WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
உலக பொருளாதாரம்
Fortunes mount for the wealthy in wake of the finance crisis
பொருளாதார நெருக்கடியிலும் செல்வம் குவிக்கும் பணக்காரர்கள்
By Elizabeth Zimmermann
15 June 2010
Back to screen version
கடந்த 1930-ஆம் ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத நிதி மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளபோதிலும் உலகம் முழுவதும் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகி செல்வம் குவித்து வருவதாக போஸ்டன் ஆலோசனைக் குழுமம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது
உலகளாவிய தனியார் முதலீட்டாளர்களின் பங்கு, பணம் மற்றும் பங்குப்பத்திரங்கள் போன்ற வகையிலான முதலீடுகளின் நிகர சொத்து மதிப்பு 2009-ம் ஆண்டில் 11.5 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து 111.5 ட்ரில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது 2008-ஆம் ஆண்டில் இருந்து உலக பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தைவிட அதிகம் ஆகும்.
2008-ஆம் ஆண்டு உலகளாவிய நிகர சொத்து மதிப்பு 10 சதவிகிதத்துக்கும் மேல் வீழ்ச்சியை சந்தித்தது. இது கடந்த 2007-ம் ஆண்டு கணக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது சுமார் 100 ட்ரில்லியன் ஆகும். 2008-ஆம் ஆண்டு லேமான் பிரதர்ஸ் வங்கி திவாலுடன் ஆரம்பித்த சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு இருந்ததைப் போன்று, தற்போது பணக்கார மற்றும் அதீத பணக்காரர்களின் செல்வம் ஏறத்தாழ அதே அளவிற்கு அதிகரித்துள்ளது.
உலகின் பகுதிகளாக பிரித்து எடுத்துக்கொண்டால், 4.6 ட்ரில்லியன் டாலர் (15 சதவீதம்) வளர்ச்சியுடன் வட அமெரிக்கா மிகப்பெரிய சொத்து மதிப்பேற்றத்தைக் கண்டுள்ளது. ஐரோப்பாவில் தனியார் சொத்துக்களின் வளர்ச்சி 8 சதவீதம் என்ற நிலையில் சற்று குறைவாக அதிகரித்திருந்தாலும் வட அமெரிக்காவின் 35.1 ட்ரில்லியன் மொத்த தனியார் சொத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 37.1 ட்ரில்லியன் தனியார் சொத்து மதிப்பு கொண்டுள்ள ஐரோப்பா உலகின் செல்வம் செழிக்கும் பகுதிகளின் பட்டியலில் முன்னிலையில் உள்ளது.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் (ஜப்பானை தவிர்த்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உட்பட) தனியார் நிகர சொத்து மதிப்பு உலக சராசரிக்கு இருமடங்காக வளர்ச்சி அடைந்தது. இது சுமார் 22சதவீதம் (17.1 ட்ரில்லியன் டாலர்) ஆகும். 3 சதவீத வளர்ச்சியுடன் 14.9 ட்ரில்லியனை அடைந்த ஜப்பான் சற்று பின்தங்கியிருந்தது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் தனியார் நிதிநிலை சராசரிக்கு மேல் குறைந்த மட்டத்தில் உயர்வடைந்து சுமார் 16 சதவிகித வளர்ச்சியுடன் அது 3.4 ட்ரில்லியனை மட்டுமே எட்டியது.
சர்வதேச பொருளாதார நெருக்கடியால் உலகெங்கும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையை இழந்து, வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு, ஏழைகளின் எண்ணிக்கை கூடுதலாக அதிகரித்தபோதும், நிதிய உயர்தட்டினர் தங்களது நிதிநிலையை கேவலமான முறையில் மேம்படுத்தினர்.
டாலர் கோடீசுவரர்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பால் இது உறுதிப்படுத்துகின்றது. இந்த பிரிவு உலகெங்கும் ஆற்றலுடன் வளர்ச்சி அடைந்துள்ளது. பி.சி.ஜி. ஆய்வு முடிவுகளின் படி உலகின் அதிக கோடீசுவரர்களும் அமெரிக்காவில் தான் உள்ளனர் (4.7 மில்லியன்) அதை அடுத்து ஜப்பான் (1.2 மில்லியன்), சீனா (6,70,000), பிரிட்டன் (4,85,000), ஜெர்மனி (4,30,000). இதே போன்று இத்தாலி (3,00,000), சுவிட்சர்லாந்து (2,85,000), பிரான்ஸ் (2,80,000), தைவான் (2,30,000) மற்றும் ஹாங்காங் (2,05,000) ஆகிய நாடுகளிலும் கோடீசுவரர்கள் உள்ளனர்.
முக்கியமாக சிங்கப்பூரிலும் (35 சதவிகிதம்) அதை அடுத்து மலேசியா (33 சதவிகிதம்) சுலோவாக்கியா (32 சதவிகிதம்) மற்றும் சீனா (31 சதவிகிதம்) ஆகிய நாடுகளிலும் டாலர் கோடீசுவரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த கோடீசுவரர்களின் சிறிய தட்டு உலக மக்கள் தொகையில் ஒரு சதவீதம் தான் உள்ளனர். ஆனாலும் கடந்த 2009-ஆம் ஆண்டு செய்யப்பட்ட முதலீடுகளில் 38 சதவீதத்திற்கு இவர்களே பொறுப்பாக உள்ளனர் என்பது வியக்கவைக்கும் உண்மை.
பொருளாதார வீழ்ச்சியை சரி செய்ய பல்வேறு நாடுகளின் அரசு மற்றும் நிதி நிறுவனங்கள் தீட்டிய மீட்பு திட்டங்களின் படி வங்கிகளுக்கு வழங்கப்பட்ட பல ட்ரில்லியன் டாலர் பணம் தான் பணக்கார மற்றும் அதீத பணக்கார வர்க்கத்தின் நிகர சொத்துக்கள் பெருவளர்ச்சி அடைய முக்கிய காரணமாகியுள்ளது. தற்போது வரவு-செலவுத் திட்டத்தில் ஏற்படும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பணிகள் சமூகத்தில் பாதிக்கப்பட்டோரினதும் மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் செலவிலேயே நடைபெற்று வருகின்றன.
பல்வேறு நாடுகளில் தொடர்ந்து தீட்டப்பட்டு வரும் பொருளாதார மீட்புத் திட்டங்களின் உண்மை நிலை இது தான். ஜேர்மனியில் பணக்காரர்கள் மேலும் அதீத பணக்காரர்களில் மீது கைவைக்கப்படாது இருக்கையில் தொழிலாளர்கள், ஓய்வுபெற்றவர்கள், வேலையற்றோர்கள் மற்றும் சமூகநல உதவி பெறுவோர்களுக்கான சலுகைகளை வெகுவாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
சமூக சொத்துக்களை மறு பங்கீடு செய்வது கடந்த 2008-ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் தொடங்கப்பட்டதல்ல. மூன்று தசாப்தங்களாக நடைபெற்று வரும் இந்த தொடர் நிகழ்வு, பொருளாதார நெருக்கடியால் தீவிரப்படுத்தப்பட்டு மேலும் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் பணக்காரர்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தியது ஹெகார்ட் ஷ்ரோடர் மற்றும் ஜோஷ்கா பிஷ்ஷரின் சமூக ஜனநாயக கட்சி (SPD) பசுமைக் கூட்டணி அரசே ஆகும். இந்த சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமை கூட்டணி (1998 - 2005) முதலில் அதிகபட்ச வருமான வரியை 53 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக குறைத்து, அதன் பின்னர் மீண்டும் அதை 45 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
ஜேர்மனியின் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களின் ஊகஅடிப்படையிலான முதலீடுகளை அதிகரிக்கச் செய்வதன் மூலம் இதே அரசு தான் கடந்த 2000-ஆம் ஆண்டு பங்குத்தொகைகளின் மூலதன இலாப வரியை இரத்து செய்தது. கடந்த 2004-ஆம் ஆண்டு பசுமை கூட்டணி அரசு ஜேர்மனியின் வரலாற்றில் முதன் முறையாக ஹெட்ஜ் நிதி செயல்பாடுக்கு அனுமதி வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்தனர். ஹார்ட்ஸ் சட்டங்கள் மற்றும் அதனைப் போன்ற பல்வேறு தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்களின் மூலம் மிகக் குறைந்த ஊதியத்தை பெறும் பிரிவினை உருவாக்கினர். தற்போது இதே போன்று மிகக் குறைந்த ஊதியம் பெறும் சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.
ஷ்ரோடரின் இராஜினாமாவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த சமூக ஜனநாயக மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகளின் கூட்டணி மீண்டும் மூலதன உரிமையாளர்களுக்கு பரிசளித்தனர். கூட்டணி அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட வரியை விலக்கலின் காரணமாக செல்வந்தர்கள் முன்னரைவிட குறைவான வரி செலுத்தினர். ''இந்த வரிவிலக்கின் மூலம் ஏழை மக்களைவிட பணக்காரர்கள் குறைந்த வரி செலுத்தினால் போதும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறிவிட்டனர். கிழக்கு ஜேர்மனி மேலும் வறுமைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளது. வரிச்சீர்திருத்தமும் பரம்பரை சொத்துக்களின் மீதான வரி்விலக்கலும் சமத்துவமின்மையை அதிகரித்துள்ளது'' என ஜேர்மன் பொருளாதார ஆய்வு அமைப்பு (DIW) கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
DIW இன் புள்ளிவிவரக்கணக்குகள் படி கடந்த 2009-ஆம் ஆண்டில் ஜேர்மன் மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கினர் எந்த சேமிப்பும் இல்லாமல் அல்லது மிக்குறைந்த சேமிப்புடன் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஜேர்மன் மக்கள் தொகையில் வெறும் 10 சதவீதம் மட்டுமே உள்ள பணக்காரர்கள் அந்நாட்டின் ஒட்டுமொத்த சொத்தின் 60 சதவீதத்தை வைத்திருந்தனர். இந்த விகிதம் மேலும் உயரக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1998-ஆம் ஆண்டுக்கு பிறகு அறிமுகம் செய்யப்பட்ட வரி சீர்திருத்தங்களால் அரசுக்கு ஆண்டுதோறும் 50 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படுவதாக IMK நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது. Frankfurter Rundschau இதழ் இது குறித்து கூறுவது என்னவென்றால், நிரந்தர வரி விலக்குகளுக்காக இல்லையென்றால் நம் நிதி அமைச்சர் இதே போன்ற சேமிப்பு திட்டத்தை தற்போது அறிவித்திருக்கமாட்டார். நடுத்தர மற்றும் மேல்த்தட்டு மக்களுக்கு ஆதரவாக ஆளும் அரசியல் கட்சிகள் செயல்படுவதை ஒத்திவைத்திருந்தால் வேலையற்றோருக்கும் குடும்பங்களுக்கும் வளங்கும் சலுகைகளை இரத்து செய்யும் தேவை ஏற்பட்டிருக்காது.
|