World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Merkel’s trip to China

மேர்க்கெலின் சீனப் பயணம்

Stefan Steinberg and Alex Lantier
23 July 2010

Back to screen version

கடந்த வாரம் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கல் சீனாவிற்குப் பயணித்திருந்தது உலக விவகாரங்களில் ஆசியாவின் அதிகரித்துவரும் பங்கிற்கு ஒப்புதல் என்பதோடு, பேர்லின் அதன் மரபார்ந்த நட்பு நாடான அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் கொண்டுள்ள உறவுகள் பெருகிய முறையில் சிக்கலுக்கு உட்பட்டிருப்பதையும் ஏற்பதாகும்.

ஜேர்மனிய அரசியல் நடைமுறை முழுவதில் இருந்து முக்கிய நபர்கள் மற்றும் ஜேர்மன் தொழில்துறைத் தலைவர்கள் அடங்கிய ஒரு ஜேர்மனியக் குழுவிற்கு மேர்க்கெல் தலைமை தாங்கினார். இக்குழு ரஷ்யா, காஜக்ஸ்தானுக்கும் சென்றிருந்தது. இப்பிரதிநிதிகள் குழுவில் ஜேர்மனிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் மைக்கல் சொம்மர், இடது கட்சியின் தலைவரும் ஜேர்மனிய பீட்டர்ஸ்பேர்க் உரையாடல் குழுவின் (Petersburg Dialogue Group) ஜேர்மனிய இயக்க குழு உறுப்பினருமான அந்திரே பிரை ஆகியோரும் இருந்தனர். அந்த உரையாடல் குழு 2001ம் ஆண்டு முன்னாள் சான்ஸ்லர் ஹெகார்ட் ஷ்ரோடர் மற்றும் அப்பொழுது ரஷ்ய ஜனாதிபதியாக இருந்த விளாடிமிர் புட்டின் ஆகியோரால் ஜேர்மனிய-ரஷ்ய உறவுகளை வளர்க்க நிறுவப்பட்டிருந்தது.

சர்வதேசஅளவில் ஆளும் வர்க்கம் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருக்கும் மாற்றத்திற்கு நடுவே மேர்க்கெலின் பயணம் வந்துள்ளது. அந்த நடவடிக்கைகள் கடந்த மாதம் G20 உச்சிமாநாட்டில் ஏற்கப்பட்டிருந்தன. இதன் சாரம் சிறப்பாக இங்கிலாந்து பிரதம மந்திரி டேவிட் காமெரோன் முன்வைத்துள்ள பாரிய சமூகவெட்டுக்களில் பிரதிபலிப்பாகிறது. இக்கொள்கையை மேர்க்கெல் கோரியிருக்கையில், இது உலக அரங்கில் ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தின் புதிய உறுதிப்பாட்டுத்தன்மையை தளமாகக் கொண்டுள்ள ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கைக்கு பெரும் சவால்களைக் கொடுக்கிறது.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை பெரிதும் தாழ்த்திவிட வேண்டும் என்பதுதான் சிக்கன நடவடிக்கைக் கொள்கையின் பொருள் ஆகும். இது ஜேர்மனியின் மரபார்ந்த ஏற்றுமதிச் சந்தைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். தன் தொழிலாளர்களை வறிய நிலையில் தள்ளுவது பற்றி ஜேர்மனிய ஆளும் வர்க்கத்திற்கு மன உளைச்சல் ஏதும் இல்லை என்றாலும், அது தன் ஏற்றுமதிச் சந்தைகளை பாதுகாக்கப் போராட வேண்டும். ஜேர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட பாதி ஏற்றுமதியை சார்ந்தது. வளரந்துவருவதும் பணவசதி நிறைந்ததுமான ஆசியப் பகுதிகளுடன் உறவுகளை வளர்ப்பது ஜேர்மனிய முதலாளித்துவத்திற்கு பெரும் கடமையாக உள்ளது.

அதே நேரத்தில், பேர்லினின் மரபார்ந்த நட்புக்கூட்டுக்கள் பெருகிய முறையில், குறிப்பாக வாஷிங்டனும் சலசலப்புக்களுக்கு உட்பட்டுள்ளன. அமெரிக்க-ஜேர்மனிய உறவுகள் ஏற்கனவே ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போர், 2008ல் ரஷ்யா மீது ஜோர்ஜியா நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா கொடுத்த ஆதரவு மற்றும் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பில் அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ ஆக்கிரமிப்பின் சங்கடம் ஆகியவற்றால் குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளன. வாஷிங்டன் கிரேக்கக் கடன் நெருக்கடிக்கு உதவ வேண்டிய காலம் பற்றி கூறிய கருத்துக்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா வெளிநாடுகளில் இருந்து கூடுதல் பொருட்களை இறக்குமதி செய்யாததற்காக குறைகூறியது ஆகியவையும் தீவிர வேறுபாடுகளை வெளிப்படுத்தியுள்ளன.

சீனாவிற்குப் பயணித்திருந்தபோது, ஜேர்மனிய தூதுக்குழு Daimler Benz, Siemens, BASF, Volkswagen போன்ற முக்கிய ஜேர்மனியப் பெருநிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்புடைய புதிய ஒப்பந்தங்களைப் பெற்றது.

சீனா அதன் பொருளாதாரத்தை ஜேர்மனிய ஏற்றுமதிகளுக்கு இன்னும் திறந்துவிட வேண்டும் என்று மேர்க்கெல் வலியுறுத்தினார்: “மற்ற பல நாடுகளில் இருப்பதைப் போலவே சீன நிறுவனங்கள் ஜேர்மனிய சந்தையை சிறந்த முறையில் அணுகக்கூடியதாகவுள்ளது. ஜேர்மனிய நிறுவனங்களும் அதே போல் சீனச்சந்தைகளில் வாய்ப்பைப் பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார் அவர். சீனச் சந்தை ஜேர்மனிய ஏற்றுமதிகளுக்கு போதுமான அளவு திறக்கப்படவில்லை என்பதால் சந்தைப் பொருளாதரம் நிலவுகிறது என்று கூறமுடியாது என்றார் அவர்.

வணிகப் பிணைப்புக்களை அதிகரிப்பதைத் தவிர, சீனா பெருகிய முறையில் ஐரோப்பிய நிதியச் சந்தைகளில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது; இதனால் சீனா நிதியச் சந்தைகளை இலக்கு கொண்டுள்ள ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு நிதியுதவி அளிக்கிறது. கிரேக்கத் துறைமுகம் மற்றும் பொது உள்கட்டுமானம் ஆகியவற்றில் பெரும் பங்கைச் சீனா கொண்டுள்ளது என்பதுடன் இன்னும் விரிவாக்கம் செய்யவும் விரும்புகிறது. மேலும் G20 நிதிமந்திரிகள் கூட்டம் தென்கொரியாவில் பூசன் நகரில் நடந்த பின்னர் சீனா ஏராளமான ஸ்பெயின் நாட்டுப் பத்திரங்களையும் வாங்கியுள்ளது.

சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ யூரோவிற்கு அதன் நிதிய ஆதரவைத் சீனா தொடரும் என்று வலியுறுத்தினார்.

லண்டனைத் தளமாகக் கொண்டுள்ள பைனான்சியல் டைம்ஸ், “கடந்த 20 ஆண்டுகளில் பெரும்பாலான நேரம் ஐரோப்பியர்கள் உலக நிதியத்தின் அமெரிக்காதான் முக்கிய இருப்பு என்ற முன்கருத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் பூசன் நிகழ்வு இது எப்படி இப்பொழுது மாறி வருகிறது, யூரோப்பகுதிக்கு அப்பாலும் செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.”

இரு நாடுகளின் தலைவர்களும் கொடுத்த பொது அறிக்கைகள் சீனா, ஜேர்மனி பற்றி அமெரிக்காவின் புகார்களை ஒரு கூட்டு மறுப்பு என்ற வடிவமைப்பைக் கொண்டிருந்தன. இரு நாடுகளின் ஏற்றுமதித் தொழில்களின் வலிமையைப் பற்றி குறிப்பிட்ட வென், பொருளாதாரக் கொள்கைகளுக்காக “சீனாவும் ஜேர்மனியும் பாராட்டப்பட வேண்டுமே அன்றி, குற்றம்சாட்டப்படக்கூடாது” என்றார். “அதன் போட்டித்தன்மை பற்றி ஜேர்மனி பெருமிதம் கொண்டுள்ளது” என்றார் மேர்க்கெல்.

இதைத்தவிர, இரு தலைவர்களும் இருக்கும் கடன் அளவுகளை குறைந்த செலவினங்கள் மூலம் மட்டுப்படுத்திவைத்துக்கொள்ளும் நோக்கத்தைக் கொண்டுள்ள வரவு-செலவுத்திட்ட கொள்கைகளைச் செயல்படுத்தப் போவதாகவும் வலியுறுத்தினர்.

ஜேர்மனியின் முக்கிய நிதிய ஏடான Handelsblatt “வாஷிங்டனில் இருந்து இருநாடுகள் பற்றியும் கூட்டாக எழுந்துள்ள குறைகூறல்கள் சீனாவிற்கும் ஜேர்மனிக்கும் தங்கள் வேறுபாடுகளை களைந்து கொள்ள நல்ல காரணமாக உள்ளன.” என்று எழுதியுள்ளது. அமெரிக்கப் புகார்கள்தான் பெய்ஜிங்கில் மேர்க்கெல் பெரும் ஆர்வத்துடன் வரவேற்கப்பட்டுள்ளதற்கு ஒரு காரணம் என்றும் நாளேடு கூறியுள்ளது.

இந்த எழுச்சி பெறும் அழுத்தங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு நேரடி எச்சரிக்கை ஆகும். சந்தைகளுக்கும் மூலோபாயச் செல்வாக்கிற்குமான ஏகாதிபத்தியங்களுக்கு இடையலான போட்டிதான் தொழிலாளர்களின் வறிய நிலைக்கு அடித்தளமாக இருந்ததுடன், 20ம் நூற்றாண்டில் உலகப் போருக்கு வழிவகுத்தது. இதில் ஜேர்மனிய ஆளும்வர்க்கத்தின் குற்றம்சார்ந்த கொள்கைகளும், கிழக்கில் விரிவாக்கம் பெறவேண்டும் என்ற அதன் உந்துதலும் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கள் தொடர்கையில், பெரும் சக்திகளுக்கு இடையே புதிய அச்சுறுத்தல்களும் ஏற்பட்டுள்ள நிலையில், தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ள இருக்கும் மிகப்பெரிய கடமை போருக்கு எதிரான அரசியல் போராட்டம் ஆகும்.

அதே நேரத்தில், சீனாவிலும் ஐரோப்பாவிலும் வர்க்கப் பூசல் வெடிப்பிற்கான அரங்கமும் அமைக்கப்படுகிறது. சீனாவின் பொருளாதார வலிமை தொழிலாள வர்க்கத்தை மிகவும் இரக்கமின்றிச் சுரண்டுவதால் வந்துள்ளது என்பது நன்கு அறியப்பட்ட உண்மையாகும். ஐரோப்பிய ஆளும் வர்க்கமும் அதன் பகுதிகளுக்குள் பாரிய முறையில் சுரண்டுதலை அதிகரிக்க முயல்கிறது. இதற்கு சமூகநல அரசாங்கத்தை அகற்றுவதை நோக்கமாக கொண்ட கடும் சிக்கன நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

அப்பொருளில், DGB தொழிற்சங்கத் தலைவரை மைக்கல் சொம்மரின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் முக்கியமானது ஆகும். சீனாவின் அரசாங்கம் நடத்தும் தொழிற்சங்கங்களுடன் நடந்த பேச்சுக்களில் அவர் பங்கு பெற்றார் என்றும் Tagesschau கருத்துப்படி “அப்பேச்சுக்கள் நல்ல பாதையில் சென்றன” என்றும் தெரிகிறது. ஆனால் குறைந்த ஊதியம் கொடுக்கும் கார் மற்றும் மின்னணு ஆலைகளில் சுயாதீன பிரதிநிதித்துவம் கோரி வேலைநிறுத்தம் செய்யும் ஏராளமான சீனத் தொழிலாளர்களின் கருத்து இது அல்ல. அதே போல் ஐரோப்பாவில் பணிநீக்கங்கள், ஊதிய வெட்டுக்கள் மற்றும் சமூகநலச் செலவுக்குறைப்புக்களை எதிர்கொண்டுள்ள ஐரோப்பிய தொழிலாளர்களின் கருத்தும் அல்ல.

அதிகரித்துவரும் மோதல்கள் மற்றும் வங்கிகளும் சர்வதேச முதலாளித்துவமும் தம்மை இன்னும் ஆழ்ந்த வறுமையில் தள்ளிவிடும் நோக்கங்களினால் புதிய தாக்குதல்களை தொடரக்கூடும் என்ற ஆபத்தை எதிர்கொண்டுள்ள சீன, ஐரோப்பிய, அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்திற்கு அதன் ஒரு புதிய சர்வதேச கட்சியைக் கட்டமைப்பதற்காக சொந்த, சுயாதீன, சோசலிச மூலோபாயத்தை அடித்தளமாகக் கொள்வது அவசியமாகின்றது.