WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
More Colombo families targetted for eviction
அதிகளவான கொழும்பு வாழ் குடும்பங்கள் அப்புறப்படுத்துவதற்கு குறிவைக்கப்பட்டுள்ளன
By W.A. Sunil and R. Shreeharan
7 June 2010
Back to screen version
மே 31 அன்று, அரசாங்கம் கால்வாய் அருகில் இருந்து ஆறரை மீட்டர் தூரத்தில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் அகற்றப்படும் என கொழும்பு வடக்கில் கிரன்ட் பாஸ் கால்வாய்க்கு அருகில் வாழும் குடிசைவாசிகளுக்குத் தெரிவித்துள்ளது. நிலச்சீர்திருத்த மற்றும் அபிவிருத்திச் சபையினால் முத்திரையிடப்பட்ட டோக்கன்கள் இந்த குடியிருப்பாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
குடும்பத்தவர்கள் இயல்பாக ஆத்திரமும் கவலையும் அடைந்துள்ளனர். அவர்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுவார்களா அல்லது எப்போது என்பது பற்றி அவர்களுக்கு சொல்லப்படவில்லை. வீடு அழிக்கப்படும் நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது என்ற பீதியை அதிகரிக்கும் விதத்தில் அதிகாரிகளுடன் பொலிசாரும் சிப்பாய்களும் வந்தனர். இதில் சுமார் 50 வீடுகளும் 160 குடும்பங்களும் பாதிக்கப்படவுள்ளன.
மே மாத நடுப்பகுதியில் வெள்ளப்பெருக்கெடுத்ததை அடுத்து, நகரின் கால்வாய் கரைகளில் உள்ள குடிசைகளை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ கட்டளையிட்டார். இந்த நடவடிக்கை பாதுகாப்பு அமைச்சுடன் கூட்டாக முன்னெடுக்கப்படும் என நீர்ப்பாசன நீர்வளங்கள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்தார். எவ்வாறெனினும், இந்த பரந்த குடிசைகள் அகற்றும் திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒரு சாக்குப் போக்கே இந்த வெள்ளப்பெருக்காகும். (பார்க்க: "இலங்கை அரசாங்கம் குடிசைகளை அகற்றும் மிகப் பரந்த திட்டத்தை வகுக்கின்றது")
கிரான்ட் பாஸ் கால்வாய்க்கு அருகில் உள்ள பிரதேசம் ஒரு தாழ் நிலப் பகுதியாகும். அது ஏறத்தாழ ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பெருக்கெடுக்கும். இந்த கால்வாய் மோசமாக சேறு நிறைந்திருந்ததோடு இப்போதுதான் புனரமைப்புச் சபை அதை தோண்டிக்கொண்டிருக்கின்றது. கடந்த காலத்தில் மாநகரசபை அதிகாரிகளும் புனரமைப்புச் சபை அதிகாரிகளும் தம்மைப் பற்றி அக்கறைகாட்டவே இல்லை என அங்கு குடியிருப்பவர்கள் உலக சோசலிச வலைத் தள நிருபர்களுக்குத் தெரிவித்தார்கள். கடந்த மாத வெள்ளப்பெருக்கில் தண்ணீர் ஒரு சுமார் ஒரு மீட்டர் உயர்ந்ததால், உள்ளூர்வாசிகள் நான்கு நாட்களுக்கு கோயில்களிலும் பாடசாலைகளிலும் வாழத் தள்ளப்பட்டார்கள்.
உள்ளூர்வாசிகள் WSWS நிருபர்களுடன் உரையாடுகின்றனர்
அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை குடியிருப்பாளர்கள் சுட்டிக்காட்டினர். வீடுகள் கால்வாய்க்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாக அவர்களுக்கு சொல்லப்பட்டுள்ள அதே வேளை, கால்வாயின் மறுபக்க கரையில் ஒரு தனியார் கம்பனி 6.5 மீட்டர் வரையறைக்குள் கட்டிடங்களை அமைத்துள்ளது. அதை அகற்றுமாறு இன்னமும் கடிதம் கொடுக்கப்படவில்லை.
இந்தப் பிரதேசத்தை ஸ்டேடியம் கிராமம் என்று சொல்கின்றார்கள். 1983ல் நாட்டின் மிகப்பெரிய விளையாட்டு மைதானமான சுகததாச ஸ்டேடியத்தை கட்டுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி குடிசைகளை அகற்றிய பின்னரே இந்தக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் முதலில் தற்காலிக பலகை வீடுகளுக்கு மாற்றப்பட்டனர். பின்னர் --மொத்தம் 243-- நிரந்தர வீடுகளுக்கு மாற்றப்பட்டார்கள். ஆனால், குடும்பங்கள் பெரிதாகியதால் மேலும் பலர் அதில் இருந்து விலக கால்வாய்க்கு நெருக்கமாக வீடுகளைக் கட்டிக்கொண்டனர்.
கிரான்ட் பாஸ் கால்வாய்க்கு அருகில் சிறுவர்கள்
இந்த குடியிருப்புப் பிரதேசத்துக்கு பொருத்தமான வீதிகளோ அல்லது ஒழுங்கைகளோ இல்லை. எல்லா இடங்களிலும் சேற்றுக் குழிகளை காண முடியும். வீடுகளுக்கு இடையில் ஒரு மீட்டர் மட்டுமே இடைவெளி உண்டு. மூடப்படாத கான்களில் அசிங்கத் தன்னீர் செல்கின்றது. இவை நுளம்புகளின் உற்பத்தி இடமாக உள்ளன. பல வீடுகளில் பல குடும்பங்கள் உள்ளன. இந்த வீடுகள் சீமெந்துக் கற்களில் கட்டப்பட்டுள்ளதோடு கூரைக்கு தகரம் போடப்பட்டுள்ளது. சிலருக்கு சிறிய வரவேற்பறையும், சமயலறையும் மற்றும் ஒரு மலசலகூடமும் உள்ளன. ஆனால், அவை மிகவும் சிறியவை.
அவர்கள் ஸ்டேடியம் கிராமத்துக்கு வந்தவுடன், அவர்களுக்கு சட்டப் பத்திரங்கள் கொடுப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் 27 ஆண்டுகள் கடந்தும், அவர்கள் மாநகர சபை நிர்ணயத்தின்படி மாதம் 50 ரூபா செலுத்தி வந்தபோதிலும் கூட, அவர்களுக்கு எந்தவித ஆவணமும் வழங்கப்படவில்லை.
நிக்கலஸ்
1983ல் இடம்பெயர்ந்தவர்களில் நிக்கலசும் ஒருவர். அவருக்கு ஒரு நல்ல வீடு இருந்தது. ஆனால் அவர் அங்கிருந்து வெளியேறத் தள்ளப்பட்டார். "நாங்கள் இப்போது ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பெருக்கை எதிர்கொள்கின்றோம். எனக்கு வீட்டுக்கான நட்ட ஈடாக 60,000 ரூபாவும் நிலமும் கிடைத்த போதிலும் அது போதாது. இந்த கல் வீடுகளுக்கு இரண்டு பேர்ச் (சுமார் 50 சதுர மீட்டர்கள்) நிலம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. சில நாட்கள் கடந்த பின்னரே எங்களுக்கு தண்ணீர் கிடைத்தது. அரசாங்கம் எங்களுக்கு வீடுகளைக் கொடுத்தது. ஆனால் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்புக்களைப் பெற நாங்களே செலவு செய்தோம்," என நிக்கலஸ் தெரிவித்தார்.
அவரது மனைவி ஹில்டா விளக்கியதாவது: "நாங்கள் இங்கு இடம்பெயரும் போது எமது பிள்ளைகள் சிறியவர்கள். எனக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இப்போது பிள்ளைகள் வளர்ந்து மணம் முடித்துள்ளார்கள். மகன்களில் மூன்று பேர் எங்களது வீடுகளுக்கு முன்னால் சிறிய வீடுகளை அமைத்துக்கொண்டுள்ளனர். இது போன்று பல குடும்பங்கள் இங்குள்ளன. மக்களுக்கு வாழ இடம் வேண்டும்.
"அந்த நாட்களில் எனது கனவர் துறைமுகத்தில் வேலை செய்தாலும், அவரது சம்பளம் எமது ஐந்து பிள்ளைகளையும் பார்க்க போதுமானதாக இருக்கவில்லை. நான் கொஞ்சம் சம்பாதிப்பதற்கு ஒரு சிறிய கடையை நடத்தினேன். பின்னர் வெளிநாடு சென்றேன். அநேகமான பெண்கள் பணிப்பெண்களாக வெளிநாடு சென்றனர். அதுதான் எங்களுக்கு உதவியது. இப்போது நான் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் கிழமைக்கு மூன்று நாட்களுக்கு வேலை செய்கின்றேன். பிள்ளைகள் எனக்கு உதவுகிறார்கள், ஆனால் எனது கையில் கொஞ்சம் பணம் தேவை.
ஹில்டா
"[தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான] யுத்தத்தின் பின்னர் எங்களுக்கு சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். எங்களுக்கு இப்போது வயதாகிவிட்டது. எனக்கு 61, எனது கனவருக்கு 67. விலைவாசியை குறைப்பதன் மூலம் அரசாங்கம் சலுகைகள் கொடுக்கவேண்டும். போசாக்கான உணவு சாப்பிடுமாறு வைத்தியர்கள் சொல்கிறார்கள். அதை நாம் எப்படிச் செய்ய முடியும்?"
இலங்கையை புதிய ஆசிய அதிசயமாக மாற்றப் போவதாக ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி இராஜபக்ஷ வாக்குறுதியளித்ததை ஹில்டா சீற்றத்துடன் குறிப்பிட்டார். "நாட்டை அதிசயத்துக்குள்ளாக்குவதற்கு முன்னர், மக்களின் பட்டினியை அவர்கள் நிறுத்த வேண்டும். அதிசயம் என்பது மக்களை கொழும்பில் இருந்து விரட்டுவதா? அவர்களுக்கு எங்களது வாக்கு மட்டுமே தேவை. ஆனால் தேர்தல் முடிந்தவுடன் நாங்கள் அதிகாரமற்ற மக்களாகிவிடுகின்றோம்!
கொம்பனித் தெருவில் இருந்து குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதை பற்றி ஹில்டா வெறுப்பை வெளிப்படுத்தினார். கடந்த ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவடைந்த பின்னரும் 60,000 தமிழ் பொது மக்கள் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற உண்மையைப் பற்றியும் அவர் கருத்துத் தெரிவித்தார். "அது கவலைக்குரியது. கால்வாயை பார்க்க அதிகாரிகள் வந்தபோது கூட இராணுவமும் பொலிசும் சேர்ந்த வந்தது. அது எங்களை எச்சரிக்கவா?!"
இன்னுமொரு பெண் விளக்கியதாவது: "எங்களது குடும்பத்தில் 13 பேர் உள்ளோம். எனக்கு 4 பிள்ளைகள், அவர்களில் இருவர் மணம் முடித்துவிட்டனர். அவர்கள் அனைவரும் எங்களுடன் வாழ்கின்றார்கள். வீடுகள் இடிக்கப்பட்டால் எங்களுக்கு வேறு மாற்று இடம் கிடைக்குமா என்பதைப் பற்றி அரசாங்கம் எங்களிடம் சொல்லவில்லை. நாங்கள் நாளுக்கு நாள் சம்பாதித்து வாழ்வதால் எங்களால் இடமோ அல்லது வாடகை வீடோ வாங்க முடியாது."
இரு பிள்ளைகளின் தந்தையான ரொமேஷ் தெரிவித்ததாவது: "எங்களது பெற்றோர்களுக்கு 1983ல் ஸ்டேடியம் கிராமத்தில் வீடு கிடைத்தது. நான் மணம் முடித்த பின்னர் அந்த வீடு போதவில்லை. எனவே நான் இங்கு குடியேறிவிட்டேன். இப்போது நாங்கள் இங்கு 10 வருடத்துக்கும் மேலாக இருக்கின்றோம். அவர்கள் திட்டமிட்டவாறு கட்டிடங்களை இடித்தால், சமயலறை உட்பட எனது வீட்டில் பாதி போய்விடும். அவர்கள் எங்களது வீடு முழுவதையும் இடிக்கத் திட்டமிட்டுள்ளார்களா எனத் தெரியவில்லை.
நான் கொழும்பில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றேன். எனக்கு கொடுப்பணவுகளுடன் சேர்த்து மாதம் 15,000 ரூபாவுக்கும் [132 அமெரிக்க டொலர்] குறைவாகவே கிடைக்கின்றது. எனது மனைவிக்கு தொழில் கிடையாது. தற்போதைய வாழ்க்கைச் செலவுடன் அந்தகைய வருமாணத்துடன் எம்மால் சமாளிக்க முடியாது. ஒரு கிழமை சாப்பாட்டுக்கு மட்டும் 3,000 ரூபா எங்களுக்கு வேண்டும். தேங்காயின் விலை 35 ரூபா. சமையல் வாயுவைப் பெற 1,700 ரூபா மாதம் செலவிட வேண்டும்."
"நான் தற்போதுள்ள அரசாங்கத்தையே ஆதரித்தேன். ஆனால் அவர்கள் மக்களுக்கு எதிராக பலதையும் செய்கின்றார்கள். அவர்கள் யுத்தத்தின் பின்னர் நிவாரணம் தருவதாக வாக்குறுதியளித்தனர். அவர்கள் யுத்தத்தை வென்றார்கள். இப்போது இங்கு பாதுகாப்புப் படைகளை பயன்படுத்தி மக்களை நசுக்க முயற்சிக்கின்றார்கள்."
|