World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Gulf oil disaster: a trillion-dollar corporate crime

வளைகுடா எண்ணெய்க் கசிவுப் பேரழிவு: ஒரு டிரில்லியன் டாலர் பெருநிறுவனக் குற்றம்

Patrick Martin
15 June 2010

Back to screen version

மெக்சிகோ வளைகுடாவில் நிகழ்ந்த எண்ணெய்க் கசிவு பேராபத்து ஒரு பெருநிறுவனக் குற்றம் ஆகும்: இதன் மாபெரும் அளவு புரிந்து கொள்ளுவதற்கும் அப்பாற்பட்டதாக உள்ளது. வளைகுடா மற்றும் கடலோரச் சுற்றுச்சூழல், மீன்பிடிக்கும் தொழில் மற்றும் சுற்றுலாத் தொழில்கள் அழிக்கப்பட்டவை மற்றும் நீண்டகாலத்தில் மக்களுக்கு இப்பகுதியில் சுகாதார பாதிப்புக்களின் செலவுகள், சேதங்கள் ஆகியவற்றின் இறுதி மொத்த மதிப்பு 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாகக் கூடும்.

வெடிப்பினால் அழிந்துவிட்ட டீப்வாட்டர் ஹொரைசன் எண்ணெய் தோண்டுதல் அழிவில் 11 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். மாபெரும் எண்ணெய்க் கசிவு தொடர்ச்சியாக ஏற்பட்டது. இது ஒன்றும் ஒரு "தற்செயல்" நிகழ்வு அல்ல. வேண்டுமென்றே செலவுகளைக் குறைப்பதற்காக பெருநிறுவனம் செய்த முயற்சியும், அஜாக்கிரதையும்தான் இதற்குக் காரணம். இந்த உண்மைக்கான கூடுதல் சான்றுகள் திங்களன்று காங்கிரஸின் எரிசக்தி மற்றும் வணிகக் குழுவினால் அளிக்கப்பட்டது. ஒரு ஆவணம் ஒரு BP பொறியியலாளர் பிரியன் மோரல் என்பவரால் ஏப்ரல் 14ம் தேதி 6 நாட்கள் வெடிப்பிற்கு முன்னதாக அனுப்பப் பட்ட மின்னஞ்சல் ஆகும். இதில் இத்தோண்டுதல் "ஒரு தீய கனவு போல் உள்ளது, அனைவரும் தத்தளிக்கிறோம்" என்று கூறப்பட்டிருந்தது.

குழுவிற்கு தொடர்ந்து வந்த ஒரு கடிதத்தில் BP அதிகாரிகள் பேரழிவிற்கு முந்தைய நாட்களில் எடுத்த முடிவுகள் விரிவாக உள்ளன. "இந்த ஐந்து முடிவுகளின் பொதுக் கூறுபாடு அவை செலவிற்கும் கிணற்றின் பாதுகாப்பிற்கும் இடையே இருந்த செலவினங்கள் பற்றிய பேரத் தன்மையைக் காட்டுவதாகும்." என்று கடிதம் கூறுகிறது. "மீண்டும் மீண்டும் BP நிறுவனத்திற்கு நேரம், செலவு ஆகிவற்றை மிச்சப்படுத்துவதற்காக ஆபத்து தன்மை மிக்க முடிவுகளை எடுத்தது."

இந்தப் பின்னணியில் ஒபாமா நிர்வாகம், மற்றும் காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் அதிகம் விளம்பரப்படுத்திய கோரிக்கையான BP கிட்டத்தட்ட 20 பில்லியன் டாலர் பாதுகாப்பு நிதியை நிறுவ வேண்டும், அதில் இருந்து இழப்பீடுகள் மீன்பிடிப்பவர்கள், கடல் உணவு தயாரிப்பவர்கள் மற்றும் பேரழிவால் வாழ்க்கை வழிவகையை இழந்துவிட்டவர்களுக்கு இழப்பீடு கொடுக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது ஒரு மோசடியாகும்.

20 பில்லியன் டாலர் நிதி BP யின் இரு காலாண்டு பங்குகளுக்கான ஈவுத் தொகையைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது கூட ஒரு "சமரசம்" என்று சித்திரிக்கப்படக்கூடும். இதையொட்டி எண்ணெய் நிறுவனம் பங்கு ஈவுத் தொகைகளை சில மாதங்களுக்கு பகுதியோ, முழுமையாகவோ நிறுத்தி வைக்க பொது உறவு வகையில் உடன்படும், அதே நேரத்தில் வளைகுடா நெருக்கடி தலையங்களில் தொடரும்.

இது பெரும் எண்ணெய் நிறுவனத்திற்கு ஒரு பொது மன்னிப்புப்போல் ஆகும். ஒரு பின்புற பிணை எடுப்பு போலவும் போகும். ஏனெனில் பாதுகாப்பு நிதிக்கு மேலான எந்த இழப்பீட்டுத் தொகையும் உள்ளூர், மாநில, கூட்டாட்சி அரசாங்கங்களின் பொறுப்பாகிவிடும், அதாவது, வோல் ஸ்ட்ரிட் பிணை எடுப்பு போல், அதுவும் தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் வரும்.

வளைகுடா பேரழிவின் பரப்பு மிக மகத்தனாது தூய்மைப்படுத்துதல், இழப்பீட்டுத் தொகை அளித்தல், நீண்டகாலம் வரும் வரை சேதத்தை சீர்படுத்துதல் என்னும் உண்மையான செலவினங்களை பொறுத்து ஒரு உண்மையான மதிப்பீடு தேவையெனில் அது ஒரு டிரில்லியன் டாலர்கள் என்பதில் ஏலத்தில் தொடங்கி விரைவில் மேல்நோக்கிச் செல்லும்.

Earth Economics என்னும் சுற்றுச் சூழல் குழு லூயிசியானாவின் மிசிசிபி ஆற்று டெல்டாப் பகுதியில் மட்டும் பொருளாதார மதிப்பு $330 பில்லியன் மற்றும் $1.3 டிரில்லியன் என்று, நீர் அளிப்பு, நீர்ப் போக்குக் கட்டுப்பாடு, புயல் பாதுகாப்பு, உணவு உற்பத்தி, மூலப் பொருட்கள் உற்பத்தி, ஓய்வுத் தள மதிப்பு, கார்பன் பிரிதலால் ஆகும் விளைவுகள், சுற்றுச் சூழல் தொகுப்புக் கட்டுப்பாடு, வீண் பொருள் சீரமைப்பு, எழில் மதிப்பு, இருக்குமிட மதிப்பு ஆகியவற்றிற்கு மதிப்பாகக் கொடுத்துள்ளது.

ஆனால் லூயிசியானாவை தவிர, BP எண்ணெய்க் கசிவு இப்பொழுது கடலோர மிசிசிபி, அலபாமா மற்றும் புளோரிடாப் பகுதிகளுக்கு வந்து கொண்டிருக்கிறது. கடலுக்குள் எண்ணெய்த் திரட்டுக்கள் மிக அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை மெக்சிகோ வளைகுடா, கண்டப் பகுதிக்கு அப்பால் உள்ளன. இங்கு பெருங்கடலின் சுற்றுச் சுழல், உணவுச் சங்கிலி ஆகியவற்றின் மீது ஏற்பட்டுள்ள பாதிப்பு கணக்கில் அடக்க முடியாதது.

மிசிசிபி டெல்டாவிற்கு குறைந்தபட்ச புள்ளிவிவரம் கூட $189 பில்லியன் என்று BP யின் சந்தை மூலதனத்தைவிட அதிகம் ஆகும். வேறுவிதமாகக் கூறினால், மிகப் பெரிய நிறுவனங்கள் ஒன்றின் இருப்புக்கள் கூட முற்றிலும் கசிவை நிறுத்தவோ அல்லது சேதத்தை சரிபடுத்தவோ போதாதவை ஆகும்.

அடுத்த சில நாட்கள் ஒபாமா நிர்வாகத்தை BP யின் குறைகூறும், எதிர்ப்பு அமைப்பு என்று காட்டும். ஒபாமாவே இப்பொழுது வாழ்க்கை வழிவகை, வாழ்க்கையே அச்சுறுத்தப்படும் மக்களுக்காக வாதிடுபவராக ஆகலாம். இதில் ஒபாமா நான்காம் தடவையாக வளைகுடாப் பகுதிக்குச் செல்லுதல், அதையொட்டி அவர் தேசிய தொலைக்காட்சியில் செவ்வாய் இரவு ஓவல் அலுவலகத்தில் இருந்து பேசுதல், வியாழனன்று BP யின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஹேவர்ட் காங்கிரஸ் குழுக்கூட்டங்களில் தோன்றுதல் ஆகியவை வரும். இவை அனைத்தும் செய்தி ஊடகத்திற்கான நிகழ்வுகள் ஆகும், வளைகுடா எண்ணெய்க் கசிவுப் பேரழிவின் உண்மைக் காரணங்களை மறைப்பதற்கு, வெளிப்படுத்துவதற்கு அல்ல.

பேரழிவின் பரந்த தன்மையும் அதன் விளைவுகளும் புரிந்து கொள்ள முடியாத தன்மையில் இருக்கையில், இந்தச் சமீபத்திய நெருக்கடியின் ஆதாரங்கள் தெளிவாக உள்ளன. BP யின் நடத்தை மற்றும் அதன் கொள்கைகளுக்கு உந்துதல் கொடுக்கும் உணர்வுகள் ஆகியவை மற்ற பெருநிறுவனங்களில் இருந்து அடிப்படையில் வேறுபட்டவை அல்ல. மிகக் கொடூரமான பேரழிவு வரும் வரை, சர்வதேச பெருநிறுவன உயரடுக்கின் மிக இழிந்த முகமாகத்தான் BP இருந்து கொண்டு, உலகப் பொருளாதாரத்தை அழித்து, வேலைகளை தகர்த்து, நூற்றுக்கணக்கான மில்லியன் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை அழித்து இப்பொழுது நிரந்தரமாக புவிக்கே சேதத்தைத் தோற்றுவிக்கிறது.

வளைகுடாப் பேரழிவு, ஆழ்ந்த உலகளாவியப் பொருளாதார நெருக்கடிக்கு இடையே வந்துள்ளது, உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் பார்வையில் இலாபமுறையை இன்னும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. முதலாளித்துவ "தடையற்ற சந்தை" முறையின் உண்மையான தன்மையை இது நிரூபிக்கிறது. அது முதலாளித்துவத்தினருக்கு மனிதகுலத்தில் பெரும்பான்மையின் இழப்பில் இலாபத்தை அடைய சுதந்திரம் இருப்பதைத்தான் பிரதிபலிக்கிறது. மேலும் இயற்கைக்கே தீங்கு விளைவிக்கும் வகையில்.

BP இந்தப் பேரழிவில் கொண்ட பங்கு பற்றித் தீவிர வெளிப்பாடு என்பது உட்குறிப்பாக இழிந்த, குற்றம் சார்ந்த இலாப முறைக்கு ஒரு சோசலிச மாற்றீடு என்ற வினாவை எழுப்பும். எண்ணெய்த் தொழில் கடந்த மூன்று தசாப்தங்களாக சந்தையின் மீது இருந்த அனைத்துத் தடைகளையும் அகற்றிய விதத்தில் நடத்திய தாக்குதலின் விளைவினால் பெரும் செல்வக் கொழிப்பை பெற்றுள்ளது. இதில் பாதுகாப்பு நெறிகள் மற்றும் சுற்றுச் சூழல் கட்டுப்பாடுகளும் அடங்கும். BP ஒன்றும் ஒரு விதிவிலக்கு அல்ல. மாறாக அது நடக்கும் போக்கின் சமீபத்திய உதாரணம்தான். AIG, Goldman Sachs, Lehman Brothers, Enron, Exxon Mobil, Union Carbide இன்னும் பல மற்றய பெருநிறுவனக் குற்றவாளிகளாகும்.

இந்த அப்பட்டமான பெருநிறுவனக் குற்றங்களுக்கு விடை வளைகுடா கடலோரத் தொழிலாளர்கள் என்று இல்லாமல் முதலாளித்துவத்தினரை நெருக்கடிக்கு விலை கொடுக்குமாறு செய்வதாகும். முதல் கட்டமாக BP யின் சொத்துக்கள் உடனே பறிமுதல் செய்யப்பட்டு பொருளாதார இழப்புக்களில் இடர்ப்படும் மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். பின் எண்ணெய்க் கசிவை நிறுத்த கூடுதல் முயற்சிகள் வேண்டும், அதன் பின் சேதங்கள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.

எண்ணெய்த் தொழில்துறை முழுவதுமே இப்பொழுது தேசியமயம் ஆக்கப்பட்டு பொது உடைமையின்கீழ், ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும்--அதுதான் பேரழிவின் செலவை ஈடுகட்டத் தேவையான கூடுதல் இருப்புக்களை அளிக்கும் என்பதுடன் இத்தகைய பேரழிவுகள் வளைகுடாப் பகுதியில் ஏற்கனவே உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கடலின் கீழ் எண்ணெய் எடுக்கும் நூற்றுக்கணக்கான பிற குழாய்த் திட்டங்களில் இருந்து இனியும் ஏற்படாமல் இருக்கவும் செய்யமுடியும்.

ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டும் அத்தகைய கொள்கைக்கு மாறாத, அசையாத எதிர்ப்பைக் கொண்டவை என்பதைக் கூறத் தேவையில்லை. இரு கட்சிகளும் இலாபமுறையை பாதுகாப்பதுடன், பெருநிறுவனங்கள் உற்பத்தி வழிவகையை உடைமையாகக் கொண்டு அதைக் கட்டுப்படுத்தும் 'உரிமையையும்' காக்கின்றன. இரண்டும் தொழிலாள வர்க்கத்தின் தேவைகள் "சந்தைக்கு" அதாவது முதலாளித்துவ வர்க்கத்தால் இயலக்கூடியதற்கு தாழ்த்தப்பட வேண்டும் என்பதிலும் உடன்பாடு கொண்டுள்ளன.

பெரும் பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் இடுக்கிப்பிடியை முறிப்பதற்கு ஒரே வழி அமெரிக்க, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகர இயக்கத்தைக் கட்டமைப்பதுதான். அதுதான் புவிப்பரப்பிலேயே மிகச் சக்தி வாய்ந்த சமூக சக்தி ஆகும்.

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தினரும் இளைஞர்களும் இலாபமுறையினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள பேரழிவுகளில் இருந்து தக்க அரசியல் முடிவுரைகளை பற்றி எடுத்தல் வேண்டும். இப்பேரழிவு தோற்றுவித்த நிலைமைகள் சோசலிசத்திற்கான போராட்டத்தின் மூலம் தான் அகற்றப்பட முடியும். இந்த வேலைத்திட்டத்துடன் உடன்படுபவர்கள் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்து அதைக் கட்டமைக்குமாறு வலியுறுத்துகிறோம்.