ஆகும். Gallup கருத்துக் கணிப்பு ஒன்று தென்னாபிரிக்காவில் 35 சதவிகிதத்தினர் 2009ல் ஒரு கட்டத்தில் போதுமான உணவின்றி இருந்தனர் என்று கண்டறிந்துள்ளது.
உலகக் கோப்பை வேலைகளைத் தோற்றுவித்தது என்பதற்கு முற்றிலும் மாறாக, முறைசாராத் துறையில் பணிபுரியும் பலருடைய வாழ்கையையும் இது அச்சுறுத்துகிறது. அப்பிரிவுதான் தென்னாபிரிக்கப் பொருளாதாரத்தின் ஒற்றை மிகப் பெரிய கூறுபாடு ஆகும். தென்னாபிரிக்காவின் நகர்ப்புறங்களில் பொதுவாக மிக அதிக பணிகளைச் செய்யும் டாக்சி ஓட்டுபவர்கள் சிறப்பு விரைவு போக்குவரத்து பேருந்துகளால் பணியின்றி உள்ளனர். பெரும் சிறப்புக் கடைகள் வருவதற்காக சாதாரண சந்தைகள் தகர்க்கப்பட்டுவிட்டன. விளையாட்டு இடங்களுக்கு அருகே விற்பனை செய்வதற்கு தெரு விற்பனையாளர்கள் தடைக்கு உட்பட்டுவிட்டனர். FIFA விற்பனைப் பொருட்கள் அதிகாரிகள் மட்டும் விற்பனை செய்ய முடியும். இரகசிய FIFA போலீசார் இந்த ஆணையைச் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்கின்றனர்.
ஒரு நாட்டிற்குள் நாடு என்ற தன்மையை FIFA வலையம் கொண்டுள்ளது. போட்டிக் காலத்தில் தென்னாபிரிக்க தேசியக் கொடியை பயன்படுத்துவதற்கான உரிமையைக் கூட அது கொண்டுள்ளது.
இதன் செயற்பாடுகளும், இத்துடன் தொடர்புடைய மற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளும் அதிகமாக தென்னாபிரிக்க சட்டங்களில் இருந்து விலக்குப் பெற்றவை ஆகும். உலகக் கோப்பை அரங்குகளை சுற்றி “வரிக் குமிழி” ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இது உத்தியோகபூர்வ விற்பனையாளர்களுக்கு விற்பனைவரி, வருமான வரி, நாணய மாற்று விகிதக் கட்டுப்பாடுகள், சுங்க வரிகள் ஆகியவற்றில் இருந்து விலக்கைக் கொடுத்துள்ளது.
எவ்வித சட்டபூர்வ இழப்பீடுகளுக்கும் அதாவது அரங்குகள் ஏதேனும் ஒன்றில் நெரிசல் ஏற்பட்டு ரசிகர்கள் காயமுறுதல் போன்றவை ஏற்பட்டால் FIFA பொறுப்பு அல்ல. அரசாங்கத்தின் இருப்புக்கள் அனைத்தும் பெரும் பணம் பண்ணும் முயற்சிக்கு திருப்பப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 40,000 கூடுதல் பொலிசார் நியமிக்கப்பட்டுள்ளனர், பொலிசுக்கு புதிய ஆயுதங்கள், சமர்புரியும் வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகள் காலி செய்யப்பட்டு ஒரு பயங்ரவாதத் தாக்குதல் அல்லது வேறு பேரழிவு ஏற்பட்டால் பயன்படுத்தப்படுவதற்குத் தயார்நிலையில் உள்ளன. BBC ஆனது கேப் டௌனில் உள்ள சாமர்செட் மருத்துவமனையின் தாய்மைப் பேறுப் பிரிவின் கூரையில் 1 மில்லியன் பவுண்ட் செலவில் நிலையம் ஒன்றை அமைத்துள்ளது.
கட்டிடத்தின் பகுதிகள் சில சரிந்த வண்ணம் உள்ளன. புதிய அரங்குகள், மிக நவீன கலை நிலையம் மற்றும் சரிந்து கொண்டிருக்கும் மருத்துவமனைக்கும் இடையே உள்ள வேறுபாடு மிகத் துல்லியமாக வெளிப்பட்டுள்ளது.
விளையாட்டுத் திடல்களுக்கு அருகே உள்ள சேரிகள், விடுதிகள் ஆகியவை அகற்றப்பட்டு அங்கு வசிப்பவர்கள் தற்காலிக மறுமையங்களான Blikkiesdorp, Tin Can Town என்று அது அறியப்பட்டுள்ளவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு முழுக் குடும்பங்களும் ஒற்றை அறை உலோகத் தகட்டுக்கூரை உடைய இடங்களில் இருத்தப்பட்டுள்ளனர்.
கேப் பிளாட்ஸ் இடம் ஒரு மணற்பகுதி, காற்று அலைமோதும் வெற்றுநிலம் ஆகும். இங்குள்ள வசதிகளாக அதிக வெப்பம், குளிர் இவற்றில் இருந்து அதிகப் பாதுகாப்பைக் கொடுக்க முடியாதவை. நீர் மற்றும் சுகாதார வசதிகள் நான்கு குடும்பங்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
வேலை ஏதும் கிடையாது, கேப் டௌனுக்கு செல்லும் 20 மைல் பயணத்திற்கான பணம் வெகு சிலரிடம்தான் உள்ளது. இரவு நேரங்களில் பொலிசார் அப் பகுதிகளுக்கு வந்து வீட்டிற்கு வெளியே நிற்கும் மக்களை அச்சுறுத்துகின்றனர்.
விரும்பத்தகாத மக்கள் ஒதுக்கி வைக்கப்படும் இடம் என்று Blikkiesdorp விவரிக்கப்பட்டுள்ளது. கற்பனைப் பகுதியான District 9 உடன் கூட ஒப்பிடப்படுகிறது. உலகக் கோப்பை நடைபெறும் மூடப்பட்ட, ஆடம்பர உலகின் மறுபக்கத் தோற்றம் இதுவாகும்.
தென்னாபிரிக்காவில் உலகக் கோப்பை பற்றிய முழுத் தோற்றமும் முதலாளித்துவம் மனிதன் வாழ்வதற்கு தேவையான அடிப்படைத் தேவைகளை கூட அளிக்கும் திறனற்றது என்பதோடு இலாப நலன்களுக்காகத்தான் விளையாட்டு மற்றும் மற்ற கலாச்சார நிகழ்ச்சிகளை சுரண்டும் திறனுடையது என்பதைத்தான் நிரூபணம் செய்கிறது. |