World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

European trade union head backs austerity measures

ஐரோப்பிய தொழிற்சங்கத் தலைவர் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கிறார்

Stefan Steinberg
16 June 2010

Back to screen version

ஐரோப்பிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் (ETUC) பொதுச் செயலாளர் ஜோன் மொங்ஸ் கடந்த வெள்ளியன்று ஆன்லைன் செய்திச் சேவை EUobserver க்கு வழங்கிய பேட்டி, ஐரோப்பிய அரசியல் ஸ்தாபனத்திலுள்ள முக்கிய நபர்களுக்கு இடையே திரைக்குப் பின்னே நடக்கும் விவாதங்கள் பற்றி கருத்துக்களை வெளியிடும் வகையில் உள்ளது.

இப்பேட்டியில், ஐரோப்பிய தொழிற்சங்கத் தலைவரின் கண்டம் முழுவதும் அரசாங்கங்கள் சுமத்தும் நடவடிக்கைகளானது 1930 ஆண்டுகளுக்கு திரும்பும் நிலையைக் கொடுக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது என்று அறிவிக்கிறார். ஐரோப்பாவில் இப்பொழுள்ள நிலைமை "மிக ஆபத்தானது" என்று மொங்ஸ் விவரிக்கிறார். அவர் தொடர்ந்து கூறுவது: "இது 1931 போன்றது. நாம் 1930 களின் பெருமந்த நிலையில் பின்செல்கிறோம், அப்பொழுது ஒரு இராணுவ சர்வாதிகாரத்தில் முடிவுற்றோம். இப்பொழுது அந்த நிலையை அடைந்துவிட்டோம் என்று நான் கூறவில்லை, ஆனால் இது பொருளாதார அளவில் மட்டும் அல்லாமல் அரசியலளவிலும் தீவிரமான தாக்கங்களை கொண்டுள்ளது."

ஐரோப்பாவின் அரசியல் ஸ்திரத்தன்மை வேறுயாருமல்ல ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான ஜோஸ் மானுவல் பரோசோ தெரிவித்துள்ள அச்சங்களை தான் வெளிப்படுத்துவதாக மொங்ஸ் கூறியுள்ளார்.

ஐரோப்பிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவருக்கும் ஐரோப்பிய ஒன்றிய அமைப்பின் பழமைவாத தலைவருக்கும் இடையே உள்ள சுமுகமான உறவைக் குறிக்கும் வகையில், மொங்ஸ் விவரிக்கிறார்: "கடந்த வெள்ளியன்று பரோசோவுடன் கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல் இன்னும் பிற நாடுகள் பற்றி என்ன செய்யமுடியும் என்பது குறித்து விவாதித்தேன். அவருடைய செய்தி அப்பட்டமாக இருந்தது. "இந்த கடும் சிக்கன நடவடிக்கைகளை அவர்கள் செயல்படுத்தாவிட்டால், இந்நாடுகள் நாம் ஜனநாயகம் என்று கூறும் விதத்தில் செயல்படுவதில் இருந்து முற்றிலும் மறைந்துவிடக் கூடும். அவற்றிற்கு வேறு வழியில்லை..., அவர் மிக, மிக கவலைப்படுகிறார். கடன் நிலைமையினால் ஐரோப்பாவில் ஜனநாயகங்கள் சரியும் தோற்றத்தை முன்கூட்டிக்கூறும் விதத்தில் எங்களை அதிர்ச்சிக்கு உட்படுத்தினார்."

சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்படாவிட்டால், சர்வாதிகாரங்கள் தான் ஒரே மாற்றீடு என்று பரோசாவால் தெரிவிக்கப்பட்ட நிலையில், மொங்ஸ் ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நாணய நிதியமும் கோரும் கடுமையான நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதற்கு தான் இயன்றதைச் செய்ய உள்ளதாக மொங்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

கிரேக்கமும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் வேறுவழியின்றி ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆணையிடும் விதிகளின்படி கடன்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று மொங்ஸ் கூறுகிறார். அதாவது, மிகக் கடுமையான சிக்கனத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

EUobserver இடம் அவர் கூறுவதாவது: "கிரேக்கம் மாற வேண்டும் என்பது வெளிப்படை. அது கடினமாகச் செலவுகளைக் குறைக்க வேண்டும்....EU--IMF ன் பிணை எடுப்பு விதிகள் ஒன்றுதான் கிரேக்கம் பெற்றுள்ளது. அவர்களுக்கு வேறு வாய்ப்பு ஏதும் இல்லை. என்ன கொடுக்கப்பட்டுள்ளதோ அதை அவர்கள் செய்ய வேண்டும்."

"EU--IMF விதிகளை நிறைவேற்றத் தான் நல்ல முயற்சிகளைச் செய்துவருவதாக கிரேக்கம் காட்டினால்" மொங்ஸின் கருத்துப்படி, கிரேக்கத்தின் தொடுவானில் தெரியும் ஒரே ஒளி, அதன் கடன் கொடுக்கும் முறைகளை அது மறுகட்டமைப்பது என்பது ஆகும்.

மொங்ஸின் கருத்துப்படி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் விதிக்கும் ஆணையின்படி கடுமையான விதத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய "வேறு வழி இல்லாத" ஏனைய நாடுகள் அயர்லாந்து, ஹங்கேரி மற்றும் பால்டிக் நாடுகள் ஆகும்.

மொங்ஸின் கருத்துக்கள் வந்துள்ள நேரமானது முக்கியத்துவம் வாய்ந்தது. சமீப வாரங்களில் பல அரசாங்கங்களும் ஐரோப்பா முழுவதும் வரவிருக்கும் மாதங்களில் மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கை தொகுப்புக்களை செயல்படுத்தப்பட இருப்பதை அறிவித்துள்ளன. இந்த நடவடிக்கைகளின் பொதுக்கூறுபாடுகள் ஊதியங்களிலும், ஓய்வூதியங்களிலும் பெரும் வெட்டுக்கள் என்பதுடன் சமூக நலன்புரி அமைப்பு முறைகளிலும் பரந்த தாக்குதல்கள் என்பது ஆகும்.

வெட்டுக்களின் முக்கிய நோக்கம் ஐரோப்பிய அரசாங்கங்கள் கண்டத்தின் முக்கிய வங்கிகள், நிதிய நிறுவனங்களின் கருவூலங்களுக்குள் இன்னும் நிறைய பணத்தை உட்செலுத்துவது ஆகும். இந்த வாரத் தொடக்கத்தில் பிரெஞ்சு மற்றும் ஜேர்மனிய வங்கிகள் கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் டாலர்களை ஐரோப்பியப் பொருளாதாரங்களில் மிக வலுவற்றதற்கு, ஸ்பெயின், கிரேக்கம், போர்த்துக்கல் மற்றும் அயர்லாந்திற்கு கொடுத்துள்ளன என்பது தெரிய வந்துள்ளது. இந்தப் புள்ளிவிவரம் பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாகும். ஐரோப்பாவில் பெருகிய நலிந்த பொருளாதார நாடுகள் தங்கள் கடன்களைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில், வங்கிகளை அரசு பிணை எடுப்பது தவிர்க்க முடியாததாகும்.

ஏற்கனவே மேற்கு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சுமத்தப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகள் பல தொடர்ச்சியான வேலை நிறுத்தங்களையும் எதிர்ப்புக்களையும் எதிர்கொண்டுள்ளன. பொதுத்துறை ஊதிய வெட்டுக்கள் 25 சதவிகிதம், ஓய்வூதியக் குறைப்புக்கள் 15 சதவிகிதம் என்று அப்படியே செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் ருமேனியாவில் தொழிலாளர்கள் நாட்டின் ஸ்ராலினிச ஆட்சி சரிந்ததற்குப் பின்னர் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். செவ்வாயன்று அரச ஊழியர்கள் மற்றொரு வேலைநிறுத்த நடவடிக்கையை புக்காரஸ்ட் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு முன் நடாத்தி திட்டமிடப்படும் ஊதியக் குறைப்புக்களுக்கு எதிராக ஆர்ப்பரித்தனர்.

இத்தகைய பரந்த அடுக்குகளின் உழைக்கும் மக்கள் இயக்கம் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பல ஐரோப்பிய நாடுகளில் நடப்பதுதான் பிரஸ்ஸல்ஸில் எச்சரிக்கை மணியை அடிக்க வைத்துள்ளது. இது ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்திற்கும் கண்டத்தின் தொழிற்சங்கங்களுக்கும் இடையே இருக்கும் உறவுகளையும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களில் மிருகத்தனமான குறைப்புக்களுக்கு ஒரே மாற்றீடு சர்வாதிகாரம் தான் என்று பரோசோ எச்சரிக்கிறார். இது தொழிற்சங்கங்களை கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்துவது அல்லது முற்றிலுமாக மூடுவது என்ற உட்குறிப்புக்களைக் கொண்டுள்ளது. இதற்கு விடையிறுக்கும் வகையில் மொங்ஸ், தான் தொழிற்சங்கக் கருவியின் அனைத்து இருப்புக்களையும் பயன்படுத்தி வெட்டுக்களுக்கு எதிரான எதிர்ப்புக்கள் திரண்டு விடாமல் பார்த்துக் கொள்வதாக ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு அடையாளம் காட்டியுள்ளார்.

வரலாறு பலமுறை நிரூபித்துள்ளது போல், வேலைகள் மற்றும் வாழ்க்கைத்தரங்கள் மீதான தாக்குதல்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு தோல்வி அடைவது என்பது சர்வாதிகாரத்தை தடுப்பதற்குப் பதிலாக சர்வாதிகாரத்திற்கு முன்னோடியாக அமையும். முதலாளித்துவத்தின் உலக நெருக்கடிக்கு "ஜனநாயகத் தீர்வு" ஏதும் இல்லை, முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து சோசலிசத்தை நிறுவ புரட்சிகரமான முறையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதை தவிர, வேறு வழி ஏதும் கிடையாது. இதை மொங்ஸ் மாற்றமின்றி எதிர்க்கிறார். அவர் சர்வதேச அளவில் தொழிற்சங்கங்கள் சார்பில் பேசுகிறார். தொழிலாள வர்க்கப் புரட்சி அல்லது முதலாளித்துவ சர்வாதிகாரம் இவற்றிற்கு இடையே விருப்புரிமை என்று வரும்போது, இவர்கள் ஒருமனதாகப் பிந்தையதைத்தான் தேர்ந்தெடுப்பர்.

ஐரோப்பா 1930 களுக்கு பின்னர் சர்வாதிகாரம் என்னும் மிகப் பெரிய ஆபத்தை எதிர்கொள்கிறது என்பதை ஒப்புக்கொண்டபின், மொங்ஸ் ETUC தான் முடிந்த மட்டும் பேசாமல் இருப்பது என்றுதான் திட்டமிடுகிறது என்பதைத் தெளிவாக்கியுள்ளார். ETUC ஐரோப்பிய தொழிலாளர்களால் எந்த பரந்த நடவடிக்கையும் இராது என்று கூறிவிட்டது. மாறாக ETUC ஐரோப்பா முழுவதும் பரந்த "நடவடிக்கை தினத்தை" செப்டம்பர் 29 அன்று (அதாவது இன்னும் மூன்று மாத காலத்திற்குப் பின்னர்!) நடத்தத் திட்டமிட்டுள்ளது. அது பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய நிதிமந்திரிகள் கூடுவதுடன் இணைந்து நடக்கும்--வேறுவிதமாகக் கூறினால் ஒரு கெடுதலையும் கொடுக்காத எதிர்ப்பு.

தன்னைப் பேட்டி கண்டவரிடம் இந்த ஒருநாள் நடவடிக்கையும் வெகுஜன வேலைநிறுத்த நடவடிக்கையாக இருக்காது என்று மொங்ஸ் உத்தரவாதம் அளிக்கிறார். "நாங்கள் உறுப்பினர்கள் வேலைநிறுத்த நடவடிக்கை எடுக்க ஊக்கம் கொடுக்கிறோம். இது பல நடவடிக்கைகள் தொகுப்பில் ஒன்றாக இருக்கும், ஆனால் இது ஒரு பொது வேலைநிறுத்தம் அல்ல" என்று மொங்ஸ் வலியுறுத்துகிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் மற்றும் IMF உடன் ஒற்றுமையுணர்வு என்னும் மொங்ஸின் வெளிப்படையான கருத்து, பிரான்ஸில் புதிய முதலாளித்தவ எதிர்ப்புக் கட்சி, ஜேர்மனியில் இடது கட்சி, பிரிட்டனில் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி, இத்தாலியில் Rifondazione Communista, கிரேக்கத்தில் SYRIZA, Antaraya ஆகிய அனைத்து அரசியல் அமைப்புக்கள் பற்றியும் ஒரு பேரழிவுக் குற்றம் சாட்டல் ஆகும். இவை அனைத்தும் தொழிலாளர்கள் வெட்டுக்களுக்கு எதிர்ப்பு செய்வது என்பது தொழிற்சங்கங்களின் முடிவிற்கு விடப்பட வேண்டும் என்று கூறுபவை.

தொழிற்சங்கங்களின் முற்றிலும் ஊழல் மிகுந்த, ஜனநாயக விரோத வலதுசாரித் தன்மையானது வங்கியாளர்கள், அவர்களுடைய அரசியல் குரல் ஆகியவற்றிற்கு சற்றும் விரோதப்போக்கு குறையாத எதிரியைத்தான் தொழிலாளர்கள் முகங்கொடுக்கின்றனர்.

கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பயனுள்ள போராட்டத்தின் தொடக்கம் என்பது ஐரோப்பிய அளவில் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், அவற்றின் குட்டி முதலாளித்துவ எடுபடிகள் ஆகியோருக்கு எதிரான கிளர்ச்சியானது தொழிலாள வர்க்கத்தின் புதிய வடிவமும் ஜனநாயக அமைப்புக்களும் தொழிலாளர்களின் அதிகாரத்திற்கும், சோசலிசத்திற்காகவும் போராடும்.