WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்:
ஆசியா :சீனா More strikes hit auto plants in China
தொடர் வேலைநிறுத்தங்களால் சீன வாகன தயாரிப்பு தொழிற்சாலைகள் பாதிப்பு
By Peter Symonds
26 June 2010
Back to
screen version
வாகன உதிரிப்பாகங்கள் விநியோகிக்கும் துறையில் இடம்பெற்றுவரும் மேலதிக வேலைநிறுத்தங்களால் சீனாவின் தெற்குக் கடலோர மாகாணமான குவாங்டோங்கில் உள்ள டொயோட்டா, நிசான் மற்றும் ஹோண்டா போன்றவற்றிற்கு சொந்தமான முக்கிய வாகனம் பொருத்தும் தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தங்கள் மேமாத மத்தியில் இருந்து பாரிய வாகன உற்பத்தியாளர்களை பாதித்துள்ள அலைபோன்ற தொழிற்துறை அமைதியின்மையின் ஒரு பகுதியாக உள்ளதுடன், சீனாவிலும் சர்வதேசரீதியாகவும் ஆளும்வர்க்கத்தின் மத்தியில் கவலைகளை கிளறிவிட்டுள்ளது.
குவாங்ஷூ நான்ஷாவில் உள்ள டொயோட்டாவின் டென்சோ தொழிற்சாலை ஊழியர்கள் 800 யுவான் (118 டாலர்கள்) மாதாந்த ஊதிய உயர்வு கோரி திங்கட்கிழமையன்று வேலைநிறுத்தம் செய்தனர். மேலும் சுதந்திரமான தொழிற்சங்கம் ஒன்றை அமைப்பதற்கான உரிமையை வலியுறுத்தியும் மற்றும் எவரும் தண்டிக்கப்படமாட்டார்கள் என்பதற்கு வாக்குறுதி தரவேண்டும் என்று கோரி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. பெரும்பாலான தொழிலாளர்களின் சராசரி சம்பளம் 1100 முதல் 1300 யுவான் வரையிலும் தான் உள்ளது.
இந்த வேலைநிறுத்தத்தில் 200 தொழிலாளர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளதாக அரசு பத்திரிகைச் செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதே சமயம் டென்சோவில் உள்ள 1200 தொழிலாளர்களில் பாதிப் பேர் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். இந்த வேலைநிறுத்தம் தொடர்ந்ததால் குவாங்டோங்கில் உள்ள டொயோட்டாவின் ஜி.ஏ.சி. டொயோட்டா மோட்டார் என்னும் ஆண்டுக்கு 3,60,000 கார்களை தயாரிக்கும் மிகப் பெரிய பொருத்தும் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமையன்றும் உற்பத்திப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு டொயோட்டா தள்ளப்பட்டது.
டென்சோ சீனாவில் உள்ள டோயோட்டா, ஹோண்டா, போக்ஸ்வேகன் போன்ற முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு எரிபொருள் செலுத்தும் கருவிகளை வினியோகம் செய்து வரும் முக்கிய நிறுவனமாகும். இந்த இழுபறி நிலை நீடிக்குமானால் பெய்ஜிங்கில் உள்ள ஹூண்டாய் மற்றும் டியான்ஜினில் உள்ள டோயோட்டா உட்பட வடசீனாவில் உள்ள கார் தயாரிப்பாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என ஒரு இளம் தொழிலாளர் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் இதழ் நிருபரிடம் கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் 20 பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்ததை அடுத்து புதன்கிழமை முதல் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள் நுழைந்து சீருடை அணிந்தபோதிலும் வேலையை தொடர மறுத்துவிட்டனர். இந்த நிலையில் குவாங்ஷூ ஹோண்டா பொதுமேலாளரும், சீன மக்கள் காங்கிரஸ் துணைத் தலைவருமான ஜெங் குவிங்ஹாங் நடுநிலையாளராக வரவழைக்கப்பட்டார். இருப்பினும் பேச்சுவார்த்தை வியாழக்கிழமை வரையிலும் நீடித்தது.
மாதம் 800 முதல் 900 யுவான் வரையிலும் ஊதிய உயர்வு வழங்க நிர்வாகத்தினர் ஒப்புக்கொண்டதற்கு பிறகே டென்சோ ஊழியர்கள் வேலைக்கு திரும்பியுள்ளனர். டொயோட்டாவின் குவாங்ஷூ பொருத்தும் தொழிற்சாலையில் அடுத்த வாரம் முதல் உற்பத்தி தொடங்கவிருக்கிறது.
குவாங்ஷூவில் உள்ள என்.எச்.கே-யூ.என்.ஐ ஸ்ப்ரிங் என்னும் உதிரிபாகங்களை தயாரித்து வினியோகம் செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் கடந்த செவ்வாய்க்கிழமையன்று வேலைநிறுத்தம் செய்ததால் ஹோண்டாவுக்கு மேலும் பாதிப்பு ஏற்பட்டது. மாதச் சம்பளத்தை 1200 யுவானிலிருந்து 1700 யுவானாகவும் உயர்த்த வேண்டும் மற்றும் வருடாந்த மேலதிக கொடுப்பனவுகளை 1200 யுவானிலிருந்து 6800 யுவான் வரையிலும் உயர்த்தவேண்டும் என்பதே அவர்களது முக்கிய கோரிக்கையாக இருந்தது. உதைப்பை தாங்கும் சுருள்கள் (suspension springs) மற்றும் உறுதிப்படுத்தும் கருவிகளை(stabilisers தயாரிக்கும் இத்தொழிற்சாலை ஜப்பானின் என்.எச்.கே. ஸ்ப்ரிங் மற்றும் ஒரு தைவான் நிறுவனத்தின் கூட்டுரிமையிலானது.
இந்த வேலைநிறுத்தம் குவாங்டோங்கில் உள்ள பொருத்தும் தொழிற்சாலைகளில் புதன்கிழமையன்றும் உற்பத்திப் பணிகளை நிறுத்திவைக்கும் சூழலுக்கு ஹோண்டாவை தள்ளிவிட்டுள்ளது. போஷானில் உள்ள மின்கடத்தி தொழிற்சாலையில் கடந்த மாதம் நடைபெற்ற இரண்டுவார வேலைநிறுத்தத்துடன் நடைபெற்ற தொடர் வேலைநிறுத்தங்களால் ஹோண்டா பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வேலைநிறுத்தம் அதே நகரின் பிற பகுதிகளில் உள்ள வாகன உதிரிப்பாக தொழிற்சாலைகளுக்கும் பரவியது. ஷோங்ஷானில் உள்ள ஹோண்டா லாக் மற்றும் வுஹானில் உள்ள ஆட்டோ பார்ட்ஸ் அலயன்ஸ் ஆகியவை இதில் சில.
மே மாதத்திற்கான ஹோண்டாவின் விற்பனை புள்ளிவிவரங்கள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. ஏப்ரல் மாத உற்பத்தியுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது உற்பத்தி 37 சதவீதம் சரிவடைந்ததாக இந்த வாரம் அறிவிக்கப்பட்ட கணக்குகள் சுட்டிக்காட்டுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கார் விற்பனையில் 33 சதவீதம் வளர்ச்சி உள்ளதாக கூறும் கணக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது ஹோண்டாவின் விற்பனை 10 சதவீதம் சரிவடைந்ததுள்ளதை காணலாம். ஹோண்டாவின் உற்பத்தித்திறனில் 20,000 வாகனங்கள் குறைவு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் ஹோண்டாவின் வர்த்தக லாபத்தில் 12 பில்லியன் யென் (134 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) குறைவை ஏற்படுத்தும் என ஜெ.பி. மோர்கன் நிதிநிறுவன குழு ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
என்எச்கே-யூ.என்.ஐ ஸ்ப்ரிங் வேலைநிறுத்தத்தால் நிசானின் குவாங்ஷூவில் உள்ள தொழிற்சாலையிலும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு தடை ஏற்பட்டது. உதிரிபாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலையில் வியாழக்கிழமை உற்பத்திப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டாலும் சமரசம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
இந்த வேலைநிறுத்தங்களுக்கு மறைமுகமாக ஆதரவு வழங்கிக்கொண்டு ஊதிய உயர்வை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் நுகர்வு விகிதத்தை உயர்த்த சீன அரசு முயற்சிப்பதாக பல்வேறு ஊடக அறிக்கைகள் ஊகத்தின் அடிப்படையில் சுட்டிக்காட்டியுள்ளன. வியாழக்கிழமையன்று நியூயோர்க் டைம்ஸ் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்று இது குறித்து அபிப்பிராயம் தெரிவிக்கையில்: சீன அரசு இந்த வாரம் அந்நாட்டின் நாணயத்தை மேலும் விட்டுக்கொடுக்கும் தன்மையுடையதாக்குவதும் மற்றும் சமீபத்திய தொழிற்சாலை வேலைநிறுத்தங்களை அதிகாரிகளின் வெளிப்படையான சகித்துக்கொள்ளலும் பரவலாக ஊதிய உயர்விற்கு இட்டுச்சென்றுள்ளதுடன் இவை ஏற்றுமதியினால் உந்தப்படும் அந்நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்யும் விஷயத்தில் சீனத் தலைவர்கள் திட்டவட்டமாக உள்ளதையே காட்டுகிறது.
இத்தொழிற்துறை அமைதியின்மையை பெய்ஜிங் மிக அவதானமாக கவனித்துவருவதுடன் சீனாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்து வரும் தொடர் வேலைநிறுத்தங்களையும், அதன் காரணமாக அந்நாட்டு) காவல்துறையினரை மிகவும் உஷார் நிலையில் வைத்துள்ளது. மேலும் இந்த வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் சீனாவின் அரசு ஆதரவு அமைப்பான சீன தொழிலாளர் சங்கங்களின் பேரவையை(ACFTU) நிராகரித்துள்ளதுடன், தமது சொந்த பிரதிநிதிகளை தெரிவு செய்யவேண்டும் எனவும் சுதந்திரமான தொழிற்சங்கங்களை உருவாக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர். இது சீனாவில் சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ACFTU தொழிற் சங்கப் பேரவையானது தொழிற்துறையில் அரசுக்காகவும் தனியார் நிறுவனங்களுக்காகவும் ஒரு போலீஸ் படை போன்றே செயல்பட்டு வரும் அவப்பெயர் பெற்ற ஒரு அமைப்பு ஆகும். இது குறித்து சவுத் சீனா மார்னிங் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளதாவது: தொழில்சங்கப் பணியாளர்கள் அரசு சம்பளம் வாங்கும் பொதுத்துறை ஊழியர்களே ஆவர், மேலும் ஷோங்ஷானில் உள்ள ஹோண்டா லாக் போன்ற தனியார் நிறுவனங்களில் இவர்கள் நிர்வாக அதிகாரிகளை போன்றே செயல்பட்டு வருகின்றனர்.
இது குறித்து அந்நாளிதழுக்கு பேட்டி அளித்த சீனாவின் தொழில் உறவு கல்வி நிறுவன பேராசிரியர் லின் யான்லிங்: இத்தொழிற்சங்கம் தொழிலாளர்கள் நலத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என்று கூறினார். சட்டப்படி அவர்கள் தொழிலாளர்கள் நலன்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை கொடுத்திருந்தாலும், அவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியாலும் அரசாங்கத்தாலும் சமூக ஸ்திரப்பாட்டை நிலைநாட்ட நம்பிக்கையுடையவர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் அரசுக்கு சேவை புரிவதே அவர்களுக்கு முக்கிய நோக்கம் ஆகும்.
போஷானில் உள்ள ஹோண்டா நிறுவன தொழிலாளர்கள் அவர்களது சொந்த தொழிற்சங்கத் தலைவர்களை தேர்ந்தெடுக்கவும், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவோரை வருடாந்தரீதியாக பரிசோதித்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கும் வகையிலான ஒரு முன்மாதிரி திட்டம் ஒன்றை குவாங்டோங் தொழிற்சங்க பேரவை தீட்டியுள்ளதாக பெய்ஜிங் ஆதரவு ஹாங்காங் நாளிதழான தா குங் பாவோ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் ஒரு தட்டு போர்க்குணமிக்க தொழிலாளர்களை தற்போது சீனாவின் தொழில்துறையில் ஏற்பட்டு வரும் அதிகமாக மட்டுப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தங்களுக்குள் அடக்கி வைக்கும் ஒரு வழிவகையாகவும் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் இயக்கமாக உருவாவதை தடுப்பதையும் நோக்கமாக கொண்டதாகும்.
அதே சமயம் அரசாங்கத்தின் அடக்குமுறைகள் ஏற்கெனவே அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த விஷயம் தான். சீனாவின் வடக்கே உள்ள டியான்ஜினில் உள்ள டோயோட்டாவிற்கு சொந்தமான இரு தொழிற்சாலைகளிலும் மற்றும் டியான்ஜினில் FAW டோயோட்டா மிகப்பெரிய பொருத்தும் தொழிற்சாலையின் உற்பத்தியையும் பாதிக்கக்கூடிய வேலைநிறுத்த போராட்டம் வெடித்ததால் அங்கு போலீஸ்படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
ஜூன் 17-ஆம் தேதியன்று டியான்ஜினில் உள்ள டொயோடோ கோசேய் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைநிறுத்தம் பரவத் தொடங்கியபோது 200-க்கும் மேற்பட்ட போலீஸார் இரவு 10 மணி அளவில் அத்தொழிற்சாலையின் வளாகத்திற்குள் நுழைந்து அங்கு மறியலில் ஈடுபட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூன்றே நிமிஷங்களில் அங்கிருந்து வெளியேறிச்செல்ல உத்தரவிட்டனர். தொழிற்சாலையை விட்டு வெளியேற தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்தபோது போலீஸார் அவர்களை பலப்பிரயோகம் செய்து வெளியே இழுத்துச் சென்றதாக அச்சம்பவத்திற்கு சாட்சியான ஒருவர் South China Morning Post இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். ஒரு பெண் தொழிலாளரின் தலைமுடியை பிடித்து இழுத்தவாறும், வேறு ஒரு பெண் தொழிலாளரின் கைகளை பின்பக்கமாக இழுத்துப் பூட்டுபோட்ட நிலையிலும் பலவந்தமாக வெளியேற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் 16 பேரை கைது செய்த போலீஸார் அன்றிரவே அவர்களை அங்கிருந்து இழுத்துச் சென்றதாகவும், மீதி தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட சக தொழிலாளர்களை விடுவிக்கக்கோரி அடுத்த நாள் காலை 10 மணி வரையிலும் அந்த தொழிற்சாலை வளாகத்தில் உட்கார்ந்திருந்ததாகவும் அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது. அந்த தொழிற்சாலைக்கு செல்லும் நான்கு சாலைகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்ததாகவும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் அப்பகுதிகளில் போலீஸ் ரோந்து வாகனங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததாகவும் சாட்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். திங்கட்கிழமை ஆகக்குறைந்தது இரண்டு செய்தியாளர்கள் பொலிஸாரால் அங்கிருந்து அகற்றப்பட்டனர்.
சீனாவில் தொழிலாளர் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் நடைபெறுவது வாகனத்துறையில் மட்டுமல்ல. தடைபட்டுக் கிடக்கும் ஊதியம் மற்றும் பிற சலுகைகள் வழங்கவும், இந்த நஷ்டங்களுக்கு உள்ளூராட்சி நிர்வாகம் நஷ்ட ஈடு வழங்கவும் கோரி ஷான்க்ஸியில் உள்ள நூற்றுக்கணக்கிலான பணிநீக்கம் செய்யப்பட்ட மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஒருவார மறியலில் ஈடுபட்டுள்ளதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான நான்கு தொழிற்சாலைகளின் முன்னாள் தொழிலாளர்கள் ஜீஷியூ நகர அரசாங்க கட்டிடத்தின் வாயிலின் முன் கூடி நின்று போக்குவரத்தை தடைசெய்கின்றனர்.
பெங் சி (70)என்னும் பெண் ஊழியர் இது பற்றி கூறுகையில், கடந்த 2001-ஆம் ஆண்டு திவால் ஆகிவிட்டதாக அறிவிக்கப்படும் வரையில் அவர் அந்த தொழிற்சாலையில் தொடர்ந்து 40 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளதாக கூறினார். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நஷ்ட ஈடு தொகையை குறைப்பதற்கென்றே அந்த தொழிற்சாலையின் சொத்துக்களை நிர்வாகம் வேண்டுமென்றே குறைத்து கணக்குக் காட்டுவதாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர். பெங் சியின் சக ஊழியர்கள் சிலருக்கு மாதம் வெறும் 240 யுவான் மட்டுமே கிடைத்து வந்ததாகவும் இந்த தொகை உணவுக்குக் கூட போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்தனர். அரசுடமை நிறுவனங்களை கடந்த இருபது ஆண்டுகளில் சீன அரசு விற்பனை செய்தும் அல்லது இழுத்து மூடியும் உள்ளதால் பல லட்சக்கணக்கிலான தொழிலாளர்கள் வேலையை இழந்து தவிக்கின்றனர்.
மக்களிடையே ஏற்பட்டுள்ள மனக்கலக்கத்தை தொடர்ந்து தற்கால சமூக நிலைமையை போலீஸார் உன்னிப்பாக அவதானித்து வந்தாலும், அதிகரித்து வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் மறியல் போராட்டங்கள் பற்றிய புள்ளிவிவரங்களை பெய்ஜிங் வெளியிடவில்லை. ஹாங்காங்கில் உள்ள சீன தொழிலாளர் ஏட்டின் அறிக்கையின் படி, கடந்த 2008-ஆம் ஆண்டில் மட்டும் சீனாவில் சுமார் 1,27,000 போராட்டங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இதில் மூன்றில் ஒரு பங்கும் தொழில்பிரச்சினை தொடர்பானவையாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவில் சமீப காலத்தில் அதிகரித்து வரும் வேலைநிறுத்தங்களால் பெய்ஜிங்கிலும் சர்வதேசரீதியாகவும் அச்சத்தை தூண்டிவிட்டுள்ளதுடன் பரந்தளவில் செய்தி ஊடகங்களினதும் கவனத்தை பெறுகின்றன. ஏனெனில் அது வெளிநாடுகளுக்கு சொந்தமான பாரிய நிறுவனங்களின் ஒருமுக்கிய தொழிற்துறையின் மீது தாக்கத்தை உருவாக்குவதாலும் மற்றும் நாட்டின் பாரிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த இயக்கத்திற்கு முற்கட்டியம் கூறுவதாலுமாகும்.
|