WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
French government announces plan for pension cut
பிரெஞ்சு அரசாங்கம் ஓய்வூதியங்களில் வெட்டுக்கான திட்டத்தை அறிவிக்கிறது
By Pierre Mabut
19 June 2010
Back to screen version
பல மாதங்கள் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர், புதனன்று பிற்போக்குத்தன ஓய்வூதியச் சீர்திருத்தங்களை பிரெஞ்சு அரசாங்கம் அறிவித்தது. ஜனாதிபதி சார்க்கோசி சட்டபூர்வ குறைந்தபட்ச ஓய்வூதிய வயதை 60 ல் இருந்து 62 க்கு உயர்த்தியுள்ளார். இது உழைக்கும் வருடங்களில் ஒவ்வொரு வருடமும் நான்கு மாதங்கள் 2018 வரை அதிகப்படுத்துவதன் மூலம் செயல்படுத்தப்படும்.
ஒரு முழு அரசாங்க ஓய்வூதியத்திற்கான வயது 65 ல் இருந்து 67 க்கு 2020 க்குள் உயர்த்தப்படும். இதற்கு ஊதியம் பெறும் காலம் தற்போதைய 40 ஆண்டுகள் என்பதற்கு பதிலாக 41.5 ஆண்டுகளாக இருக்கும். தற்பொழுது சராசரி ஓய்வூதியத் தொகை 1,150 யூரோக்கள் ஆக சமூகச் செலவுகளுக்கான குறைப்புக்கள் செய்வதற்கு முன்பு இருக்கிறது. 2007ம் ஆண்டு INSEE (தேசியப் புள்ளிவிவர அலுவலகம்) கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஓய்வூதியம் பெறுவோர், 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர் (அனைத்து ஓய்வூதியம் பெறுவோரிலும் 10 சதவிகிதம்) உத்தியோகபூர்வ வறுமைக்கோட்டு வருமானமான மாதம் 900 யூரோக்களுக்கும் கீழேயே வாழ்கின்றனர் என மதிப்பிட்டுள்ளது.
சீர்திருத்தங்கள் அரச ஊழியர்களையும் தாக்குகிறது. அவர்கள் இப்பொழுது தங்கள் ஓய்வூதிய பங்களிப்புத் தொகைகள் தனியார் துறைத் தொழிலாளர்களுக்கு ஒப்பாக 7.85 சதவிகிதத்தில் இருந்து 10.55 சதவிகிதம் மொத்த ஊதியத்தில் உயர்த்தப்பட்டுள்ளதைக் காண்கின்றனர். 2020 ஐ ஒட்டி ஓய்வூதிய முறையில் மதிப்பிடப்பட்டுள்ள பற்றாக்குறையான 49 பில்லியனை சமாளிக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. தொழிலாளர்கள் மீதான தாக்குதலை மூடிமறைக்கும் வகையில் சார்க்கோசி செல்வந்தர்கள் மற்றும் அவர்களுடைய வணிகச் செயற்பாடுகளுக்கு குறைந்த வரிவிதிப்புகளை செய்துள்ளார். உயர்ந்த வருமானத்தை சம்பாதிப்பவர்களுக்கு ஒரு புதிய 1 சதவிகித வரிவிதிப்போடு 1 சதவிகித சொத்து விற்பனை வரியும் உத்தேசிக்கப்படுகிறது.
பங்கு விருப்புரிமைகளின் (stock options) மீதான வரி முதலாளிகளுக்கு 10ல் இருந்து 14 சதவிகிதமும் ஊழியர்களுக்கு 2.5 ல் இருந்து 8 சதவிகிதம் உயரும். மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு அக்கறை என்று காட்டும் போலித்தன்மையில், தொழிலாளர்கள் மருத்துவமுறையில் நிரூபிக்கப்பட்ட நோய்கள் அல்லது பணியிடத்தில் ஏற்படும் விபத்துக்களுக்கு ஓய்வு பெறும் வயது 60 என்பது தொடரும். பெண் தொழிலாளிகள் மகப்பேறுகால நலன்களை இப்பொழுது பெறுவது, அவர்களுடைய ஓய்வூதிய உரிமைகளைக் கணக்கில் சேர்ப்பதற்கான ஊதியத்துடன் சேர்க்கப்படும். சராசரி ஓய்வூதியம் 990 யூரோக்கள் என்று பெறும் பெண்களின் நிலையை இது ஒன்றும் அதிகம் உயர்த்தாது.
முதலாளித்துவ இடது மற்றும் தொழிற்சங்கங்கள் சார்க்கோசியின் நடவடிக்கைகளுக்கு ஒரு பொய்யான, ஏமாற்றுத்தன எதிர்ப்பைக் காட்டும் விதத்தில் நடந்து கொள்கின்றன. அவை உண்மையில் அவற்றிற்கு ஆதரவு கொடுக்கின்றன.
சோசலிஸ்ட் கட்சி (PS) சீர்திருத்தத்தை "நியாயமற்றது" என்று கூறியுள்ளது. PS இன் முன்னாள் முதன்மைச் செயலாளரான Francois Hollande நடவடிக்கைகள் "சந்தைகளுக்கும் பிரான்சின் ஐரோப்பிய பங்காளிகளுக்கும் ஒரு சமிக்கையை அனுப்பும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன" என்றார். ஆனால் PS உடைய ஓய்வூதியங்கள் பற்றிய சொந்த உள் ஆவணம் சார்க்கோசியின் நடவடிக்கைகளுடன் அவை உண்மையாகக் குறைந்த வேறுபாடுகள் கொண்டிருப்பதைத்தான் காட்டுகிறது--இதில் அதிகரிக்கப்படும் வேலை செய்யும் காலம் அடங்கும். PS ன் முதன்மைச் செயலாளர் Martine Aubry ஜனவரியில் இருந்து ஓய்வூதிய வயது குறைந்தபட்சம் 62 ஆக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்களின் விடையிறுப்பும் இதேபோல் நம்பகத்தன்மை இல்லாமல் தான் உள்ளது. PS க்கு நெருக்கமாக இருக்கும் CFDT எனப்படும் பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் François Chérèque, "இது ஒரு குறுகிய காலச் சீர்திருத்தம், கிட்டத்தட்ட ஒரு ஆத்திரமூட்டல் போல்தான்.... வருங்காலத் தலைமுறைகளுக்கு ஒரு பெரிய அடி, இளைஞர்கள் தான் இச்சட்டவரைவிற்கான விலையை கொடுக்க நேரிடும்.....நான் அரசாங்கத்திடம் இருந்து இன்னும் சற்று அதிகமாக எதிர்பார்த்தேன்." என்று கருத்துக் கூறியுள்ளார்.
ஸ்ராலினிச PCF க்கு நெருக்கமான CGT எனப்படும் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு, இன்னும் விரோதமாகக் காட்டிக் கொள்ளும் வகையில் ஒரு செய்தி ஊடகத்திற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது, "இது சமூகப் பிற்போக்குத்தனத்திற்கு ஒரு மிருகத்தன சீர்திருத்தம், முன்னோடியில்லாதது.... CGT ஐப் பொறுத்தவரையில், இந்த ஓய்வூதியத் திட்டம் உறுதியாக எதிர்க்கப்பட வேண்டும்."
உண்மை என்னவென்றால், இரு தொழிற்சங்கங்களும் பிற சிறிய சங்கங்களுடன் சீர்திருத்தங்களை எதிர்க்க தொழிலாளர்களின் வெகுஜன இயக்கத்திற்கு ஆதரவைக் கொடுக்கவில்லை. பல மாதங்களாகவே சீர்திருத்தங்கள் பற்றித் தெரியவந்துள்ளன. அதாவது தொழிற்சங்கங்கள் அப்பொழுது முதல் பிரதி பற்றிய பேச்சுக்களை அரசாங்கம், முதலாளிகளுடன் மூடிய அறைகளுக்குள் நடத்தி வந்தன. சார்க்கோசியின் சீர்திருத்த தேவைக்கு சங்கங்களின் விடையிறுப்பு மற்றொரு பயனற்ற எதிர்ப்பை ஜூன் 24ம் தேதி நடத்துவது ஆகும். இது "நியாயமான, நேர்மையான சீர்திருத்தம் கோரி" என்று கூறப்படுகிறது. அதன்பின் செப்டம்பர் வரை ஏதும் செய்யாது. அப்பொழுது அரசாங்கம் தேசிய சட்டமன்றத்தில் சட்டத்தை தாக்கல் செய்யும்.
ஜனாதிபதி சார்க்கோசி பதவி ஏற்றதில் இருந்தே, தொழிற்சங்கங்களின் நிலைமை நெருக்கடிக்கான விலையை தொழிலாளர்கள் துல்லியமாகக் கொடுக்க வேண்டும் என்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதாக உள்ளது. அதேபோல் பிரெஞ்சு முதலாளித்துவம் இன்னும் போட்டித்தன்மையைப் பெற வேண்டும் என்பதற்கு ஒத்துழைப்பும் கொடுக்கிறது. வங்கிகளை பிணை எடுத்த்தற்கு பின்னர் வெளிவந்துள்ள சிக்கனக் கொள்கையின் ஒரு பகுதிதான் ஓய்வூதியச் சீர்திருத்தங்கள் ஆகும்.
பிரதம மந்திரி ஃபியோன் கடந்த வாரம் தான் பொதுப் பற்றாக்குறையை 2013 ஐ ஒட்டி 100 பில்லியன் யூரோக்கள் குறைக்க இருப்பதாகவும், இது ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டாயமான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரவு-செலவுப் பற்றாக்குறை 3 சதவிகித த்திற்கு மேல் இருக்கக்கூடாது என்பதை நிறைவு செய்யும் என்றும் அறிவித்தார். இது தற்பொழுது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவிகிதமாக உள்ளது. 45 பில்லியன் யூரோக்கள் பொதுச் செலவு வெட்டுக்கள் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. மற்றவை "நெருக்கடிக்குப்பின்" கிடைக்கும் அதிக வரி வருவாய்களில் இருந்து வரும்--அதாவது ஒரு பொருளாதார மீட்பு ஏற்பட்டுவிட்டது என்று கூறப்பட்டதில் இருந்து. இது "சுழற்சி வட்டத்தின் கீழ்நோக்கிய சரிவை ஒட்டி ஏற்பட்ட வருவாய் இழப்புக்களை" ஈடு செய்யும் என்று கூறப்படுகிறது.
ஆனால் பொருளாதாரப் போக்குகள் பற்றிய இத்தகைய நம்பிக்கையான பார்வை பெரும் காற்றில் விசில் அடிப்பது போல் தான் என்பதை அரசாங்கம் அறியும். இக்கருத்து ஒரு சமீபத்திய பேட்டியில், Der Spiegel, ஐரோப்பிய மத்திய வங்கியின் இயக்குனரான Jean-Claude Trichet ஐக் கண்ட பேட்டியில் முரண்படுத்தப்பட்டுள்ளது. "இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகக் கடினமான நிலையில் பொருளாதாரம் தன்னைக் காண்கிறது என்பதில் சந்தேகம் இல்லை, உண்மையில் முதல் உலகப் போரில் இருந்து என்றும் கூறலாம்" என்றார் அவர்.
இந்தப் பொருளாதார உண்மை வேண்டும் என்றே தொழிற்சங்கங்கள், சமூக ஜனநாயக வாதிகளால் புறக்கணிக்கப்படுகின்றன. அவர்கள் முதலாளித்துவத்தின் வருங்காலம் நெருக்கடியின் பலிக்கடாவாக தொழிலாளர்களை ஆக்குவதில் உறுதியாக இணைந்துள்ளனர். இதில் சமீபத்தில் சார்க்கோசியின் கிரேக்கத்திற்கான பிணை எடுப்புத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதில் PS க்கு எந்தவித தயக்கமும் இருக்கவில்லை. அதுவோ கிரேக்க தொழிலாளர்களின் ஓய்வூதியங்கள், வேலைகள் ஆகியவற்றில் சிக்கன வெட்டு நடவடிக்கைகளுடன் பிணைந்திருந்தது.
CFDT யின் ஜூன் 11ம் திகதி ஆண்டு மாநாட்டில், Chérèque ஓய்வூதியம் பெறுவதற்கு பணிக்கால விரிவாக்கம் கூடாது என்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தபோது, பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்கள் அதற்கு ஆதரவைக் கொடுத்தனர். CGT தலைவர் Bernard Thibault பெரிதும் வரவேற்கப்பட்ட விருந்தாளியாக அங்கே இருந்தார். ஆனால் CFDT தலைமையின் நவடிக்கைப் போக்கிற்கு எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
இரு தொழிற்சங்கங்களும் 2003 மற்றும் 2007ல் நடத்திய வேலை நிறுத்தங்களை காட்டிக் கொடுத்ததின் மூலம் ஓய்வூதியங்கள் மீது சார்க்கோசி தாக்குதலை இன்னும் அதிகமாக்க ஊக்கம் கொடுத்ததற்குப் பொறுப்பு ஆகும். CFDT பொதுத்துறைத் தொழிலாளர்களின் பணிக்கால கால அளவைப் பற்றிய மாற்றத்தை 2003ல் ஏற்றது. 2007ல் CGT தங்கள் சிறப்பு ஓய்வூதிய உரிமைகளைப் பாதுகாக்க இரயில் தொழிலாளர் நடத்திய போராட்டத்தை நாசம் செய்தது.
அரசாங்க திவால் தன்மையைத் தடுப்பதற்கு தொழிலாளர்கள் தியாகம் செய்ய வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்படும் நடவடிக்கைகளை ஏற்கும் விதத்தில் தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பதால், இப்பொழுது கிரேக்கத்தில் தொடங்கி அனைத்து ஐரோப்பிய அரசாங்கங்களாலும் அவை செயலாக்கப்படுகின்றன. ஆனால் தொழிலாள வர்க்கத்திடையே பெருகிய சீற்றமும் எதிர்ப்பும் தோன்றியுள்ளதற்கான அடையாளங்கள் உள்ளன.
BVA ஜூன் 10ல் நடத்திய கருத்துக் கணிப்பு இடதுசாரி வாக்காளர்களில் 53 சதவிகிதத்தினர் தொழிற்சங்கங்களின் நடவடிக்கை ஓய்வூதியச் சீர்திருத்தங்களில் பாதிப்பு எதையும் கொடுக்கவில்லை என்று முடிவான கருத்தைக் கொண்டுள்ளதை காட்டுகிறது. ஓய்வூதியங்களைப் பாதுகாப்பதில் என்ன நடவடிக்கை தேவை என்று வினவப்பட்டபோது, விடையிறுத்தவர்களில் 67 சதவிகிதத்தினர் ஒரு பொது வேலைநிறுத்தம் தேவை என்று சிந்தித்தனர். |