WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
Indian Stalinists split over what right-wing course to follow
எந்த வலதுசாரி போக்கை பின்பற்றுவது என்பதில் இந்திய ஸ்ராலினிஸ்டுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு
By Deepal Jayasekera
17 July 2010
Back
to screen version
மத்திய அரசு எரிபொருள் விலையை உயர்த்தியதை எதிர்த்து சென்ற வாரம் நடைபெற்ற நாடுதழுவிய ஒரு நாள் பந்த் முழுஅடைப்பு வேலைநிறுத்தம் நடைபெற்றது. இந்த வேலைநிறுத்தம் இந்தியாவின் முக்கிய ஸ்ராலினிச கட்சியான கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) சிபிஎம் கட்சியினரிடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் மற்றும் விரிசல்களை உரித்துக்காட்டியுள்ளது.
கடந்த 33 ஆண்டுகளாக மேற்கு வங்க மாநிலத்தில் சிபிஎம் தலைமையிலான இடதுசாரி கூட்டரசாங்கம் ஆட்சி புரிந்து வருகிறது. இந்நிலையில், கட்சியின் தேசிய தலைமைக்கும் அக்கட்சியின் மேற்கு வங்கப் பிரிவின் தலைமைக்கும் இடையேயான விரிசல் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
சிபிஎம் எந்த வலதுசாரி பாதையை பின்பற்ற வேண்டும் என்பது தான் தற்போதைய பிரச்சனை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யூ.பி.ஏ) அரசுக்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் என்னும் இந்தியாவின் மிகப்பெரிய முதலாளித்துவக் கட்சியுடனான உறவை புதுப்பித்துக் கொள்ள வேண்டுமா, அல்லது ஹிந்துத்துவவாதிகளான பாரதீய ஜனதா கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினருடன் இணைந்து செயல்பட வேண்டுமா என்பது தான் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
2004-ஆம் ஆண்டு மே மாதம் முதல் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த இடதுசாரிகள் கூட்டணி, இந்தியா - அமெரிக்கா இடையேயான அணு ஒப்பந்தத்தை எதிர்த்து கடந்த 2008-ஆம் ஆண்டு தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டது. அமெரிக்காவுடனான இந்த அணு ஒப்பந்தமானது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான உறவை மேம்படுத்தும் “சர்வதேச மூலோபாயத்தின்” ஒரு அம்சமாகவே கருதப்படுகிறது.
சென்ற வாரம் நடைபெற்ற முழு அடைப்பு பந்த் போராட்டத்தின்போது பாரதீய ஜனதா கட்சியுடன் இணைந்து பங்கேற்றதற்கு மேற்கு வங்க சி.பி.எம். தலைவர்கள் அக்கட்சியின் தேசிய தலைமையை கடுமையாக தாக்கியுள்ளனர். இனவாதத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறோம் என்ற இடது கூட்டணியின் வாதத்தை இச்செயலின் மூலம் தேசிய தலைமை மீறி விட்டதாகவும், மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலின்போது முஸ்லிம்களின் வாக்குகளை திரட்ட மேற்கொள்ளப்பட்டுவந்த முயற்சிகள் அனைத்தையும் வீணாக்கிவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இடது கூட்டணி பங்காளிகள் பிராந்திய மற்றும் சாதி அடிப்படையிலான கட்சிகளுடன் இணைந்து ஜூலை 5-ஆம் தேதி நடத்திய கண்டனப் போராட்டத்துக்கும், பா.ஜ.க. தேசிய ஜனநாயக கூட்டணி பங்காளிகளுடன் அறிவித்த வெளிநடப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது, தங்களது போராட்டம் முற்றிலும் சுதந்திரமானதும் வேறுபட்டதும் ஆகும் என்பதும் தான் சி.பி.எம். தேசிய தலைமையின் வாதம். இருப்பினும் வெளிநடப்பு பற்றி தீர்மானம் மேற்கொள்வது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி செயலருடன் இடது சாரி தலைவர்கள் நெருக்கமாக இணைந்து செயல்பட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. போராட்டம் வெற்றியடைந்தது குறித்து மார்தட்டிப் பேசும்போதும் கூட அந்த போராட்டத்தில் இடது சாரிகளின் பங்களிப்பையும் பா.ஜ.க. தலைமையிலான கட்சிகளின் பங்களிப்பையும் தனித்தனியாக இனம் பிரிக்கவும் சி.பி.எம். தலைமை முயற்சிக்கவில்லை. எரிபொருள் விலை நிர்ணயிப்பதன் மீதான அரசின் கட்டு்ப்பாட்டை கைவிடும் பழக்கத்தை முதன் முதலாக தொடங்கிவைத்தது கடந்த 2002-ஆம் ஆண்டு ஆட்சி புரிந்த பா.ஜ.க அரசாங்கம் தான் என்ற தகவலையும் சி.பி.எம். தலைவர்கள் உரிய நேரத்தில் குறிப்பிடாமல் காலதாமதமாக தற்போது தான் குறிப்பிட்டுள்ளனர்.
சமீபத்தில் நிதிநிலை அறிக்கை வெளியிடுவதற்கு முன்னதாக சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ. ஆகிய இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் பா.ஜ.க. நாடாளுமன்றத் தலைவரை சந்தித்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பல்வேறு திட்டங்களுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றி விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியதாக பா.ஜ.க. முன்னாள் தலைவர் எல்.கே. அத்வானி நாடுதழுவிய வேலைநிறுத்தத்தின்போது வெளிப்படுத்தியதால், பா.ஜ.காவுடனான சி.பி.எம் இன் அணுகுமுறையில் இது வரையில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை என்ற சி.பி.எம். தேசிய தலைமையின் வாதம் எல்லாம் உடைந்து போயின.
பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜுடனான சந்திப்பிலிருந்து மேற்கு வங்க சி.பி.எம். தலைவர்கள் உடனடியாக பின்வாங்கிக்கொண்டு சி.பி.எம். தேசிய தலைமையின் கொள்கைகள் மீதான தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த சி.பி.எம். மந்திரி மற்றும் அக்கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கூறியதாவது: "மேற்கு வங்க மக்கள் தொகையில் 25 சதவீதம் உள்ள முஸ்லிம்களில் பெரும்பாலானோர் நம்மை விட்டு விலகிச் சென்றுள்ளனர்.... மேலும் நம் கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற விவகாரங்களுக்கென்று தொடர்ந்து பா.ஜ.க. அலுவலகங்களுக்கு செல்வோமேயானால் முஸ்லிம்களின் ஆதரவு மேலும் சரிவடைய அது காரணமாகும்" என்றார்.
ஜூலை 5-ஆம் தேதியன்று நடைபெற்ற முழு அடைப்பு பந்த் போராட்டத்திலிருந்து மேற்கு வங்கத்தை தவிர்க்க வேண்டும் என சி.பி.எம். போலிட் பீரோ உறுப்பினரும், மேற்கு வங்க முதல் மந்திரியுமான புத்ததேவ் பட்டாசார்ஜி ஜூலை 3,4 ம் தேதிகளில் நடைபெற்ற சி.பி.எம். போலிட் பீரோ கூட்டத்தின்போது கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை போலிட் பீரோ நிராகரித்ததால் அவர் அந்த கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். புத்ததேவ் பட்டாசார்ஜி இவ்வாறு செயல்பட்டதற்கு பா.ஜ.க.வுடன் சி.பி.எம். கட்சியின் நெருக்கம் அதிகரித்து வரும் போக்கு மட்டும் காரணம் அல்ல.
மேற்கு வங்கம் தான் இந்திய மாநிலங்களிலேயே முதலீட்டாளர்களின் நண்பன் என்ற பிரச்சாரத்துக்கு, மேற்கு வங்கத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் முழுஅடைப்பு மற்றும் பல்வேறு வகையிலான மறியல் போராட்டங்கள் இடையூறு விளைவிப்பதாக புத்ததேவ் பட்டாசார்ஜி பல முறை புகார் எழுப்பி வந்துள்ளார். கடந்த 2005-ஆம் ஆண்டு இதே போன்ற முழு அடைப்பு பந்த் நடைபெற்றபோது கொல்கத்தாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிடம் இதே போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழாமல் தடுத்து விடுகிறேன் என்று வாக்குறுதியும் அளித்திருந்தார் அவர்.
மேற்கு வங்கத்தின் இடது கூட்டணி எதிர்வரும் தேர்தலில் தோல்வியை சந்தித்தே ஆக வேண்டும் என்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது என்றால் அதற்கு காரணம் ஊழல், வலதுசாரி கொள்கைகள், போராட்டங்களை தடுக்கும் வகையிலான சட்டங்களை அமைத்தல் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கென்று நிலத்தை பறிகொடுத்த விவசாயிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது போன்றவையும், மேற்கு வங்கத்தில் உள்ள உழைப்பாளிகள் மற்றும் தொழிலாள வர்க்கம் அக்கட்சியிலிருந்து விலகிச் செல்லத்தொடங்கியுள்ளதும் தான் ஆகும்.
இதனைத் தொடர்ந்து பட்டாசார்ஜி மற்றும் மேற்கு வங்க ஸ்ராலினிஸ்டுகள் மேலும் அதிகமாக வலதுசாரிகள் பக்கம் நழுவத் தொடங்கியுள்ளனர். பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு லாபத்தை ஈட்டுவதற்கும் அவர்களது சர்வாதிகாரத்தை காட்டவும் தேவையான சூழலை உருவாக்கிக்கொடுக்க இடது கூட்டணியால் தான் முடியும் என நம்பவைத்து ஆட்சியில் தொடர்ந்து தொங்கிக்கொள்ள துடிக்கின்றனர்.
ஜூன் 21-ஆம் தேதியன்று இடது கூட்டணி ஆட்சியின் 33 ஆண்டுகள் நிறைவு விழாவின்போது உரையாற்றிய பட்டாசார்ஜி அராஜகத்தை ஒழித்து சட்டம் ஒழுங்கை காப்பது சி.பி.எம். தான் என்று வெளிப்படையாக கூறினார். “இந்த மாற்றம் ஏதேனும் எதிர்க்கட்சியினரால் கோரப்பட்டதா? ” என்று கேள்வியை எழுப்பிய பின்னர், கோரப்பட்ட வகையிலான மாற்றம் அராஜகத்தில் தான் முடிவடைந்திருக்கக்கூடும் என்று பதிலையும் அளித்தார்.
சிங்கூரில் டாட்டா கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைப்பதற்காக நிலத்தை பறிகொடுத்த விவசாயிகளின் ஆதரவைச் சுரண்ட எதிர்க்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் முயற்சித்தது பற்றி கூறுகையில்: முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் திட்டத்தைக் கைவிட்டு திரும்பிச்செல்லும் சூழலில் மேற்கு வங்கம் ஒரு சிங்கூரின் நலத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் போதுமா? என்று மேலும் கேள்வி ஒன்றை எழுப்பினார் அவர்.
மேற்கு வங்க சி.பி.எம். இந்த வலதுசாரி பாதையை பின்பற்றுவதன் மூலம், இந்திய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை கட்சியும் மேற்கு வங்க மாநிலத்தின் மூன்றாவது மிகப் பெரிய கட்சியுமான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை திருப்திப்படுத்தி, அக்கட்சி திரிணாமூல் காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி அமைக்க வேண்டாம் என நம்பிக்கையற்ற வேண்டுகோள்களை விடத் தொடங்கியுள்ளது.
எது எப்படியாகினும் இது போன்ற பரிந்துரைகளை காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்தமாக நிராகரித்துள்ளது. இட ஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், சமீபத்தில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தல்களில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெருமளவில் வெற்றிபெற்ற நிலையில் கருத்து வேறுபாடுகளை மறந்து விட்டு அவர்களுடனான கூட்டணியை காங்கிரஸ் மீண்டும் உறுதிப்படுத்தியும் உள்ளது. மேற்கு வங்கத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் இடதுசாரி கூட்டணிக்கு எதிராக பிரச்சாரத்தை வழிநடத்திச் செல்வதற்கான தகுதியை திருணாமூல் கட்சி பெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சி.பி.எம். தேசிய தலைமையின் கொள்கைகள் இதிலிருந்து சற்று வித்தியாசமாக இருந்தாலும் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக செயல்படுவதில் எந்த குறைபாடும் இல்லை.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் வகையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போக்கிற்கு எதிராக போர்க்குணம் மிக்க போராட்டங்கள் உருவாகிவரும் நிலையில், மத்திய அரசு மேலும் “மக்கள் ஆதரவு” கொள்கைகளை கடைப்பிடிக்கவும், நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக எதிர்க்கட்சியினருடன் மேலும் கலந்து யோசித்து செயல்படவும் அழுத்தம் கொடுக்க உழைப்பாளி வர்க்கத்தை மறியல் போராட்டங்களுக்கு தள்ளிவிட்டு பலனடைகின்றனர்.
கடந்த 2008-ஆம் ஆண்டு சி.பி.எம். கட்சியை காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றி விட்டதால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடனான சி.பி.எம்மின் கூட்டு அறுந்து போனது. சி.பி.எம். நாடெங்கிலும் உள்ள காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க எதிர்ப்பு கட்சிகளுடன் கூட்டணியை உருவாக்கத் தொடங்கியது. கடந்த 2002-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற பொதுத்துறை மறியல் போராட்டத்தை துப்பாக்கிச்சூட்டின் மூலமும், கருங்காலிகளை வாடகைக்கு எடுத்தும் முறியடித்துவிட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் தமிழ்நாட்டில் கூட்டணியை தொடங்கியது. வேறு ஒரு கூட்டணி அமைக்கப்பட்டது ஆந்திரா மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சியுடன் ஆகும். இதற்கு முன்பு ஆந்திராவில் ஆட்சி புரிந்த காலகட்டத்தில் சந்தை ஆதரவு கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதற்கு உலக வங்கியால் புகழப்பட்ட கட்சி அது.
சி.பி.எம். தற்போது இந்து மேலாதிக்கவாத கட்சியான பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட முயற்சிப்பது, முதலாளித்துவ அரசியலில் தங்களது செல்வாக்கை திரும்பப்பெறும் நோக்கத்துடன் நாடாளுமன்ற அடிப்படையிலான அரசியலை நியாயப்படுத்தும் வகையில் ஜாதிவாதிக்கட்சியை நியாயப்படுத்தும் அளவிற்கு ஸ்ராலினிஸ்டுகள் தள்ளப்பட்டுள்ளனர்.
தொழிலாள வர்க்கத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் இந்த ஆபத்தான போக்கை ஸ்ராலினிஸ்ட்டுகள் தொடர்ந்து வருகிறார்களே தவிர அந்த போக்கை கைவிடும் வாய்ப்பு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. சி.பி.எம். கடந்த இரு தசாப்தங்களாக பா.ஜ.க.வை தீண்டாமை கட்சி என்ற முறையில் அணுகி வந்ததோடு, பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதை தடுத்து நிறுத்துவதற்காகவே வலதுசாரி சந்தை ஆதரவு சீர்திருத்தங்களை ஏற்படுத்தி வந்த அரசுக்கு ஆதரவு அளித்து, தொழிலாள வர்க்கத்தை அடிபணிய வைத்ததையும் நியாயப்படுத்தி வந்துள்ளது. அதே சமயம் 1977-ஆம் ஆண்டு சி.பி.எம்., ஜனதா கட்சியின் ஆட்சிக்கு (பா.ஜ.க.வின் முன்பு இருந்த ஜனசங்கம் இணைக்கப்பட்ட கட்சி) ஆதரவு அளித்திருந்ததை மறந்துவிட முடியாது. அதே போன்றே கடந்த 1989 - 90 காலகட்டத்திலும் காங்கிரஸ் அதிருப்தியாளர் வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசை கவிழ்க்க சி.பி.எம். கட்சி பா.ஜ.க.வுடன் இணைந்திருந்தது.
சி.பி.எம்மின் மேற்கு வங்க பிரிவுக்கும் அக்கட்சியின் தேசிய தலைமைக்கும் இடையிலான விரசல் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெறுவதற்கான தீர்மானத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயமே ஆகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டபோது, கட்சித் தலைமையின் உத்தரவிற்கேற்ப லோக்சபாவில் சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய மறுத்த சோம்நாத் சாட்டர்ஜியை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கும் மேற்கு வங்க பிரிவு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பில் சமநிலை ஏற்படும் பட்சத்தில் சபாநாயகரின் தீர்மானிக்கும் ஓட்டு என்ற சிறப்பு உரிமையை பயன்படுத்தியாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை நிலைநிறுத்துவேன் என சோம்நாத் சாட்டர்ஜி கூறியிருந்தார்.
கட்சியின் தேசிய தலைமையுடனான கருத்துவேறுபாடுகளை பிரகடனம் செய்வதற்கென்றே, ஜூலை 8-ஆம் தேதியன்று, மறைந்த முன்னாள் முதல் மந்திரி ஜோதிபாசுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது மேடையில் உரையாற்ற சோம்நாத் சாட்டர்ஜியிடம் மேற்கு வங்கத்தின் சி.பி.எம். தலைமையிலான கூட்டணி அரசு கோரியது. சோம்நாத் சாட்டர்ஜியுடன் பட்டாசார்ஜி மேடையை பகிர்ந்துகொண்டாலும் சி.பி.எம். பொதுச்செயலர் பிரகாஷ் காரத் அந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
பிரகாஷ் காரத்தின் இடத்தில் அவரது தோழரும், போலிட் பீரோ உறுப்பினருமான சீதாராம் யெச்சூரியை அமர்த்துவது பற்றி பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக ஜூன் மாதம் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி தலைமையிடம் காரத்தைவிட யெச்சூரி தான் சிறந்த தொடர்பு வைத்துள்ளார்.
சி.பி.எம். படுமோசமாக உடைந்து விட்டது என்பது தெளிவாகத் தெரிந்த விஷயம். மேற்கு வங்க கோட்டை கைவிட்டுப்போனதும், 3 தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட மாநிலத்தில் ஆட்சிபுரிந்து வந்ததன் மூலம் கிடைத்துள்ள வசதிகளும் இந்த விரிசலை மேலும் ஊக்குவிக்க காரணமாகியுள்ளது.
இதில் இரு கன்னையினரின் நிலைப்பாடுகளுக்கிடையேயான அடிப்படை ஒற்றுமைகள் கவனிக்கத்தக்கது.
மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா போன்ற மாநிலங்களில் சி.பி.எம். தலைமையிலான அரசாங்கங்களின் புதிய தாராளவாத பொருளாதார கொள்கைகள் குறித்து எந்த கருத்துவேறுபாடும் இவர்களுக்கிடையே இல்லை. அதே போன்று “சோஷலிசம் என்பது எட்டாக்கனியாகும்” என்ற பட்டாசார்ஜியின் வாதத்துடனும் இவ்விரு தரப்பினருக்கிடையே ஒற்றுமை உள்ளது.
கடந்த 2004-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உருவாக்குவதில் சி.பி.எம். முக்கிய பங்கு வகித்துள்ளதையும், அதன் பிறகு தொடர்ந்து நான்கு ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி வந்ததையும் பிரகாஷ் காரத் தொடர்ந்து உற்சாகத்துடன் நியாயப்படுத்தி வருகிறார்.
மத்திய அரசின் பசுமை வேட்டை என்னும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைக்கு மேற்கு வங்க இடதுசாரி கூட்டணி அரசாங்கத்தின் இரு தரப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்தியாவின் மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள வனவளம் மற்றும் கனிமவளத்தை பெரு நிறுவனங்களின் மூலம் அழிக்கும் முயற்சிக்கு அப்பகுதி வாழ் பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதை ஒடுக்குவதே இந்த பசுமை வேட்டையின் முக்கிய நோக்கம் ஆகும்.
கடந்த 75 வருடங்களுக்கும் மேலாக இந்திய ஸ்ராலினிசத்தின் எடுத்துரைக்கக்கூடிய மேலும் ஒரு பாரம்பரியம் என்னவென்றால் ஸ்ராலினிஸ்டுகளின் இரு கோஷ்டிகளும் சரி, ஜனநாயகப் புரட்சி இன்னமும் முழுமை அடையவில்லை எனக் கூறி அதற்காக தொழிலாள வர்க்கத்தை தொடர்ந்து முதலாளித்துவ கட்சிகளுக்கு அடிபணிய வைக்கும் வித்தையில் ஒரே கருத்தை கொண்டுள்ளவர்களே.
உண்மையிலேயே, இந்தியாவின் வரலாற்று அனுபவங்கள் இந்த அவலத்தை உண்மைப்படுத்தும் வகையிலானதே ஆகும். நிலவுடமைவாதம், ஜாதிவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் பிற அடக்குமுறைகளும், நிலப்பிரபுத்துவ பின்தங்கிய நிலைமையும் இந்திய முதலாளித்துவத்திற்கு எதிரான வெற்றிகரமான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் தன்னைச் சூழ உழைக்கும் மக்களை அணிதிரட்டும்போதுதான் இல்லாதொழிக்கப்படும்.
இந்தியத் தொழிலாளிகளும், சோசலிச சிந்தனை கொண்ட இளைஞர்களும், அறிவுஜீவிகளும் சி.பி.எம் மற்றும் அதன் இடது கூட்டணியின் அரசியல் வங்குரோத்தில் இருந்து தொலை நோக்குடைய முடிவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் இந்திய முதலாளித்துவ ஆட்சியின் வேறு ஒரு பதிப்பு மட்டுமே ஆகும். அனைத்துக்கு மேலாக அவசியமானது, மார்க்சிசம் - லெனினிசத்தின் தற்கால இயக்கமான ட்ரொட்ஸ்கிசத்தை நோக்கி திரும்புவதாகும். |