WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
New evidence of criminal negligence in run-up to rig explosion
Failure of BP’s “top kill” means oil will continue to flow for months
எண்ணெய் தோண்டுதல் வெடிப்பிற்கு முன்னதாக குற்றம்சார்ந்த புறக்கணிப்பு பற்றி புதிய சான்றுகள்
பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் “top kill” நடவடிக்கை தோல்வியால் பல மாதங்களுக்கு எண்ணெய் தொடர்ந்து கசியும்
By Joe Kishore
31 May 2010
Use this version to print | Send
feedback
பிரிட்டிஷ் பெட்ரோலியம் வாடகைக்கு எடுத்துள்ள கடலுக்குள் உள்ள எண்ணெய் தோண்டுதல் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு நாற்பது நாட்களுக்கு பின்னரும், சற்றும் குறைவில்லாமல் மெக்சிகோ வளைகுடாப்பகுதியின் கீழிருந்து எண்ணெய் தொடர்ந்து பெருகிக் கசிந்து வருகிறது. பல வாரங்கள் பேரழிவின் பரப்பு பற்றி குறை மதிப்புச் செய்தும், மூடிமறைத்தும் வந்த அரசாங்க அதிகாரிகள் இப்பொழுது இது அமெரிக்க வரலாற்றில் இதுகாறும் இல்லாத மோசமான சுற்றுச் சூழல் பேரழிவு என்பதை ஒப்புக் கொள்கின்றனர்--- இதற்கு முடிவு ஏற்படுவதாகவும் தெரியவில்லை.
வார இறுதியில், பிரிட்டிஷ் பெட்ரோலியம் அதன் சமீபத்திய கசிவுப் போக்கை நிறுத்தும் முயற்சியான "top kill" என அழைக்கப்படுவது தோற்றுவிட்டதாக அறிவித்துள்ளது. புதிய தந்திரோபாயத் திட்டங்கள் அது அறிவித்துள்ளது; அதில் கசியும் குழாயை வெட்டிவிட்டு எண்ணெய் வெளியேறாது மூடுவிடுவதும் அடங்குகின்றது. இத்திட்டம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை; குழாய் வெட்டப்பட்டபின் கசிவின் வேகம் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கும் விளைவுதான் ஏற்படக்கூடும். அது வெற்றிபெற்றாலும், எண்ணெய் வெள்ளப் போக்கின் ஒரு பகுதியைத்தான் கட்டுப்படுத்தும்.
"top kill நடவடிக்கை தோல்வியுற்றது பேரழிவின் பரப்புத் தன்மையைப் பெரிதாக்கிக் காட்டுகிறது" என்று எண்ணெய் கசிவு வல்லுனரும், கடல் துறை பாதுகாப்பாளருமான ரிக் ஸ்ரைனர், உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்தார். "ஐயத்திற்கு இடமின்றி கசிவு இன்னும் இரு மாதங்களுக்கு தொடரும்."
பிரிட்டிஷ் பெட்ரோலியம் தற்பொழுது இருக்கும் கிணற்றுடன் தொடர்புபடுத்தக்கூடிய வடிவமைப்பில் தனித்தனிக் கிணறுகளைத் தோண்டிவருவதுடன், கசிவை மூடவும் முயல்கிறது. ஆனால் இக்கிணறுகள் குறைந்தது ஆகஸ்ட் வரை தயாராகாது என்று ஞாயிறன்று பிரிட்டிஷ் பெட்ரோலிய அதிகாரிகள் கூறினர்.
அமெரிக்க புவியியல் மதிப்பீட்டகம் (USGS) இக்கசிவுப் போக்கு நாள் ஒன்றிற்கு 500,000த்தில் இருந்து 1மில்லியன் காலன்கள் வரை இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது. சுயாதீனமான விஞ்ஞானிகளின் மதிப்பு விகிதத்தைவிட மிக, மிகக் குறைவானதான, இன்னும் கூடுதலாக 90மில்லியன் காலன் எண்ணெய் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கசிந்து விடும். ஒப்புமையில் எக்சென் வால்டெஸ் 11மில்லியன் காலன்களைத்தான் கசியவிட்டது.
இந்த இருப்புக் கிணறுகள் பற்றியும் தோல்வி ஏற்பட்டால், கசிவு முழு இருப்பு தீரும் வரை தொடரும். பிரிட்டிஷ் பெட்ரோலிய செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஞாயிறன்று இருப்பு எவ்வளவு இருக்கும் என்பது பற்றி நிறுவனத்திற்கு தெரியாது என்றார்.
எண்ணெயோ கடலோரப் பகுதிகளுக்கு வரத் தொடங்கிவிட்டதால் ஒபாமா நிர்வாகம் மற்றும் கடலோரப் பாதுகாப்புப் பிரிவின் ஒத்துழைப்புடன், பிரிட்டிஷ் பெட்ரோலியம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு செய்தி ஊடகத்தினர் செல்ல முடியாதபடி தடைக்கு உட்படுத்த முயன்றுள்ளது. CBS செய்திக்குழு ஒன்று எண்ணெய்க் கசிவு நிறைந்த கடற்கரைக்குச் செல்ல முற்பட்டபோது கடலோரப் பாதுகாப்புப் பிரிவினால் கைதுசெய்யப்படும் என்ற அச்சுறுத்தலுக்கு உட்பட்டது. இந்த தடைவிதிகள் ''பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின்” விதிகள் எனப்பட்டன. ஏனைய செய்தி ஊடகங்களும் அப்பகுதிகளுக்கு செல்வது பெருகிய முறையில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்று உறுதிப்படுத்தினர்.
ஆயினும்கூட பேரழிவின் பாரியளவு படிப்படியாக வெளிந்த வண்ணம் உள்ளது; விஞ்ஞானிகள் மாபெரும் கடலடித் திரட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர்; இது ஏற்கனவே வளைகுடா மேற்பகுதியில் படர்ந்து வரும் பெரும் திரட்டுக்களை தவிர மேலதிகமாக உள்ளது.
ஏற்கனவே இரு திரட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் ஸ்ரைனர், “இது பனிப்பாறையின் உச்சிதான்” என்றார். “எண்ணெயின் சில பகுதி புளோரிடா கடலோரப்பகுதி வரை சென்றிருக்கக் கூடும். விரைவில் மாநிலத்தின் கிழக்குக் கடற்கரைப்பகுதியில் தார்ப் பந்துகள் வெளிப்படும்” என்றார்.
விஷயங்களை மோசமாக்கும் வகையில் செவ்வாயன்று அட்லான்டிக் புயல் காற்றுப் பருவம் தொடங்குகிறது; இந்த ஆண்டு அது மிகத் தீவிரமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். வளைகுடாவில் புயல் என்பது சதுப்புநிலங்களிலும் உள்நாட்டுப் பகுதிகளிலும் தீவிரமாக உள்ளே புகும். “ஒரு முதல் புயல் இந்த வெளிப்பட்டுள்ள எண்ணெயை, புயலின் எழுச்சியை ஒட்டி, கடலோர உள்நாட்டு நல்ல நீர்நிலைகளுக்குள் கொண்டுசென்றுவிடும்” என்றார் ஸ்ரைனர். புயல்கள் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் தோண்டும் மற்ற இரு கூடுதலான கிணற்று வேலைகளையும் கடுமையாகத் தடைக்கு உட்படுத்திவிடும்.
ஒபாமா நிர்வாகம் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தை தொடர்ந்து மூடி மறைந்து வருகிறது; ஆனால் புதிய சான்றுகளோ பேரழிற்கு முன் நிறுவனம் நடந்து கொண்ட குற்றம் சார்ந்த பொறுப்பற்ற தன்மையை ஆவணமிட்டுள்ளன. தான் “சீற்றமும், ஆத்திரமும்” அடைந்துள்ளதாக ஒபாமா கூறியுள்ளார்; இக்கசிவு “கோபத்தைக் கொடுக்கிறது, இதயத்தைப் பிளக்கிறது.” என்றார். ஆனால் நிர்வாகம் பொறுப்பு பற்றிப் பேசுவதைத் தொடர்ந்து தவிர்க்கிறது; அதே நேரத்தில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் அல்லது அரசாங்கம் பேரழிவை எதிர்பார்த்திருக்கும் வாயப்பு இல்லை என்ற கருத்தையும் தெரிவிக்கிறது.
வெள்ளை மாளிகையின் எரிசக்தி பிரிவு ஆலோசகரான கரோல் பிரௌனர், ஞாயிறன்று NBC யின் “செய்தியாளரைச் சந்திக்கவும்” நிகழ்ச்சியில் ஏன் பிரிட்டிஷ் பெட்ரோலியத்திடம் பேரழிவுபற்றி ஒரு நெருக்கடிக்காலத் திட்டம் இல்லை என்று கேட்கப்பட்டார். “பல தசாப்தங்காள இந்தக் கிணறுகளில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது என்பதை உணர்வது முக்கியம். இத்தகைய விபத்துக்கள் இதுவரை நிகழ்ந்தது இல்லை” என்றார் அவர்.
வருங்காலத்தில் ஆழ்கடல் எண்ணைய் எடுத்தல் வளைகுடாவில் தடுக்கப்படுமா என்பது பற்றிப் பேச பிரௌனர் மறுத்துவிட்டார். “விசாரணைகள் நமக்கு என்ன கூறுகின்றன என்பது பற்றி நான் முதலில் பார்க்க விரும்புகிறேன்…..” என்றார்.
பிரிட்டிஷ் பெட்ரோலியமும் அரசாங்கமும் இந்த விபத்தின் பாரியளவு முற்கூட்டி கணிப்பிட முடியாது என்ற கூற்று, பிரிட்டிஷ் பெட்ரோலியம் மத்திய கனிப்பொருள் நிர்வாக சபையின் உதவியுடன் கிடைத்த எச்சரிக்கை சமிக்கைகளை வேண்டுமென்றே கவனத்தில் எடுக்கவில்லை என்பது அதிகரித்துவரும் சான்றுகளால் நிராகரிக்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் உள் ஆவணங்களை மேற்கோளிட்டு, New York Times, ஞாயிறன்று ஜூன் 2009 லேயே பொறியியலாளர்கள் Deepwater Horizon செயற்பாடுகளில் எண்ணெய்க் கிணறுக் குழாய்களின் பராமரிப்பு பற்றி கவலையைத் தெரிவித்துள்ளனர் என்று கூறியுள்ளது. பிரிட்டிஷ் பெட்ரோலிய பொறியியலாளர் கடந்த மாதம் கொடுத்த அறிக்கை ஒன்று மூடப்பட்டுள்ள குழாய்களின் பகுதிகள் பிரிட்டிஷ் பெட்ரோலியம் தோண்டும் ஆழத்தில் உயர் அழுத்தத்தால் சரிந்துவிடக்கூடும் என்று எச்சரித்திருந்தார்.
“அப்படி ஏற்பட்டால் அது மிக மோசமான நிலைமை ஆகும்” என்று பிரிட்டிஷ் பெட்ரோலியத்தில் உள்ள ஒரு மூத்த குழாய்க்கிணறு தோண்டும் பொறியியலாளரான மார்க் இ. ஹாபிள் கூறினார். “ஆனால் அது போல் நடந்ததைப் பார்த்துள்ளேன், எனவே அவ்வாறு நடக்கலாம்.”
டைம்ஸின் கருத்துப்படி “நிறுவனம் குழாய்கள் மூடப்படுவது பிரிட்டிஷ் பெட்ரோலியம் சக ஊழியர்களிடம் இருந்து சிறப்பு அனுமதி பெற்றபின்தான் நடந்தது. ஏனெனில் இது நிறுவனத்தின் பாதுகாப்புக் கொள்கைகள், வடிவமைப்புத் தரங்களை மீறியது. உள் அறிக்கைகள் ஏன் இந்த விதிவிலக்கை நிறுவனம் அனுமதித்தது என்பது பற்றி விளக்கவில்லை.
டைம்ஸ் மேலும் கூறுவதாவது: “இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பிரிட்டிஷ் பெட்ரோலிய பொறியியலாளர்கள் குழாய்கள் மூடப்படுதல் “ஒரு வெற்றிகரமான சிமென்ட் பூசுவது போல் அமையாது” என்ற முடிவிற்கு வந்தனர். ஒரு ஆவணத்தின்படி அக்கருத்து கூறப்பட்டுள்ளது; அது கிணற்றில் இருந்து எரிவாயுக்கள் தப்பிவிட முடியாதபடி குழாய்கள் மூடப்படலாம் என்பது பற்றி அந்த ஆவணத்தில் குறிப்புக்கள் இருந்தன.” மத்திய கனிப்பொருள் நிர்வாக சபை நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டுத் தேவைகளையும் இத்தகைய மூடல் நிறைவேற்றாது என்ற முடிவிற்கும் ஆவணம் வந்துள்ளது.
“இதே ஆவணத்தின் இரண்டாம் பதிப்பு ‘ஒரு வெற்றிகர சிமென்ட் போல் அடைப்பதை செய்ய முடியும், மத்திய கனிப்பொருள் நிர்வாக சபையின் விதிகளையும் நிறைவேற்ற இயலும்” என்று கூறுகிறது. பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் கருத்துப்படி கூடுதலான சோதனைக்கு பின்னர் மதிப்பீட்டில் 180° மாற்றம் வந்தது என்று விளக்கியது.
ஏப்ரல் 20 வெடிப்பிற்கு முந்தைய வாரங்களில், பிரச்சினைகள் பற்றி பல அடையாளங்கள் வந்தன; அவற்றுள் கிணற்றில் இருந்து திடீரென பல எரிவாயு வெளியீடுகள் தோன்றியதும் அடங்கியிருந்தன.
“குறைந்தது மூன்று முறையேனும், பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் சான்றுகள் குறித்துள்ளபடி, வெடிப்பைத் தடுக்கும் கருவி கசிவைக் காட்டியது. கருவியை உற்பத்தி செய்தவர்கள் அது திறமையாக இயங்குவதற்கான வரம்புகள் அடையப்பட்டுவிட்டன என்றனர்” என்று டைம்ஸ் கூறியுள்ளது. கிணறு மீது கட்டுப்பாட்டை இழப்பது செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இட்டுச்சென்றது. ஆனால் தோண்டுவது தொடரலாமா, வேண்டாமா என்பது மதிப்பீடு செய்யப்படவில்லை
“தங்கள் பிரச்சனைகளை கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குத் தெரிவித்த பின் நிறுவனத்தின் அதிகாரிகள் மத்திய அரசின் உத்தரவின் பேரில் நடக்கும் வெடிப்புத் தடுப்புக் கட்டாய சோதனையை தாமதப்படுத்துவதற்கு அனுமதி கேட்டனர். இது பிரச்சினை தீரும் வரை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நிகழும் என்று பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் ஆவணங்கள் கூறுகின்றன. “முதலில் இந்த வேண்டுகோளை மறுத்த பின்னர், மத்திய கனிப்பொருள் நிர்வாக சபை தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டது.”
“வெடிப்புத் தடுப்பு பின்னர் இறுதியில் சோதிக்கப்பட்டபோது, அது குறைந்த அழுத்தத்தில், சதுர அங்குலத்திற்கு 6,500 பவுண்டுகள் அழுத்தத்தில் நடத்தப்பட்டது; தாமதத்திற்கு முன் கருவியைச் சோதனையிட ஒரு சதுர அங்குலத்திற்கு 10,000 பவுண்டுகள் என்பதை விட அது குறைவானது. வெடிப்பு ஏற்படும் வரை இந்தக் குறைந்த அழுத்தத்தில்தான் அது சோதிக்கப்பட்டது” என்று டைம்ஸ் கூறியுள்ளது.
வேறுவிதமாகக் கூறினால் பிரிட்டிஷ் பெட்ரோலியம் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு கிணறு பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது, இது வெடிப்பிற்கு வகை செய்யக்கூடும், வெடிப்புத் தடுப்புக் கருவியே பிரச்சினையில் உள்ளது என்பது பற்றி நன்கு அறிவர். ஆயினும்கூட, அரசாங்க அமைப்பின் உடன்பாட்டுடன் சோதனைத் தோண்டல்களை தொடர்வதில் உள்ள சாத்தியமான பேரழிவு பற்றிய எச்சரிக்கைகள் பொருட்படுத்தவில்லை. |