WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Israel’s massacre at sea
கடலில் இஸ்ரேல் நிகழ்த்திய படுகொலை
Bill Van Auken
3 June 2010
Use this version to print | Send
feedback
சர்வதேசக் கடலில் மனிதாபிமான உதவிப் பொருட்களை எடுத்துச் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய இராணுவம் ஒன்பது குடிமக்களைக் கொன்றதும் பலரைக் காயப்படுத்தியதும் அப்பட்டமான கொலைச் செயல் என்பதுடன் ஒரு போர்க் குற்றமும் ஆகும்.
சக்கர நாற்காலிகள், சிமென்ட், நீரைத் தூய்மைப்படுத்தும் கருவிகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் மற்றும் காகிதத் தாட்கள் இவற்றை எடுத்துச் சென்ற கப்பல்கள் தொடரணி மீது நடத்தப்பட்ட இந்த இராணுவத் தாக்குதல் --இவை அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேல் முற்றுகையால் தடைக்கு உட்பட்டவை--உலகெங்கிலும் உள்ள பல மில்லியன் கணக்கான மக்களுக்கு, உலக விவகாரங்களில் இஸ்ரேலின் பங்கை முழுமையாகக் காட்டுவதுடன், அதற்கு ஆதரவு தரும் அமெரிக்காவின் பங்கையும் காட்டுகின்றது.
இத்தகைய கொடூர நிகழ்ச்சிகளுக்குப் பின் எப்பொழுதும் நடப்பது போல், இஸ்ரேலிய அரசாங்கம் அதனால் பாதிக்கப்பட்டவர்களைக் குறைகூறியுள்ளது. புதனன்று நிகழ்த்திய ஒரு தொலைக்காட்சி உரையில் பிரதம மந்திரி பென்யமின் நெத்தன்யாகு கப்பல் தொடரணியை "பயங்கரவாதிகளுக்குப் பொருட்களை அளிக்கும் மிதக்கும் ஊர்திகள்" என்று விவரித்து, பெருங்கடலில் நிகழ்த்தப்பட்ட படுகொலையை முற்றுகைக்கு உட்பட்ட இஸ்ரேலிய கமாண்டோக்களின் தற்காப்புச்செயல் என்றும் பாராட்டினார்.
கப்பலில் இருந்த பயணிகள்தான் தற்காப்பில் ஈடுபட்டனர், அவர்களுக்கு அவ்வாறு செய்வதற்கு அனைத்து உரிமைகளும் உண்டு. அவர்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர், இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையில் (IDF) ஒருவர் கூடக் கொல்லப்படவில்லை என்பது எவர் ஆக்கிரமிப்பாளர் என்பதற்கு தக்க சான்று ஆகும்.
இது ஒரு வாடிக்கையாகிவிட்டது. மத்தியதரைக்கடல் படுகொலை, இஸ்ரேலிய ஆட்சியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் காசா மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட Operation Cast Lead என்னும் மிகப் பெரிய படுகொலைக்கு ஓராண்டிற்குப் பின் வருகிறது. டிசம்பர் 2008, ஜனவரி 2009ல் இப்பொழுது போலவே அப்பொழுதும் "தற்காப்பு நடவடிக்கைகளில்" ஈடுபடுவதாகக் கூறிக் கொண்டு இஸ்ரேலியர்கள் குண்டுகள், ஏவுகணத் தாக்குதல்கள், தானியங்கி ஆயுதங்கள் என்பவற்றினால் காசா மீது பொழிந்து 1,400 பாலஸ்தீனியர்களுக்கும் மேலாகக் கொன்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆயுதமற்ற ஆடவர், பெண்டிர் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்த உலகின் மிகச் சக்தி வாய்ந்த இராணுவ இயந்திரம் ஒன்றின் ஒருபக்க வலிமை நிறைந்த போரானது ஒப்புமையில் பாதுகாப்பற்ற சாதாரணக் குடிமக்களுக்கு எதிராக நடந்தது. இதில் 13 இஸ்ரேலியர்களுக்குத்தான் உயிரழப்பை ஏற்படுத்தியது, அதில் மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் இராணுவத்தினர்கள்.
உதவி நிவாரணக் கப்பல்கள் தொடரணியானது பட்டினி, நோய், வறுமை மற்றும் கொடுமை ஆகியவற்றினால் காசாவின் முழு மக்கட்தொகையின் 1.5 மில்லியன் மக்கள் மீது சுமத்தியுள்ள காட்டுமிராண்டித்தன முற்றுகைக்கு ஒரு விடையிறுப்பு ஆகும்.
2007 ல் முற்றுகை இறுக்கம் ஆக்கப்பட்டதற்குப்பின், ஐ.நா. உதவி மற்றும் பணிகள் அமைப்பின் (UNRWA) கருத்துப்படி மிக வறிய நிலையில் வாழும் காசா அகதிகள் எண்ணிக்கை மும்மடங்கு ஆகிவிட்டது.
2009 இறுதியில் ஐ.நா ஆனது, "உணவு மற்றும் மருந்துகள் காசா மக்களுக்கு போதுமான அளவிற்கு இல்லாமல்தான் வருகின்றன. இதையொட்டி முழு மக்கள் தொகையில் மன, உடல் நலம் இன்னும் சரிவிற்கு உட்பட்டுள்ளது. இது Opertion Cast Lead பகுதியில் கட்டவிழ்த்துவிட்ட பின் வந்துள்ள நிலை" என்று அறிக்கை கொடுத்தது. ஒரு முழு மக்கட்தொகையையும் வேண்டுமென்றே இஸ்ரேல் பட்டினிபோடுவதின் அப்பட்டமான வெளிப்பாடுகளில் ஒன்று கடந்த ஆண்டு உணவு, விவசாய அமைப்பின் கண்டறிதல் ஒன்றில் வெளிவந்தது. அதில் 9 ல் இருந்து 12 மாதங்களுக்கு இடையே இருக்கும் குழந்தைகள் இரத்தச்சோகையில் வாடுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய மத்திய காலத் தன்மை பொருந்திய முற்றுகையையும் கடற் தாக்குதல் கொலையையும் இஸ்ரேல் செய்ய முடிவதற்கான காரணம் அதன் இராணுவ வலிமை மட்டும் இல்லை, வாஷிங்டனின் உறுதியான ஆதரவும் நிதியளித்தலும்தான். இச்சமீபத்திய படுகொலை அதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது--இன்னும் பலவற்றைப் போல், ஒபாமா நிர்வாகமானது அமெரிக்கக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதையும் ஏற்படுத்திவிடவில்லை என்பதே அது.
ஒரு பாசாங்குத்தன "உயிரிழப்பு பற்றி ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறோம்" என்ற அறிக்கையை வெளியிடுகையில், ஒபாமா நிர்வாகமானது இஸ்ரேல் சக ஆட்சியினருக்கு இக்கொலைகள் பற்றிய குற்றத்தையோ, விளைவுகளையோ கவலைப்படத் தேவையில்லை என்ற உத்தரவாதத்தைக் கொடுக்க அனைத்தையும் செய்துள்ளது. ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் இஸ்ரேல் நடவடிக்கை பற்றி குறைகூறல்கள் அனைத்தையும் அது தகர்த்தது. மற்றும் படுகொலைக்கான சியோனிஸ அரசாங்கத்தின் நியாயப்படுத்துதலை உட்குறிப்பாக ஏற்றது.
இஸ்ரேலின் குற்றம் சார்ந்த செயற்பாடும், அதற்கு நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுத்த அமெரிக்காவின் பங்கும் ஒரு நீண்டகால வரலாற்றைக் கொண்டவை. 43 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேசக் கடலில் ஒரு கப்பல் மீது இஸ்ரேலியத் தாக்குதல் நடத்தப்பட்டதை நினைவு கூருதல் முக்கியமாகும். அத்தாக்குதலில் USS Liberty ல் இருந்த 34 கடல் மாலுமிகள் இஸ்ரேலிய நாபாம், ஏவுகணைகள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றால் கொல்லப்பட்டனர். மற்றும் ஒரு 171 பேர் காயமுற்றனர்--இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒரு விரோத நடவடிக்கையில் அமெரிக்க கடற்படை அடைந்த மிக அதிக எண்ணிக்கை இறப்புக்கள் அவை.
ஒரு உளவுத்துறைக் கப்பலான லிபர்ட்டி ஜூன் 8, 1967 அன்று ஒரு ஆறு நாள் போருக்கு நடுவே சினாய் தீபகற்பத்திற்கு அருகே தாக்கப்பட்டது. இஸ்ரேலியர்கள் அதை பெரும் சோகமான "தவறு" என்று அழைத்த நிலையில், தன் உரையாடல் தொடர்புகளைக் கேட்க அனுமதிக்க விரும்பாமல் சியோனிச அரசாங்கம் அதைத் தாக்கியது என்பதற்கு போதுமான சான்றுகள் பின்னர் வெளிப்பட்டன. தடுத்துக் கேட்கப்பட்ட உரையாடல்கள் பின் டெல் அவிவின் கூற்றான அது தற்காப்பிற்கு அவ்வாறு நடந்து கொண்டது என்பது முற்றிலும் முரண்பட்டன. மேலும் இஸ்ரேல் காசாப் பகுதி மேற்கு கரை மற்றும் கோலன் ஹைட்ஸ் ஆகிய பகுதிகளுக்கு நகர்ந்த போது அதன் ஆக்கிரோஷ விருப்பங்களின் சான்றுகளை மறைக்க விரும்பியது என்பதும் தெரிய வந்தது. இவை அனைத்தும் இன்றளவும் சட்டவிரோத ஆக்கிரமிப்பாகத்தான் தொடர்கின்றன.
உதவிக் கப்பல்கள் தொடரணி மீது இந்த வாரத் தாக்குதல்கள் பற்றிய குறைகூறல்களின் பெரும்பகுதி, இஸ்ரேலுக்குள்ளும், நிகழ்வை "தவறாக நடந்த செயற்பாடு" என்று காட்டுகின்றன--அதாவது மிக அதிகமாக வலிமையைக்காட்டியது, பொதுத் தொடர்பில் பெரும் சரிவு என. ஆனால் இது ஒன்றும் ஒரு அரசாங்கம் சிதைந்த மனத்துடன் செய்த செயல் அல்ல. நெத்தன்யாகு ஆட்சியின் கொள்கைகள் ஒரு உறுதியான சமூக-அரசியல் தளத்திற்கு எதிராக இயக்கப்படுகின்றன. அவற்றில் மதத் தீவிரவாதிகள், வலதுசாரி குடியேறியவர்கள், மற்றும் இஸ்ரேலியச் சமூகத்திற்குள் இருக்கும் மிகப் பிற்போக்குத்தன அரசியல் அடுக்குகள் ஆகியவை உள்ளன. இதன் சார்பு அதன் பாசிசப் பின்னணி மற்றும் அதன் வெளியுறவு மந்திரி அவிக்டர் லிபர்மன்னின் சிந்தனைப் போக்கு ஆகியவற்றில் முழு உருக் கொண்டுள்ளது.
ஆழமான பிற்போக்குத்தனம் மற்றும் ஆழமான அரசியல் நெருக்கடியில் உள்ள இஸ்ரேலிய அரசாங்கம் இன்னும் அதிகமாக ஒரு உலகத்தைத் தீவைத்துக் காண்பதில் களிப்படையும் அமைப்பாகச் செயல்படுவதில் உந்துதல் கொண்டு, சிரியா, லெபனான் இவற்றிகு எதிராகப் போர்களைப் புதுப்பிப்பதைத் தவிர, இவ்வாரம் லண்டன் டைம்ஸில் வந்துள்ள தகவலின்படி ஈரான் கடல்களுக்கும் அணுவாயுத ஏவுகணைகளைத் தாங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பும் திட்டத்தையும் கொண்டுள்ளது.
நிபந்தனையற்ற ஆதரவு மற்றும் கிட்டத்தட்ட $3 பில்லியன் ஆண்டு ஒன்றிற்கு உதவி ஆகியவைகள் இஸ்ரேலுக்கு என்று வாஷிங்டனால் அளிக்கப்படுகையில்--ஒபாமாவின் கீழ் இது தொடர்கிறது--உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு உயிரிழப்பு ஆபத்தைத்தான் இது காட்டுகிறது.
இது ஒரு ஒற்றை சட்டத்திற்குப் புறம்பான ஆட்சியின் செயல் மட்டும் அல்ல. உலக விவகாரங்கள் பொதுவாக குற்றம் சார்ந்த தன்மையில் சரிந்துள்ளமையும் சர்வதேசச் சட்டத்திற்கு மதிப்பு சிதைந்துள்ளதைக் காட்டும் இந்த வடிவமைப்பிற்கு இஸ்ரேலின் முக்கிய எஜமான் ஆதரவு கொடுப்பதும் இவற்றில் உள்ளன.
புஷ்ஷினால் ஆரம்பிக்கப்பட்ட இரு ஆக்கிரமிப்புப் போர்களை ஒபாமா நிர்வாகம் தொடர்கிறது. மேலும் ஒரு பொலிஸ் அரச கருவிகளான சட்டவிரோதக் கைதுகள், கடத்தல்கள் மற்றும் சித்திரவதை ஆகியவற்றைத் தொடர்கிறது. "இலக்கு வைக்கப்பட்ட கொலைகள்"--படுகொலைகள்-- என்ற வழக்கத்தைக் கையாள்வதில் முதலிடம் என்ற இழிந்த பெயரையும் சம்பாதித்துள்ளது. இவை CIA ட்ரோன்கள் மூலம் நடைபெறுகின்றன அவையோ "பல நூற்றுக்கணக்கான மக்களை" பாக்கிஸ்தானில் கொன்றுள்ளன என்று புதனன்று வெளிவந்த ஐ.நா. அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கை வாஷிங்டனை "பொறுப்புக்கூற வேண்டிய தேவையின்றி, கொல்லும் அனுமதி கொண்டுள்ளது" என்று கூறுவதற்காக கண்டித்துள்ளது.
அமெரிக்கா இன்னும் பிற அரசாங்கங்களானது கொலைகார நிறுவனம், அரச பயங்கர வாதச் செயல்கள், கடற் தாக்குதல் (இவ்வாரம் இஸ்ரேல் செய்ததுபோல்) ஆகியவற்றின் அரசாங்க உரு என்று நடந்து கொள்ளுவது, மற்றும் புதிய ஆக்கிரமிப்புக்கள் பற்றிய அச்சுறுத்தல்களை வெளியிடுதல் ஆகியவை இரண்டாம் உலகப் போருக்கு முன்பு இருந்த நிலைமையை வெகு நெருக்கமாக ஒத்திருக்கும் நிலைமையை உலகச் சூழலில் தோற்றுவித்துள்ளன.
இத்தகைய போக்குகள் உலக முதலாளித்துவத்தின் தீவிர நெருக்கடியினால் உந்துதல் பெறுபவை. இவை எதிர்ப்புக்களாலோ சமாதானக் கொள்கைக் கோட்பாட்டினாலோ மாற்றப்படப் போவதில்லை. மத்திய கிழக்கில் உள்ள யூத, அரேபியத் தொழிலாளர்கள் உட்பட, அனைத்துத் தொழிலாளர வர்க்கத்தையும் ஐக்கியப்படுத்துவதன் மூலமும், இலாபமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரு பொதுப் போராட்டத்தின்மூலம்தான், ஒரு புதிய உலகப் பெரும் கொந்தளிப்பு தடுத்து நிறுத்தப்பட முடியும்.
|