WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : கலை
விமர்சனம்
San Francisco International Film Festival 2010 Part 4: An Indian masterpiece
சான்பிரான்சிஸ்கோ சர்வதேச திரைப்பட விழா 2010 பாகம் 4: ஒரு தலைசிறந்த இந்திய படைப்பு
By Joanne Laurier
21 May 2010
Back to screen version
இது ஏப்ரல் 22 முதல் மே 6 வரையில் நடைபெற்ற 2010 சான்பிரான்சிஸ்கோ சர்வதேச திரைப்பட விழா குறித்து எழுதப்பட்ட தொடர் கட்டுரைகளில் நான்காவது பாகமாகும்.
சான்பிரான்சிஸ்கோ திரைப்பட விழாவில் பிரபல இந்திய திரைப்பட இயக்குனரான சத்யஜித் ரேயின் படைப்பு திரையிடப்பட்டிருந்தது. முன்னதாக, அவருடைய முதல் திரைப்படமான பதர் பாஞ்சாலி 1957ஆம் ஆண்டு விழாவில் திரையிடப்பட்டது. இந்த விழாவில், ரேயின் திரைப்படங்கள் காட்டப்பட்ட அளவிற்கு வேறெந்த இயக்குனரின் திரைப்படங்களும் காட்டப்படவில்லை. 1992ல், அவரை கௌரவிக்கும் வகையில் இயக்குனர் பிரிவில் வாழ்நாள் முழுமைக்குமான அகிரா குரோசவா விருது அவருக்கு வழங்கப்பட்டது.
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் பிறந்த ரே (1921-1992), இந்திய திரைப்பட வரலாற்றில் இருந்த மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராவார். திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் உட்பட 36 திரைப்படங்களை இந்த பன்முக கலைஞர் இயக்கி இருக்கிறார். அவருடைய படைப்புகளில் மிகவும் பிரபலமாக பேசப்படுவது Apu trilogy
(அப்புவின் மூன்று பாகங்கள்): ஓர் ஏழை வங்காள குடும்பத்தின் கடுமையான வாழ்வாதார போராட்டத்தை கையாண்டிருந்த பதர் பாஞ்சாலி (1955), இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் பெருமளவிலான சர்வதேச விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்த முதல் படமாகும். அடுத்த இரண்டு - அபராஜிதோ (1956), மற்றும் அப்புர் சன்சார் (1959). இந்த மூன்று திரைப்படங்களுமே, பிபூதி பூஷன் பானர்ஜியின் சுயவரலாற்று நாவல்களான, ஒரு நவீன தொல்சீர் வங்காள இலக்கியத்தின் அடித்தளத்தில் அமைந்திருந்தன.
1947ல் ரேயின் துணையுடன் ஸ்தாபிக்கப்பட்ட கல்கத்தா திரைப்படக் கழகம், அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் சோவியத் திரைப்படங்களைத் திரையிட்டது. குறிப்பாக, மிகப்பெரிய ஒரு துயரமாக, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை செய்யப்பட்ட ஆண்டில் இந்தக் கழகம் உருவாக்கப்பட்டது. அதற்கு பின்னர் ஒரு மில்லியன் இந்து, சீக்கியர்கள், முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். இதுவரை பதிவுசெய்யப்பட்டதிலேயே மிகப்பெரிய மனித இடப்பெயர்வாக, சுமார் 14 மில்லியன் மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். இந்த சமூக கொடுமையின் தாக்கம், சந்தேகத்திற்கு இடமின்றி, உலக சினிமா மீதான ரேயின் தனிச்சார்பற்ற விருப்பத்தையும் சேர்த்து, அவரின் பரிணாமத்தை வடிவமைக்க உதவியது.
1949ல் கொல்கத்தாவில் பிரெஞ்சு திரைப்பட இயக்குனர் ஜோன் ரேனுவாவை சந்தித்த பின்னர், ரே சுயாதீனமாக திரைப்படங்களை இயக்க முடிவெடுத்தார். 1951இல், ரேனுவா வங்காளத்தில் The River என்ற பட வேலைகளில் இருந்த போது, அவருக்கு ரே உதவியாக இருந்தார். விக்டோரியா டி சிகாவின் Bicycle Thieves (1948) திரைப்படமும் ரேயின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. 1950இல் ஐரோப்பா விஜயத்தின் போது இப்படத்தை அவர் பார்த்தார். பல மாதங்கள் அங்கே இருந்த போது, அவர் பார்த்த சுமார் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் இந்த இத்தாலிய நவ-யதார்த்த தொல்சீர் படமும் ஒன்றாகும்
1950களின் மத்தியில், அமெரிக்க திரைப்பட இயக்குனர் ஜோன் ஹூஸ்டன் கொல்கத்தா வந்திருந்த போது ரேயினால் கவரப்பட்டார். ஜப்பானிய திரைப்பட இயக்குனர் அகிரா குரோசோவாவும் கூட இந்த இந்திய இயக்குனருக்கு அறிமுகமாகி இருந்தார். ரேயைக் குறித்து குரோசோவா கூறுகையில் , ""ரேயின் படங்களைப் பார்க்கத்திருக்கவில்லை என்றால், உலகில் சூரியனையோ அல்லது நிலவையோ ஒருபோதும் பார்க்காமல், வாழ்ந்து கொண்டிருப்பதைப் போன்றதாகும்" என்றார். சார்லின் சாப்ளினைப் போலவே, ரேயும் ஓர் இசையமைப்பாளராகவும் விளங்கினார். அவருடைய பல படங்களுக்கு அவரே இசையமைத்து, சொந்த கதை-வசனங்களையும் எழுதினார்.
பல்வேறு கலாச்சார பாதிப்புகளைக் கொண்டிருக்கும் ரேயின் சினிமா, 1950களின் மத்தியில் வெளியான வியாபார நோக்குடைய இந்தி சினிமாக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்தது. இந்தியாவின் "தேசிய" திரைப்பட பாணியான, கற்பனைகளும், பாலிவுட்டின் ஆடல்-பாடலுடனும் கூடிய சினிமாத்தனத்திலிருந்து ரேயின் திரைப்பட பாணி மாற்று பாரம்பரியத்தையும், திரைப்பட இயக்கத்தில் ஓர் ஆழமான யதார்த்த வலியையும் கொண்டிருந்தது. ரேயின் திரைப்படங்கள் ஆழ்ந்த உலகளாவிய விஷயங்களை வெளிப்படுத்தின.
ரேயின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் ஜல்சாகர் (1958) [இசை அரங்கம்], இந்த ஆண்டு சான்பிரான்சிஸ்கோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. முக்கிய திரைப்படங்களைப் பாதுகாப்பதற்காகவும், பழுதடைந்தவைகளைச் சரிசெய்வதற்காகவும் 1990இல் இயக்குனர் மார்டின் ஸ்கோர்சிஸினாலும், ஏனையவர்களாலும் அமைக்கப்பட்ட திரைப்பட அமைப்பின் நிதியுதவி உடன், ஜல்சாகர் திரைப்படம் அகாடமி திரைப்பட ஆவணக்காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. (மிகப் பொருத்தமாக, ரேனுவாவின் The River திரைப்படமும் அந்த அமைப்பின் திட்டங்களில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு திரைப்படமாகும்.) திரைப்பட அமைப்பின் கருத்துப்படி, "ரேயின் திரைப்படம் அகாடமி திரைப்பட ஆவணக்காப்பகத்தில் சேர்க்கப்பட்ட போது, மிகவும் சேதமடைந்து நிறைய வேலை செய்ய வேண்டி இருந்தது. அதனை முழுமையாக கொண்டு வருவதென்பது ஓர் அசாதாரணமான நிலையில் இருக்கிறது."
வங்காள எழுத்தாளரான தாராஷங்கர் பானர்ஜியின் ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் குறித்து ரே குறிப்பிட்டதாவது: "அது இசையால் அழகுபடுத்தப்பட்ட, அழுகிப்போன பிரபுத்துவ சமுதாயத்தின் கதை."
1930களில் வங்காளத்தில் (வடகிழக்கு இந்தியாவில்), ஹூஜூர் பிஸ்வம்பார் ராய் (சஹாபி பிஸ்வாஸ்) என்பவர் இறுதியாக இருந்த ஜமீன்தார்களில் ஒருவராக இருக்கிறார். உண்மையில், 19ஆம் நூற்றாண்டில் செழுமைப்படுத்திய பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளால் தொன்றுதொட்டு இருந்து வந்த வரி-சேகரிப்பாளர்கள் நிலச்சுவான்தாரர்களாக உருவாக்கப்பட்டார்கள்.
ஆற்றில் உடைமைகள் அடித்துச் செல்லப்பட்டு கொண்டிருப்பதை, அந்த ஜமீன்தார் தம்முடைய பாழடைந்து போன மாளிகையின் மாடியிலிருந்து பார்க்கிறார். பின்னர் கம்பீரமாக ஒரு சாய்வு நாற்காலியில் சாய்கிறார். "என்ன மாதம் இது?" ராய் எவ்வித சலனமும் இல்லாமல் அவருடைய வேலையாட்களில் ஒருவரிடம் கேட்கிறார். தம் முதலாளியின் குழப்பமான மனநிலையை அந்த வேலையாள் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார். அந்த நிலச்சுவான்தார் யதார்த்தத்திலிருந்து எந்தளவிற்கு விலகிச் சென்று, "காலங்கடந்து" இருக்கிறார் என்பதை இந்த கேள்வி குறிப்பிட்டுக் காட்டுவதாக இருக்கிறது.
அவருடைய பிரபுத்துவ இரத்தத்தில் ஒருகாலத்தில் அவரைத் தூக்கி நிறுத்தி இருந்த, கௌரவம் இன்னும் அவரிடம் சிறிது இருந்தது. பழம்பெருமைகளையும், பெருமித கற்பனைகளையும் அவர் கொண்டிருந்தார். ஆனால், அவருடைய பணம் வேகமாக கரைந்து கொண்டிருந்தது. உடன் குடியிருக்கும் அவருக்கு மிக நெருக்கமான ஒருவனும், வஞ்சமாக பணம் சேர்க்கும் ஒரு கீழ்-ஜாதி அற்பனுமான மாஹிம் கங்குலி, ஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய சொத்துக்களைக் கைப்பற்றுகிறான். தமக்கு புதிய வீடு, மின்சாரம், கார் போன்றவற்றை பெறும் அளவிற்கு கங்குலி சொத்து வைத்திருக்கிறான். ஆனால் ராயினால், அவர் முன்னர் பேணி வளர்த்த வயதாகி போன குதிரையையும், யானையையும் மட்டும்தான் கட்டிக்காப்பாற்ற முடிகிறது.
ராய், இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். குறிப்பாக அவருடைய இசை அரங்கம் அவருக்கு மிகவும் பிடிக்கும். அதன் பிரமாண்டம், மெழுகுவர்த்தி ஏற்றப்பட்ட சரவிளக்குகள் மற்றும் தூண்கள் (சாயம் போயிருந்தன) ஆகியவை அந்த பழைய பிரமாண்டத்தின் சாயல்களாக இருந்தன. அவருடைய மகனுக்கு இசை கற்று கொடுப்பதற்கான முதல் நாளில், பிரபலமான இசைக்கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்ததை ராய் நினைவு கூர்கிறார். அது செல்வசெழிப்பின் அடையாளமாக இருந்தது. ஆனால் அந்த ஏற்பாடுகள் எல்லாம் அவருடைய மனைவியின் நகைகளை ஈடு வைத்து செய்யப்பட்டவை.
அடுத்த காட்சி புயலடிக்கும் ஓர் இரவில் நடக்கிறது. இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது, அவருடைய கோப்பையில் ஒரு பூச்சி சிக்கி விடுகிறது. அவர் இதையொரு அபச சகுனமாக பார்க்கிறார். இதற்கிடையில், வெளியே சென்றிருந்த அவருடைய மகனையும், மனைவியையும் இந்த நிகழ்ச்சிக்காக குறிப்பிட்ட நேரத்தில் திரும்பும்படி அவர் கட்டளையிட்டிருந்த நிலையில், அவர்கள் புயலில் சிக்கி இறந்துவிடுகிறார்கள். இசை அரங்கம் பூட்டப்படுகிறது. வயதான பிரபு மன அழுத்தத்திற்கு உள்ளாகிவிடுகிறார்.
நீண்டகாலத்திற்குப் பின்னர் சகஜ நிலைக்குத் திரும்பும் ராய், கங்குலியுடன் போட்டியிடவும், அந்தந்த "இரத்தத்திற்கே" அது-அது உரியது என்பதை நிரூபிப்பதற்கும் மீண்டும் களத்தில் இறங்குகிறார். கடைசியாக ஒரு இசை நிகழ்ச்சிக்காக அவர் மிச்சமிருக்கும் தம்முடைய ஆதாரவளங்களை எல்லாம் செலவழிக்கிறார். அவருடைய மூதாதையர்களின் ஓவியங்களைப் புகழுகையில், வரையப்பட்ட அவருடைய சொந்த படத்தின் மீது ஒரு சிலந்தி ஊர்வதைக் கவனிக்கிறார். அவருடைய வீட்டில் உள்ள சிறிய உயிரினங்கள் கூட மதிப்பதில்லை. இந்த கொடுமையான யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லாமல் இருக்கிறது.
ஜல்சாகர் ஒரு நேர்த்தியான திரைப்படம். அதிலிருக்கும் சோகமான தொனி, ஒரு சமுதாய காலக்கட்டத்தின் மரண வேதனைகளை எடுத்துக்காட்டுகிறது. கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஹாபி பிஸ்வாஸின் சிறந்த நடிப்பைச் சுற்றி ஒன்று கலந்திருக்கும் ஓவியங்கள் வரலாற்று நனவுடன் தங்கியிருக்கின்றன. (வங்காளத்தின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான பிஸ்வாஸ் [1900-1962] ஒரு வாகன விபத்தில் இறந்த பின்னர், உயர்ந்த தொழில்திறமைக்கு சொந்தக்காரர் என்று ஒரேயொரு நடுத்தர வயதுடைய நபரைக் கூட தம்மால் குறிப்பிட்டு எழுத முடியவில்லை என்று ரே குறிப்பிட்டார்.)
சினிமா எப்போதாவது தான் இதுபோன்ற தலைச்சிறந்த உயர்ந்த கலையையும், அரசியலையும் ஒன்று சேர்த்து பெறுகிறது. இசை சார்ந்த இடைக்காட்சிகள் வரும் போது, படத்தின் சுவை நுணுக்கமாகவும், இதமாகவும் அளிக்கப்பட்டிருக்கிறது. படத்தின் இறுதி காட்சியில் இந்திய பாரம்பரிய நடன கலைஞரான ரோஷன் குமாரினியால் நிகழ்த்தப்படும் நடனக்காட்சியை எவ்வளவு விவரித்தாலும் மிகையாகாது. சலங்கையின் ஸ்ருதிக்கு ஏற்ப குமாரியின் முக பாவங்களும், நளினங்களும் கதக் நடனத்தைப் பற்றி ஒரு கதையையே கற்றுக் கொடுக்கின்றன. (கதக் என்பது "ஒரு கதையைச் சொல்பவர்" என்பதைக் குறிக்கும் சொல்.) இந்த அற்புதமான நடனத்தை யூ-டியூப்பில் காணலாம்.
இந்த படத்தில் ராய் கதாபாத்திரம் மிகவும் சிக்கலாகவும், சிறப்பாகவும் கையாளப்பட்டிருக்கிறது. அவர் தாமே ஒரு பழஞ்சின்னமாக, பல காட்சிகளில் பரிதாபத்திற்குரியவராக தெரிகிறார். அவருடைய தலைவிதி தனிப்பட்ட சோகம் இல்லை; அது தவிர்க்க முடியாத ஒரு சமூக நிகழ்வுப்போக்கின் விளைவாக இருக்கிறது.
பழைய ஆளும் வர்க்கங்களின் காலம் முடியும்போது, எப்போதுமே அதன் ஈர்ப்பான, கவர்ச்சிகரமான, வலி நிறைந்த பக்கத்தைக் கொண்டிருக்கிறது. இசை மீது அந்த நிலச்சுவான்தார் கொண்டிருக்கும் ஈர்ப்பு வெறுமனே போலியானதல்ல. மேலும் இந்த படம் ஒரு கேள்வியையும் முன்நிறுத்துகிறது, ஒருவேளை கவனக் குறைவாக இருக்கலாம் - அதாவது, புதிய முதலாளித்துவ மேற்தட்டும் கலையின் மீது இதே உணர்வுகளை கொண்டிருக்குமா? ராயின் முடிவு ஷேக்ஸ்பியரின் தொனியைக் கொண்டிருக்கிறது. அது ஹேம்லெட்டில் இருக்கும் அரசர் பிளேயரின் வார்த்தைகளை நினைவுக்குக் கொண்டு வருகிறது: "நம்முடைய விருப்பங்களும், தலைவிதிகளும் எதிரெதிர் திசைகளில் ஓடுகின்றன/ நம்முடைய புலன்கள் தொடர்ந்து செயலிழந்து வருகின்றன,/ நம்முடைய எண்ணங்கள் தான் நம்முடையதாக இருக்கின்றன, ஆனால் அவற்றின் முடிவு நம்முடைய கைகளில் இல்லை."
கோகோ சானெல் & இகோர் ஸ்ட்ராவென்ஸ்கி படத்தில், போர்ச்சுக்கலில் பிறந்த இயக்குனர் ஜேன் கௌனென், பிரெஞ்சு ஆடை வடிவமைப்பாளர் சானெலுக்கும், ரஷ்ய இசையமைப்பாளர் ஸ்ட்ராவென்ஸ்கிக்கும் இடையிலான உறவை கையாள்கிறார். அப்படத்தின் ஆடம்பரமான ஆடை அலங்காரங்களும், மேல்பூச்சுகளும் ஒரு சித்தாந்த ரீதியான, நாடகபாணியிலான பலவீனத்தை மறைக்க முயல்கின்றன.
பாரீசில் 1913ல், யாராலும் அறியப்படாத கேப்ரீயல் "கோகோ" சானெல் (1883-1971) எலிசே அரங்கத்தில் இகோர் ஸ்ட்ராவென்ஸ்கியின் (1882-1971) பிரபலமான "The Rite of Spring" இசை நிகழ்ச்சியை கேட்கிறார். அந்த இசை வடிவத்தில் இருக்கும் ஒரு தீவிரத்தன்மை காரணமாக ஓர் எழுச்சி ஏற்படுகிறது.
ஏழு ஆண்டுகளுக்கு பின்னால், ஒரு வியாபார வெற்றியாளராக மாறியிருக்கும் சானெல், ரஷ்ய புரட்சியினால் ஓர் அகதியாக வறுமையில் வாடும் ஸ்ட்ராவென்ஸ்கியைச் சந்திக்கிறார். தம்முடைய ஆடம்பரமான வீட்டிலேயே அவரும், அவருடைய குடும்பமும் தங்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். ஸ்ட்ராவென்ஸ்கியின் மனைவி காசநோயால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்த இசையமைப்பாளர் உணர்வுபூர்வமாக இசையமைத்து கொண்டிருக்கிறார்; வடிவமைப்பாளரோ அவருடைய அற்புதமான படைப்புகளில் மூழ்கிப் போகிறார். விளைவுகள் துயரமாக இருந்தாலும் கூட, காதல் என்பது தப்பிக்க முடியாததாக இருக்கிறது. ஆனால் படைப்புத்திறனும், வியாபார போக்கும் தடுக்க முடியாததாக உள்ளது. கோகோ அவருடைய மிக ஆடம்பரமான வாசனை திரவியத்தை உருவாக்குகிறார்.
சானெலாக நடித்திருக்கும் அன்னா மௌக்லாசிஸ் அருமையாக இருக்கிறார்; அவருடைய ஆடை வடிவமைப்புகளும் சிறப்பாக இருக்கின்றன. அதேசமயம் மேட்ஸ் மெக்கல்சன் அந்த இசையமைப்பாளர் கதாபாத்திரத்தை நகைச்சுவையற்றதன்மையோடும், ஒடுங்கிய தன்மையோடும் காட்டுகிறார். முதலாம் உலக போர் மற்றும் ரஷ்ய புரட்சியின் காலகட்டமும் சிறிது காட்டப்பட்டிருக்கிறது.
உண்மையில், திரைப்பட தயாரிப்பு குறிப்புகள், செயற்கையாக உருவாக்கப்பட்ட சானெல் மற்றும் ஸ்ட்ராவென்ஸ்கி வாழ்ந்த இடங்களைப் பற்றிய தெளிவை அளிக்கின்றன. அரங்கம் அமைப்பதற்காக ஜோன் கொக்தோ மற்றும் பப்லோ பிகாசோ ஆகியோருடன் சானெல் இணைந்து பணியாற்றினார்; அவர் ஸ்ட்ராவென்ஸ்கிக்கும், இம்ப்ரெசாரியோ செர்ஜி டியாக்லெவ்வுக்கும், எழுத்தாளரும் கவிஞருமான ரேமாண்ட் ராடிகியட்டிற்கும், மற்றும் கற்பனைக் கவிஞரான பியர் ரெவர்டிக்கும் நிதி உதவிகள் அளித்தார்.
"நான் ஒரு கால் நூற்றாண்டு காலம் ஆடை அலங்காரங்களை உருவாக்கினேன். ஏன்? ஏனென்றால் என்னுடைய சகாப்தத்தோடு எப்படி தொடர்புகொள்ள வேண்டும் என்பதை நான் அறிந்திருந்தேன்" என்று அவர் கூறிய வரிகள் மூலமாக அவர் குறிக்கப்படுகிறார்.
1920ல், கிடைத்திருக்கும் தகவல்களின்படி, ஸ்ட்ராவென்ஸ்கி பாரீசில் கொக்தோ, பிகாசோ மற்றும் பிரபல நடன இயக்குனர் ஜோர்ஜ் பாலன்செனுடன் இணைந்திருந்தார். 1938 மற்றும் 1939இல் முறையே அவருடைய மகள் மற்றும் மனைவியின் மரணத்திற்குப் பின்னர், ஸ்ட்ராவென்ஸ்கி ஹாலிவுட்டில் இசையமைப்பாளர் அர்னால்டு ஸ்கோன்பெர்க்கின் வீட்டிற்கருகில் குடியமர்ந்தார். அங்கே ஆலோசகர் ஓட்டோ க்ளெம்பெரெர், எழுத்தாளர்கள் தாமஸ் மேன் மற்றும் பிரான்ஜ் வெல்ஃபெர், மற்றும் பியானோ வாசிப்பாளர்கள் ஆர்தர் ரூபின்ஸ்டென், அத்துடன் பிரிட்டன் எழுத்தாளர்கள் டைலேன் தாமஸ், ஆல்டௌஸ் ஹக்ஸ்லே, கிறிஸ்டோபர் ஈஷர்வுட் மற்றும் டபிள்யூ. எச். ஆடன் போன்ற நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பல ஐரோப்பியர்களை அவர் சந்தித்தார். சார்லி சாப்ளினின் பட வெற்றிகளில் அவருக்கு ஸ்ட்ராவென்ஸ்கி ஆலோசனைகள் வழங்கினார்.
திரைப்பட தயாரிப்பு குறிப்புகளின்படி: "1913இல் இருந்து, அந்த வரலாற்று பணி [‘The Rite of Spring’] நவீன சகாப்தத்தின் முன்னுதாரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் நிஜின்ஸ்கி, மௌரைஸ் பெஜார்ட், பினா பௌஸ்ச், மார்தா கிரஹாம் மற்றும் ஆங்கிலின் ப்ரெல்ஜோகாஜ் ஆகியோர் இந்த இசை நிகழ்ச்சியை அரங்கேற்றி இருந்தாலும் கூட, அதன் பிறகும், இது அனைத்து காலத்திற்குமான மிகச் சிறந்த நடன அமைப்பைக் கொண்ட இசை நடனங்களாக விளங்குகிறது. பெருமதிப்பிற்கு அப்பாற்பட்டு, ‘The Rite of Spring’ இசைநடனம் தலைச்சிறந்த சிந்தனைகள் மற்றும் கலைச்சார சுதந்திரத்தின் ஒரு வாழும் அடையாளமாக விளங்குகிறது."
இந்த அசாதாரணமான காலகட்டங்களைப் பற்றியும், பிரபலங்களைப் பற்றியும் எதுவுமே இந்த பகட்டான வாழ்க்கை வரலாற்றில் கொண்டு வரப்படவில்லை.
சான்பிரான்சிஸ்கோ திரைப்பட விழாவில் விமர்சகர் ரோஜர் எபெர்ட்டினால், 2008ஆம் ஆண்டு வெளியான பிரெஞ்சு இயக்குனர் எரிக் ஜோன்காவின் ஜூலியா படம் அறிமுகப்படுத்தப்பட்டது. "கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக உலக சினிமாவை ஏற்றுக்கொண்டு, மக்களின் அறிவு வளர்ச்சியில் பங்கெடுத்திருப்பதற்காக" மே 1இல் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் ரோஜர் எபெர்ட் கௌரவிக்கப்பட்டார். பிலிப் கௌஃப்மேன், எர்ரோல் மோரிஸ், ஜேசன் ரியட்மேன் மற்றும் டெர்ரி ஜிவிக்ஆஃப் ஆகிய திரைப்படக் கலைஞர்களுக்கு நினைவாஞ்சலி செலுத்தப்பட்டது. திரைப்பட விமர்சனத்திற்காக ஒருபோதும் அளிக்கப்பட்டிராத முதல் ப்லிட்ஜெர் (Pulitzer Prize) விருது 1975இல் அவருக்கு வழங்கப்பட்டது.
ஜோன்காவின் படத்தில் டில்டா ஸ்வின்டன் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம், குறிப்பாக, அசாதாரண நடவடிக்கைகளைக் குறித்து எவ்வித இலக்குமின்றி எடுக்கப்பட்ட முன்முயற்சியாக இருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பு குறிப்புகள் அதைச் சரியாக கூறுகின்றன: "ஜூலியா ஒரு குடிகாரியாக... ஏமாற்றுக்காரியாக, நம்பிக்கைக்குரியவளாக இல்லாமல், பொய் பேசுபவளாக, வீராவேசமான வெளித்தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறாள்... மதுவினால் தூண்டிவிடப்பட்ட குழப்பத்தால் அவள் தினந்தோறும் அவளுடைய புலன்களை ஊக்கப்படுத்திக் கொள்கிறாள். அந்த வாழ்க்கை அவளை ஒரு கையை இழக்கும் நிலைக்குத் தள்ளிச் செல்கிறது... கதை மேலும் தொடர்கையில், ஜூலியாவின் பயணம் முடிவில் வந்து நிற்கிறது. ஆனால் ஒருவிதமாக அவள் சாவதை விட வாழ்வதே மேல் என்ற முடிவுக்கு வருகிறாள்."
ஜூலியாவின் பித்துபிடித்த, மேலெழுந்தவாரியான பாணியில் கட்டுப்பாடில்லாத நடவடிக்கை, அதற்குள்ளாகவே இருக்கும் ஒரு விஷயமாக, அவளைச் சுற்றியிருக்கும் வாழ்க்கையிலிருந்து அவளை பிரித்துவிடுகிறது. இந்த அணுகுமுறை, குறிப்பாக இன்றைய சூழ்நிலையில், பிரெஞ்சு திரைப்பட இயக்கத்தில் முற்றிலும் வித்தியாசமானதாகும். நம்முடைய காலத்தில், ஓயாது மாறுகிற காலகட்டங்களில், மக்களுக்கிடையே என்ன நடக்கிறது என்பதை நிஜமாகவே வெளிப்படுத்த விரும்பாமல், அல்லது வெளிப்படுத்த முடியாமல், இயக்குனர்கள் எளிமையான வழிகளைக் கையில் எடுக்கிறார்கள்: அதாவது, உணர்ச்சி அல்லது பாலியல் தூண்டல் காட்சிகள் - அது எங்கேயுமே போய் ஒரு முடிவுக்கு வரப் போவதில்லை.
சமூகத்திற்கு எதிரானதின், வன்முறை நடவடிக்கையின் ஆதாரமாக இருப்பது என்ன? ஜூலியா போல பாதிக்கப்பட்ட மக்களை எந்த சூழ்நிலை உருவாக்குகிறது? என்று அவர்கள் ஒருபோதும் கேட்பதில்லை, அல்லது தங்களைத்தாங்களே கூட கேட்க அனுமதிப்பதில்லை. பெரும்பாலான விஷயங்கள் ஆழமாக எடுத்துக் கொள்ளப்படுவதே இல்லை. அதனால் பலவீனமான விளைவுகள் தான் உண்டாகின்றன.
உணர்வுபூர்வமான மற்றும் ஸ்தூலமான அமைதியின்மை இறந்து போகும் போது, சாதாரண நீதிநெறிப்பாடு தான் மிஞ்சுகிறது - ஜூலியாவின் விஷயமும் இப்படித்தான். இதில் சில முயற்சிகள் நீதிநெறிகளை நெருக்குவதில் சென்றிருக்கிறது. உலகம் தனிநபர்களின் மெய்யியல்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது; ஏதோவொரு வகை வீரதீர முயற்சிகள் மூலமாக "மக்கள் அவர்களை அவர்களே நேர்படுத்திக் கொண்டால்" பூமியிலேயே சொர்க்கத்தை உருவாக்க முடியும் என்றது போன்ற தவறான மற்றும் மேலோட்டமான கருத்தைத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நம்மிடையே காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
துரதிருஷ்டவசமான பகுதி என்னவென்றால், Le petit voleur [சிறிய திருடன்] (1999) மற்றும் La vie rêvée des anges [தேவதைகளின் கனவு வாழ்க்கை] (1998) ஆகிய ஜோன்காவின் முந்தைய இரண்டு படங்களும் வரம்புமீறாமல் எடுக்கப்பட்டவை.
|