WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
One year since the Honduran coup
ஹொண்டூராஸ் ஆட்சி மாற்றத்தின் ஓராண்டிற்குப் பின்
Bill Van Auken
28 June 2010
Back to screen version
தேர்ந்தெடுக்கப்பட்ட ஹொண்டூராஸ் ஜனாதிபதி மானுவல் ஜேலயாவை இராணுவ சதி மூலம் அகற்றி நாட்டின் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அடக்குமுறை வன்முறையைக் கட்டவிழ்த்த காலத்தை தொடக்கிய நிகழ்வின் முதலாண்டு நிறைவை இந்நாள் குறிக்கிறது; இந்த வன்முறை இன்றளவும் தொடர்கிறது.
தற்போதைய ஜனாதிபதி போர்பிரியோ லோபோ சோசாவின் ஆட்சியை ஒபாமா நிர்வாகம் பாதுகாப்பதும், அந்நாட்டுடனான அதன் உறவுகளை இயல்பாக்க வேண்டும் என்ற பிரச்சாரமும், ஆட்சி மாற்றத்திற்கான வாஷிங்டனின் மறைமுகமான ஆதரவின் உச்சகட்டத்தை பிரதிபலிக்கின்றன.
ஜூன் 28, 2009 அன்று பெரும் ஆயுதங்கள் ஏந்திய துருப்புக்கள் டெகுசிகல்ப்பாவில் உள்ள ஜனாதிபதி அரண்மனையில் புகுந்து, ஜெலயாவை துப்பாக்கிமுனையில் வெளியே கொண்டுவந்து நாடுகடத்துவதற்காக நிறுத்தப்பட்டிருந்த விமானத்தில் அவரைத் தள்ளினர். அந்த நடவடிக்கை 21ம் நூற்றாண்டில் இலத்தின் அமெரிகாவில் முதல் வெற்றிகர இராணுவ சதியை குறித்தது. இப்பகுதியில் அமெரிக்க ஆதரவுடைய இராணுவ சர்வாதிகாரம்தான் ஒவ்வொரு நாட்டையும் 20ம் நூற்றாண்டின் பெரும்பாலான காலங்களில் ஆண்டு வந்தன.
இந்த சதியின பெயரளவு நோக்கம் ஜேலயா நாட்டின் அரசியலமைப்பை திருத்தி எழுத ஒரு அரசியலமைப்பு நிர்ணயசபையைக் கூட்டுவதற்கு மக்கள் ஆதரவைக் கணிப்பதற்காக ஆலோசனை வாக்கெடுப்பு நடத்த இருந்ததை தவிர்த்தல் ஆகும்; பழைய அமைப்போ 1982ல் வெளியேறிய சர்வாதிகாரமும் அமெரிக்க தூதரகமும் ஆணையிட்டிருந்த ஒரு பிற்போக்குத்தன சட்டவாக்கம் ஆகும்.
இந்த ஆட்சி சதியை நியாயப்படுத்துகையில், ஹொண்டூரஸ் தன்னலக்குழுவில் இருந்த அதன் ஆதரவாளர்கள் ஜேலயா ஒரு மூன்றாம் முறை ஜனாதிபதி வரைகாலத்திற்காகப் பதவியைக் கைப்பற்றுவதற்கு அரசியலமைப்பை மீறிய அதிகாரத்தைக் கைப்பற்ற மேற்கொண்ட செயல் என்றனர். இக்குற்றச்சாட்டு, கடமையுணர்வுடன் அமெரிக்க செய்தி ஊடகத்தால் திருப்பிக் கூறப்பட்டது, அதன் இயல்பிலேயே அபத்தமானது ஆகும். அதுவும் ஜேலயாவிற்குப் பின்னர் பதவிக்கு வருபவரை தேர்ந்தெடுக்க வாக்களிப்பு நடத்துவதற்கு முன்னதாக அரசியல் நிர்ணயசபை கூட்டப்பட வாக்களிக்கப்பட முடியாது என்ற நிலையில்.
ஹொண்டூராஸின் ஆளும் “10 குடும்பங்களும்” வாஷிங்டனில் உள்ள ஒபாமா நிர்வாகமும் ஜேலயா அகற்றப்படுவதை நாடுவதற்கு மற்ற காரணங்களைக் கொண்டிருந்தன.
பெரும் நிலச்சுவான்தாரராகவும், மரத்துறையில் பிரபுவாகவும் விளங்கிய ஜேலயாவை உள்ளூர் தன்னலக்குழு அவர் செய்திருந்த மிகக்குறைந்த சீர்திருத்தங்களான குறைந்தபட்ச ஊதிய அதிகரிப்பிற்காக அவரைத் துரோகி என்று காண ஆரம்பித்தது. இச்சிறு உயர்வுகூட அத்தன்னலக்குழு சர்வதேச பெருநிறுவனங்களுடன் இணைந்து குறைவூதிய ஹொண்டூரத் தொழிலாளர் தொகுப்பை சுரண்டிய விதத்தில் பெற்றுவரும் பெரும் இலாபங்களில் மிகச்சிறிய அளவு குறைப்பு என்ற அச்சுறுத்தலாக இருந்தது.
வாஷிங்டனை பொறுத்தவரை, ஜேலயா வெனிஜூலாவின் ஜனாதிபதி ஹ்யூகோ சாவேசுடன் நட்புரீதியான பிணைப்பும், பிரதியுபகாரமாக குறைந்த விலையில் எண்ணெய் மற்றும் கடனைப் பெறுவது என்பது நீண்ட காலமாக தனது “பின்பகுதி” என்று கருதப்பட்டதில் இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிலைமையை அச்சுறுத்தும் திறனைக் கொண்டதாகக் காணப்பட்டது. இது குறிப்பிட்ட ஒரு அபாய உணர்வுடன் காணப்பட்டது; ஏனெனில் அனைத்து இலத்தின் அமெரிக்காவிலும் மிகப் பெரிய அமெரிக்க இராணுவத் தளம் ஹொண்டூராசில் உள்ளது. கடந்த ஆண்டு ஈக்வடாரில் உள்ள மான்டாவில் இருந்து அதன் விமானத் தளத்தை அகற்றும் கட்டாயத்திற்கு உட்பட்ட நிலையில், ஹொண்டூராசில் உள்ள பல்மெரோலா நிலைய வசதிப் பயன்பாட்டையும் இழக்கக் கூடும் என்ற நிலை பென்டகனுக்கு மூலோபாயரீதியாக ஏற்க முடியாததாயிற்று.
ஜேலயா மீண்டும் பதவிக்கு வருவதற்கு ஒபாமா தன்னுடைய பொதுவான ஆதரவை அறிவித்திருந்தாலும், அவருடைய நிர்வாகம் ஆட்சி சதியின் தலைவர்களையோ அதை எதிர்த்தவர்களை அவர்கள் அடக்கியதையோ கண்டிக்கவும் இல்லை, அவர்கள்மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்மை என்ன என்றால், ஹொண்டூரஸின் ஆளும் வர்க்கங்கள், நாட்டின் முதலீடு மற்றும் வணிகத்தில் அமெரிக்காவின் பெரும்பங்கை நம்பியுள்ளன. வாஷிங்டனிடம் இருந்து பச்சை விளக்கு வந்திருந்தால் ஒழிய அத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். மேலும் அமெரிக்காவிடம் இருந்து பயிற்சி பெற்று, ஆலோசனைகளைக் கொண்டு, பாரியளவு ஆயுதங்களையும் வாங்கியுள்ள ஒரு இராணுவம் பென்டகனின் ஒப்புதல் இல்லாமல் அதைச் செயற்படுத்தியிருக்க முடியாது.
இராணுவ சதி நடந்த தினத்தில் இருந்து நடைபெறவதைப் போலவே ஓராண்டிற்குப் பின்னர், பல்மெரோலாத் தளம் இயல்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த மாதம் அமெரிக்கத் தெற்குக் கட்டுப்பாட்டின் தலைவரான தளபதி டுக்லாஸ் பிரேசர் சதிக்கு பின்னர் முதல் தடவையாக ஹொண்டூரசிற்குச் சென்றிருந்தார்; அப்பொழுது நாட்டின் இராணுவத்துடன் “ஒத்துழைப்பிற்கான பல வாய்ப்புக்கள் உள்ள என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து வாஷிங்டனில் இருந்து இராணுவ உதவி மீண்டும் தொடர்கிறது.
இராணுவரீதியாக ஆட்சியை அகற்றிய நிதியத் தன்னலக்குழு ஜனாதிபதி லோபோவின் அரசாங்கத்தின்மீது உறுதியான பிடியைக் கொண்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடைமுறையில் இராணுவச் சட்டம் இருந்தபோது, பாதி வாக்காளர்களுக்கும் மேல் வாக்களிக்காத ஒரு தேர்தல் மோசடியில் வெற்றிபெற்றவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தார்.
சதி மற்றும் மற்றும் அதைத் தொடர்ந்த இரத்தம்தோய்ந்த ஒடுக்கலை ஏற்பாடு செய்தவர்கள் முழுப் பாதுகாப்புடன் உள்ளனர். ஆட்சி மாற்றத்தின் அரசியல் பிரிவுத் தலைவரான ரோபர்ட்டோ மைக்கேலெட்டி “வாழ்நாள் முழுவதும் சட்ட மன்ற உறுப்பினர்” என்று பெயரிடப்பட்டுள்ளார்; இதையொட்டி அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உடைய பல விதிவிலக்குகள் எப்பொழுதும் கிடைக்கும். இராணுவ ஆட்சி மாற்றத்தின் தலைவரான தளபதி ரோமியோ வாஸ்க்வெஸ் ஹொண்டூராவின் தொலைப்பேசி நிறுவனமான Hondutel இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அடக்குமுறை இன்னும் குறிப்பிடத்தக்க மிருகத்தனமான வகையில் தொடர்கிறது; ஹொண்டூராசில் மரணப்படைக் குழுக்கள் இயக்கும் கொலைகள் பற்றி இதற்கு ஒரு நீண்ட, இருண்ட வரலாறே உள்ளது. லோபோ பதவிக்கு வந்ததில் இருந்து ஒன்பது செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; இது உலகில் இத்தொழிலை நடத்துபவர்களுக்கு மிக ஆபத்தான நாடாக ஹொண்டூரசை ஆக்கியுள்ளது.
அரசியல் படுகொலைகளுக்காக இலக்கு வைக்கப்பட்டவர்களுள் ஜூன் 2009 சதிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள தொழிற்சங்கத் தலைவர்களும் பிறரும் உள்ளடங்குவர். மனித உரிமைக் குழுக்கள் லோபோ பதவிக்கு வந்ததில் இருந்து 14 அத்தகைய கொலைகள் நடந்துள்ளதாக உறுதிபடுத்தியுள்ளன.
இக்கொலைகளுக்காக எவரும் கைது செய்யப்படவில்லை. அதேபோல் சதிக்கு பின்னர் செய்யப்பட்ட கொலைகளுக்கும் எவரும் கைது செய்யப்படவில்லை. ஒருதலைப்பட்ச காவலில் வைத்தல், அடித்தல் மற்றும் சித்திரவதை, எதிர்த்தரப்பு செய்தி ஊடகங்கள் மூடப்படல் போன்ற பிற அடக்குமுறை வகைகளும் குறைவின்றித் தொடர்கின்றன.
பெப்ருவரி மாதம் தன்னைத் திவால் என்று அறிவித்துக் கொண்ட லோபோ அரசாங்கம் தொடர்ச்சியான கடும் சிக்கன நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இதில் பிற்போக்குத்தன வரி உயர்வுகள், அரசாங்கச் செலவுகளில் 20 சதவிகிதக் குறைப்புக்கள் ஆகியவையும் அடங்கும். இந்த வெட்டுக்களால் பாதிக்கப்படாத நாட்டின் பாதுகாப்புப் பிரிவுகளின் நிதியங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இக்கொள்கைகள் வறிய நிலையில் உள்ள ஹொண்டூர மக்களை உலக முதலாளித்துவம் தோற்றுவித்த நெருக்கடிக்கு விலைகொடுக்க வைக்கும் நோக்கத்தைக் கொண்டவை. மேலும் கடந்த சதியின் போது தோன்றிய எதிர்ப்பை அடக்குவதற்கான செலவுகளையும் தொழிலாளர் வர்க்கம் கொடுக்கிறது.
ஏற்கனவே புவியின் இப்பாதியில் பெரும் வறிய நிலையில் உள்ள ஹொண்டூரசின் தொழிலாள வர்க்க நிலைமைகள் இன்னும் மோசமாகியுள்ளன. ஹொண்டூராவின் தேசிய புள்ளிவிவரப் பயிலகத்தின்படி, நாட்டில் உழைக்கும் வயதில் இருப்பவர்களில் 51 சதவிகிதத்தினர் வேலையின்மையில் இருக்கின்றனர். இளம் தொழிலாளர்கள் வேலைச் சந்தையில் இருந்து அதிகமாக வெளியே நிறுத்தப்பட்டுள்ளனர்.
மக்களில் கிட்டத்தட்ட 60 சதவிகிதத்தினர் வறுமையில் வாழ்கின்றனர்; 36 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கின்றனர். தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வேலையின்மை அச்உறுத்தல் போல் பயன்படுத்தப்படுகிறது. முதலாளிகளும் அரசாங்கமும் ஊதியக் குறைப்புக்கள், தொழிலாளர் சட்டங்கள் விரைவில் மாற்றப்படுதல், முற்றிலும் தகர்க்கப்படல் ஆகியவற்றிற்கு அழுத்தும் கொடுக்கின்றனர்.
ஓராண்டிற்கு பின்னர் ஹொண்டூரஸ் இராணுவ ஆட்சி மாற்றத்தின் பெரும் அரசியல் படிப்பினைகள் தெளிவாக வெளிப்பட்டுள்ளன.
முதலாவது பாரக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் “பரஸ்பர மதிப்பு”, சர்வதேச அளவிலும் மற்றும் குறிப்பாக இலத்தின் அமெரிக்காவில் சமாதானமான ஒத்துழைப்பு என்ற கூற்றுக்கள் குப்பையில் போடப்பட்டதுதான். ஹொண்டூரஸ் நிகழ்வுகள், அவற்றைத் தொடர்ந்து கொலம்பியாவில் பாதுகாப்பான தளங்களைப் பெறுவதற்கான உந்துதல், ஹைட்டியில் இராணுவத் தலையீடு, மெக்சிகோவில் போதைபொருளுக்கு எதிரான போருக்கு முடுக்கிவிடப்பட்டுள்ள அமெரிக்க ஆதரவு ஆகியவை ஒபாமா நிர்வாகம் எதிர்ப்புரட்சி வன்முறை மற்றும் இராணுவ வலிமையை மேலை மண்டலப்பகுதியில் வாஷிங்டனின் மேலாதிக்கத்தை மீண்டும் வலியுறுத்த பயன்படுத்தத் தயார் என்பதைத்தான் நிரூபித்துள்ளன.
அமெரிக்க முதலாளித்துவத்தின் நீடித்த பொருளாதாரச் சரிவை ஒட்டி, இத்தகைய வழிவகைகளுக்கு அது இலத்தீன் அமெரிக்க தொழிலாள வர்க்கம் காட்டும் எதிர்ப்புக்களால் பெருகும் சவால்களை எதிர்கொள்ள முயல்கிறது. அதேபோல் இப்பகுதியில் ஐரோப்பா, சீனா உட்பட சக்தி வாய்ந்த போட்டி நாடுகளின் பெருகிய ஊடுருவலைத் தடுக்கவும் முற்படுகிறது.
இரண்டாவது படிப்பினை முதலாளித்துவ தேசியவாதத்தின் திவால் தன்மை ஆகும். இது வெளியேற்றப்ப்ட்ட ஹொண்டூரஸ் ஜனாதிபதி ஜேலயாவின் செயல்களின் விளக்கப்படுகிறது. அவர் தொடர்ந்து தனது சதிக்கான எதிர்ப்பை வாஷிங்டனுடன் தனத் ஆதரவு காட்டுக்கொள்ளும் முயற்சிகளுக்கு அடிபணியசெய்யத்தான் முற்பட்டுள்ளார். அதனால் அவர் தன்னை அகற்றியவர்களுடன் அமெரிக்கா தரகுவேலை செய்யும் தலையீட்டின்மூலம் உடன்பாடு கண்டு மீண்டும் பதவிக்கு வர முற்படுகிறார்.
ஹொண்டூரஸ் நிகழ்வுகள் ஏகாதிபத்தியத் தலையீடுகள், சதிகள், சர்வாதிகாரங்கள் ஆகியவற்றைத் தொழிலாள வர்க்கம் சுயாதீன அரசியல் அணிதிரளலுக்கு புறத்தே வெற்றிகரமாக எதிர்ப்பது இயலாது என்பதை மீண்டும் உறுதிபடுத்துகின்றன. ஹொண்டூரா தொழிலாளர்கள் ஆரம்பத்தில் இருந்து கடந்த ஆண்டு நிறுவப்பட்ட சதியை வீரத்துடன் எதிர்த்தபோது, அவர்களுடைய போராட்டங்கள் ஜேலயா மற்றும் மைக்கேலட்டி இருவருடைய கட்சியுமான முதலாளித்துவ தாராளவாத கட்சியின் தலைமையினால் சிதைக்கப்பட்டு, திசை திருப்பப்படுகின்றன.
ஹொண்டூரஸ் மற்றும் அனைத்து மத்திய அமெரிக்க நாடுகளைப் பிடியில் இறுக்கி வைத்திருக்கும் தற்போதைய நெருக்கடிக்கு எதிரான அவசியமான தேவை தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர அரசியல் இயக்கத்தை கட்டமைப்பதாகும். அது அனைத்து முதலாளித்துவ கட்சிகளிடம் இருந்தும் சுயாதீனமாக இருக்க வேண்டியதுடன், ஹொண்டூரஸில் மட்டுமல்லாமல் அப்பகுதி முழுவதும் சோசலிச மாற்றத்திற்கான திட்டத்தை ஆயுதமாக கொள்ள வேண்டும். அது ஒரு அமெரிக்க ஐக்கிய சோசலிச அரசுகள் என்பதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
|