WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
The Left party and German foreign policy
இடது கட்சியும் ஜேர்மனிய வெளியறவுக் கொள்கையும்
By Justus Leicht and Peter Schwarz
19 June 2010
Back to screen version
சர்வதேச கடற்பிராந்தியத்தில் இஸ்ரேலிய அதிரடிப்படையினரால் மே 31 அன்று தாக்குதலுக்கு உட்பட்டிருந்த காசா உதவி நிவாரண கப்பல் தொடரணியில் மேல் தளத்தில் இருந்தவர்களில் இருவர் ஜேர்மனியின் இடது கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஜேர்மனிய பாராளுமன்றத்திலும் பிரதிநிதிகளாக உள்ள, ஆயுதங்களை களைவது பற்றிய செய்தித் தொடர்பாளர் Inge Hoger, மற்றும் கட்சியின் பாராளுமன்ற பிரிவில் மனித உரிமைகளுக்காக செய்தித் தொடர்பாளராக இருக்கும் Annette Groth உள்ளடங்கலாக, மேல்தளத்தில் இருந்தவர்களுள், கட்சியின் வெளியுறவுக் கொள்கை பிரதிநிதியாக பாராளுமன்ற பிரிவில் 2009 வரை இருந்த Noman Paechம் அடங்குவர்.
சில காலமாக இடது கட்சி தன்னுடைய செல்வாக்கை ஜேர்மனிய அரசியலில் விரிவாக்க முடிந்துள்ளது. பாராளுமன்றத்தில் இக்கட்சி நான்காம் பெரிய பாராளுமன்றக் குழுவாக உள்ளது. நாட்டில் உள்ள 16 மாநிலப் பாராளுமன்றங்களில் 13ல் இடம் பெற்றுள்ளது. இதைத்தவிரவும் இரு மாநில அரசாங்கங்களிலும் இடம் பெற்றுள்ளது. பொருளாதார நெருக்கடியின் போக்கில் இடது கட்சி சிக்கன நடவடிக்கைகளுக்கு சமூக எதிர்ப்பை திசை திருப்புவதிலும் அதை சமூக ஜனநாயகக் கட்சி பக்கம் செலுத்தும் பங்கையும் கொண்டுள்ளது. இக்கட்சி பேர்லின் மற்றும் பிராண்டன்பேர்க் மாநில அரசாங்கங்களில் சமூக ஜனநாயக கட்சியுடன் (SPD) கூட்டணியில் உள்ளது. அங்கு இது சமூகநலச் செலவுகளிலும் பொதுத்துறைப் பணிகளிலும் பாரிய வெட்டுக்களைச் செயல்படுத்த உதவியுள்ளது.
உள்நாட்டு அரசியலில் கட்சி கொண்டுள்ள பங்கைக் கருத்தில் கொண்டால், இடது கட்சி காசா உதவி நிவாரண கப்பல் தொடரணிக்கு முற்றிலும் மனிதாபிமான உந்துதல்களில் ஆதரவு கொடுத்தது என்பதை நம்புவது கடினம் ஆகும். உள்நாட்டுக் கொள்கையைப் போலவே, கட்சிக்கு ஒரு உறுதியான திட்டம் வெளியுறவுக் கொள்கையிலும் உள்ளது. இடது கட்சிக்கு பாலஸ்தீனியர்களின் விதியை பற்றி அல்லாது பெருகிய முறையில் ஒரு முட்டுச்சந்தை எதிர்கொள்ளும் ஜேர்மனிய வெளிநாட்டுக் கொள்கையின் எதிர்காலப்போக்கு என்பதே முக்கியமானதாகும்.
ஜேர்மனி நீண்டகாலமாக விமர்சனமற்ற ஆதரவை இஸ்ரேலுக்கு கொடுக்கப்பதும் அதன் வாஷிங்டனுடனான நெருக்கமான உறவுகளும் மத்திய கிழக்கில் ஜேர்மனிய பொருளாதார நலன்களை தொடர தடைகளைப் பெருக்கி வருகின்றன. குறிப்பாக இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையே உள்ள பெருகிய அழுத்தங்கள் ஜேர்மனியில் உள்ள அரசியல் வட்டாரங்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளன.
மரபார்ந்த முறையில் ஜேர்மனியின் நெருக்கமான நட்பு நாடாகிய துருக்கி ஐரோப்பாவிற்கு எண்ணெய், எரிவாயுப் போக்குவரத்திற்கான முக்கிய அச்சு என்பது மட்டுமல்லாமல், ஐரோப்பாவின் முக்கிய வணிகப் பங்காளி நாடு என்பதுடன், எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து ஜேர்மனிய நிறுவனங்களுக்கும் கிழக்கில் படர்வதற்கு ஒரு பொருளாதார உந்துபலகையாக உள்ளது. துருக்கியின் வெளிநாட்டு வணிகத்தில் மூன்றில் இரு பகுதி ஐரோப்பாவுடன், எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனியுடன் உள்ளது; இது துருக்கிக்கு முக்கிய ஆயுதங்கள் விற்பனை செய்யும் நாடுகளில் ஒன்றாகும்.
அதே நேரத்தில் அரபு நாடுகளுடன் துருக்கிய வணிகம் 2002ல் இருந்து இருமடங்காகியுள்ளது. துருக்கி தற்பொழுது சிரியா, லெபனான் மற்றும் ஜோர்டான் நாடுகளுடன் ஒரு வெளியுறவு வணிகப் பகுதியை நிறுவியுள்ளது. ஜேர்மன் Tagesspigel பத்திரிகை குறிப்பிடுவதாவது: “துருக்கி ஏற்கனவே பல சர்வதேச நிறுவனங்களுக்கு உதவுகிறது-மைக்ரோசாப்ட்டில் இருந்து பல கார்த் தயாரிப்பாளர்கள் வரை, இனிப்பு பண்ட உற்பத்தியாளரான ஹரிபோ வரை மத்திய கிழக்கு பகுதி முழுவதற்கும் விநியோக்கும் மையமாக உள்ளது.
இச்சூழலில் இடது கட்சி ஜேர்மனிய அரசாங்கத்திடம் மத்திய கிழக்குக் கொள்கையில் கவனமான மாற்றுப் போக்கை கொள்ளுமாறு வலியுறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அரசாங்கம் பெருகிய முறையில் இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் நடந்துவிட்டது போல், பெருகும் பூசலில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் பக்கம் இழுக்கப்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரியுள்ளது.
கப்பல் தொடரணி பயணம் ஆரம்பமாவதற்கு முன்பே Annett Groth அரசாங்கத்திற்கு “ஜேர்மனியும் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் உதவி முயற்சிக்கு ஆதரவு தந்து “சுதந்திர காசா” தொடரணிக்கு அனைத்து இராஜதந்திர வழிகவகைகளிலும் ஆதரவளிக்க வேண்டும்” என முறையிட்டார். அவர் பின் குறைகூறினார்: “இதுவரை வெளியுறவு அலுவலகம் எங்களுக்கு எந்த ஆதரவையும் கொடுக்க மறுத்துள்ளது. எங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது-விவரங்கள் அளிக்கப்படாவிட்டாலும்; ஆபத்துக்கள் பற்றி என்பதுடன் உதவித் தொடரணியில் பங்கு பெறுவதற்கு எதிராகவும் ஆலோசனை கூறப்பட்டோம். இதனால் நாங்கள் அயர்லாந்து அரசாங்கம் செய்துள்ளது போல், மத்திய அரசாங்கத்தை இஸ்ரேலை அணுகி காசாவிற்கு தொடரணியை தடையின்றி அனுப்பக் கோர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.”
கப்பல் தொடரணி மீது குருதி கொட்டிய இஸ்ரேலிய தாக்குதல் நடந்த பின், இடது கட்சி ஜேர்மனிய அரசாங்கத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் காசா முற்றுகையை இஸ்ரேல் கைவிடுவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று முறையிட்டுள்ளது. இஸ்ரேலி்டமிருந்து பாதுகாப்பை உறுதிபடுத்த வருங்காலத்தில் ஐ.நா.வால் காசாவிற்கு அனுப்பும் கப்பல்கள் பரிசோதிக்கப்படவேண்டும் என்றும் கட்சி வாதிட்டுள்ளது.
இத்தகைய அரசியல் ஆலோசனைகள் ஒரு “இடது” அல்லது சோசலிஸ்ட் கொள்கையுடன் தொடர்பற்றவை. முதலாளித்துவ ஆட்சிகளுக்கு எதிராக ஒன்றுபடுமாறு அரபு, இஸ்ரேலிய பொதுமக்களுக்கு அளைப்புவிடுவதை இடதுகட்சி நிராகரிக்கிறது; இப்படித்தான் கட்சி முன்னாள் காலனித்துவ சக்திகள் கடந்த நூற்றாண்டில் “பிரித்தாளும்” கொள்கைப்படி நிறுவியிருந்த எல்லைகளைப்பற்றி வினா எழுப்பப்பட வேண்டும் என்பதையும் நிராகரிக்கிறது, ஏப்ரல் 20 அன்று பாராளுமன்றத்தில் இடது கட்சியின் பாராளுமன்றக்குழு ஏற்கனவே ஒரு தீர்மானத்தை ஏற்றுள்ளது. அதன்படி சியோனிச அரசாங்கமும் பாலஸ்தீனிய முதலாளித்துவத்தின் பல பிரிவுகளும் உடன்பாடு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இது வெளிப்படையாக ஒரு இருநாடுகள் என்ற தீர்விற்கு வாதிடுகிறது. அவ்விதத்தில்தான் ஜேர்மனி, அமெரிக்கா மற்றும் பெரிய சக்திகள் நீண்டநாட்களாக வாதிட்டு வருகின்றன. ஆனால் இத்தீர்வு தொடர்ந்து தடுமாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. ஏனெனில் இஸ்ரேலிய அரசாங்கம் அத்தகைய நடவடிக்கைகைப் புறக்கணித்து வருகிறது.
இடது கட்சியின் கருத்துப்படி, பாலஸ்தீனிய அரசு மேற்கு ஜோர்டானுக்கும் காசாப் கரைப்பகுதிக்கும் இடையில் உள்ள பிராந்தியத்தில் உள்ளடங்கியிருக்க வேண்டும். இதைத்தான் 1967க்கு முன் இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்தது. கிழக்கு ஜேருசலம் அதன் தலைநகராக இருக்க வேண்டும். இதற்கு ஈடாக பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலை அங்கீகரித்து தங்கள் மரபார்ந்த கோரிக்கையான அனைத்து அகதிகளும் திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட வேண்டும். இடது கட்சி கூறியுள்ளபடி, “மீண்டும் திரும்பிவருதல், இழப்பீடு இரண்டிற்கும் இடையே ஒரு வழி கண்டறியப்பட வேண்டும்.”
அத்தகைய ஒரு குட்டி அரசு, எவ்வித பொருளாதார நிலைத்திருக்கும் தன்மையை பெற்றிராததுடன், பாலஸ்தீனிய மக்களின் விதியை முன்னேற்றுவிக்க எதுவும் செய்ய இயலாது. ஆனால் இடது கட்சியை பொறுத்தவரை, அத்தகைய தீர்மானம் ஜேர்மனியின் செல்வாக்கை மத்திய கிழக்கில் அதிகரிக்கும் உறுதியை அளிக்கும். கட்சிக் கருத்தின்படி, ஜேர்மனிய அரசாங்கம் ஒரு மத்தியஸ்தர் போல் செயல்பட வேண்டும். துருக்கியுடன் நெருக்கமாக ஒத்துழைத்து---அவ்விதத்தில் தன்னை அமெரிக்காவிடம் இருந்து பிரித்துக் காட்டிக் கொள்ள முடியும். ஜேர்மனி லெபனான், சிரியா, ஈரான் நாடுகளின் ஒரு மத்திய கிழக்கு மாநாட்டிற்கு துணை விருந்தோம்பும் நாடாக இருக்க வேண்டும். இப்பொழுது காசாவில் ஆளும் ஹமாஸ் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். இஸ்ரேலை அது அங்கீகரிக்கத் தயார் என்றால் இதுவும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
இத்தகைய கோரிக்கைகள் நிரம்பிய பட்டியல் இடது கட்சி ஏன் ஒரு உதவித் தொடரணியில் பங்கு பெற்றது என்பதைத் தெளிவாக்குகிறது. அது பெருமளவு துருக்கிய இஸ்லாமிய உதவி அமைப்பான IHH ஆல் அமைக்கப்பட்டு, உத்தியோகபூர்வம்ற விதத்தில் துருக்கிய அரசாங்கத்தினதும் ஆதரவைக் கொண்டது. ரேசெப் ரயீப் எர்டோகான் தலைமையில் உள்ள இஸ்லாமிய AKP அரசாங்கத்தின்கீழ் உள்ள துருக்கி ஒரு முக்கிய பிராந்திய சக்தியாக தன் பங்கை விரிவாக்கிக் கொள்ள முயல்கிறது, தற்காலிகமாக அதன் ஒரு தசாப்த அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டில் இருந்து விடுவித்துக் கொள்ள முயல்கிறது.
அங்காரா கிட்டத்தட்ட அதன் அனைத்து அண்டை நாடுகள் மற்றும் அரபு நாடுகளுடன் நல்ல இராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளது. இதில் சிரியா, ஈரானும் அடங்கும். துருக்கிக்கும் ஈரானுக்கும் இடையே வணிகத்தின் அளவு AKP எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து ஐந்து மடங்காகியுள்ளது; ஈரான் துருக்கிக்கு எரிபொருள் விநியோகிப்பதில் பெரும் பங்கைக் கொண்டுள்ளது. கப்பல் தொடரணி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை எர்டோகான் கண்டனத்திற்கு உட்படுத்தியுள்ளது அவருடைய செல்வாக்கை அரபு நாடுகளில் மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இடது கட்சி துருக்கி மற்றும் பிரேசில் புதிய ஐ.நா. தடைகள் ஈரானுக்கு எதிராக அதன் அணுசக்திச் செறிவைப் பற்றியதற்கு மேற்கொள்ளப்படுவதைத் தடுக்கும் முயற்சிக்கும் வெளிப்படையான ஆதரவைக் கொடுத்துள்ளது. துருக்கிக்கு சமீபத்தில் ஜேர்மனிய சான்ஸ்லர் மேர்க்கெல் பயணித்திருந்தபோது அவர் இடது கட்சியைக் குறைகூறி தான் துருக்கியின் ஆதரவை ஈரானுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளுக்கு பெறுவதற்கு விரும்புவதாகவும், “அணுசக்தியற்ற மத்திய கிழக்கிற்கு துருக்கி விடும் அழைப்பிற்கு ஆதரவு என்பதற்கு மாறாகத்தான் இது என்று அறிவித்தார். மேர்க்கெல் தன் நிலைப்பாட்டை “அமெரிக்க, நேட்டோ கொள்கையான தலையீடு, மோதல்” ஆகியவற்றுடன் சார்பு கொண்டுள்ளார்.
ஜேர்மனி மத்திய கிழக்கில் துருக்கியுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் இன்னும் சுதந்திரமான பங்கைக்கொள்ள வேண்டும் என்று இடதுகட்சி மட்டும் வாதிடவில்லை.
ஜூன் 14ம் திகதி “துருக்கிக்கு ஒரு புதிய, வலுவான பங்கு” என்ற கட்டுரையில் taz பத்திரிகையின் மத்திய கிழக்கு நிருபர் கரிம் எல்-காவாரி ஐரோப்பியர்கள் “துருக்கியை ஒரு ஐரோப்பிய பிரச்சினை என்று மட்டும் காணாமல், மத்திய கிழக்கில் ஒரு மூலோபாய பங்காளி என்று காண வேண்டும்” என்று அறிவித்துள்ளார்.
ஜூன் 7ம் திகதி கொடுத்த கருத்து ஒன்றில் Süddeutsche Zeitung இன் துருக்கி நிருபர் துருக்கிக்கு இன்னும் வலுவான பங்கு வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். “இதுவரை துருக்கியை அமெரிக்காவிற்கும் கிழக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் மதிப்பாக வைத்திருந்ததற்கு காரணம் அது ஒருபக்கத்தை சார்ந்து இல்லாமல் இருந்ததுதான். இது பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலியர்கள் இரு திறத்தாருடனும் தொடர்பு கொண்டிருந்தது. காசாப் பகுதியில் ஹமாஸ் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், எர்டோகன் மேலைநாடுகளிடம் ஹமாஸுடன் விவாதங்கள் இல்லாமல் தீர்வு ஒன்று காணப்பட முடியாது என்று வலியுறுத்தியுள்ளார். அதற்குப் பதிலாக பல குறைகூறல்களை அவர் எதிர்கொண்டாலும், அவர் கூறுவது சரியே.” இப்பொழுது துருக்கி அதன் செல்வாக்கை “ஹமாஸிடம் இருந்து இஸ்ரேல் நியாயமாகப் பெற வேண்டியதை அடைவதற்கு பயன்படுத்த வேண்டும்- அதாவது இஸ்ரேலின் இருப்பு கொள்ளப்படல் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நிறுத்துதல்.”
துருக்கியுடன் ஒரு மூலோபாய உடன்பாட்டிற்கான வெளிப்படையான அழைப்பு முன்னாள் ஜேர்மனிய சான்ஸ்லர் ஹெகார்ட் ஷ்ரோடர் (SPD) இடம் இருந்து Weltoline மே 3 பதிப்பில் வந்த கட்டுரையில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் சீனா என்னும் அதிகார மையங்களுடன் போட்டியிட வேண்டும் என்றால், “உலக அரசியல், உலகளாவிய பொருளாதாரத்திற்கான ஒரு மையம் என, அது வலுவான பங்காளிகளைக் கொள்ள வேண்டும்.” என்று அவர் எழுதியுள்ளார். இப்பங்காளிகள் ஒருபுறத்தில், ரஷ்யா, அதன் “மகத்தான மூலப் பொருட்கள் இருப்பைக் கொண்டது”, மறுபுறத்தில் இன்னும் 20 -25 ஆண்டுகளில் ஐரோப்பாவின் நான்காம் அல்லது ஐந்தாம் மிகப் பெரிய பொருளாதாரமாக இருக்கும் நிலையில் துருக்கி உள்ளது. ஷ்ரோடர் தொடர்ந்தார்: “அரசியலளவில் துருக்கி ஐரோப்பியர்களாகிய நமக்கு மிகவும் முக்கியமானது. ஐரோப்பாவிற்கும் மத்திய கிழக்கிற்கும் இடையே அதன் இடைத்தொடர்பு ஏற்படுத்தும் நிலையால் அது முழுப்பகுதியிலும் செல்வாக்கை செலுத்துகிறது.” இடது கட்சி மத்திய கிழக்கில் கொள்கை மாற்றப் போக்கிற்கு உந்துதல் கொடுக்கிறது; இதற்கு ஆளும் உயரடுக்கில் கணிசமான ஆதரவு உள்ளது; ஆனால் இதற்கு தற்பொழுது ஒரு பெரும்பான்மை இல்லை. மற்ற நான்கு பாராளுமன்ற கட்சிகளும் தங்கள் இஸ்ரேலிய சார்பு, அமெரிக்க சார்பு நிலைப்பாட்டில் ஒன்றாக இருக்கையில், வெளியுறவுக் கொள்கையில் பகிரங்க விவாதம் மாற்றங்களுக்கு என்பது அரிது. எனவே இடது கட்சி மாற்றீடுகளை முன்வைக்கும் பணியில் இறங்கியுள்ளது. இப்பணிக்கு கிழக்கு ஜேர்மனிய ஸ்ராலினிச ஆட்சியில் செயல்பட்டிருந்த பல முன்னாள் வெளியுறவுத்துறைகளிலும் உளவுத்துறைகளிலும் தீவிரமாக இருந்த பல வல்லுனர்களின் தொடர்பு வசதியாக உள்ளது.
ஆளும் உயரடுக்கு இத்தகைய மாற்றீடுகளை விரைவில் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கையில், ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போர் சரிகையில், மத்திய கிழக்கில் வெடிப்புத் தன்மை நிறைந்த நிலைமை வளர்கையில் தழுவக்கூடும். தன்னுடைய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் இடது கட்சி ஆதரவைப் பெருக்கிக் கொண்டுள்ளது. அவை பெரும்பாலும் முதலாளித்துவ பொருளாதார வல்லுனர் ஜோன் மேநார்ட் கீன்ஸின் கருத்துக்களில் இருந்து எடுக்கப்பட்டவை. ATTAC மற்றும் இடது கட்சியில் இருந்து வங்கிகள் மீதான நடவடிக்கை வரி விதிப்பு (டோபின் வரி) வேண்டும் என்று வந்துள்ள கோரிக்கை இப்பொழுது SPD யினால் மட்டும் எடுத்துக் கொள்ளப்படாமல் கூட்டாட்சி சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கலாலும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்து. இது அவருடைய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்பை சமாதானப்படுத்த உதவும்.
வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்காவிடம் இருந்து கூடுதல் சுதந்திரம், மற்ற சக்திகளுடன் நெருக்கமான உடன்பாடுகள், குறிப்பாக ரஷ்யாவுடன் தேவை என்று இடது கட்சி வாதிடுகிறது. அத்தகைய போக்கு தேவை என்று ஆளும் வர்க்கம் கருதினால், அது இடது கட்சியின் ஆதரவை முழுமையாக நம்பலாம். பேர்லினில் ஒரு அரசாங்க மாற்றம் என்பது வெளிநாட்டு கொள்கையில் ஒரு மாறுதலுக்கு முன்னோடியாக இருக்கலாம். 1969ல் SPO கூட்டணி மற்றும் தடையற்ற சந்தை FDP ஆட்சிக்கு வந்தது வில்லி பிராண்ட்டின் கிழக்கு கொள்கை செயல்படுத்தப்பட தளத்தை அமைக்க உதவியது. கன்சர்வேடிவ் எதிர்க்கட்சிகள் இவற்றை கடுமையாக எதிர்க்கத் தொடங்கியபோதும் அந்த நடவடிக்கைதான் பின் ஜேர்மனிய பொருளாதாரத்திற்கு அவசரமாக தேவைப்பட்டதை வெற்றி கொள்ள உதவியது. அதாவது கிழக்கில் புதிய சந்தைகள் என்பதை.
புதிய தாராளவாதம், இராணுவ வாதம் ஆகியவற்றை வார்த்தைஜாலமாக கண்டித்தாலும், இடது கட்சியின் வெளியுறவுக் கொள்கை, போர் எதிர்ப்பு அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கையுடன் எந்தவித தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. கட்சியின் பிரச்சினை ஜேர்மனியின் பொருளாதார, மூலோபாய நலன்களுக்கு எது சிறந்த நலன்களை கொடுக்கும் என்பதுதான். இவ்விதத்தில் இடது கட்சி மேலும் சுதந்திரமான, மேலும் தன்னம்பிக்கையுடன் கூடிய, அதையொட்டி மேலும் கூடுதலான ஆக்கிரோஷமுடைய ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கைக்கு வாதிடுகிறது.
|