WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
For revolutionary socialist opposition to Sarkozy's austerity
சார்க்கோசியின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு புரட்சிகர சோசலிச எதிர்ப்பு
By Alex Lantier and Kumaran Ira
23 June 2010
Back to screen version
ஜூன் 24ம் திகதி ஒய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்ட அணிவகுப்பு செய்ய தொழிலாளர்கள் தெருக்களுக்கு வருகிறார்கள். தொழிற்சங்கங்களால் அழைப்பு விடுத்துள்ள பழைய எதிர்ப்பு வடிவங்களான "நடவடிக்கைத் தினங்கள்" ஆனது ஆளும் வர்க்கத்தின் சிக்கன கொள்கைகளை நிறுத்தாது என்று பரந்த பெருந்திரளான தொழிலாளர்கள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
மாறாக, நூற்றுக்கணக்கான பில்லியன்களை பொதுப் பிணை எடுப்புப் பணமாக பெற்ற பின்னர், அரசாங்கக் கடன் சந்தைகளில் உள்ள பீதிகளை வங்கிகள் பயன்படுத்தி இன்னும் கூடுதலான தொழிலாள வர்க்க எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இடைவிடாமல் அழுத்தத்தை கொடுக்கின்றன. கிரேக்கத்தில் இருந்து போர்த்துக்கல், ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் என்று சமீபத்திய வெட்டுக்களின் அலை பரவுகையில், ஒன்று தெளிவாகியுள்ளது: அதாவது வாழ்க்கைத் தரங்களை பெரும் அடிமட்டத்திற்கு தள்ளும் போட்டியில் எந்தவொரு மற்றும் அனைத்து நாடுகளின் தொழிலாளர்கள் மீதும் வங்கிகள் தாக்குதலை நடத்த தயாராக உள்ளன.
பலவந்தப்படுத்தப்பட்டுள்ள கிரேக்கம் சர்வதேச அளவில் நிதியப் பிரபுத்துவம் எதற்கு தயார் செய்து வருகிறது என்பதற்கான ஒரு எச்சரிக்கை ஆகும். சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பிரதம மந்திரி ஜோர்ஜியோஸ் பாப்பாண்ட்ரூ ஊதியங்களையும், சமூக நலச் செலவுகளையும் 20, 30, அல்லது 50 சதவிகிதத்தால் வெட்டியுள்ளார். பாப்பாண்ட்ரூவின் கட்சியான PASOK யின் தலைமையில் நடத்தப்படும் பயனற்ற வேலைநிறுத்த அலைகளுக்கு இடையே தொழிலாளர்கள் பல தலைமுறைகள் பின்னே நோக்கிச் செல்லும் கட்டாயத்தில் உள்ளனர்.
முதலாளித்துவத்தின் வரலாற்றுத் தோல்வியை சமூகம் முகங்கொடுக்கிறது. கடந்த மாதம் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசிக்கும் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுக்கும் இடையே பிணை எடுப்பிற்கு எப்படி தீர்ப்பது என்பது பற்றிய வாதங்கள் பெரும் கொந்தளிப்பை அடைந்த தன்மையானது சார்க்கோசி யூரோவை விட்டு அகல்வேன் என்று அச்சுறுத்திய விதத்தில் முடிந்தது என்று தகவல்கள் கூறுகின்றன. இதற்கு விடையிறுக்கையில் ஐரோப்பிய மத்திய வங்கி இயக்குனர் Jean-Claude Trichet உலக நிலைமை 1939-1945 ல் இருந்து, ஒருவேளை 1914-1918ல் இருந்ததைவிட, “மிகக் கடினமாக உள்ளது” என்றார்.
Trichet இரு உலகப் போர்கள் பற்றி கவனத்திற்கு சுட்டிக்காட்டியது நெருக்கடியின் தீவிரம் பற்றிய அப்பட்டமான எச்சரிக்கை ஆகும். பிரான்சில் பெருமந்தநிலைக்கு பின்னர் முன்னோடியில்லாத ஒரு நிலைமையை தொழிலாளர் எதிர்கொள்கின்றனர். அப்பொழுது 1936 மே-ஜூனில் மக்கள் முன்னணி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து ஒரு பொது வேலைநிறுத்தம் வெடித்தது.
தொழிற்சங்கங்களின் ஒரு நாள் வேலைநிறுத்தங்கள் தங்களுக்கு எதையும் கொண்டுவருவதில்லை என்ற முடிவிற்கு தொழிலாளர்கள் சரியான முறையில் வருகையில், ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கான உணர்வு அதிகரித்துள்ளது. ஒரு சமீபத்திய கருத்துக் கணிப்பு பிரெஞ்சு மக்களில் 58 சதவிகிதத்தினர் ஒருநாள் தொழிற்சங்க எதிர்ப்புக்கள் ஓய்வூதியக் குறைப்புக்களை நிறுத்தும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது. சமூக உரிமைகளை பாதுகாப்பதற்கு மிகத் திறமையான வழியைத் தேர்ந்தெடுக்குமாறு கோரப்பட்டதற்கு 67 சதவிகித மக்கள் ஒரு பொது வேலை நிறுத்தத்தைத்தான் தேர்ந்தெடுத்தனர்.
வெகுஜன வேலை நிறுத்தங்களின் வெடிப்பு வர்க்க-நனவுடைய ஒவ்வொரு தொழிலாளியினாலும் வரவேற்கப்படும். அது ஒன்று தான் நிதியப் பிரபுத்துவத்தின் தாக்குதலை நிறுத்தக்கூடிய உறுதியான செயல் ஆகும். ஆனால் முழு தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட வேலைநிறுத்தமும் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்க்காது, ஆனால் குறிப்பாக இப்பொழுதுள்ள அரசியல் கட்சிகளின் திவால் தன்மையையும், காட்டிக்கொடுக்கும் தன்மையையும் வெளிப்படுத்த முடியும்.
ஒரு பொது வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாமல் அரச அதிகாரத்திற்கான கேள்வியை முன்வைக்கின்றது: தொழிலாளர்கள் வேலைக்கு மீண்டும் திரும்பியவுடன் என்ன நடக்கும் என்பதை எவர் நிர்ணயம் செய்வர்?
ரஷ்யப் புரட்சியின் சமூக ஜனநாயக எதிர்ப்பாளர்களுக்கு எதிராக 1920ல் எழுதிய லியோன் ட்ரொட்ஸ்கி, பொது வேலைநிறுத்தம் "பிரச்சினைக்கான தீர்வைத் தன் மூலம் தோற்றுவித்துவிட முடியாது, ஏனெனில் அது தொழிலாள வர்க்கத்தின் ஆற்றலை அதன் எதிரிகளை காட்டிலும் விரைவில் களைப்படையச் செய்து, பாட்டாளி வர்க்கத்தை ஆலைக்கு மீண்டும் திரும்பும் கட்டாயத்திற்கு உட்படுத்தும். பொது வேலைநிறுத்தம் ஒரு உறுதியான முக்கியத்துவத்தை பாட்டாளி வர்க்கத்திற்கும் எதிராளியின் ஆயுதப் படைகளுக்கும் இடையே வரக்கூடிய மோதலின் ஆரம்ப கட்டம்தான்" என்றார்.
ட்ரொட்ஸ்கியின் கருத்துக்கள் நிகழ்வுகளால் முழுமையாக உறுதி செய்யப்படுகின்றன. 1936 பொது வேலை நிறுத்தத்தினால் வியப்படைந்த பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (Parti Communiste Francais - PCF) ன் தலைவர் Maurice Thorez அதிகம் அறியப்பட்ட முறையில் கோரினார்: “அதன் கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்ட உடனே எப்படி வேலை நிறுத்தத்தை முடிப்பது என்பது பற்றி ஒருவருக்கு தெரிய வேண்டும்.” ஜேர்மனிக்கு எதிராக கிரெம்ளினின் நட்பு என்ற முறையில் பிரெஞ்சு முதலாளித்துவத்தைக் பாதுகாக்கும் ஒரு பிரிவாக பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி ஆனது தொழிலாளர்களை தொழிற்சங்கம் அழைப்புக் கொடுத்தால் அன்றி வேலைநிறுத்தம் செய்யக்கூடாது என்று கூறி, அரசாங்கத்துடன் தன் நடவடிக்கைகளை அமைதியாக ஒருங்கிணைத்தது. மக்கள் முன்னணி அரசாங்கமே விரைவில் வேலைநிறுத்தப் பணியிடங்களுக்கு எதிராக துருப்புக்களைத் திரட்டியது.
நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும் கோமின்டேர்னின் பிற பிரிவுகளும் நாஜி-சோவியத் உடன்பாட்டின் கீழ் ஹிட்லருடன் நட்புக் கொண்டடின. ஆளும் வர்க்கத்தில் நாஜிச் சார்புடைய உணர்வு நாஜி ஜேர்மனிக்கு பிரான்சின் நிபந்தனையற்ற சரணாகதியை விரைவுபடுத்தியது.
ஆளும் வர்க்கப் பார்வையில் காணப்படும் இந்த வரலாற்றுப் பிரச்சினைகள் இன்றைய முதலாளித்துவ "இடது" மற்றும் முக்கிய தொழிற்சங்கங்களின் சிந்தனையில் உள்ளன. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான ஜோஸ் மானுவல் பரோசோவுடன் தான் பேசியதின் விவரங்களை வெளியிட்ட ஐரோப்பிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் ஜோன் மொங்ஸ் "இது 1931" என்று எச்சரித்து, மற்றும் ஐரோப்பா "1930களில் இராணுவ சர்வாதிகாரத்துடன் முடிவிற்கு வந்தது" என்றார்.
மொங்ஸ் விளக்கினார்: "கடந்த வெள்ளியன்று கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல் இன்னும் மற்றவை பற்றி பரோசோவுடன் நான் விவாதித்தேன். அவருடைய கருத்து அப்பட்டமாக இருந்தது: "அவை எந்தவித சிக்கனத் தொகுப்புக்களை செயல்படுத்தாவிட்டால், இந்நாடுகள் ஜனநாயகம் என்று நாம் அறிந்துள்ள வகையில் இருந்து கிட்டத்தட்ட மறைந்துவிடக்கூடும்"…. அரச கடன்களினால் ஐரோப்பாவில் உள்ள ஜனநாயகங்கள் சரிந்துவிடக்கூடும் என்ற வருங்காலத் தோற்றத்தைக்காட்டி எங்களை அவர் அதிர்ச்சிக்கு உட்படுத்தினார்."
"கிரேக்கம் மாற வேண்டும் என்பது வெளிப்படைதான். அது கடினமான வழியில்தான் இயங்க வேண்டும்…. கிரேக்கம் வேறுவழியில் மீள வாய்ப்பு இல்லை. அவர்களுக்கு கூறப்பட்டிருப்பதை அவர்கள் செய்ய வேண்டும்." என்று அவர் முடிவுரையாகக் கூறினார். சுருங்கக் கூறின் சமூக எதிர்ப்பு திரிக்கப்பட்டு, நெரிக்கப்பட வேண்டும். அதையொட்டி ஆளும் வர்க்கம் சமாதான முறையில் நடவடிக்கைகளை செயல்படுத்தும். இல்லாவிடின், அதைச் செய்வதற்கு சர்வாதிகாரம் தேவைப்படும். இது, நிதியப் பிரபுத்துவத்திற்கு முற்றிலும் விசுவாசமாக இருக்கும் ஒரு கோழைத்தனமான முன்னோக்காகும்.
இத்தகைய முன்னோக்குகளே தொழிற்சங்கங்களையும் "இடது" நடைமுறையையும் ஆதிக்கம் கொண்டுள்ளன. CGT தொழிற்சங்கத் தலைவர் பேர்னார்ட் தீபோ திடீரென சார்க்கோசியின் வெட்டுக்களுக்கு அவருடைய பகிரங்க ஆதரவை மறு பரிசீலிக்கிறார். சார்க்கோசியுடன் கடந்த நான்கு மாதங்களாக ஓய்வூதியக் குறைப்புக்களின் விவரங்களை முடிக்க நேரத்தை கழித்த பின்னர், தீபோ RTL வானொலியிடம் உறுதி கூறினார்: “அதன் திட்டங்களில் ஒன்று நிறைவேற்றப்படவில்லை என்பதால் ஒரு அரசாங்கம் வீழ்ச்சி அடையும் என்று பொருளாகாது.” இந்த வெட்டுக்கள் தற்காலிகமாக தாமதப்படுத்தப்பட்டாலும், சார்க்கோசி தொடரலாம்-என்று தீபோ உட்குறிப்பாகக் கூறுகிறார்-அரசியல் சூழலில் மாற்றம் வந்த பின்னர் மீண்டும் வெட்டுக்கள் இயற்றப்படலாம்.
பிரெஞ்சு முதலாளித்துவத்தின் இடது ஆளும் கட்சியான சோசலிஸ்ட் கட்சி (PS) இப்படி முழு மாற்றத்தைத்தான் செய்துள்ளது. தனது கட்சி 2012ல் ஜனாதிபதி பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மீண்டும் ஓய்வூதிய வயதை 60 என்று கொண்டுவரும் என்று கூறுகிறது. இது சிக்கன நடவடிக்கை சார்பு கட்சியில் இருந்து வரும் கொடூரமான பொய் ஆகும். 1997-2002ல் பன்முக இடது (PS-PCF-பசுமைவாதிகள்) அரசாங்கம் கன்சர்வேடிவ் பிரதமர் Edouard Balladur ஆல் 1993ல் செய்யப்பட்ட ஓய்வூதியக் குறைப்புக்கள் பின்வாங்கப்பட வேண்டும் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது சோசலிஸ்ட் கட்சியின் பிரிவுகள் கூறியிருந்ததை புறக்கணித்தது… இந்த ஜனவரி மாதம் PS ன் முதன்மைச் செயலர் Martine Aubry ஓய்வூதியக் குறைப்புக்களுக்கு அழைப்பு விடுத்து, ஓய்வூதியத் தகுதி வயது இன்னும் இரண்டு ஆண்டுகள் உயர்த்தப்பட வேண்டும் என்றார்.
முதலாளித்துவ "இடது " மற்றும் தொழிற்சங்கங்கள் உண்மையில் வெட்டுக்களுக்குத் திட்டம் தீட்டுவதில் முக்கிய பங்கைக்கொண்டுள்ளன. அரச Pensions Advisory Council (Conseil d’orientation des retraites, COR) குழுவில் PS ன் பிரதிநிதி Pascal Terrasse, செனட் உறுப்பினர் Rene Teulade, PCF ன் Maxime Gremetz மற்றும் அனைத்து முக்கிய தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் CGT யின் Jean-Christophe Le Duigou, CFDT உடைய Jean-Louis Malys ஆகியோரைக் கொண்டிருந்தது. COR 2003 மற்றும் 2007 ஓய்வூதிய வெட்டுக்க்கள் திட்டமிடப்பட உதவியது. அதன் ஏப்ரல் மாத அறிக்கை பொதுப் பற்றாக்குறைகளை சமாளிக்க இன்னும் அதிக வெட்டுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய தர வர்க்க முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (Nouveau Parti Anticapitaliste - NPA) இடமிருந்து மிக அயோக்கியத்தனமான திட்டம் வந்தது. ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கொடுக்கிறாரா என்று கேட்கப்பட்டதற்கு, NPA யின் செய்தித் தொடர்பாளர் ஓலிவியே பெசன்ஸநோ கூறினார்: “தன்னலக்குழு நம்பமுடியாத சக்திகள் உறவுகளை சுமத்துகையில் அதை எதிர்கொள்ளுவதற்கு இது ஒன்றுதான் தீர்வு. [கடந்த ஆண்டு] Guadeloupe ல் நடந்த வேலைநிறுத்தம் நாம் பின்பற்றப்பட வேண்டிய மாதிரியைக் கொடுக்கிறது, ஒரு ஐக்கியப்பட்ட, தீவிரமான இயக்கம்.”
இத்தகைய கூற்றுக்கள் NPA யின் அரசியல் அக்கறையற்ற தன்மைக்கு நிரூபணம் ஆகும். அரசிடம் இருந்த குறைந்த வரம்புடைய நிதிகளைப் பெறும் நோக்கத்தைக் கொண்டுள்ள சிறு வணிகர்களும் உள்ளூர் அதிகாரிகளுமே Guadeoupe வேலைநிறுத்தத்தை வழிநடத்தியவர்கள், சார்க்கோசியுடன் ஒரு அழுகிய உடன்பாட்டில் கையெழுத்திட்டு வேலைநிறுத்தத்தை முடித்தனர். தொழிலாளர்களின் அத்தகைய எதிர்ப்பை அரசியல் முறையில் நெரித்துள்ளதுதான் தற்போதைய நெருக்கடிக்கு வகை செய்துள்ளது-ஆயினும்கூட பெசன்ஸநோ இதை “தீவிரமான” உதாரணம், பின்பற்றப்பட வேண்டியது என்று உயர்த்திக் காட்டுகிறார்!
ஐரோப்பியத் தொழிலாள வர்க்கம் வரவிருக்கும் இயக்கத்தில் எடுக்கவிருக்கும் புரட்சிகர இலக்குகள் அத்தகைய உடன்பாட்டை இயலாமல் செய்துவிடும். தொழிலாள வர்க்கத்தின் தேவைகளுக்கு நிதியச் சந்தைகளை தாழ்த்துவது என்பதற்கு வங்கிகள் மற்றும் பெரும்
தொழிற்துறைகளை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து தேசியமயமாக்குதல் என்பதாகும்-அதாவது, சோசலிசத்தை ஸ்தாபிப்பதாகும். அங்கே ஆளும் வர்க்கத்துடன் ஒரு மோதல் என்பது தவிர்க்க முடியாதது.
வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் வேலை நிறுத்தங்களின் வெடிப்பு என்பது செயற்பட்டியலில் உள்ளன. தொழிற்சங்கங்களில் இருந்து முற்றிலும் சுதந்திரம் பெற்ற தொழிலாளர்கள் குழுக்களை அமைப்பதின் மூலம்தான் அவை செயல்படுத்தப்பட முடியும். 1995 பொது மன்றங்கள் (General assemblies) பற்றிய அனுபவம் -பிரான்சின் இரயில் வேலைநிறுத்தங்களின் போது வேலைநிறுத்தங்களையும் எதிர்ப்புக்கள் நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கத் தோற்றுவிக்கப்பட்டது- மிகவும் முக்கியமாகும். தொழிலாளர்கள் எதிர்கொள்ள இருக்கும் சவால்களை புரிந்து கொள்ள இவை உதவும்.
தொழிற்சங்கங்களும் மத்தியதர வகுப்புக் கட்சிகளும் அரசியல் அளவில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக ஒரு முன்னோக்கு இல்லாத நிலையில், அந்த மன்றங்கள் கலைக்கப்பட்டு, தொழிலாளர்கள் தோற்கடிக்கப்பட்டு பணிக்குத் திரும்புமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆனால் தொழிலாளர்கள் ஒரு அரசியல் முன்னோக்கை ஆயுதமாகக் கொண்டால் அத்தகைய அமைப்புக்கள் அரசியல் அதிகாரத்திற்கு போட்டி மையங்களாக மாறுவதுடன் பின் வங்கிகளையும் முதலாளித்துவ அரசையும் பதிலீடு செய்யும்-1917ல் சோவியத்துக்கள் ஒரு புரட்சிகர ரஷ்யாவை தோற்றுவித்தது போல.
மரபார்ந்த ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு அனைத்து தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுகிறது. இது உலக சோசலிச வலைத் தளத்தை தொழிலாள வர்க்கத்திற்கான போராட்டங்கள் பற்றிய தகவல்களை எடுத்துரைக்கவும் முன்னோக்குகளை அளிக்கவும் ஒரு சர்வதேசக் கருவியாக நிறுவியுள்ளது. சோசலிச சிந்தனையுடைய தொழிலாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளை உலக சோசலிச வலைத் தளத்தை வாசிப்பதுடன் மட்டுமன்றி தொடர்பு கொள்ளுமாறும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சியாக கட்டமைப்பதற்கு முன்வருமாறும் அழைப்புவிடுக்கிறது. |