WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
ஆப்கானிஸ்தான்
The consequences of a US war crime
Cancer rate in Fallujah worse than Hiroshima
ஒரு அமெரிக்கப் போர்க் குற்றத்தின் விளைவுகள்
பல்லுஜாவில் புற்றுநோய் விகிதம் ஹிரோஷிமாவை விட மேலும் மோசம்
By Tom Eley
23 July 2010
Back to screen version
2004 கடைசிப் பகுதியில் அமெரிக்க இராணுவத் தாக்குதலின் கொடூர விளைவுகளை ஈராக்கிய நகரமான பல்லுஜா இன்னும் தொடர்ந்து அனுபவித்து வருகிறது.
“புற்றுநோய், குழந்தைகள் இறப்பு, பிறப்பு, பால்-விகிதம் ஈராக் பல்லுஜாவில் 2005-2009 ல்” என்னும் புதிய ஆய்வின் ஆசிரியர்கள் கருத்தின்படி, பல்லுஜா மக்கள் புற்றுநோய், இரத்தச் சோகை, குழந்தைகள் இறப்பு விகிதம், பாலியல் மாற்றங்கள் ஆகியவற்றில் அதிக விகிதங்களை 1945ம் ஆண்டு அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதலின் விளைவாக ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி எரிக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்டதை விட அதிகமாக அனுபவிக்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது.
தொற்று வியாதிகள் பரவுதலுக்கான ஆதாரத்தைப் பற்றி ஆய்வு நடத்தும் இந்த ஆராயச்சிக் கட்டுரை, International Journal of Environmental Studies and Public Health (IJERPH), அருகில் இருக்கும் நாடுகளை விட இந்த நிலைமைகள் பல்லுஜாவில் பல மடங்குகள் அதிகமாக இருப்பதையும் காட்டுகிறது.
பாக்தாத்திற்கு மேற்கே 43 மைல்கள் தொலைவில் உள்ள பல்லுஜா நகரத்தின் மீதான தாக்குதல் எங்களுடைய காலத்திலேயே மிகக் கொடூரமான போர்க் குற்றங்களில் ஒன்றாகும். ஈராக்கில் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பை மக்கள் எதிர்த்தவுடன்—இதுவோ பொய்களின் அடிப்படையில் தொடக்கப்பட்ட நவ-காலனித்துவ கொள்ளையடிக்கும் போர் ஆகும்—வாஷிங்டன் அதிக சுன்னி மக்கள் நிறைந்திருந்த இந்த நகரத்தின் மீதான தாக்குதலை ஒரு முன்மாதிரியாக ஆக்க விரும்பினர். இது “முன்மாதிரி”, அல்லது “கூட்டு” தண்டனை என்று அழைக்கப்பட்டது. போர் விதிகளின்படி இது சட்டவிரோதம் ஆகும்.
நகரத்தைப் பற்றிய புதிய பொதுச் சுகாதார ஆய்வு நீண்ட காலமாக சந்தேகிக்கப்பட்டதை நிரூபிக்கிறது: அதாவது தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பெருவாரியாக கதிரியக்கப் பொருள் உள்ள குறைந்த யுரேனியத்தைக் கொண்டிருந்தன. இது தாக்கும் வீரியத்தை அதிகரிக்க குண்டுகளில் பயன்படுத்தப்பட்டது.
711 வீடுகள் மற்றும் 4,843 தனிநபர்களை பற்றிய ஜனவரி, பெப்ருவரி 2010 ல் நடத்தப்பட்ட ஆய்வில், Chris Busby, Malak Hamdan, Entesar Ariabi மற்றும் ஆராய்ச்சியாளர்களை கொண்டிருந்த குழு ஒன்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தாக்குதலுக்குப் பின்னர் புற்றுநோய் விகிதம் நான்கு மடங்கு அதிகரித்துவிட்டதுடன், பல்லுஜாவில் காணப்படும் புற்றுநோய் வகை ஹிரோஷமா மற்றும் நாகசாகிமீது அணுகுண்டுத் தாக்குதலில் தீவிர கதிரியக்கச் செறிவில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களிடையே காணப்பட்டதற்கு ஒப்பாக உள்ளது என்று கூறியுள்ளது.
எகிப்து, ஜோர்டான் மற்றும் குவைத்தில் இருப்பதை விட பல்லுஜாவில் இரத்தச்சோகை விகிதம் 38 மடங்கு அதிகமாகவும், குழந்தைப் பருவப் புற்றுநோய் 12 மடங்கு அதிகமாகவும், மார்புப் புற்றுநோய் 10 மடங்கு அதிகமாகவும் உள்ளன. உயர்ந்த அளவு வயதுவந்தோர் நிணநீர் முடிச்சு புற்றுப் பாதிப்பு மற்றும் மூளையில் கட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு 1,000 பேர் பிறப்புக்களில் 80 பேர் இறப்புக்கள் ஏற்படுவதோடு, குழந்தைகள் இறப்புவிகிதம் எகிப்து, ஜோர்டானைக் காட்டிலும் 5 மடங்கு பல்லுஜாவில் அதிகம் இருப்பதோடு, குவைத்தைக் காட்டிலும் 8 மடங்கு அதிகமாகவும் இருக்கிறது.
பல்லுஜாவில் 2005க்குப் பின்னர் பெண் குழந்தைகள் பிறப்பதும் அதிகமாகிவிட்டது. சாதாரண மக்கள் தொகையில் 1050 ஆண் குழந்தைகள் 1000 பெண் குழந்தைகளுக்கு என்ற விகிதத்தில் பிறக்கின்றனர். ஆனால் பல்லுஜாவில் அமெரிக்கத் தாக்குதலுக்குப் பின்னர் 4 ஆண்டுகளில் இந்த விகிதம் 1000 பெண் குழந்தைகளுக்கு 860 ஆண் குழந்தைகள் என்று குறைந்துவிட்டது. இந்த மாற்றம் 1945 ஹிரோஷிமாவில் அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதலுக்கு பின் ஏற்பட்ட பால் விகிதத்திற்கு ஒப்பாகும்.
ஆய்வாளர்களின் கருத்துப்படி, இந்த பால்-விகித மாற்றத்திற்கான அதிக வாய்ப்பிற்கான காரணம், ஒரு முக்கிய மரபுமாற்ற நிகழ்வின் பாதிப்பு ஆகும்—அமெரிக்க ஆயுதங்களில் குறைந்த அடர்த்தியுடைய யுரேனியம் பயன்படுத்தப்பட்டது தான் காரணமாகும். ஆண்குழந்தைகள் ஒரு X கிரோமோசோம் கொண்டிருக்கையில் பெண்கள் தேவைக்கு அதிகமான X கிரோமோசோம்களைக் கொண்டுள்ளனர். எனவே மரபணுச் சேதத்தின் மூலம் ஒரு கிரோமோசோம் இழப்பு உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது.
“இது ஒரு அசாதாரண, எச்சரிக்கை தரும் விளைவாகவும் இருக்கிறது. இது போன்ற விளைவைத் தோற்றுவிப்பதற்கு பெரும் மரபு மாற்றத்தை எதிர்கொள்ளும் நிகழ்வு 2004ல் தாக்குதல்கள் போது ஏற்பட்டிருக்க வேண்டும். நாம் உடனடியாக அந்தப் பொருள் என்ன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். பலரும் யுரேனியம் என்று சந்தேகித்தாலும், அப்பகுதியில் இருந்து மாதிரிகளை இன்னும் ஆய்வு செய்வதும், சுயாதீனப் பகுப்பாய்வு செய்து ஆராய்ந்தால் ஒழிய உறுதியாக ஏதும் கூறமுடியாது” என்று உல்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் நுண்ணணு உயிரியல் விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியராகவும், ஒரு சுயாதீன சுற்றுச் சூழல் ஆய்வுக்குழுவான Green Audit ல் விஞ்ஞான ஆய்வுத் துறையின் இயக்குனராகவும் உள்ள Busby கூறியுள்ளார்.
இத்தாலிய தொலைக் காட்சி நிலையமான RAI 24 இடம் பல்லுஜாவில் கதிரியக்க தொடர்புடைய நோய்களில் “அசாதாரண” விரிவு 1945ல் அமெரிக்கா ஹிரோஷிமா மற்றும் நாகசாகியைத் தாக்கியதில் இருந்ததை விட அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார். ”என்னுடைய கருத்து இது குறைவடர்த்தி யுரேனியத்தால் ஏற்பட்டிருக்கும் என்பதாகும். இவை கண்டிப்பாக ஒன்றுக்கொன்று தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும்.”
அமெரிக்க இராணுவம் குறைவடர்த்தி யுரேனியத்தை—மிச்ச அணு எரிபொருள் என்றும் அறியப்படும்—கவசங்களை பிளக்கும் குண்டுகள் மற்றும் தோட்டாக்களில் அவை இரு மடங்கு ஈயத்தைக் கொண்டிருப்பதால் பயன்படுத்துகிறது. இந்த குண்டுகள் இலக்கைத் தாக்கினால், வெடிப்பு ஏற்பட்ட பகுதியில் வெளிவரும் சிறு யுரேனியத் துகள்கள் 40 சதவிகிதமாக இருக்கும். பல ஆண்டுகள் இவை அங்கேயே காற்றில் இருந்து மனித இரத்தக் குழாய்களில் நுழைந்து, நிணநீர் சுரப்பிகளில் (lymph glands ) தேக்கி பாதிக்கப்பட்ட வயது வந்தவர்களின் விந்துக்கள், சினைமுட்டைகளில் மரபணுக்களுடன் கரைவதுடன், அதையொட்டி அடுத்த தலைமுறையில் தீவிரமான பிறப்புக் குறைபாடுகள் ஏற்படும்.
பல்லுஜாவில் குழந்தைகள் இறப்பு, பிறவிக் குறைகள் மற்றும் புற்று நோய்கள் தீவிரமாக அதிகரித்துள்ளன என்பதைக் காட்டும் சான்றுகள் நிறைந்த முதல் முறையான விஞ்ஞான ஆதாரபூர்வமானது இந்த ஆய்வு.
அக்டோபர் 2009ல் பல ஈராக்கிய, பிரிட்டிஷ் மருத்துவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்த நகரத்தில் கதிரியக்கத் தொடர்புடைய நோய்கள் அதிகரித்துள்ளது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினர்.
“ஈராக்கின் பல்லுஜாவில் உள்ள இளம் பெண்கள் குழந்தைகளை பிரசவிப்பற்கு பெரும் பீதி கொண்டுள்ளனர். ஏனெனில் கோரமான முறையில் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள், தலையற்றவை, இரட்டைத் தலைகள், நெற்றியில் ஒரு கண்ணை உடையவை, உலர்ந்த உடல் கொண்டவை, உறுப்புக்கள் அற்றவை எனப் பிறப்பது பெரிதும் அதிகரித்துவிட்டது. இதைத்தவிர, பல்லுஜாவில் இளம் குழந்தைகள் இப்பொழுது கொடூரமான புற்றுநோய்கள் மற்றும் இரத்தச் சோகைகளையும் அனுபவிக்கின்றனர்…. “செப்டம்பர் 2009ல் பல்லுஜா பொது மருத்துவமனையில் 170 குழந்தைகள் பிறந்தன, இவற்றுள் 24 சதவிகிதம் முதல் ஏழு நாட்களிலேயே இறந்துவிட்டன, அதிர்ச்சி தரும் வகையில் இறந்த குழந்தைகளில் 75 சதவிகிதம் பிறப்புக் குறைகளை கொண்டதாக வகைப்படுத்தப்பட்டிருந்தன…
“பல்லுஜாவில் உள்ள மருத்துவர்கள் முன்னோடியில்லாத வகையில் பிறப்புக் குறைகளைக் காண்பது மட்டும் இல்லாமல், 2003க்குப் பின்னர் கணிசமாக முன்னதாகவே பிறக்கும் குழந்தை விகிதத்தையும் காண்கின்றனர். ஆனால் பெரும் பீதி தருவது “தப்பிப் பிழைக்கும் குழந்தைகளின் கணிசமானவை பின்னர் பெரும் குறைகளை கொள்ளத் தொடங்கிவிடுகின்றன” என்று பல்லுஜா மருத்துவர்கள் கூறியுள்ளனர்.” ”
இந்த அறிக்கைக்கு விடையிறுக்கும் வகையில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைளுடன் தொடர்புபடுத்தக்கூடிய விதத்தில் பிறப்புக் குறைகளோ மற்றய நோய்கள் பற்றி நிரூபிக்கவோ எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை என்று வலுவாக பென்டகன் கூறியது. “இன்றுவரை குறிப்பிட்ட சுகாதாரப் பிரச்சினைகளை சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஏற்படுத்துகின்றன என்பதைக் குறிக்கும் ஆய்வுகள் நடத்தப்படவில்லை” என்று மார்ச் மாதம் BBC யிடம் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். வாஷிங்டனும் அதன் கைப்பாவை பாக்தாத் ஆட்சியும் அவற்றைத் தடுத்து விட்டதால்தான் ஆய்வுகள் இல்லை என்பது உண்மை.
“புற்று நோய், குழந்தைகள் இறப்பு மற்றும் பிறப்பு பால்-விகிதம் பல்லுஜாவில்” என்னும் ஆய்வின் ஆசிரியர்கள் கருத்துப்படி ஈராக்கிய அதிகாரிகள் இவைகளுடைய அளவைத் தகர்க்க முயன்றனர் என்பதாகும். “வினாக் கொத்துக்கள் அடங்கிய மதிப்பீடு முடிந்தவுடன், ஈராக்கிய தொலைக்காட்சி பயங்கரவாதிகளால் மதிப்பீடு நடத்தப்படுகிறது, வினாக்களுக்கு விடையிறுப்பவர்கள், வினாக்களை கேட்பவர்கள் கைது செய்யப்படலாம் என்று அறிவித்தது” என்று ஆய்வு தெரிவித்துள்ளது.
பல்லுஜா மக்களுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நடத்தப்படும் கொடூரத்தின் வரலாறு 2003 ஏப்ரல் 28ல் தொடங்கியது: அப்பொழுது அமெரிக்க இராணுவப் படையினர்கள் பொறுப்பற்ற முறையில் ஒரு உள்ளூர்ப்பள்ளி அமெரிக்கத் தளமாக மாற்றப்படுவதை எதிர்த்த அப்பகுதி வாழ் மக்கள் மீது சுட்டனர். இந்த தூண்டுதலற்ற தாக்குதலில் 17 பேர் இறந்து போயினர். இரண்டு நாட்களுக்குப் பின்னர் அமெரிக்கப் படையினர்கள் கொலைகளுக்கு எதிராக நடந்த அணிவகுப்பு மீதும் சுட்டு, இன்னும் இருவரைக் கொன்றனர்.
இது மக்கள் சீற்றத்தை தீவிரமாக்கி பல்லுஜா ஆக்கிரமிப்பிற்கு எதிரான சுன்னி எதிர்ப்பின் ஒரு மையமாகவும், அமெரிக்கர்கள் பதிலடி கொடுக்கும் இடமாகவும் மாறியது. 2004 மார்ச் 31ம் திகதி தன்னுடைய பங்கிற்கு போர்க் குற்றங்களுக்கு பொறுப்புடையதான அமெரிக்க தனியார் பாதுகாப்பு நிறுவனமான Blackwater USA ன் வாகனங்கள் வரிசை ஒன்றை கோபம் கொண்ட கூட்டம் ஒன்று தடுத்து நிறுத்தியதுடன், நான்கு பிளாக்வாட்டர் கூலிப்படையினர் அவர்களுடைய வண்டிகளில் இருந்து கீழே இறக்கப்பட்டு, அடித்தும் பின்னர் எரிக்கப்பட்டும் யூப்ரடிஸ் ஆற்றின் பாலத்தில் சடலங்கள் தொங்கவிடப்பட்டன.
இதன்பின் அமெரிக்க இராணுவம் நகரத்தைச் சமாதானப்படுத்துவதாக உறுதியளித்தது. ஆனால் பெயர் சொல்லாத ஒரு அதிகாரி இது “ஒரு கொலைக்களமாக” மாற்றப்படும் என்றார். ஆனால் Operation Vigilant Resolve என்னும் ஆயிரக்கணக்கான மரைன்கள் கொண்ட படையின் செயற்பாடு 2004ல் அமெரிக்க இராணுவ முற்றுகையைக் கைவிட்டதுடன் முடிந்தது. பெரும் இராணுவ வலிமைக்கு எதிராக பல்லுஜா மக்கள் கொண்ட வெற்றி ஈராக் முழுவதும் கொண்டாடப்பட்டது, உலகம் முழுவதும் இதைப் பார்த்தது.
நவம்பர் 2004ல் பென்டகன் தன் பதிலடியைக் கொடுத்தது. நகரம் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளே இருந்தவர்கள் அனைவரும் போரில் ஈடுபடுபவர்கள் என்று அறிவிக்கப்பட்டு, உலக வரலாற்றிலேயே அதிக ஆயுதம் நிறைந்த கொலைகாரக் கருவிக்கு முறையான இலக்குத்தான் என்றும் அறிவிக்கப்பட்டது. நகரத்தில் இருந்து தங்கள் குடும்பத்துடன் வெளியேற முற்பட்டவர்கள் மீண்டும் உள்ளே கொலைக் களத்திற்குள் துரத்தி அடிக்கப்பட்டனர்.
அமெரிக்கா இத்தாக்குதலில் இரசாயனப் பொருளான வெள்ளை பாஸ்பரசை அதிகம் பயன்படுத்தியது. பொதுவாக போர்க் களங்களை வெளிச்சம் போட்டுக்காட்டப் பயன்படும் வெள்ளை பாஸ்பரஸ் பெரும், மரணத்திற்கு வழிவகுக்கும் காயங்களையும் ஏற்படுத்தும். தாக்கப்படுவோர் தோலையும், எலும்பையும் எரித்துக் கரைப்பதற்கு முன் அது கட்டிடங்களையும் ஆடைகளையும் தகர்த்து எரித்து விடும். இந்த இரசாயனப்பொருள் குடிமக்கள் மறைந்திருக்கும் கட்டிடங்களில் இருந்து பிராணவாயுவை உறிஞ்சி வெளியே எடுத்துவிடும்.
மக்கள் மீது வாஷிங்டன் கொண்டிருந்த பழிவாங்கும் உணர்வு, எதிர்த்த “துப்பாக்கியேந்தவர்கள்” கொல்லப்பட்ட எண்ணிக்கை (1400), சிறைபிடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு சமம் என்று கூறியதில் புலப்படுகிறது (1,300-1,500). ஒரு நிகழ்வில், NBC செய்தி நிறுவனம் வீடியோ எடுத்திருந்ததில் ஒரு அமெரிக்கச் சிப்பாய் காயமுற்று, உதவியற்று இருந்த ஈராக்கியர் ஒருவரை கொன்றதைக் காட்டியது. கடற்படை விசாரணைக் குழு பின்னர் இந்த மரைன் தற்காப்பிற்காக செயற்பட்டார் என்று கூறிவிட்டது.
10 நாள் போரில் 41 அமெரிக்க சிப்பாய்கள் மடிந்தனர். நகர மக்கள் எத்தனை பேர் இறந்தனர் என்பது குறித்து உண்மையான எண்ணிக்கை அறியப்படவில்லை. தாக்குதலுக்கு முன்பு நகரத்தின் மக்கள் தொகை 425,000ல் இருந்து 600,000 வரை இருந்தது. தற்போதைய மக்கட்தொகை 250,000 ல் இருந்து 300,000 ஆக இருக்கலாம். பல்லாயிரக்கணக்கானவர்கள், பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் எனத் தாக்குதலுக்கு முன்பே ஓடிவிட்டனர். நகரத்தின் கட்டிடங்களில் பாதிக்கும் மேல் அழிக்கப்பட்டன. பெரும்பாலானவை சிதைந்துவிட்டன.
ஈராக்கின் பெரும் பகுதிகளைப் போலவே பல்லுஜாவும் அழிவில்தான் உள்ளது. IRIN எனப்படும் ஐ.நா. மனிதாபிமானச் செயல்கள் ஒருங்கிணைப்பு அலுவலக அறிக்கை ஒன்றின்படி, பல்லுஜாவில் இப்பொழுதும் முறையான கழிவுப் பொருள் அகற்றும் முறை, தாக்குதலுக்கு ஆறாண்டுகளுக்கு பின்னரும் இயங்கவில்லை. “கழிவுப் பொருட்கள் தெருக்களுக்கு வந்து, குடிநீர்க் குழாய்களுடன் கலக்கின்றன.” என்று அறிக்கை கூறுகிறது. “பல்லுஜா பொது மருத்துவமனையின் இயக்குனரான Abdul Sattar Kadhum கழிவு நீர்ப் பிரச்சினை பல மக்களின் சுகாதாதரத்திற்கு தீங்கு விளைவித்து விட்டது என்றார். வயிற்றுப் போக்கு, டைபாய்ட், இன்னும் பல தொற்று நோய்களினால் மக்கள் தாக்கப்படுகின்றனர்.”
அமெரிக்கத் தாக்குதலின் காட்டுமிராண்டித்தனம் உலகை அதிர வைத்தது. My Lai, Sabra-Shatila, Guermica, Nanking, Lidice, Wounded Knee என்னும் இழிந்த பட்டியலுடன் பல்லுஜாவின் பெயரும் சேர்ந்துள்ளது.
ஆனால் மற்ற இடங்களின் படுகொலைகள் போல் இல்லாமல் பல்லுஜாவிற்கு எதிரான குற்றம் தோட்டாக்கள் சுடப்பட்டது நின்றதுடனோ அல்லது குண்டுகள் விழுவது நின்றதுடனோ முடியவில்லை.
குறைவடர்த்தி யுரேனியத்தை அதிகம் பயன்படுத்துதல் என்ற அமெரிக்க இராணுவத்தின் முடிவு, “புற்றுநோய், குழந்தைகள் இறப்பு, பிறப்பு பால்விகிதம் பல்லுஜாவில்” என்னும் ஆய்வின்படி, கிட்டத்தட்ட வேண்டுமேன்றே நிகழ்த்தப்பட்ட இராணுவச் செயலினால், 2004க்கு முன் பிறக்காத ஒரு தலைமுறைக் குழந்தைகள் மீதான நச்சு செலுத்தப்படல் என்று நிரூபணம் ஆகிறது.
பல்லுஜாவைப் பற்றிய இந்த ஆய்வு சரியான நேரத்தில் தான் வந்துள்ளது. இப்பொழுது அமெரிக்கா ஆப்கானிஸ்தானின் மீது வன்முறையைப் பெரிதும் கட்டவிழ்ப்பதற்கு தாக்குதல் நடத்துகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க செயல்களின் முன்னாள் தலைவர் ஜெனரல் ஸ்டான்லி மக்கிறிஸ்டல் கடந்த மாதம் ஒரு செய்தி ஊடகப் பிரச்சாரத்திற்குப் பின்னர் மாற்றப்பட்டுவிட்டார். இதில் Rolling Stone ஏட்டில் வந்த கட்டுரை ஒன்று பிறவற்றுடன் அவர் ஆப்கானிய எழுச்சியாளர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க முடியாதபடி சிப்பாய்கள் கரங்களைக் கட்டிபோட்டுவிட்டதாக குற்றம் சாட்டியது உதவியாகப் போயிற்று.
மக்கிறிஸ்டலுக்குப் பதிலாக அமெரிக்க மத்தியக் கட்டுப்பாட்டின் முன்னாள் தலைவர் ஜெனரல் டேவிட் பெட்ரீயஸ் பொறுப்பேற்றுள்ளார். புதிய போர். விதிகளை மாற்றிய விதத்தில் பெட்ரீயஸ் கோடிட்டுக் காட்டியுள்ளார். சந்தேகத்திற்குரிய போராளிகளுக்கு எதிராக விகிதத்திற்கு அதிகமான வலிமை பயன்படுத்தப்பட இதில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மத்திய கட்டுப்பாட்டில் பெட்ரீயஸிற்குப் பதிலாக ஜெனரல் ஜேம்ஸ் “பைத்தியக்கார நாய்” மாட்டிஸ் பொறுப்பேற்றுள்ளார். இவர் தான் 2004ல் பல்லுஜா மீதான அமெரிக்க தாக்குதலை நடத்தும் திட்டத்தில் முக்கிய பங்கு கொண்டிருந்தார். இவர் கொலை செய்வதில் ஈடுபாடு உடையவர், 2005ல் ஒரு பொதுக் கூட்டத்தில் “சிலரைக் கொல்வது களிப்பாகும்… உங்களுக்குத் தெரியுமா, அது பெரும் மகிழ்ச்சியைத் தரும்” என்றார். |