World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Six months since the earthquake

American imperialism and the Haitian catastrophe

நிலநடுக்கத்திற்கு ஆறு மாதங்களுக்குப் பின்

அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஹைட்டிய பேரழிவும்

13 July 2010

Back to screen version

ஹைட்டியின் பெரும்பகுதியை அழித்த நிலநடுக்கத்தின் ஆறாவது மாத முடிவு திங்களன்று கடைப்பிடிக்கப்பட்டது. பேரழிவிற்கு உட்பட்ட நாடு கட்டமைக்கப்படுவதலும், புதிய நூற்றாண்டின் மிக மோசமான இயற்கைப் பேரழிவினால் வீடிழந்த 1.5 மில்லியன் மக்களுக்கு மறு வீடளிப்பதிலும் கிட்டத்தட்ட எந்த முன்னேற்றமும் இல்லை என்பதைச் செய்தி ஊடகத் தகவல்கள் ஒப்புக் கொண்டுள்ளன.

அமெரிக்க அரசாங்கம் இந்த ஆறு மாத முடிவைப் பற்றிப் பெயரளவு கவனத்தைத்தான் காட்டியது. வருகை புரிந்திருந்த டொமினிக்கன் குடியரசு ஜனாதிபதியுடன் சேர்ந்து நடத்திய ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஹைட்டி பற்றி ஒபாமா சுருக்கமாகக் குறிப்பிட்டு அது ஹிஸ்பனியோலா தீவு டொமினிக்கன் நாட்டுடன் பகிர்ந்து கொள்கிறது என்றார்.

நிலநடுக்கத்திற்குப் பின்னர் ஒபாமா ஹைட்டிக்குச் சென்றதில்லை. இந்த முடிவு பெரும் இறப்பு எண்ணிக்கை மற்றும் தொடரும் மனித இடர்கள் பற்றிய அவருடைய பொருட்படுத்தாத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அந்நாடு ஏர் போர்ஸ் ஒன்று விமான மூலம் மிகக் குறுகிய காலத்தில் செல்லலாம், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி நிதி திரட்டுவதற்காக பேசுவதற்கு செல்லும் விருந்திடங்களை விட வாஷிங்டனுக்கு அருகில்தான் உள்ளது.

கிட்டத்தட்ட 12,000 தரைப்படைகளையும் கடற்படையினர்களையும் நிலநடுக்கத்தை உடனடியாகத் தொடர்ந்து தலைநகரான Port-au-Prince ஐ கைப்பற்ற ஒமாமா நிர்வாகம் திரட்டியிருந்தது. இந்த இராணுவ ஊடுருவல், உதவி முயற்சிகளுக்கு உதவுவதற்குப் பதிலாக தடையை ஏற்படுத்திய விளைவைத்தான் கொடுத்தது. வாஷிங்டன் தன் கைக்கூலி ஜனாதிபதி ரெனே ப்ரேவ் மற்றும் ஹைட்டிய மில்லியனர்களுக்கும் எதிராக மக்கள் எழுச்சி ஏதும் இராது என்று நம்பிக்கை கொண்டவுடன் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது.

ஜூன் 1ம் தேதி அமெரிக்க போர்ப் படைகளின் கடைசிப் பிரிவு ஹைட்டியில் இருந்து திரும்பப் பெறப்பட்டதானது அடையாள ரீதியான செயலுக்கும் மேலானதாகும். இத்தேதிதான் அட்லான்டிக்கில் புயல்வீசும் காலத்தின் உத்தியோகபூர்வ தொடக்கமாகும். ஹைட்டியில் உள்ள மக்கள், கூடாரங்களில் இன்னும் வசிக்கும் 1.5 மில்லியன் மக்களும், இன்னும் பல மில்லியன் மக்கள் சேரியில் வசிக்கும் நிலையிலும், ஒரு பெரும் புயலில் இருந்து தப்பிப்பது கடினம் ஆகும். எனவே தங்களை காப்பற்றிக் கொள்ள அப்படியே விட்டுவிடப்பட்டனர்.

Port-au-Prince இல் உள்ள பரந்து உடைந்துள்ள காங்க்ரீட் கட்டிகள் குவியலுக்கும் அமெரிக்க இராணுவத்தால் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு பின்னர் திருப்பி எடுத்துச் செல்லப்பட்ட கனரகக் கருவிகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை மூத்த உதவி அளிக்கும் பணியாளர் குறிப்பிட்டார். இவை துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை தூய்மைப்படுத்துவது தவிர வேறு எதற்கும் பயன்படுத்தப்படவில்லை. அவைதான் இராணுவப் பொருட்கள் வந்து செல்லுவதற்கு உகந்த இடங்கள் ஆகும். இதற்கிடையில் கட்டிட சேதங்கள் சிறு கை வாகனங்களால் அகற்றப்படுதல், வாளிகள் கொண்ட கூட்டத்தால் அகற்றப்படுதல், என்பதுதான் பேரழிவினால் வீடுகள் இழந்த, வேலைகள் இழந்த மக்களின் முக்கிய வேலையாயிற்று.

உலக சோசலிச வலைத் தளம் விளக்கியது போல், ஹைட்டிக்கு நடந்தது ஒரு சமூக மற்றும் இயற்கைப் பேரழிவு ஆகும். நில அதிர்ச்சி தாக்குவற்கு முன்னரே நாடு மேலை உலகிலேயே மிக வறிய நாடாக இருந்ததுடன், மிகக் குறைவான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, மிகக் குறைந்த ஆயுட்கால எதிர்பார்ப்பு, மிகக் குறைந்த கல்வியறிவு, அதன் குழந்தைகளுக்கு மிக மோசமான வருங்காலம் ஆகிய வாய்ப்புக்களைத்தான் கொண்டிருந்தது. இந்த வறுமை ஒன்றும் “இயற்கையின்” விளைவு அல்ல. மாறாக நீண்ட காலமாக காலனித்துவ மற்றும் அரைக் காலனித்துவ என்ற ஹைட்டியின் வரலாற்று விளைவுதான்.

ஒரு வெப்ப வலய நாட்டு நிலையானது இயற்கையால் ஹைட்டிக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வளமான நிலமும் உண்டு. 1803ம் ஆண்டு உச்சக் கட்டத்தில் முடிந்த பெரும் புரட்சியின் போது அடிமை மக்கள் எழுச்சி செய்து பிரெஞ்சு அடிமைச் சொந்தக்காரர்களை விரட்டி அடித்தபோது அமெரிக்காவில் தலா தனிநபர் செழிப்பு எந்த அளவிற்கு இருந்ததோ அதை ஹைட்டியும் பெற்றிருந்தது. ஆனால் இரு நூறு ஆண்டுகளாக ஹைட்டிய மக்கள் வாஷிங்டனுடன் நெருக்கமான பொருளாதார அரசியல் உறவுகளைக் கொண்டிருந்ததுடன், வெளிநாட்டுப் பொருளாதார ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டு, பேராசை பிடித்த மிருக்கத்தன உயரடுக்கின் தவறான ஆட்சியினால் குறிப்பாக கடைசி நூற்றாண்டில் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கடந்த நூறு ஆண்டுகளில் அமெரிக்கா ஐந்து முறை ஹைட்டியில் தலையிட்டுள்ளது; நாட்டை மொத்தமாக 25 ஆண்டுகளுக்கு நேரடியாக ஆக்கிரமித்துள்ளது: 1914, 1915-1934, 1994-95. 2004 மற்றும் 2010. 1915-34ல் நீடித்த ஆக்கிரமிப்பு அதிகாரத்தை அமெரிக்கப் பயிற்சி பெற்ற இராணுவ சக்தியிடம் அளித்தது—அது ஹைட்டிய மக்களுக்கு எதிராக அதன் துப்பாக்கிகளைத் திருப்பி டுவலியர் குடும்பச் சர்வாதிகாரத்திற்கு முட்டுக் கொடுத்து நின்றது. அந்த ஆட்சி 30 ஆண்டுகள் காட்டுமிராண்டித்தன ஆட்சியை நடத்தியது.

டுவலியர் ஆட்சி சரிந்ததிலிருந்து 23 ஆண்டுகள் பலமுறை அமெரிக்கத் தலையீடுகளைச் சந்தித்தன. பின்னைய அரசாங்க மாற்றங்களானது அமெரிக்கப் பெருநிறுவன நலன்களுக்கு உதவிய பொருளாதாரக் கொள்கைகளை ஆணையிட்டன. அதே நேரத்தில் விவசாயமும், உற்பத்தித் தளமும் நாட்டில் பேரழிவிற்கு உட்பட்டன. ஈராக், ஆப்கானிஸ்தான் தவிர, உலகில் வேறு எந்த நாடும் வாஷிங்டனின் ஆக்கிரமிப்பு, நாச வேலை, பொருளாதார ஆதிக்கம் ஆகியவற்றில் ஹைட்டி இடருக்கு உட்படுத்தப்பட்டது போல் இடர்படவில்லை.

இந்த உறவு ஐ.நா. தொடக்கிய மறுகட்டமைப்பு முயற்சி என்று அழைக்கப்படுவதிலும் தொடர்கிறது. மார்ச் மாதம் ஹைட்டிய மறுகட்டமைப்பிற்கு உறுதி கொடுக்கப்பட்ட 5.3 பில்லியன் டொலர் நிதியை மேற்பார்வையிட நியமித்த குழுவிற்கு இணைத் தலைவராக ஹைட்டிய பிரதம மந்திரி Jean-Max Bellerieve உள்ளார். ஆனால் உண்மையான அதிகாரம் அமெரிக்க இணைத் தலைவரான முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனிடமும் ஒபாமா நிர்வாகத்திடமும் தான் உள்ளது.

நிதிப்பணம் எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை வாஷிங்டன் தான் நிர்ணயிக்கிறது. ஹைட்டியப் பங்கு என்ற அத்தி இலை மறைப்பு இருந்தபோதிலும்கூட. ஜூன் 17 வரை குழு உத்தியோகபூர்வமாகச் சந்திக்கக்கூட இல்லை. நிலநடுக்கம் ஏற்பட்டு ஐந்து மாதங்களுக்கும் மேலாக. அதன் பின்னும் கூடியதற்குக் காரணம் புயல் காலம் வரவிருப்பது 31 மில்லியன் டொலரை புயலில் இருந்து பாதுகாக்கும் உறைவிடங்களை மக்களின் மிகச்சிறிய பகுதியினருக்கு கட்டுவதற்கு ஒப்புதல் கொடுப்பதற்காகத்தான்.

முன்னாள் ஜனாதிபதி கிளின்டன் பலமுறையும் தன்னுடைய முக்கிய இலக்கு ஹைட்டியில் தனியார் முதலீட்டிற்கு ஊக்கம் அளிப்பதுதான் என்று அறிவித்துள்ளார். அந்த இலக்கிற்காக அவர் முறையாக கொள்கைகளை வகுத்து, அமெரிக்க வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் இன்னும் மற்ற ஏகாதிபத்திய சக்திகள் இலாபம் பெறுவதை உத்தரவாதப்படுத்துகிறார்.

இந்த வாரம் New York Times இல் தலையங்கத்திற்கு எதிர்ப்பக்கத்தில் வந்த கட்டுரை ஒன்றில், பிரதம மந்திரி Bellierive உடன் கிளின்டன் எழுதியதில், “நீண்ட கால ஈவுகள் கிடைக்கும் முதலீடுகளுக்கு சிறந்த வாய்ப்புக்களாக விவசாயம், கட்டுமானம், சுற்றுலா, உற்பத்தித்துறை, பணித் துறைகள் மற்றும் தூய எரிசக்தி, குறிப்பாக சூரிய சக்திப் பிரிவு ஆகியவற்றில் உள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நசுக்கப்பட்ட, துன்பத்தில் உள்ள நாடு மறுகட்டமைக்கப்படுதல் என்பது அவசர மனிதாபிமானப் பணி ஆகும். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஹைட்டி மக்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை. அமெரிக்க, சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஹைட்டிய தீவிலுள்ள தொழிலாள வர்க்கமும் வெளிநாடுகளில் இருப்பது உட்பட இப்போராட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டும்.

உடனடியான பெரும் உதவி ஹைட்டிய மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும், அதில் கட்டமைப்பு கருவிகள், திறமையான கட்டமைப்புத் தொழிலாளர்கள் வேண்டும், அவசர மருத்துவ உதவி, மற்றும் தொழில்நுட்ப உதவி தேவை என்று சர்வதேச தொழிலாள வர்க்கம் கோர வேண்டும். இந்த இருப்புக்கள் ஏகாதிபத்திய சக்திகளால் அளிக்கப்பட மாட்டது. ஹைட்டிய ஆளும் உயரடுக்கின் அரை குற்றம் சார்ந்த தன்மை உடைய தட்டுக்களால் பயன்படுத்தப்படவும் மாட்டாது.

ஹைட்டி மறுகட்டமைப்பு என்பது சர்வதேச அளவில் சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் சர்வதேசத் தொழிலாளர் வர்க்கம் அணிதிரட்டப்பட வேண்டும். ஹைட்டியத் தொழிலாளர்கள் காரிபியத் தீவுகளிலும் உலகின் இப்பகுதி முழுவதும் இருக்கும் அவர்களின் வர்க்கச் சகோதர, சகோதரிகளுடன், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கத்துடனும் ஐக்கியப்பட வேண்டும்.