WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
Sri Lankan government plans extensive slum clearance evictions
இலங்கை அரசாங்கம் குடிசைகளை அகற்றும் மிகப் பரந்த திட்டத்தை வகுக்கின்றது
By W.A Sunil
7 June 2010
Back to screen version
ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், கொழும்பு நகரை அபிவிருத்தி செய்யும் அதன் திட்டத்தை அமுல்படுத்துகின்ற நிலையில் கொழும்பில் உள்ள ஆயிரக்கணக்கான குடிசைவாசிகள் தமது வீடுகளையும் ஜீவனோபாயத்தையும் இழக்கும் நிலையை எதிர்கொள்கின்றனர். தலைநகரை "தெற்காசியப் பிராந்தியத்தின் நிதி மற்றும் வர்த்தக மையமாக்குவதை" இலக்காகக் கொண்ட இந்த திட்டம், வெளிநாட்டு முதலீட்டையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்ப்பதற்காகன பரந்த முயற்சிகளின் பாகமாகும்.
இந்தத் திட்டம் நகர அபிவிருத்தி அதிகார சபையால் (யூ.டி.ஏ.) 1999ம் ஆண்டிலேயே வரையப்பட்டிருந்தாலும், வெகுஜனங்களின் எதிர்ப்பு மற்றும் அப்போது நடந்துகொண்டிருந்த பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தாலும் அலுமாரியில் வைக்கப்பட்டது. அரசாங்கம் 2008ல் வெளியிட்ட உத்தியோகபூர்வ வர்த்தமாணி அறிவித்தல் ஒன்றின் ஊடாக இந்தத் திட்டத்தை அமுல்படுத்தும் தனது எண்ணத்தை சமிக்ஞை செய்தது.
கடந்த மே மாதம் புலிகளின் தோல்வியின் பின்னர், "தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக" ஒரு "பொருளாதார யுத்தத்தை" முன்னெடுக்கப் போவதாக இராஜபக்ஷ பிரகடனம் செய்தார். முன்னர் ஒரு பொதுமக்கள் அதிகாரசபையாக இருந்த யூ.டி.ஏ. யை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்த அவர், தனது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷவை யூ.டி.ஏ. யின் தலைவராகவும் நியமித்தார்.
மே 7 அன்று மத்திய கொழும்பின் கொம்பனித் தெருவில் வாழ்ந்த 45 குடும்பங்கள் அவர்களது வீடுகளில் இருந்து ஆயுதம் தாங்கிய நூற்றுக்கணக்கான பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட போது, இதற்கு இராணுவத்தை பொறுப்பாக வைத்ததன் முக்கியத்துவம் வெளிப்படையானது. இந்த குடிசைகளை "சட்டவிரோத கட்டிடங்கள்" என பிரகடனம் செய்த பாதுகாப்பு அமைச்சு, அவற்றை இடித்துத் தள்ளியதோடு அங்கிருந்தவர்களுக்கு ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் பலகைகளால் அமைக்கப்பட்ட கூடாரங்களை கொடுத்தது. குடியிருப்பாளர்கள் எதிர்த்த போது, அவர்களுக்கு வாடகை வீட்டுக்கு முற்பணமாகவும் போக்குவரத்துக்குமாக 100,000 ரூபாய்களை -880 டொலர்களை- கொடுத்தது.
"துறைமுகம் சம்பந்தப்பட்ட, வங்கி, நிதி மற்றும் காப்புறுதித் துறைகளை" அபிவிருத்தி செய்வதற்காக பிரமாண்டமான குடிசை பிரதேசங்களை துப்புரவு செய்யும் முதல் நடவடிக்கை மட்டுமே இந்த அப்புறப்படுத்தலாகும். தலைநகருக்கான யூ.டி.ஏ. திட்டமானது, "தலைநகரில் குறைந்த வருமானத்தில் வாழும் மொத்த ஜனத்தொகையில் 50 வீதத்தினரின் குடியிருப்புக்கள், மொத்த நகர நிலத்தின் 11 வீதத்தை உள்ளடக்குகின்றன," எனக் குறிப்பிடுகின்றது. குடிசைவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிக்கும் கிட்டத்தட்ட 390 ஹெக்டயர் நிலத்தை "விடுவிப்பதே" யூ.டி.ஏ. யின் இலக்காகும்.
இந்த நிலங்கள் எவ்வாறு அபிவிருத்தி செய்யப்படும் என்பது பற்றி யூ.டி.ஏ. திட்டம் வெளிப்படுத்தாத அதே வேளை, பெரும் பகுதி தவிர்க்க முடியாமல் பெரும் முதலீட்டாளர்களுக்கும் மற்றும் சொத்துக்களை கட்டியெழுப்புபவர்களுக்கும் கொடுக்கப்படும். மத்திய கொழும்பில் நில விற்பனையானது ஒரு இலாபகரமான வியாபாரமாகும் --ஒரு பேர்ச் அல்லது 25 சதுர மீட்டர் நிலம், தற்போது அமைவிடத்தைப் பொறுத்து 1 மில்லியன் ரூபாவுக்கும் 8 மில்லியன் ரூபாவுக்கும் (8.800 டொலர்) இடையில் விற்பனையாகின்றது.
கால்வாய்களுக்கும் களனி ஆற்றுக்கும் அயலில் வாழும் குடும்பங்கள் உட்பட, நகரின் பல பகுதிகளில் குடிசைகளில் வாழும் பத்தாயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படவுள்ளன. இந்த குடிசைகளில் அதிகமானவை 1948ல் இலங்கை சுதந்திரத்துக்கும் முன்னர் அமைக்கப்பட்டவை. ஆனாலும், 1977ல் இருந்து அமுல்படுத்தப்பட்ட சந்தை-சார்பு திட்டங்களாலேயே அவை துரிதமாக விரிவடைந்தன.
2004ல் கொழும்பு மாநகர சபை நடத்திய ஆய்வின் படி, மத்திய கொழும்பில் 1,614 வறிய நகர்புற குடியேற்றங்கள் உள்ளன. இவற்றில் 72,612 குடும்பங்கள் அல்லது அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். அவர்களது பிள்ளைகளுக்கு கல்விக்கு தக்க வாய்ப்புகள் இல்லை. ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கான சராசரி நிலப் பிரதேசம், 350 சதுர அடிகளை விட குறைவானதாக இருப்பதோடு அவர்கள் பொது மலசல கூடங்களையும் தண்ணீர் குழாய்களையும் பயன்படுத்துகின்றனர்.
குடியிருப்பாளர்களில் வெறும் 12 வீதமானவர்களுக்கு அல்லது 9,314 குடும்பங்களுக்கே நிரந்தர வருமான வழிவகை இருக்கும் அதே வேளை, 45 வீதமானவர்கள் அல்லது 34,925 குடும்பங்கள் தொழிற் பயிற்சி அற்றவர்களாகவும் நிரந்தர தொழில் அற்றவர்களாகவும் உள்ளனர். அநேகமான குடும்பங்கள் சில தொழிற்சாலைகளில் அன்றாட கூலி வேலை, துப்புரவு செய்தல் அல்லது சிறிய முச்சக்கர வண்டிகளை ஓட்டுதல் போன்ற தற்காலிகத் தொழில்களை செய்கின்றனர். ஏனையவர்கள் நடைபாதை வியாபாரிகள் அல்லது துணிகளைத் தைத்து அல்லது இரும்பு உலோகப் பொருட்கள், கடதாசி மற்றும் போத்தல்களை சேகரித்து சிறிது பணம் தேடுபவர்கள்.
அந்த ஆய்வுகளின் பின்னர், தீவின் கிராமப்புறங்களில் வளர்ச்சி கண்டுவரும் வறுமை மற்றும் வேலையின்மையினால் மேலும் பலர் கொழும்புக்கு செல்லத் தள்ளப்பட்டனர். 2004 டிசம்பரில் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரைகளை ஆசிய சுனாமி தாக்கியதை அடுத்து குடிசைவாசிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 8 வீதம் அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் வாக்குறுதிகள் ஒரு புறமிருக்க, பாதிக்கப்பட்டவர்களில் அநேகமானவர்களுக்கு புதிய தங்குமிடங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை.
குடியிருப்புவாசிகளுக்கு என்ன நடக்கும் என உலக சோசலிச வலைத் தளம் கேள்வி எழுப்பிய போது, "அவர்கள் கொழும்புக்கு அப்பால் குடியேற விரும்பினால் தக்க தங்குமிடங்களையும் அல்லது நட்ட ஈடும்" அரசாங்கம் வழங்கும் என யூ.டி.ஏ. ஆணையாளர் நாயகம் பிரசன்ன சில்வா தெரிவித்ததோடு கொழும்பு நகரின் எல்லைப் புறத்தில் மூன்று திட்டங்கள் பற்றி குறிப்பிட்டார்.
எவ்வாறெனினும், இத்தகைய திட்டங்கள், யூ.டி.ஏ. திட்டத்தினால் இடம்பெயரும் பத்தாயிரக் கணக்கான மக்களுக்கு வீடு வழங்காது. இதுவரை சாஹசபுர (மிலேனியம் சிட்டி), தெமட்டகொட ஆகிய இரு வீட்டுத் தொகுதிகள் கட்டப்பட்டுள்ளன. 2001-2002ல் சாஹசபுர கட்டப்பட்டது. ஆனால் 16 குடியிருப்பு பகுதிகளில் இருந்த குடும்பங்களுக்கு வெறும் 676 வீடுகளே அங்கு உள்ளன. இந்த வீட்டுப் பிரிவுகள் போதுமானவை அல்ல என்றும் பலவற்றை திருத்த வேண்டும் என்றும் அங்கு வசிப்பவர்கள் கூறுகின்றனர். இந்தக் குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதன் மூலம் 900 மில்லியன் ரூபா (8 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான 7 ஹெக்டயர் இலபகரமான நிலங்களை விடுவித்துக்கொள்ள முடிந்ததாக அரசாங்கம் பெருமைபட்டுக்கொண்டது.
நிலங்களை குடியிருப்பாளர்கள் "சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளார்கள்" என பிரகடனம் செய்வதன் மூலம் அண்மைய அப்புறப்படுத்தல்களை அரசாங்கம் நியாயப்படுத்தியது. பாதுகாப்புச் செயலாளர் இராஜபக்ஷ, குடிசைகள் "கண்களை உறுத்துகின்றன" என விவரித்தார். எவ்வாறெனினும், பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மௌனமாக குடிசைகளை அனுமதித்ததோடு தக்க வசதிகளுடன் ஒழுக்கமான குடியிருப்புக்களை வழங்க எதுவும் செய்யவில்லை. இந்த நிலங்களை விற்கவேண்டியிருப்பதால் இப்போதுதான் இராஜபக்ஷ அரசாங்கம் "சட்டவிரோத" குடியிருப்புக்கள் பற்றிய விடயத்தை எழுப்புகின்றது.
கடந்த மாத அப்புறப்படுத்தல்களை அடுத்து, அரசாங்கம் இன்னுமொரு நியாயப்படுத்தலை கண்டுபிடித்தது. பருவ மழைக் காலத்தில், நகரில் வெள்ளம் ஏற்படுவதற்கு குடிசைவாசிகளை குற்றஞ்சாட்டத் தொடங்கியது. மே 18 அன்று, "வெள்ள அனர்த்தத்தை தவிர்க்க கால்வாய் கரைகளில் இருக்கும் வீடுகளை அகற்றுமாறு" பொறுப்பான அதிகாரிகளுக்கு இராஜபக்ஷ கட்டளையிட்டார்.
அதையடுத்து, ஆற்றங்கரைகள், சேற்றுநிலப் பகுதி மற்றும் கொழும்பிலும் ஏனைய பிரதேசங்களிலும் உள்ள அரசாங்க நிலங்களில் இருந்து "சட்டவிரோத" குடிசைகளை அகற்றுவதற்கு பாதுகாப்பு அமைச்சுடன் கூட்டாக ஒரு திட்டத்தை நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்தார். இந்த குடிசைகளே வெள்ளபெருக்குக்கு "காரணமாக இருக்கின்றன" என அவர் கூறிக்கொண்டதோடு சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எந்தவொரு நட்ட ஈடும் வழங்கப்பட மாட்டாது என பிரகடனம் செய்தார்.
கொம்பனித் தெரு அப்புறப்படுத்தலை அடுத்து, பாதுகாப்பு அமைச்சின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டது. "மலே வீதியில் பாதுகாப்பு சேவைகளுக்கான பாடசாலையை அன்டிய பகுதியில் இருந்த நிலங்களில் இருந்து அதிகாரமற்ற குடியிருப்புக்களை அகற்றும் நடவடிக்கை, நேற்று [மே 7] மனிதாபிமான முறையிலும் சட்டப்பூர்வ மற்றும் நியாயத்தின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டது என்பதை அரசு வலியுறுத்துகிறது" என அது பிரகடனம் செய்தது.
கொம்பனித் தெரு குடியிருப்பாளர்களின் தலைவிதி பற்றிய இந்த அலட்சியமான பாரபட்சம், ஏனைய குடிசைவாசிகளுக்கு மட்டுமன்றி, இராஜபக்ஷவின் "பொருளாதார யுத்தத்தில்" பயன்படுத்தப்படவுள்ள வழிமுறைகள் பற்றி, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்துக்கும் விடுக்கும் எச்சரிக்கையாகும். அது கொழும்பு நகரில் நிலங்களை துப்புரவு செய்து இலாபகரமான சொத்துக்களாக விற்பனை செய்வதோடு, அரசாங்கம் பொதுச் செலவுகளை வெட்டித்தள்ளவும் அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயப்படுத்தவும் கோரும் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்துக்கும் உள்ளாகின்றது. அது உழைக்கும் மக்களின் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க பாதுகாப்புப் படைகளை பயன்படுத்துவதில் இரக்கம் காட்டாது.
|