WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Militarism and democracy: the implications of the McChrystal affair
இராணுவவாதமும் ஜனநாயகமும்: மக்கிறிஸ்டல் விவகாரத்தின் உட்குறிப்புக்கள்
By Patrick Martin
24 June 2010
Use this version to print | Send
feedback
வாஷிங்டனில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க, நேட்டோ படைகளின் பொதுத் தளபதியான ஜெனரல் ஸ்டான்லி மக்கிறிஸ்டல் வெளியிட்ட எரியூட்டும் கருத்தக்களால் தூண்டுதல் பெற்றது, புதனன்று காலை மக்கிறிஸ்டல் பதவி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஈராக்கில் முன்னாள் அமெரிக்க தளபதியாக இருந்த டேவிட் பெட்ரீயஸ் நியமிக்கப்பட்டதிலும் அதன் உச்சக் கட்டத்தை அடைந்தது.
ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கிறிஸ்டல் வெள்ளை மாளிகைக்கு ஆஜராக்கப்பட்டார். அங்கு அவர் Rolling Stone Magazine ல் ஒரு விரிவான கட்டுரையை வெளியிட்டதனால் தன்னுடைய இராஜிநாமாவைக் கொடுத்தார். இக்கட்டுரையில் அவரும் அவருடைய உயர்மட்ட உதவியாளர்களும் ஜனாதிபதி ஒபாமா மற்றும் கிட்டத்தட்ட நிர்வாகத்தின் உயர்மட்ட தேசியப் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவர் மீதும் தரக்குறைவான குறிப்புக்களைக் கூறியதாக மேற்கோளிடப்பட்டுள்ளது.
இராஜிநாமாவை ஒபாமா ஏற்றார். மக்கிறிஸ்டல் உடனடியாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். மூன்று மணி நேரம் தன்னுடைய தேசிய பாதுகாப்புக் குழு மற்றும் பென்டகன் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்திய பின்னர், ஒபாமா தொலைக்காட்சி புகைப்படக் கருவிகள் முன் தோன்றி மக்கிறிஸ்டல் பதவி நீக்கப்பட்டதையும், அவரைத் தொடர்ந்து பெட்ரீயஸ் நியமிக்கப்பட்டதையும் அறிவித்தார்.
செய்தி ஊடகத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்பட அனுமதிக்கப்படாத நிலையில், தன்னுடைய சுருக்கமான உரையில் ஒபாமா, மக்கிறிஸ்டல் அடையாளம் காணப்பட்டுள்ள இராணுவ விரிவாக்க, எழுச்சி-எதிர்ப்பு போர் முறைத் திட்டத்திற்கு முழு ஆதரவையும் இன்னும் கொடுப்பதாக வலியுறுத்தினார். “ஆப்கானிஸ்தானில் தேவையானவற்றைச் செய்ய” தான் உறுதி கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து, “இது ஒரு தலைமை மாற்றமே அன்றி, கொள்கை மாற்றம் அல்ல” என்றும் சேர்த்துக் கொண்டார்.
அமெரிக்க மத்தியக் கட்டுப்பாட்டின் தலைவர் என்ற முறையில் மக்கிறிஸ்டலின் உயர் அதிகாரியாக இருந்த ஜெனரல் பெட்ரீயஸ் ஆப்கானிய நிர்வாகத்தின் கொள்கை விவாதங்களுடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்ததுடன் கடந்த டிசம்பர் மாதம் இன்னும் 30,000 அமெரிக்க துருப்புக்களை அனுப்புவது என்ற முடிவையும் முழுமையாக ஆதரித்திருந்தார்.
மக்கிறிஸ்டல் விவகாரத்தில் இரு கூறுபாடுகள் ஆராயத்தக்கவை. முதலிலும், மிக வெளிப்படையாகவும், மக்கிறிஸ்டல் பதவி நீக்கம் செய்யப்பட்டது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலையீட்டின் மிக மோசமான நிலைமையை நிரூபிக்கிறது. போர் நல்ல முறையில் சென்று கொண்டிருந்தால், ஒரு இதழில் கட்டுரையை வெளியிட்டதற்காக ஜெனரல் இகழ்வான வகையில் வெளியேற்றப்பட்டிருக்கமாட்டார்.
மக்கிறிஸ்டல் பதவி நீக்கம் செய்யப்பட்ட அன்று அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்களின் இறப்பு எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 76 என்று ஆயிற்று. இது அக்டோபர் 2001ல் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா முதன் முதலாக படையெடுத்ததில் இருந்து வெளிநாட்டு ஆக்கிரமிப்புத் துருப்புக்களுக்கு மிக மோசமான மாதமாகச் செய்துள்ளது. ஆப்கானிய மக்களிடையே ஜனாதிபதி ஹமித் கர்சாய் பரந்த அளவில் ஒரு ஊழல் நிறைந்த அமெரிக்க கைப்பாவை என்று இகழப்படுகிறார். ஆப்கானிஸ்தானில் இராணுவ நிலைப்பாடுகளை கொண்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் மற்றும் அமெரிக்காவிலும் போர் எதிர்ப்பு உணர்வு பெருகி வருகிறது. அமெரிக்காவில் கருத்துக் கணிப்புக்கள் இப்போர் செய்யப்படத் தேவையில்லை என்பதைத்தான் காட்டுகின்றன.
திங்களன்று காங்கிரஸ் குழு ஒன்று வெளியிட்ட அறிக்கை ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புக்களுக்காக தொடர்ந்து செல்ல வேண்டிய பொருட்களின் மில்லியன் கணக்கான டாலர்களை ஊழல் மிகுந்த உள்ளூர் போர்ப் பிரபுக்களின் கருவூலங்களில் நிரப்புகிறது என்றும் அவர்களில் பலரும் தங்கள் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கு தாலிபன் எழுச்சியாளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர் என்றும் கூறுகிறது. இவ்விதத்தில் பென்டகனே எழுச்சிக்கு மறைமுகமாக வாரத்திற்கு 2 மில்லியன் டாலர் நிதி கொடுக்கிறது என்று அறிக்கை மேற்கோளிட்டுள்ள ஒரு மதிப்பீட்டின்படி தெரியவருகிறது.
செவ்வாய் மாலையில், அமெரிக்க செனட்டர்களில் போர் சார்புடைய மூவர், ஜோன் மக்கெயின், லிண்சே கிரஹாம் (இருவரும் குடியரசுக் கட்சியினர்) மற்றும் ஜனநாயகக் கட்சியின் சுயாதீன ஜோசப் லிபர்மன், ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு மக்கிறிஸ்டலுடைய கருத்துக்கள் “தலைமைத் தளபதிக்கும் இராணுவத்திற்கும் இடையே உள்ள மரபார்ந்த உறவுகளுடன் பொருத்தமற்றவை, இயைந்திருக்கவில்லை” என்று கண்டித்தனர்.
பணிநீக்கம் செய்யப்படுவதை முன்கூட்டியே நேர்த்தியுடன் அவர்கள் ஒப்புதல் கொடுத்த விதத்தில் “தளபதி மக்கிறிஸ்டலின் வருங்காலம் அமெரிக்க ஜனாதிபதி எடுக்கும் முடிவை ஒட்டி இருக்கும்.” என்று அறிவித்தனர்.
காங்கிரசில் இருக்கும் குடியரசுக் கட்சியினர் மற்றும் பல வலதுசாரிச் செய்தி ஊடகப் பண்டிதர்களும் ஒபாமவிற்குக் கொடுத்துள்ள ஆதரவானது ஆளும் உயரடுக்கின் கணிசமான பகுதிகள் மக்கிறிஸ்டல் மற்றும் அவருடைய எழுச்சி-எதிர்ப்பு மூலோபாயத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதைக் காட்டுகிறது. கடந்த ஒரு மாதமாக மார்ஜாவில் அமெரிக்கத் தலையீடு வெளிப்படையாக தோற்று, ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமும் ஒரு தலிபான் கோட்டையுமாகிய காந்தகாரில் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல் கட்டாயமாக ஒத்திப் போட நேர்ந்ததை அடுத்து பெருகிய முறையில் குறைகூறல்கள் வெளிவந்தன.
இந்த வலதுசாரிக் குறைகூறுபவர்களை திருப்தி செய்யும் ஒரு தெளிவான முயற்சிதான் மக்கிறிஸ்டலுக்குப் பதிலாக பெட்ரீயஸை ஒபாமா தேர்ந்தெடுத்துள்ளதாகும். 2007-08ல் ஈராக்கில் அமெரிக்க இராணுவ விரிவாக்கத்தை பெட்ரீயஸ் இயக்கினார். ஆளும் வட்டாரங்களில் அது அமெரிக்கத் தலையீட்டை ஓரளவிற்கு கௌரவப்படுத்தியது என்ற கருத்து உள்ளது. ஆனால் இன்னமும் அங்கு 90,000 அமெரிக்கத் துருப்புக்கள் உள்ளன. நவ கன்சர்வேடிவ் கட்டுரையாளர் வில்லியம் கிறிஸ்டோல் முன்கூட்டியே பெட்ரீயஸ் நியமத்தை பரிந்துரைத்திருந்தார். வலதுசாரிச் செய்தி ஊடகம் இதை ஒரு அரசியல் பெரும் நடவடிக்கை என்று பாராட்டியுள்ளது.
மக்கிறிஸ்டல் விவகாரத்தின் இரண்டாவது முக்கியக் கூறுபாடு அது அமெரிக்க இராணுவத்திற்குள் இருக்கும் உள் விவகாரத்தின் தன்மையைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளதாகும். அதிகாரிகள் குழுவிலும் உயர்மட்ட கட்டளைப் பீடத்திலும் ஒரு முழு உயர் மட்டம் வளர்ச்சி பெற்றுள்ளது, இது வெளிப்படையாக சிவில் அதிகாரத்தை இகழ்கிறது. அதே நேரத்தில் அவர்களுடைய பெயரளவு உயரதிகாரிகள் இராணுவ எதிர்ப்பினால் முற்றிலும் மிரட்டலுக்கு உள்ளாகின்றனர்.
அமெரிக்க அரசியல் வாழ்வில் இராணுவம் அதிகம் பெருகும் பங்கைக் கொண்டுள்ளது. இது முடிவில்லாத தொடர்ச்சியான போர்களால் எரியூட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக அமெரிக்க இராணுவம் தொடர்ச்சியாக போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே இது ஒரு நெடிய காலம் ஆகும். பென்டகன் “நீடித்த போர்” கொள்கையின் கீழ் செயல்படுகிறது. இது அத்தகைய போர் கிட்டத்தட்ட காலவரையறையற்று நீடிக்கும் என்று கருதுகிறது.
சற்றே கூடுதலான உய்த்துணரும் செய்தி ஊடக வர்ணனையாளர்களில் சிலர் மக்கிறிஸ்டல் விவகாரத்தின் இக்கூறுபாடு பற்றிச் சுட்டிக் காட்டியுள்ளனர். பிரிட்டிஷ் Guardian ல் எழுதும் சைமன் டிஸ்டால், “ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தளபதி தன்னுடைய உதவியாளர்களுடன் காட்டும் அவமதிப்பான நடத்தை, ஒரு இன்னமும் ஆழ்ந்த வேர்களுடைய ஆபத்தான திறன் கொண்ட போக்கின் அடையாளம் என்று பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வார நிகழ்வுகள் இவ்விதத்தில் ஒரு அமெரிக்க முறையிலான ஆட்சி மாற்றம் எனப்படலாம்.” என்று கூறியுள்ளார்.
யேல் பல்கலைக்கழக தாராளவாதப் பேராசிரியர் ப்ரூஸ் ஆக்கர்மன், “An increasingly politicized military” என்று Los Angeles Times ல் எழுதிய கட்டுரையில், மக்கிறிஸ்டல் விவகாரம் 1951 புகழ்பெற்ற ட்ரூமன்-மக்கார்தர் மோதலைவிட அதிக ஆபத்தானது என்று வாதிட்டுள்ளார்; அப்பொழுது கொரியப் போருக்கு நடுவே மக்கார்தர் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஏனெனில் மக்கிறிஸ்டல் கடந்த மூன்று தசாப்தங்களாக அரசியில் முறையில் தெரிந்தெடுக்கப்படும் ஒரு அதிகாரிகள் குழுவின் உணர்வுகளை வெளிப்படையாகக் கூறுவதுடன், இந்தக் குழு குடியரசுக் கட்சியின் வலது பிரிவு மற்றும் கிறிஸ்துவ அடிப்படைவாதத்துடன் பெரும் சார்பையும் கொண்டுள்ளது.
“பெரும்பாலான தீவிர போரில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மூத்த அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை ஏற்க வேண்டும் என “வலியுறுத்த விரும்புகின்றனர்”, “29% மட்டுமே தங்கள் இராணுவ உயரதிகாரிகளைவிட உயர்மட்ட சிவில் அதிகாரிகள் எத்தகைய இராணுவ ஆற்றல் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை இறுதியாக முடிவெடுக்க வேண்டும்” என்று கருதுகின்றனர் என கருத்துக் கணிப்புக்களில் தெரியவந்துள்ளதையும் ஆக்கர்மன் மேற்கோளிட்டுள்ளார்.
இப்போக்கின் ஆபத்தான உட்குறிப்புக்கள் இன்று நியூ யோர்க் டைம்ஸில் வந்துள்ள இரு அறிக்கைகளில் வெளிப்படுகின்றன. C.J.Chivers, நிருபர், எழுதியுள்ள கட்டுரை தளத்திலுள்ள அதிகாரிகள், உயர்பதவியில் இல்லாத அதிகாரிகள் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள வீரர்களிடையே பெருகியுள்ள திகைப்பை விவரிக்கிறது; அவர்கள் “மேலை இராணுவ சக்தியின் வழிகாட்டு விதிகள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் —வான்வழித் தாக்குதல்கள், இயக்கப்படும் ராக்கெட் தாக்குதல்கள், பீரங்கிப் பொழிவுகள் இன்னும் வெடிகுண்டுகள் என— அவ்விதத்தில் தரைப்படைகளுக்கு ஆதரவு கொடுக்கப்படவேண்டும்.” என்கின்றனர்.
விதிகள் “ஆப்கானிய குடிமக்களிடம் இருந்து மேலை வீரர்களுக்கு ஆபத்துக்களை மாற்றிவிட்டன “, இது தாலிபன் மற்றும் பிற எழுச்சியாளர்களுக்கு எதிரான பூசலில் “விலங்கிடப்பட்டுவிட்டது போன்ற உணர்வை” துருப்புக்களிடையே பரந்த விரோதப் போக்கை அதிகரித்துவிட்டது என்று சிவர்ஸ் கூறுகிறார். இவரால் கூறப்படாத முடிவுரை மக்கிறிஸ்டல் மாற்றப்பட்டது ஆப்கானிய மக்கள் மீது அமெரிக்க ஆயுதங்களின் முழு ஆற்றலயும் கட்டவிழ்க்கும் ஒரு கட்டமாகும்.
Times வலைத் தளத்தில் வெளிவந்துள்ள நிருபர் ரோபர்ட் மாக்கீயின் கருத்து சிவர்ஸ் கட்டுரையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, “அமெரிக்க வீரர்களுக்கும் சாதாரண குடிமக்களுக்கும் இடையே ஒரு பண்பாட்டுப் போர் தவிர்க்க முடியாததா? என்ற வினாவை எழுப்பியுள்ளது. அமெரிக்க மக்களுக்கும், தன்னார்வத்துடன் சேகரிக்கப்பட்டுள்ள இராணுவத்திற்கும் இடையே பெருகிவரும் இடைவெளியை மாக்கீ சுட்டிக்காட்டி, தலைமையின் பெரும்பகுதி பல தலைமுறைகளாக இராணுவ அதிகாரிகளை அளித்துள்ள குடும்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை என்றும் கூறுகிறார்.
மக்கிறிஸ்டலே இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஜேர்மனியில் இருந்து அமெரிக்க ஆக்கிரமிப்பு அரசாங்கத்தில் மேஜர் ஜெனரலாக பணியாற்றியவருடைய மகன் என்று அவர் குறிப்பிடுகிறார்; பின்னர் அவர் பென்டகனில் இருந்தார். மக்கிறிஸ்டலின் அனைத்து ஐந்து சகோதர, சகோதரிகளும் இராணுவத்தில் சேர்ந்தவர்கள் அல்லது இராணுவத்தினரைத் திருமணம் செய்து கொண்டவர்கள்.
இத்தகைய கருத்துக்கள் அமெரிக்காவில் ஒரு பிரத்தியேகமான இராணுவ சாதி வெளிப்பட்டுள்ளதைக் காட்டத் தொடங்குகின்றன; இவ்வகுப்பு அநேகமாக ஜனநாயகம், சிவிலியக் கட்டுப்பாடு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மக்கள் எதிர்ப்பு எவ்விதத்தில் வந்தாலும் அவற்றிற்கு விரோதம் காட்டும் தன்மை ஆகியவற்றைக் கொண்டது.
மக்கிறிஸ்டலை பணிநீக்கம் செய்தது, அவருக்குப் பதிலாக பெட்ரீயஸை நியமித்த்து என்பது இப்போக்கிற்கு எதிரான ஒரு தாக்குதல் அல்ல; ஆனால் ஒபாமாவும் ஜனநாயகக் கட்சியும் இராணுவ உயர்மட்டத்தின் கோரிக்கைகளுக்கு இணங்க தங்களை நிலைப்படுத்திக் கொள்ளும் ஒரு வழிவகைதான். மக்கிறிஸ்டலின் ஒரே குற்றம் —ஒபாமாவின் சொற்களில் “கருத்துரைப் பிழை”— மிகவும் அப்பட்டமாகவும், சற்றே பொறுப்பற்ற விதத்திலும் அமெரிக்க அதிகாரிகள் குழுவிலுள்ள பரந்த பிரிவினரின் உணர்வுகளை வெளியிட்டதுதான்.
|