World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Day of action highlights chasm between workers and established parties

பிரான்ஸ்: நடவடிக்கை தினமானது தொழிலாளர்களுக்கும் நடைமுறைக் கட்சிகளுக்கும் இடையே உள்ள பெரும் பிளவை உயர்த்திக் காட்டுகிறது

By Antoine Lerougetel
29 May 2010

Back to screen version

மே 27 அன்று பிரான்ஸில் நடைபெற்ற நடவடிக்கை தினம் பிரான்ஸின் முக்கியமான தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ இடது கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றிருந்த தொழிலாளர்கள், இளைஞர்கள் மீது நடத்திய ஒரு அரசியல் மோசடி ஆகும்: சோசலிஸ்ட் கட்சி (PS), பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), இடது கட்சி (Parti de Gauche PG), ஒலிவியே பெசன்ஸநோவின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) ஆகியவையே அக்கட்சிகள் ஆகும்.

இந்த ஆர்ப்பாட்டம் பழமைவாத ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி ஓய்வூதியங்கள், வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றில் திட்டமிட்டுள்ள வெட்டுக்களுக்கு தொழிலாளர்களின் உண்மையான மற்றும் அதிகரிக்கும் எதிர்ப்பிற்கு முறையீடு செய்து அழைப்புவிடப்பட்டது. இந்த வெட்டுக்களானது ஐரோப்பா முழுவதும் சுமத்தப்படும் கடுமையான சிக்கனக் கொள்கைகளுடன் இயைந்து உள்ளன. சிக்கனத் திட்டத்தின் மிகத் தெளிவான உதாரணம் கிரேக்கத்தின் சமூக ஜனநாயகக் கட்சியின் பிரதம மந்திரி ஜோர்ஜியாஸ் பாப்பாண்ட்ரூ, ஐரோப்பிய ஒன்றியம்-சர்வதேச நாணய நிதியத்தின் 110 பில்லியன் யூரோக்கள் பிணை எடுப்பிற்கு ஈடாக இயற்றியுள்ள சிக்கனத் திட்டம் ஆகும்.

நடவடிக்கைத் தினமானது தொழிலாளர்களை தங்கள் சுயாதீன சொந்தப் புரட்சிகரப் போராட்டத்தை, சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் அவர்களின் “இடது” இணைப்புக்களாக இருப்பவர்களுக்கும் எதிராக இருக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக, இருக்கும் கட்சிகளை சார்க்கோசியின் கொள்கைகளை எதிர்ப்பதற்கு அவர்கள் நம்ப முடியும் என்று அமைதிப்படுத்தும் நோக்கத்தைத்தான் கொண்டிருந்தது. இது நீண்ட காலமாக செயல்திறனற்ற, கால இடைவெளி விட்டு வரும் எதிர்ப்புக்களானது தொழிற்சங்கங்களால் ஒழுங்படுத்தப்படுவதன் ஒரு பகுதி ஆகும். இவைகள் சமூகச் சீற்றத்திற்கு பாதுகாப்பு வால்வாக செயல்படுகின்றன. இவைகள் அரசாங்கத்தை அதன் சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்போது எப்படி, எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதை கணிப்பதற்கும் இருக்கும் “இடது கட்சிகளின்” வெட்டுக்களுக்கான ஆதரவை மறைக்கவும் உதவுகின்றன.

பிரான்சின் ஓய்வூதிய வெட்டுக்களானது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 8 சதவிகிதம் என்று இருக்கும் வரவு-செலவுப் பற்றாக்குறையை 2013க்குள் 3 சதவிகிதம் எனக் குறைக்க வேண்டும் என்று கோரியுள்ள ஐரோப்பிய ஆணயைத்திற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதி ஆகும். இதில் வரவு-செலவுப் பற்றாக்குறை 100 பில்லியன் யூரோக்கள் குறைக்கப்படும். ஓய்வூதியத் தகுதி பெறும் வயதை 60ல் இருந்து 63க்கு உயர்த்துவதற்கும் சார்க்கோசி இலக்கு கொண்டுள்ளார்.

சோசலிஸ்ட் கட்சியின் முதன்மைச் செயலர் மார்ட்டின் ஒப்ரி கடந்த ஜனவரி மாதம் சார்க்கோயின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு தன் உடன்பாட்டைக் கூறுகையில் ஓய்வூதிய வயது குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாவது உயர்த்தப்பட வேண்டும் என்றும் சோசலிஸ்ட் கட்சியானது வரவு-செலவுப் பற்றாக்குறை மற்றும் பொதுக் கடன்களை குறைக்க அரசாங்கத்துடன் ஒத்துழைக்கத் தயார் என்றும் கூறினார். பின்னர் ஓய்வூதிய வயது அதிகரிப்பிற்கு ஆதாரவை இவ்வம்மையார் திரும்பிப் பெறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டாலும், சோசலிஸ்ட் கட்சியானது 100 பில்லியன் வரவு-செலவுப் வெட்டுக்களுக்கு இன்னும் ஒப்புதல் கொடுக்கிறது.

சமூக ஜனநாயகவாதிகளின் மற்றய பிரிவுகளானது சார்க்கோசியின் வெட்டுக்களை எதிர்க்கும் போலித்தனத்தில்கூட ஈடுபடவில்லை. IMF ன் தலைமை இயக்குனரும், 1997-2002 ல் லியோனல் ஜோஸ்பனின் பன்முக இடது அரசாங்கத்தில் பொருளாதார, நிதியமைச்சராக இருந்தவரும் சோசலிஸ்ட் கட்சியின் (PS) முக்கிய தலைவருமான டொமினிக் ஸ்ட்ராஸ் கான், சார்க்கோசியின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு கொடுக்கிறார். “ஓய்வூதியம் பெறும் வயது 60 என்பதை எப்பொழுதும் நீடித்துக் கொண்டிருக்க முடியாது” என்று அறிவித்த அவர், இப்பிரச்சினையில் “தேவையில்லாத மூட உணர்ச்சிகள் கூடாது” என்றார்.

பிரான்சின் குரலைப் பிரதிபலிக்கும் Le Monde ஆனது ஸ்ட்ராஸ் கானின் கருத்தை எதிரொலிக்கும் வகையில் மே 27ம் தேதி ஒரு தலையங்கத்தில் “பிடிவாதக் கோட்பாடு, மூட உணர்ச்சி, 60 வயதில் ஓய்வு …இவை யதார்த்தத்துடன் மோதுகின்றன.” என்று குறிப்பிட்டது.

மே 27 ஏற்பாட்டாளர்களுடன் NPA முற்றிலும் உடந்தையாக இருந்தது. மே 6 ம் தேதி நடைபெற்ற கூட்டம் பற்றி, மே 14ம் திகதி வெளியிட்ட அறிக்கையில், அக்கட்சி அறிவித்ததாவது: “சமூக, தொழிற்சங்க, அரசியல் இடது பிரமுகர்களை ஒன்றாகக் கொண்டுவந்த ஆர்ப்பாட்டம் உண்மையில் பெரும் வெற்றியாகும்.” தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், பசுமைவாதிகள், PC, PS, PG, NPA என அனைத்தையும் பட்டியலிட்ட பின்னர், அது “அனைவரும் உண்மையான அரசியல், சமூகப் பிரச்சினைகளுக்கு வெற்றி கிடைக்கும் வரை ஐக்கியமாக இருக்க வேண்டும் என்ற உறுதிபூண்டுள்ளனர்” எனத் தொடர்ந்து எழுதியது.

Le Monde இடம் கருத்துத் தெரிவித்த பெசன்ஸநோ, ”PS பற்றி பக்குவமற்ற பொய்களை விதைக்க முயன்றார். “சோசலிஸ்ட் கட்சி இறுதியில் ஓய்வூதிய வயது 60 ஐ பாதுகாப்பது என்ற முடிவிற்கு வந்துள்ளது….நமக்கு மிகப் பரந்து விரிந்த முன்னணி தேவை, அதற்காக PS ஐக்கியப்பட்ட அணிதிரள்வுகளில் பங்கு பெற வேண்டும்.”

400,000 மக்களுக்கும் (போலீஸ் மதிப்பீடு) 1 மில்லியன் மக்களுக்கும் (தொழிற்சங்க மதிப்பீடு) இடையே என்ற எண்ணிக்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்கு பெற்றிருந்தனர். பொதுத்துறையில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் சதவிகிதம் 11.6 என்றும், உள்ளூர் அரச சேவைகளிடம் இருந்து 7.5 சதவிகிதம், மருத்துவமனைகளில் இருந்து 8.3 சதவிகிதம், அஞ்சல் துறையில் இருந்து 12.8 சதவிகிதிம், கல்வித்துறையில் இருந்து 12 முதல் 16 சதவிகிதம், கிட்டத்தட்ட 30 சதவிகிதம் இரயில்வேக்களில் இருந்து என்றும் அரசாங்கப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பொதுத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர், மார்ச் 23 நடந்த கடைசி நடவடிக்கை தினத்தை இது ஒத்திருந்தது என்று தெரிவிக்கிறது.

மார்சேயில் WSWS நிருபர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேசினர். ஒரு பெண்மணி கூறினார்: “இன்றைய ஆர்ப்பாட்டம் போதாது. நான் ஒரு புதிய புரட்சி வேண்டும் என்கிறேன். இந்த அரசாங்கம் ஒரு முடியாட்சி போல் உள்ளது. கிரேக்கத்தில் இருக்கும் நிலைமையைப் போல்தான் இங்கும் உள்ளது. வங்கிகள் அரசாங்கத்திற்கு சிக்கன நடவடிக்கை எடுக்குமாறு ஆணையிடுகின்றன. இதற்கு முதலில் விலை கொடுப்பவர்கள் இளைஞர்கள். அவர்கள் படுகொலைக்கு உட்படுத்தப்படுகின்றனர், அவர்களுக்கு முன்னோக்கு ஏதும் இல்லை. எங்கள் காலத்தில் 16 வயதிலேயே வேலை கிடைத்தது. அவர்கள் எங்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை, நாங்கள் பட்டினி கிடந்தாலும் பொருட்படுத்துவது இல்லை. அனைத்தும் அவர்களுக்குத்தான். நாம் மிகவும் பொறுத்துக் கொள்கிறோம். அரசருடன் மக்களும் பட்டினியால் இறக்கின்ற நிலை ஏற்பட்டது போல 1789ல் இருந்த நிலைமைக்கு நாம் மீண்டும் போய் இருக்கிறோம். .

நீசில் 9.000 பேர் அணிவகுத்துச் சென்றனர். ஆசிரியர்கள், தீயணைக்கும் படைப்பிரிவினர், மருத்துவமனை ஊழியர்கள், பொதுத் துறை, தனியார் துறை ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் என்று அனைவரும் இருந்தனர். தங்கள் ஒய்வூதியங்கள் மற்றும் சமூக நலச் செலவுகளின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் வங்கிகளின் ஆணைகள் பேரில் அரசாங்கங்களானது ஒரு ஐரோப்பிய அளவிலான சிக்கன நடவடிக்கைத் திட்டத்தைக் கொண்டுள்ளன என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். “வரவிருக்கும் நாட்களில், பிரான்ஸ் கிரேக்கம் போல் தான் நிலைமையை எதிர்கொள்ளும்” என்று அணிவகுப்பினர் கருத்துக் கூறினர்.

ஐரோப்பிய மத்திய வங்கியின் குளோட் திரிஷே மதிப்பீடான தற்போதைய உலக அரசியல், பொருளாதார நிலைமை 1939-1945 காலத்துடன் ஒப்பிடத்தக்கது என்று கூறியுள்ளதை நினைவுபடுத்தியபோது, பலரும் அதை ஏற்றனர்: “இந்த நிலைமையை நாம் இனியும் பொறுத்துக் கொள்ளக்கூடாது. நம்மைக் பாதுகாக்க ஒரு வெகுஜன அமைப்பு நமக்குத் தேவை. ஐரோப்பிய அளவில் நாம் ஒன்றுபட வேண்டும்.”

ஒருவர் கூறினார்: “ஒரு தொழிலாளர் அரசாங்கம் நிறுவப்பட வேண்டும் என்ற கருத்திற்கு நான் உடன்படுகிறேன். ஆனால் அது எப்படிச் செயல்படும் என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை.” “பேரழிவின் கோரக் காட்சிகள் மீண்டும் திரும்புகின்றன” WSWS துண்டுப்பிரசுர கட்டுரையை படித்த பின்னர், அவர் கூறினார்: “தொழிற்சங்கங்கள், பழைய இடது கட்சிகளிடம் இருந்து சுயாதீனமாக இயங்கும் விதத்தில் இது போன்ற ஒரு கட்சி நமக்குத் தேவை. இதை நான் என் நண்பர்களுக்கு கொடுப்பேன்.”

அமியானில் வரலாற்றுப் பட்டப் படிப்பு பயிலும் ஒரு மாணவரான ஜோனதன் wsws நிருபர்களை அணுகி தான் WSWS துண்டுப்பிரசுரங்களை முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தில் படித்துள்ளதாகக் கூறினார். “தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் நெருக்கடியின் ஆழ்ந்த தன்மையை மறைக்கின்றன. மக்கள் சீற்றத்தைத் தவிர்ப்பதற்கும் சமாதானப்படுத்துவதற்கும் தான் அவர்கள் இவ்வாறு செய்கின்றனர். ஒபாமா கூட வங்கியாளர்களுக்கு இணங்கியுள்ளார். அவர்கள் தான் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர்.” என்றார் அவர்.

தான் ஒரு உயர்நிலைப்பள்ளியில் உதவி ஆசிரியராக இருப்பதாக அவர் விவரித்தார். “எப்பொழுதும் வளங்களும், கருவிகளும் அங்கு குறைவு என்று உங்களுக்குத் தெரியவரும். கட்டிடங்கள் சிதைந்து வருகின்றன. அமெரிக்காவில் கல்வித்துறை செல்லும் போக்கில்தான் இங்கும் நடக்கிறது.”

“கிரேக்கத்தில் பாப்பாண்ட்ரூ செய்வதைத்தான் PS ஆனது பிரான்ஸில் செய்யும் என்று நினைக்கிறேன். PS உயரடுக்கினர் முதலாளித்துவத்தினர். ஒப்ரி தன்னுடைய நேரத்தை வணிக வட்டாரங்களில் செலவழித்து, அவர்களுடைய ஆதரவைப் பெற முயல்கிறார். NPA இன்னும் பரந்த ஆதரவாளார்கள் திரளை நாடி கொள்கைகளை கைவிட்டுள்ளது… தொழிலாள வர்க்கமானது வங்கிகளையும், பெருவணிகத்தையும் எடுத்து அவற்றைத் தானே நடத்த வேண்டும். அவர்களுக்கு இக்கருத்துக்கள் கூறப்பட வேண்டும், அதைச் சாதிக்க அவர்களால் இயலும் என்று கூறப்பட வேண்டும். நாம் ஒரு வெடிப்புத் தன்மையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்” என்று அவர் தொடர்ந்து கூறினார்.