World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French National Assembly debates burqa ban

பர்க்கா தடை பற்றி பிரெஞ்சு தேசிய சட்ட மன்றம் விவாதிக்கிறது

By Antoine Lerougetel
12 July 2010

Back to screen version

பர்க்கா அல்லது நிகப் எனப்படும் முழு முகத்தைத் திரையிடும் உடைகளை அணிதலைத் தடைசெய்யும் சட்டம் பற்றிய விவாதம் பிரெஞ்சு தேசிய சட்ட மன்றத்தில் ஜூலை 13ம் தேதி வாக்கெடுப்பிற்கு வருவதற்காக, ஜூலை 5 அன்று அதன் தயாரிப்பாக நடைபெற்றது. பிரெஞ்சு ஆளும் வர்க்கத்திற்கு இந்த விவாதத்தினால் உள்ள அரசியல் பங்கானது, ஏராளமான சட்ட மன்ற பிரதிநிதிகள், செய்தி ஊடகத்தினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் வந்திருந்ததில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

ஆளும் UMP (Union for a Popular Movement) முன்வைத்துள்ள இச்சட்டவரைவு பொது இடங்களில் பர்க்கா அல்லது நிகப்பை அணிதலை முழுத்தடை செய்யும் விதத்தில் சுமத்தப்படும். இது மீறப்பட்டால் 150 யூரோ அபராதம் மற்றும்/அல்லது “குடியரசின் மதிப்புக்களை” உணர்த்தும் “குடியுரிமை பற்றிய பாடத்திட்டத்தில்” பங்கு பெற வேண்டும் என்ற கட்டாயமும் இருக்கும். பொது இடத்தில் தங்கள் முகத்திரையை அகற்ற மறுக்கும் பெண்கள், அவர்களுடைய அடையாளத்தைக் காண இது தேவை என்ற போலிக்காரணம் காட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு நான்கு மணி நேரம் காவலில் வைக்கப்பட முடியும்.

இதைத்தவிர “கட்டாயமாக முகம் மறைக்கப்படல்” என்ற புதிய குற்றமும், அதற்கு ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் 30,000 யூரோ அபராதமும் துணைவர்கள், உடனிருப்போர் அல்லது இப் பெண்களின் குடும்பங்கள் மீது சுமத்தும் நோக்கம் கொண்ட சட்டவரைவும் வரவுள்ளது. இச்சட்டவரைவின் அடக்குமுறைத்தன்மை எதிர்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சி (PS) கொண்டு வந்துள்ள திருத்தங்களால் வலுப்பெறுகிறது. முதலில் UMP யினால் திட்டமிடப்பட்டிருந்த 15,000 யூரோக்கள் அபராதம் இருமடங்காக்கப்பட வேண்டும் என்று சோசலிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்த அபராதங்கள் ஒரு பெண் சட்டபூர்வ வயதிற்கு வராமல் இருந்தால் இரு மடங்காக ஆக்கப்படும்.

இச்சட்டம் ஆறுமாதங்கள் “கற்பிக்கும் முறைக்குப்” பின்னர்—அதாவது பர்க்கா, நிகப் ஆகியவற்றை கண்டித்து இன்னும் அரசியல் செய்தி ஊடக இஸ்லாமிய எதிர்ப்பு வெறிப் பிரச்சாரம் நடத்தப்பட்டபின்—2011 வசந்த காலத்தில் இருந்து நடைமுறைக்கு வரும்.

இந்தச் சட்டவரைவை அளிக்கையில் நீதித்துறை மந்திரி Michele Alliot-Marie சட்டத்தின் ஆழ்ந்த குடியரசுத் தன்மையை பற்றி வலியுறுத்தினார். இது “பாதுகாப்பு அல்லது மதத்தைப் பற்றியது அல்ல என்றும்”, மாறாக “பொது ஒழுங்கு”, “கௌரவம்”, “சமத்துவம்” மற்றும் “வெளிப்படைத்தன்மை” பற்றியது என்றார். மேலும் ஆடம்பரமாக இவர் “குடியரசு அதன் முகத்தை மறைக்கவில்லை” என்றும் சேர்த்துக் கொண்டார்.

இங்கு Alliot-Marie நயமற்ற முறையில் கபடமற்ற தன்மையைக் காட்ட முற்படுகிறார். தடையின் முக்கிய வாதங்களில் ஒன்று பாதுகாப்பு ஆகும். இதுவோ ஒவ்வொரு முஸ்லிமும் சாத்தியமுள்ள பயங்கரவாதியாகவும், அவர்களின் அடையாளங்களை எப்பொழுதும் பரிசோதிக்க முடியும் என்ற தேவையினையும் வளர்த்துள்ளது.

இந்த பர்க்கா தடையை தயாரித்த பாராளுமன்றக் குழுவின் தலைவராக இருந்த PCF எனப்படும் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதி Andre Gerin ஆல் முக்கிய வாதங்கள் மதத்தை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. Nouvel Observateur ஆனது, Gerin “பெரும் ஆர்வத்துடன் முழுத் தடைக் கொள்கைக்கு ஆதரவு கொடுக்கிறார்” என்று எழுதியுள்ளது. “இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்குச் செல்லும் இந்தப் போக்கை நாம் ஒரே குடியரசுக் குரலுடன் நிறுத்த வேண்டும்…இன்று அரேபிய, முஸ்லிம் உலகத்தில் உள்ள இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு எதிராக எழுப்பப்படும் குரல்களுடன் நாம் இணைந்து நிற்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

திட்டமிடப்பட்டுள்ள பர்க்கா தடை அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான வெளிப்படையான மற்றும் அரசியலமைப்பு நெறிக்கு மாறான தாக்குதல் ஆகும். இது முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகளுக்கு முறையிட்ட மக்கள் எதிர்ப்பை சார்பற்று சிதைத்துவிடும் நோக்கத்தைக் கொண்டது. ஆனால் இத்தகைய சட்டவரைவிலுள்ள சட்ட விதிகளின் அடிப்படைத் தன்மையை மீறுகிறது என்பது நன்கு அறியப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பிரகடனத்தின் 10 வது விதி கூறுவதாவது: “அவர்களுடைய வெளிப்பாடு சட்டத்தால் நிறுவப்பட்டுள்ள பொது ஒழுங்கிற்கு தொந்திரவு கொடுத்தால் அன்றி, ஒருவருடைய கருத்துக்களைக் கொண்டு, மதக் கருத்துக்கள் உட்பட, எவரும் மௌனப்படுத்தப்படக்கூடாது.”

இக்கொள்கைதான் மனித உரிமைகள் பற்றிய ஐரோப்பிய சாசனத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் 9 வது விதி, “சிந்தனை, உளச்சான்று, மத சுதந்திரம்” என்ற தலைப்பில் அது கூறுவதாவது: “ஒவ்வொருவருக்கும் சிந்தனை, உளச்சான்று, மத சுதந்திர உரிமை உண்டு, இந்த உரிமையில் மதம், நம்பிக்கை, மாறுதலுக்கான சுதந்திரம் உண்டு. அது தனிப்பட்ட முறையிலோ, பிறருடன் சமூகத்தில் இணைந்தோ, பொது இடத்திலோ, அவருடைய மதம் அல்லது நம்பிக்கை வழிபாட்டு முறையை வெளிப்படுத்துதல், கற்பித்தல், நடைமுறைப்படுத்துதல், கடைப்பிடித்தல் என்று தனியாகவோ பயன்படுத்தப்படலாம்-.”

laïcité எனப்படும் நடுநிலைக் கோட்பாட்டையும் இது மிதிக்கிறது. அதன்படி அரசானது மத விடயங்களில் நடுநிலை வகிக்க வேண்டும். அரசு இச்சட்டவரைவின்படி சௌதி அரேபியா, ஆப்கானிஸ்தானில் இஸ்லாமைப் பின்பற்றுபவர்களில் பல பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து தண்டனைக்கு உட்படுத்துகிறது. 1990 களின் போது தாலிபானால் ஆப்கானிஸ்தானின் பெரும் பிரிவுகளில் பர்க்கா அணிவது பரப்பப்பட்டது என்னும் உண்மை—அதுவும் அது அமெரிக்க, பிரெஞ்சு கூட்டுக்களால் ஆதரவிற்கு உட்பட்டிருந்த போது என்பது—தடையின் பாசாங்குத்தனத்தைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தடையை செயல்படுத்த வேண்டும் என்னும் அரசாங்கத்தின் முடிவு சட்டவிரோத மற்றும் சர்வாதிகார ஆட்சிப் பக்கம் அரசாங்கம் நகர்வதின் தெளிவான அடையாளம் ஆகும். அரச சபை (State Council) பர்க்கா மீது தடை என்பதற்கு “உறுதியான நீதித் தன்மை இல்லை” என்னும் ஆலோசனைத் தீர்ப்பையும் மீறி சட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் பிரதம மந்திரி Francois Fillon அரசாங்கம் பர்க்கா எதிர்ப்புச் சட்டத்தை, அத்தகைய சட்டம் அரசியலமைப்பிற்கும் மனித உரிமைகள் பற்றிய ஐரோப்பிய சாசனத்தையும் மீறியது என்றாலும் விரைவில் கொண்டுவரும் என்று உறுதியளித்தார். “சட்ட இடர்களைச் சந்திக்க நாங்கள் தயார், ஏனெனில் இதையொட்டிய பங்குகள் அத்தகைய மதிப்பு உடையவை.” என்றார் அவர்.

சாசன உடன்படிக்கையின்படி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமை காலம் கடந்துவிட்டவை என்று உறைய வைக்கும் முறையில் அவர் உட்குறிப்பாக உணர்த்தினார்: “இன்றைய சமூகத்திற்குப் பொருந்தாத விதத்தில் ஒரு சட்டம் இருப்பது என்று நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது…. [பிரெஞ்சு] அரசியலமைப்புக் குழு மற்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை நாம் மாற்ற வேண்டும் என்றால், அவ்வாறு செய்வது நம் முதல் பொதுக் கடமையாகும்.”

பிரெஞ்சு அரசியல் உயரடுக்கு இனவெறித் துரும்பை, மற்ற பல ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைப் போலவே, வலதுசாரிச் சூழலைத் தூண்டிவிட்டு, தொழிலாளர்களை பிரிப்பதற்கும் ஐரோப்பிய பொருளாதாரச் சரிவின் உட்குறிப்புக்களை மறைக்கவும், அவற்றின் ஆட்சி வர்க்கங்கள் தேசிய வாதத்திற்கு திரும்புவதையும் தூண்டுகிறது. முஸ்லிம் உலகில் இது உணர்விற்கு எரியூட்டும். அதே போல் பிரான்ஸில் உள்ள 5 மில்லியன் முஸ்லிம் மக்களின் உணர்வையும் தூண்டிவிடும். ஏனெனில் பிரெஞ்சு அரசாங்கம் சட்டவிரோதமாக தம்மை அடக்குமுறைக்கு உட்படுத்த இலக்கு கொண்டுள்ளது என்று அவை நியாயமான முறையில் கருதும்.

எல்லாவற்றிற்கும் மேலாக முதலாளித்துவ “இடதில்” இருந்து எந்த எதிர்ப்பும் இல்லாத நிலையில் அரசாங்கம் இச்செயலில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. இக்கட்சிகள் அனைத்தும் இச்சட்டத்திற்கு ஆதரவு கொடுப்பது பிரெஞ்சு உத்தியோகபூர்வ அரசியலில் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட எந்தத் தளமும் இல்லை என்பதைத்தான் நிரூபணம் செய்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதி Anre Gerin தலைமையில் நடத்தப்படும் இந்த பர்க்காச் செயற்குழு, PS, PCF, Jean-Luc Melenchon உடைய இடது கட்சி, பசுமைக் கட்சி என்பவை அனைத்துப் பாராளுமன்றக் கட்சிகளின் ஆதரவுடனும் நிறுவப்பட்டது. “தீவிர இடது” கட்சிகள் என்று கூறப்படும் ஒலிவியே பெசன்ஸநோவின் புதிய முதலாளித்துவ எதிர்புக் கட்சி (NPA) போன்றவை தடையை எதிர்த்து எவ்வித பிரச்சாரமும் செய்யவில்லை—அதன் உறுப்பினர்களின் பெரும்பாலனவர்களுக்கு இது பற்றி கணிசமான எதிர்ப்பு உள்ளது.

பர்க்காவிற்கு எதிரான இந்த அரசியல் பிரச்சாரம் முஸ்லிம்-எதிர்ப்புச் சூழலுக்கு ஆதரவளிப்பது, ஏற்கனவே பல பிரச்சினைகளுக்கும் தாக்குதல்களுக்கும் வழிவகுத்துள்ளது—இதில் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுதல், மசூதிகள் மீதும் ஹலால் மளிகைக் கடைகள் மீது தாக்குதல் ஆகியவையும் அடங்கும்.

இப்பிரச்சினையுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது Hebbadj விவகாரம் ஆகும். இது அரசாங்கத்திற்கு ஒரு பிரெஞ்சுக் குடிமகனாக்கப்பட்டவர், அவருடைய செயல்கள் அதிகாரிகளுடைய கருத்துக்களுடன் மோதினாலோ அல்லது குடியரசு மதிப்புக்கள்” என்று அழைக்கப்படுபவற்றை மீறினாலோ அவருடைய தேசியத் தன்மையை இழக்க உதவுகிறது.

மற்றொரு துரோகத்தன தந்திரோபாயத்தில் PS ன் பாராளுமன்றக் குழு இம்முறை சட்டவரைவு வாக்கெடுப்பிற்கு வரும்போது கலந்து கொள்வதில்லை என்று தீர்மானித்துள்ளது. இது சட்டத்தின் அடிப்படை செல்வாக்கற்ற தன்மை மற்றும் வலதுசாரித் தன்மையை உட்குறிப்பாக ஒப்புக் கொள்வதாகும்.

விவாதத்தில் PS ற்கான பிரதிநிதி Jean Clavany அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதில் உள்ள இடரை விளக்கினார். அதே நேரத்தில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் இனவெறி அற்ற அமைப்பு போல் காட்டிக் கொண்டார். “எங்களில் பலர் இந்த பொருளுரைக்கு எதிராக வாக்களிக்க முடியாது. ஏனெனில் நாங்களும் முழு உடலை மறைக்கும் அங்கி அணிவதை எதிர்க்கிறோம். ஆனால் பர்க்கா பற்றிய விவாதம் தேசிய அடையாளம் பற்றிய அரசாங்க தந்திரோபாய விவாதத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. வாக்களிக்காமல் இருப்பதைப் பொறுத்தவரை, மக்கள் கருத்தை விளக்குவது கடினமாகும்.”

ஆனால் இது பொதுமக்களிடம் இருந்து இனவெறிக் கொள்கையுடன் PS கொண்டுள்ள உடன்பாட்டை மறைக்கும் முயற்சிதான்—அதுவும் “தேசிய அடையாளம் பற்றிய பிரச்சினை பெருமளவு மக்கள் எதிர்ப்பைக் கொண்டுள்ள சூழ்நிலையில். சட்டமன்றத்தில் PS குழுத் தலைவராக இருக்கும் JEAN-MARC AYRAULT, அரசாங்கத்திற்கு ஜூலை 1ம் தேதி PS ஆனது “சட்டம் வாக்களிக்கப்படுவதற்கு ஒரு தடையையும் ஏற்படுத்தாது” என்று உத்தரவாதம் அளித்துள்ளார்.

ஏற்கனவே மே 11ம் தேதி PS முழு உடலை மறைக்கும் திரை மீது முழுத் தடைக்கு குரல் கொடுக்கும் UMP தீர்மானம் ஒன்றின் மீது “சிறிதும் தயக்கமின்றி”, “குடியரசு மதிப்புக்கள் என்ற பெயரில் ஆதரவாக வாக்களித்துள்ளது.

ஜூலை 13 செவ்வாயன்று வாக்களிக்கப்பட உள்ள பர்க்கா சட்டம் அநேகமாக இயற்றப்பட்டுவிடும் எனத் தோன்றுகிறது. PS உடன் நெருக்கமான மூன்று பசுமைவாதிகள் பிரதிநிதிகள்தான் தாங்கள் எதிர்த்து வாக்களிப்பதாக அறிவித்துள்ளனர்—அதுவும் ஒரு வலதுசாரி அடிப்படையில். அவர்கள் “சட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனங்கள் மக்களை அடையாளம் கொள்வதற்குப் போதுமான சட்டங்களை” ஏற்கனவே கொண்டுள்ளனர் என்றும் “பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் என்றால் முகத்தை திரை உடைகள் கொண்டு மறைப்பது அவற்றினாலேயே தடுக்கப்படலாம்” என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

PCF பிரதிநிகளும் PS உடன் சேர்ந்து வாக்கெடுப்பில் பங்கு பெற மாட்டார்கள். ஆனால் Andre Gerin அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார். அதே போல் மூன்று PS பிரதிநிதிகள் Emmanuel Vallas, Jean-Michel Boucheron, Aurelie Filipeti மற்றும் இடது குடியரசுக் கட்சி (PRG) எனப்படும் PS உடன் நெருக்கமான கட்சியின் 10 பிரதிநிதிகளும் ஆதரவளித்து வாக்குப் போடுவார்கள்.