WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The Chinese working class emerges
சீனத் தொழிலாள வர்க்கம் எழுச்சியில்
John Chan
5 June 2010
Back to screen version
கடந்த சில வாரங்களாக சீனத் தொழிலாளர்களின் போராட்டங்கள் எழுந்திருப்பது சர்வதேசரீதியாக தொழிலாளர்களுக்கு பாரிய முக்கியத்துவமானது. தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சமூக சக்தி இல்லை என்று நிராகரித்துவிட்டு, வர்க்கப் போராட்டம் ஒரு பழைய தொப்பியை போன்றது என்று கூறியவர்களுக்கு எதிராக கிரேக்க வேலைநிறுத்தங்களை தொடர்ந்து வந்துள்ள சீனாவில் தொழிலாள வர்க்கத்தின் முதல் சீற்றங்கள் உலக ஆளும் வர்க்கங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளன.
சர்வதேச நிதிச் செய்தி ஊடகம் தெற்கு சீனாவில் ஹொண்டாவின் மின்கடத்திகள் செய்யும் ஆலையின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை குறிப்பிடத்தக்க கவனத்துடன் நோக்கியுள்ளது. இது பெருநிறுவனத்தின் உற்பத்தியை கிட்டத்தட்ட இரு வாரங்களுக்கு முடக்கி வைத்துவிட்டது. முக்கியமாக இளந்தொழிலாளர்கள் அரசாங்க மிரட்டல், அரசாங்கம் நடத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் நிர்வாகத்தை மீறி நின்று, பின்னர் கணிசமான ஊதிய உயர்வு கொடுக்கப்பட்ட பின்தான் பணிக்குத் திரும்பினர்.
ஹொண்டா போன்ற பெருநிறுவனங்கள் இப்பொழுது சீனாவின் குறைந்த பெரும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட தொழிலாளர் தொகுப்பில் இருந்து உறிஞ்சப்படும் பெரும் இலாபங்களை அதிகமாக நம்பியுள்ளன. சீனாவை சர்வதேச மூலதனம் நம்பியிருப்பது 2007-08 ல் வெடித்த உலகளாவிய நிதிய நெருக்கடியால் அதிகமாகியுள்ளன. பல மில்லியன்களை கொண்ட சீனத் தொழிலாள வர்க்கத்தின் எந்த எழுச்சியும் பெருநிறுவன இலாபங்களை நேரடியாக அச்சுறுத்துவது மட்டும் இல்லாமல் உலகப் பொருளாதாரம், நிதிய முறை ஆகியவற்றிலும் தவிர்க்க முடியாமல் எதிரொலிக்கும்.
டெல்.ஆப்பிள் (Dell.Apple) போன்ற பெரிய உலகளாவிய நிறுவனங்களுக்கு மின்னணுப்பொருட்களை உற்பத்தி செய்யும் பாக்ஸ்கான் (Foxconn) ஆலையில் அலையென நிகழ்ந்த தற்கொலைகளினால், சீனாவில் பாரியளவு உற்பத்தி செய்தி ஊடகத்தினால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுத்துக்காட்டப்பட்டது. 400,000 தொழிலாளர்கள் பணிபுரியும் இந்த பெரிய ஆலை நகரம் போலவே உள்ளதுடன் தனிமைப்படுத்தப்பட்டு ஒரு இராணுவ முகாம் போல் நடத்தப்படுகிறது. சீன ஆன்லைன் அரங்கு ஒன்றில் வந்த ஒரு கருத்து கூறியதாவது: “பாக்ஸ்காiனை நான் பார்க்கும்போது, சார்லி சாப்ளினின் Modern Times திரைப்படம் தான் எனக்கு நினைவிற்கு வருகிறது. அதில் மனிதர்கள் ஒரு பெரிய இயந்திரத்தின் கியர் சக்கரங்கள் என்ற இழிநிலைக்குத் தள்ளப்பட்டுக் காட்டப்படுகின்றனர்.”
பாக்ஸ்கான் கடின உழைப்பாலை சீனத் தொழிலாள வர்க்கத்தின் வெடிப்புத்தன்மையுடைய வளர்ச்சிக்கு தோற்றங்களையும், அடையாளங்களையும் கொடுத்துள்ளது. இந்த வர்க்கம் 120 மில்லியனில் இருந்து கடந்த மூன்று தசாப்தங்களில் 400 மில்லியனுக்கும் அதிகமாக பெருகிவிட்டது. பாக்ஸ்கான் உள்ள ஷென்ஜென் 1980களின் தொடக்கத்தில் ஒரு மீன்பிடிக்கும் கிராமமாக இருந்தது. இப்பொழுது நாட்டின் மிகப் பெரிய ஆலைகளில் ஒன்றாகும். இதே போன்ற பலவும் கணக்கிலடங்கா சிறிய ஆலைகளும் இங்கு இப்பொழுது உள்ளன. கிழக்கு சீனாவில் முழு நகரங்களும் ஒரு தனிப்பொருள் உற்பத்திக்கு மாறிவிட்டன, “காலுறை'' சிறுநகரங்கள், “உடைபொருத்தி” சிறுநகரங்கள், “குளிர்பதன” சிறுநகரங்கள் என்று மில்லியன் கணக்கான தொழிலாளர்களை கொண்டவை வந்துள்ளன.
சர்வதேச வர்க்க ஒற்றுமையின் தேவை பற்றி தொழிலாளர்கள் உள்ளுணர்வாக அறிந்துள்ளனர். ஹொண்டா போன்றவற்றில் அதிகமாக இருக்கும் இளைஞர்களான தொழிலாளர் பிரிவினர் இணையத்தளம் மற்றும் கையடக்கத்தொலைபேசியுடன் வளர்ந்தவை ஆகும். சர்வதேச நிறுவனங்களின் மகத்தான இலாப வளங்களுக்கு தங்கள் குறைவூதியங்கள்தான் ஆதாரம் என்பதை அவர்கள் நன்கு அறிவர். சர்வதேசிய கீதத்தை வேலைநிறுத்தத்தில் இருப்பவர்கள் இசைத்தபோது, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் போன்றே தங்கள் நிலையும் உள்ளது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர் என்பதற்கும், அவர்களைப் போன்றே பொதுப் பிரச்சினைகளையும், பொது பெருநிறுவன விரோதிகளை கொண்டுள்ளோம் என்பதற்கான அடையாளமுமாகும்.
ஹொண்டாவில் உள்ள இளம் தொழிலாளர்களின் உறுதி, தைரியம் ஆகியவற்றை மறுப்பதற்கு இல்லை. ஆனால் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல் வாய்ந்த அரசியல் பிரச்சினைகளை அவை உடனடியாக தீர்த்துவிட இயலாது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி சில தற்காலிக சலுகைகளை கொடுத்த போதிலும்கூட, இயல்பாக அது தொழிலாள வர்க்கத்திடம் விரோதப் போக்கைக் காட்டி பொலிஸ்-அரச கருவியை நம்பியிருப்பதுடன், அதைப் பயன்படுத்தவும் ஒருபொழுதும் தயக்கம் காட்டுவதில்லை. 1949ல் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் நடவடிக்கைகள், விவசாயிகள் இராணுவத்தின் தலைமை என்ற முறையில், முக்கிய மையங்களில் தொழிலாளர்களை அடக்குவதாகத்தான் இருந்தன.
நேற்று 1989 தியானன்மென் சதுக்கப் படுகொலையின் 21வது ஆண்டு நினைவைக் குறித்த தினம் ஆகும். அதில் பெய்ஜிங் இன்னும் பிற நகரங்களில் ஜனநாயக உரிமைகள் மற்றும் கௌரவமான வாழ்க்கைத் தரங்களை கோரிய தொழிலாளர்களையும் மாணவர்களையும் நசுக்குவதற்கு டாங்குகளுடன் இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர். முதலைக் கண்ணீர் வடித்தாலும், உலகம் முழுவதிலும் உள்ள அரசாங்கங்களும் பெருநிறுவனங்களும் பெய்ஜிங் தொழிலாளர்களின் அமைதியின்மையை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கும் என்பதை அறிந்தன. நாட்டிற்குள் பில்லியன் கணக்கான டாலர்கள் வெளிநாட்டு முதலீடு என்ற முறையில் வெள்ளமெனப் புகுந்தன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அது அமர்ந்திருக்கும் சமூக வெடி குண்டு பற்றி முற்றிலும் உணர்ந்துள்ளது. முந்தைய சோசலிச சொற்றொடர்களை கிட்டத்தட்ட கைவிட்ட நிலையில், மற்ற நாடுகளில் உள்ள அரசாங்கங்களை போலவே இதுவும் அப்பட்டமான தேசியவாதத்தை வளர்த்து மத்தியதர வர்க்க அடுக்குகளிடையே ஒரு தளத்தை தோற்றுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதுடன் தொழிலாளர்களை பிரிக்கவும் முற்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட ஒரு அரை காலனித்துவ நாடு என்னும் சீனாவின் கடந்த கால வரலாற்றை பலமுறை கூறி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சீனா இப்பொழுது உலகின் பெரிய முதலாளித்துவ நாடுகளுள் தன் இடத்தை அடைய வேண்டும் என்று வாதிட்டுள்ளது. குறிப்பாக அது வேண்டுமென்றே ஜப்பானிய-எதிர்ப்பு இனவெறியை ஆதரித்து ஊக்கம் அளித்து வருகிறது.
அனைத்துவித தேசிய, இனவாதக் கொள்கைகளை நிராகரித்து முழு உணர்வுடன் சர்வதேச அளவில் போராட்டங்களை ஒன்றுபடுத்துவதன் மூலம்தான் தொழிலாள வர்க்கம் முன்னோக்கி செல்லமுடியும். சீனாவில் உள்ள ஹொண்டா வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் ஜப்பானில் உள்ள மில்லியன் கணக்கான இளம் ‘freeters”ஐ (15-34 வயதிற்குட்பட்ட நிரந்தர வேலையற்றவர்கள்) விட வேறுபட்ட நிலையில் இல்லை. அவர்கள் அந்நாட்டின் மிகஅதிக தற்காலிக தொழிலாளர் தொகுப்பின் பெரும்பான்மையில் உள்ளனர். உலக நிதிய நெருக்கடி ஏற்பட்ட அளவில், அவர்கள் ஏற்றுமதிகள் சரிந்த நிலையில், ஆயிரக்கணக்கில் ஜப்பானிய கார்த் தொழில், மற்றும் மின்னணு ஆலைகளிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் சீன தொழிலாளர்கள் எதிர்கொள்ளவில்லை. மிகப் பெரிய அரசியல் ஆபத்து தொழிலாளர்களுக்கு ஆதரவு கொடுப்பதாக கூறிக்கொண்டும், பெய்ஜிங் ஆட்சியை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, அதே நேரத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு சுயாதீன அரசியல் இயக்கத்தை தடுப்பவர்களிடம் இருந்துதான் வருகிறது. இவ்விதத்தில் பெய்ஜிங் தொழிலாளர்கள் தன்னாட்சிக் கூட்டமைப்பின் (Beijing Workers Autonomous Federation) நாடுகடத்தப்பட்ட தலைவரான ஹான் டோங்பாங்கின் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை, சமீபத்தில் பைனான்சியல் டைம்ஸில் அவை எடுத்துக்காட்டப்பட்டன.
1989 தியனன்மென் சதுக்க எதிர்ப்புக்களில் ஹான் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்து, கௌரவமான வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைக் கோரிய மாணவர்களுடன் சேர்ந்த தொழிலாள வர்க்க தட்டுக்களிடையேயும் செல்வாக்கைக் கொண்டிருந்தார். ஹானுடைய முன்னோக்கு முதலாளித்துவத்தை தூக்கி எறிவது அல்ல, சீன ஆட்சியை அகற்றுவதும் அல்ல. மாறாக அவற்றைச் சீர்திருத்துவது என்பதாகும். சமீபத்திய வேலைநிறுத்தத்திற்கு பின், அவர் செய்தி ஊடகத்திடம் தொழிலாளர்கள் உரிமைகளும் அரசியல் உரிமைகளும் பிரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். “சீனாவில் தொழிலாளர் இயக்கத்தை அரசியலற்றதாக்க என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்.” என்று அவர் கூறினார்.
தொழிலாள வர்க்கத்தை அரசியலற்றதாக்குவது என்றால் அரசியல்ரீதியாக அதை நிராயுதபாணியாக்குவது என்பதே. குறிப்பாக அமெரிக்கச் செய்தி ஊடகத்தில், சீன ஹோண்டா வேலைநிறுத்தத்திற்கும் 1930களில் அமெரிக்க கார்த் தொழிலாளர்கள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டங்களுக்கும் இடையே இருந்த ஒற்றுமை கூறப்பட்டுள்ளது. அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் அப்போராட்டங்கள் அரசியல் போராட்டத்தில் இருந்து தொழிலாளர் உரிமைகளின் பாதுகாப்பு பிரிக்கப்பட்டதின் விளைவுகளை மிகத் தெளிவாகக் காட்டின. AFL-CIO தொழிற்சங்க அதிகாரத்துவம், 1950 களில் சோசலிஸ்ட்டுக்களை களையெடுத்த, ஜனநாயக கட்சிக்கு தொழிலாளர்களை அடிபணிய செய்த அமைப்பு, இன்றும் பெருநிறுவனங்களின் வெளிப்படையான முகவர் போல் செயல்பட்டு அவற்றின் ஆணைகளைத் தொழிலாளர்கள் மீது சுமத்துகிறது.
மற்ற நாடுகளில் உள்ளதைப் போலவே, சீனத் தொழிலாளர்களையும் எதிர்கொண்டுள்ள பணி கடந்த நூற்றாண்டில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் முக்கிய மூலோபாய அனுபவங்களின் அரசியல் படிப்பினைகளை அறிந்து கொள்வதாகும். குறிப்பாக, உண்மையான மார்க்சிசத்திற்காக ட்ரொட்ஸ்கிச சர்வதேசிய இயக்கம் அதன் முக்கிய எதிர்முனையான ஸ்ராலினிசம் மாவோயிசம் ஆகிவற்றை எதிர்த்து நீடித்து நடத்திய போராட்டத்தைப் பற்றிய கவனமாக ஆய்வு ஆகும். இதுதான் எழுச்சிபெறும் தொழிலாள வர்க்க இயக்கத்திற்கு தேவையான புரட்சிகரத் தலைமையான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சீனப்பிரிவு கட்டமைக்கப்படுவதற்கு முதல் படியாகும்.
|