WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
German government crisis intensifies
ஜேர்மனிய அரசாங்க நெருக்கடி தீவிரமடைகிறது
By Ulrich Rippert
16 June 2010
Back to screen version
ஜேர்மனிய அரசாங்கத்திற்கு எதிராக தற்பொழுது முன்வைக்கப்படும் ஏராளமான விமர்சனங்கள் முன்னொருபோதுமில்லாதவையாகும். அதே நேரத்தில் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU), கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU), தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) ஆகிய கன்சர்வேடிவ் கட்சிகளுடைய கூட்டணிக்குள் இருக்கும் பூசல்களும் தீவிரமடைந்துள்ளன.
இந்த வாரம் Der Spiegel இதழ் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் (CDU) இற்கும் அவர் உதவியாளர் கீடோ வெஸ்டெர்வெல்லக்கும் (FDP) எழுதப்பட்ட ஒரு தலையங்கத்தை வெளியிட்டு "முடிந்து விட்டது எனக் கூறுங்கள்!" என அறிவித்ததது. இந்த இதழின் முக்கிய கட்டுரை மேர்க்கெல் ஒரு "Trummerfrau" (இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சிதைவுகளை அகற்றிய மகளிர் பற்றிய குறிப்பு) என விவரித்திருந்தது. மேர்க்கெலின் சான்ஸ்லர் பதவித் தன்மை அழிவில் இருப்பதாகவும், "மேர்க்கெலின் மிக விசுவாசமான ஆதரவாளர்கள்" உட்பட அரசாங்கம் நீடிக்கும் என்று பந்தயம் கட்டமாட்டார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது. "உண்மையில் இக்கூட்டணி ஏற்கனவே தோற்றுவிட்டது. சான்ஸ்லர் அலுவலகத்தில் இப்பொழுதுள்ள உணர்வு முடிவு வந்துவிட்டது என்பதுதான்." என்று Der Spiegel முடிவுரையாகக் கூறியது.
மேலும் இந்த வாரம் வணிக ஏடான Wirtschaftswoche பிரதானமாக வெளியிடப்பட்ட ஒரு வினாவுடன் தோன்றியது: "அங்கேலா மேர்க்கெல்--முடிவு வந்துவிட்டதா?'; அதன் பின் அது பல பக்கங்கள் எழுதி ஒரு தலையங்க வர்ணனையுடன் முடித்தது: "மேர்க்கேல்--இதுதான் முடிவு." ஜேர்மன் கூட்டாட்சி வரலாற்றில் ஒருபொழுதும் நாணயமும் பொருளாதாரமும் இன்று இருப்பது போன்ற ஆபத்தில் இருந்ததில்லை என்று Wirtschaftswoche எழுதியது. "ஒருபொழுதும் கடன் அளவு இந்த அளவு வியத்தகு விதத்தில் அதிகமாக இருந்தததும் இல்லை." அதே நேரத்தில் அரசாங்கத்தின் நோக்குநிலையற்ற தன்மை முன்னெப்போதிலும் பார்க்க மிகத்தெளிவாக உள்ளது. கூட்டணி "இலக்கும். திசையறிகருவியும் இல்லாமல் சுற்றுகிறது.", தீர்மானமானதன்மை, நிலைநோக்கு அல்லது தலைமை ஏதும் இல்லை.
நெருக்கடியின் ஒரு நேரிய கூறுபாடு சிறிது காலத்திற்கு முன்புதான் தற்போதைய கூட்டணிக் கட்சிகள் "ஒரு கனவைப் போன்ற கூட்டணி" என்று கருதப்பட்டன என்பதுதான் என்று வணிக ஏடு முடித்துள்ளது. ஆனால் "இப்பொழுது ஜேர்மனியர்கள் இந்த அரசாங்கத்திடம் இருந்து எதையும், ஒருபொழுதும், எதிர்பார்க்க முடியாது என்று அறிந்துள்ளனர்.... இக்கூட்டணி, இனி என்ன நடந்தாலும், முடிந்துவிட்டது."
கடந்த வாரம் Süddeutsche Zeitung பத்திரிகை மேர்க்கெல் அரசாங்கத்தின் முடிவு பற்றி ஊகித்த பல கட்டுரைகளை வெளியிட்டது. ஒரு தலையங்கம் சான்ஸ்லர் கூட்டணி மீது கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. "கடைசிச் சொற்கள்" என்ற தலைப்பில் வந்த ஒரு முழுப்பக்க கட்டுரை முந்தைய வாரத்தில் அரசாங்கத்தின் செயல்கள் "தோல்வியின் தொகுப்புக்கள்" என்று விவரித்தது. ஒரு கட்டுரையில் Süddeutsche Zeitung ன் முக்கிய ஆசிரியர் Heribert Prantil எழுதுகிறார்: "ஜேர்மனிய கூட்டாட்சிக் குடியரசின் வரலாற்றில் ஒருபொழுதும் இதைப் போன்ற மோசமான அரசாங்கம் இருந்தது இல்லை."
பல குறைகூறுபவர்கள் கூட்டத்துடன் சேர்ந்துகொண்டு சமூக ஜனநாயக கட்சிப் பிரிவுத் தலைவர் பிரங், வால்ட்டர்- ஸ்ரைன்மையர் உம் புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஞாயிறு மாலை அவருடைய அழைப்பு பசுமைக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் றெனாட்ட குனாஸ்ட் ஆல் எதிரொலிக்கப்பட்டது.
பல கட்டுரையாளர்கள் அமைச்சரவை நெருக்கடி சான்ஸ்லர் மற்றும் அவருடைய உதவியாளரின் சொந்த இயலாத்தன்மை மற்றும் அரசியல் வலுவற்ற தன்மை ஆகியவற்றால்தான் முக்கியமாக வந்துள்ளன என்று பகுப்பாய்ந்துள்ளனர். ஆனால் அத்தகைய கண்ணோட்டம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகும். நெருக்கடிக்குக் காரணம் இன்னும் ஆழ்ந்த விதத்தில் உள்ளது.
சர்வதேச நிதிய மற்றும் பொருளாதார நெருக்கடி முந்தைய கொள்கைகள், அரசியல் ஆகியவை செயல்பட்டுக் கொண்டிருந்த அடித்தளத்தை மாற்றிவிட்டன. உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கையின் ஒவ்வொரு துறையையும் அரசியல் மாற்றங்கள் தடைக்கு உட்படுத்திவிட்டன. அரசியல் ஆட்சியில் முன்பிருந்த வழிவகைகள் இப்பொழுது செயல்படுவதில்லை, புதிய ஆட்சி வடிவங்கள் வன்முறைமிக்க மோதல்கள், பூசல்கள் இல்லாமல் உருவாக்கப்பட முடியாது.
1930 களின் பொருளாதாரச் சரிவு மற்றும் அதைத் தொடர்ந்த அரசியல் பேரழிவிற்கு விடைகாணும் விதத்தில் முதலாளித்துவ அரசியல்வாதிகள் "சமூக தடையற்ற சந்தைப் பொருளாதாரம்", "சமூகப் பங்காளித்துவம்" என்ற பெயரில் ஒரு குறைந்தபட்ச சமரசத்தை நிறுவ முயன்றனர். அப்போக்குத்தான் அனைத்து அரசியல் நிறுவனங்கள், கட்சிகளால் ஏற்கப்பட்டிருந்தது. சமூக ஜனநாயகக் கட்சி (SPD), கன்சர்வேடிவ் CDU/CSU இரண்டுமே தம்மை "மக்கள் கட்சிகள்" என்று கூறிக்கண்டது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. ஆளும் SPD 1998 முதல் 2005 வரை 2012 செயற்பட்டியலின்கீழ் கடுமையான சமூகநலச் செலவினக் குறைப்புக்களை செயல்படுத்தியபோது, கன்சர்வேடிவ் கட்சிகளின் ஊழியர் சார்புடைய பிரிவு எதிரிடை அரசியல் விளைவுகளைப் பற்றி எச்சரிந்திருந்தது.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக, நிதிய மூலதனத்திற்கு இன்னும் அதிக சமுகநலக் குறைப்புக்கள் தேவைப்பட்டன. சமீபத்திய சிக்கன நடவடிக்கைகள், மேர்க்கெல் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டவை அவற்றின் முதல் படிதான். பெரும் வணிகச் செல்வாக்குக் குழுக்கள் இன்னும் பரந்த குறைப்புக்களை, பணிநீக்கம், தடைகள் மற்றும் நோயுற்றகாலத்திற்கான ஊதியம், பொதுவாக அனைத்து சமூகத் தரங்கள் குறைப்பு இவற்றிற்கு எதிரான சட்டப் பாதுகாப்பு அகற்றப்படவேண்டும் என்று கோருகின்றன.
ஆனால் இந்த நடவடிக்கைகள் கூடுதலான மக்கள் எதிர்ப்பிற்கு வகை செய்துள்ளன; ஆளும் உயரடுக்கு அதற்கு இன்னமும் தயாராக இல்லை. CDU/CSU, FDP ஆகியவற்றிற்கு இடையே பூசல்கள் அதிகரித்துள்ளது மட்டுமின்றி, கன்சர்வேடிவ் முகாமிலும் தீவிர பிளவுகள் ஏற்பட்டு இக்கட்சிகளையே சிதறடிக்கும் அச்சுறுத்தல் வந்துள்ளது.
வெளியுறவுக் கொள்கையிலும் மோதல்கள் தீவிரமாகியுள்ளன. போருக்குப் பிந்தைய காலத்தில், கிட்டத்தட்ட அனைத்துத் தரப்பினரும் ஜேர்மனியின் மேலைச் சார்பை ஒப்புக் கொண்டன, குறிப்பாக அமெரிக்காவுடன். 2005ல் பதவிக்கு வந்ததில் இருந்து அங்கேலா மேர்க்கெல் இந்த மரபைத் தக்க வைக்க முயன்று தீவிர அட்லான்டிக் கடந்த ஒற்றுமை உள்ள போக்கைக் காண விரும்புகிறார். ஆயினும்கூட, எல்லா மட்டங்களிலும் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் முக்கிய பங்கை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, அமெரிக்க அரசாங்கம் நெருக்கடியின் சுமையை ஐரோப்பாவிற்கு மாற்ற முயன்றுள்ளது. இந்த உறவுகளின் அழுத்தம் ஐரோப்பிய பெரும் சக்திகளுக்கு இடையே மோதல்களை பெருக்கியுள்ளது.
பிரெஞ்சு-ஜேர்மனிய பொருளாதாரக் கொள்கை பற்றிய திங்கள் நடந்த உச்சிமாநாட்டிற்கு முன்னதாக (அது குறுகிய அறிவிப்பில் ஒத்திப்போடப்பட்டுள்ளது) வர்ணனையாளர்கள் பிரெஞ்சு-ஜேர்மனிய உறவுகள் மிகக்குறைந்த மட்டத்தில் உள்ளதை சுட்டிக்காட்டினர். பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஜேர்மனிய சிக்கன நடவடிக்கைகளை தீவிரமாகக் குறைகூறியுள்ளார்; மேலும் யூரோப்பகுதியில் பெருகியுள்ள நெருக்கடியை ஒட்டி அதிக ஒத்துழைப்பையும் கோரியுள்ளார்.
இந்த உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கை நெருக்கடிப் பின்னணியில், ஆளும் வர்க்க்தின் செல்வாக்கு மிகுந்த தட்டுக்கள் மேர்க்கெல்-வெஸ்டர்வெல்ல அரசாங்கம் மிகவும் பலமிழந்துவிட்டது, பிரச்சினைகளைத் தீர்க்க இயலவில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டன. இந்நிலையில், சமூக ஜனநாயகவாதிகளும் பசுமைவாதிகளும் தங்கள் பணிகளை அமைப்புக்கள் என்ற முறையில், ஐரோப்பா, சர்வதேச அளவில் ஜேர்மனியின் நலன்களை காக்கவும் முன்னேற்றுவிக்கவும் இன்னும் தொடர்ச்சியாக இயலும் என்று முன்வந்துள்ளன.
பல வர்ணனையாளர்கள் மேர்க்கெல் அரசாங்கத்தைப் பற்றிய தங்கள் குறைகூறலை சமூக ஜனநாயகக் கட்சி, பசுமை வாதிகள் பற்றி புகழாரத்துடன் இணைத்துள்ளன. அதே நேரத்தில் சமூக ஜனநாயகவாதிகளை அரசாங்கத்துடன் இணைப்பது சமூகநலக் குறைப்புக்களின் மோசமான விளைவுகளைக் குறைத்து, நிதானப்படுத்தும் என்றும் கூறுகின்றன.
ஆனால் இதற்கு எதிரிடையானதுதான் உண்மையாகும். சமூகநலக் குறைப்புக்களை சுமத்துவது என்ற அனுபவம் வரும்போது சமூக ஜனநாயகக் கட்சி தன்னையே மிகச்சரியாக பாராட்டிக் கொள்கிறது. அதிகாரத்தில் பசுமைவாதிகளுடன் இணைந்து இருந்தபோது தொழிற்சங்கங்களின் நெருக்கமான ஒத்துழைப்புடன், சமூக ஜனநாயக கட்சி போருக்குப் பிந்தையகால வரலாற்றின் ஜேர்மனிய சமூகநல அரசாங்கத்தின் மீது நீண்டகால விளைவுகள் உடைய தாக்குதல்கள் அதிகமாகச் செயல்படுத்தியது. தற்போதைய மந்திரிசபை நெருக்கடி, ஆளும் உயரடுக்கை பெருவணிகம் மற்றும் வங்கிகள் கோரும் சமூகத் தாக்குதல்களை சிறந்த முறையில் செயல்படுத்தும் ஒரு அரசாங்க அமைப்புமுறை தேவை என்று தேட முற்பட வைத்துள்ளது. இதன் விளைவாக பெரும் வர்க்கப் போராட்டங்கள் தவிர்க்க முடியாதவை என்றாகின்றன.
இது தொடர்பாக Süddeutschen Zeitung ன் வார இறுதிப் பதிப்பில் மற்றொரு வர்ணனை தனித்து நிற்கிறது. இக்கட்டுரையில், செய்தியாளர் ஸ்ரெபான் உல்ரிச் ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவின் அரசியல் நிலைமையை பிரெஞ்சுப் புரட்சி தொடக்க காலத்துடன் ஒப்பிட்டுள்ளார். "1789 இக்கணத்தில் உயிர்த்துள்ளது." என அவர் எழுதுகிறார். 220 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவிற்கு இப்பொழுது ஐரோப்பாவில் புரட்சிகர உணர்வு தீவிரமில்லை என்றாலும், கிரேக்கத்தில் வெளிப்பட்டு வந்திருக்கும் அதிருப்தி, "வெட்டுக்களின் ஆட்சியின் கீழ்" என்பது கவலை அளிப்பதாக உள்ளது. "ஸ்பெயினும் போர்த்துகல்லும் அவற்றின் அரசாங்கங்கள் சந்தை அழுத்தங்களை முற்றிலும் அந்நாட்டு மக்களின் மீது மாற்றினால் இதே போன்ற நிலைமை ஏற்படும்" என்று அவர் எழுதியுள்ளார்.
மேர்க்கெல் நாட்டிற்கு ஒரு சேமிப்புப் பொதியை ஆணையிட்டுள்ளார்: இது "நலிந்தவர்கள்மீது பாதிப்பைக் கொடுத்து, வலுவனாவர்களை ஒதுக்கிவிட்டு, சமத்துவம், சகோதரத்துவம் என்ற மதிப்புக்களை புறக்கணிக்கிறது" என்று உல்ரிக் சேர்ந்துக் கொண்டுள்ளார். இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும். மரி ஆந்துவானெட் தீய எண்ணத்தில் செயல்படவில்லை; "ஆனால் பிரான்சில் என்ன புகைந்து கொண்டிருந்தது என்பதை தவறாக கணித்துக் கொண்டார்."
|