சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan nurses’ unions call off pay protest campaign

இலங்கை தாதிமார் தொழிற்சங்கங்கள் சம்பள பிரச்சாரத்தை நிறுத்திக்கொண்டன

By W.A. Sunil
8 July 2010

Use this version to print | Send feedback

இலங்கை பொதுத் துறை தாதிமார் தொழிற்சங்கங்கள், குறைந்த சம்பளம் மற்றும் வறிய நிலைமைகள் சம்பந்தமாக முன்னெடுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தை இந்தவாரம் விரைவில் கைவிட்டன. ஒரு பௌத்த துறவியான முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் தலைமையிலான பொதுச் சேவைகள் ஐக்கிய தாதிமார் சங்கம் (பி.எஸ்.யூ.என்.யூ.) என்ற இந்த மிகப்பெரும் தாதிமாதர் சங்கம், ஜூலை 2ம் திகதியில் இருந்து ஒரு வாரம் முழுவதும் கறுப்புப் பட்டி அணியும் பிரச்சாரத்துக்கு அழைப்புவிட்டிருந்தது.

இந்த தொழிற்சங்கம், எதிர்ப்பு பிரச்சாரத்தை விரைவில் முடித்துக்கொண்டதன் மூலம், அரசாங்கம் சம்பள அதிகரிப்பு வழங்க மறுப்பது தொடர்பாக தாதிமார் மத்தியில் நிலவும் சீற்றத்தை திசை திருப்புவதை மட்டுமே இலக்காகக் கொண்ட அதன் போலிப் பண்பை வெளிக்காட்டியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், 2006ல் இருந்தே விளைபயனுள்ள விதத்தில் அரசாங்க சம்பள அதிகரிப்பை நிறுத்தி வைத்துள்ளது. அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பள அதிகரிப்பு கொடுப்பதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்த போதிலும், கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட 2010ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் இந்த ஊதிய அதிகரிப்பு நிறுத்தத்தை கடைப்பிடித்துள்ளது.

எதிர்ப்புப் பிரச்சாரத்தை நிறுத்திக்கொண்ட பி.எஸ்.யூ.என்.யூ., ஆகஸ்ட் 15 அளவில் கோரிக்கைகளை “அனுகுவதாக” திறைசேரி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர வாக்குறுதியளித்துள்ளதாக கூறிக்கொண்டது.

இந்த கறுப்புப் பட்டி போராட்டத்தின் 11 கோரிக்கைகளில், தாதிமாரின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பது பிரதானமாக இருந்தது. ஏனைய கோரிக்கைகள், வேலை நிலைமைகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் பற்றியவையாகும். அரசாங்கத்துக்கு எதிரான ஐக்கியப்பட்ட போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுவதற்கு மாறாக, சம்பள “முரண்பாடுகள்” திருத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தமை, தாதிமாரையும் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்களையும் அவர்களது பதவி மற்றும் தரத்தின் படி பிளவுபடுத்துகிறது.

சிங்கள தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) சார்ந்த அகில இலங்கை தாதிமார் சங்கம் (ஏ.சி.என்.யூ.) இந்தப் பிரச்சாரத்தில் இணைந்துகொண்ட போதிலும், அதுவும் பிரச்சாரத்தை கைவிட்ட அதே வேளை, பிரச்சாரத்தை முடித்துக்கொண்டதாக பி.எஸ்.யூ.என்.யூ. மீது குற்றஞ்சாட்டியது.

கடந்த வாரம் பல தாதிமார் கறுப்பு பட்டிகளை அணிந்த போதிலும், வெற்று பாசாங்குகளைப் பற்றி சீற்றமடைந்திருந்தனர். ஒரு தாதி உலக சோசலிச வலைத் தளத்துக்கு தெரிவித்ததாவது: “நான் பி.எஸ்.யூ.என்.யூ. உறுப்பினராவேன். ஆனால் தொழிற்சங்கங்கள் மறியல் போராட்டம் ஒன்றுக்குக் கூட அழைப்பு விடுக்கவில்லை. பல ஆண்டுகளாக எங்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கவில்லை. சில தாதிமார் ஏற்கனவே சங்கத்தை விட்டு விலகிவிட்டனர். எங்களில் பலரும் சங்கத்தை விட்டு வெளியேறுவது பற்றி யோசித்துக்கொண்டிருக்கின்றோம். இந்த அரசாங்கம் வாழ்க்கை தரத்தின் மீது தாக்குதல் தொடுப்பதை தாதிமார் எதிர்க்கின்றனர்.”

தாதிமார் “கடந்த 10 ஆண்டுகளாக புதிதாக எதையும் வெற்றிகொள்ளவில்லை” மற்றும் அவர்கள் முன்னர் பெற்றதையும் இழந்துள்ளார்கள், என ஏ.சி.என்.யூ. ஒரு துண்டுப் பிரசுரத்தில் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், ஏ.சி.என்.யூ. உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது அர்ப்பணிக்குமாறு இராஜபக்ஷ அரசாங்கம் விடுத்த கோரிக்கையை ஆதரித்து, சம்பளம் மற்றும் நிலைமைகளுக்கான போராட்டத்தை அடக்கி வந்தன. ஜே.வி.பி, பி.எஸ்.யூ.என்.யூ. ஆகிய இரண்டும், 2005 ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவை ஆதரித்ததோடு, அவரது அரசாங்கம் 2006 நடுப்பகுதியில் நாட்டை மீண்டும் யுத்ததுக்குள் தள்ளிய போதும், ஏ.சி.என்.யூ. மற்றும் பி.எஸ்.யூ.என்.யூ. இரண்டும் பெருங்கூச்சலுடன் ஆதரவு தெரவித்தன.

எதிர்ப்புப் பிரச்சாரத்தை நிறுத்துவதற்கு முன்னதாக ஆனந்த தேரர் எமது வலைத் தளத்துக்குத் தெரிவித்ததாவது: “நாம் முதலில் நாட்டை காக்க வேண்டியிருந்ததால், யுத்தம் முடியும் வரை உறுப்பினர்களை பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டோம். இப்போது எமது உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி பரந்தளவில் காணப்படுகின்றது. நாம் சுகாதார அமைச்சரோடும் அதிகாரிகளோடும் பேச்சுவார்த்தை நடத்தி, ஜனாதிபதிக்கும் எழுதியுள்ள போதும், எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. இப்போது நாம் ஏதாவது செய்ய வேண்டும்.

யுத்தகாலம் பூராவும், பொறுமையாக இருக்குமாறு தொழிலாளர்களுக்கு சாதாரணமாக வேண்டுகோள் விடுப்பதற்கு மாறாக, தொழிற்சங்கங்கள் எந்தவொரு ஐக்கியப்பட்ட போராட்டத்தையும் செயலூக்கத்துடன் கீழறுத்தன. 2006ல் அரசாங்கத் துறை தொழிற்சங்க முன்னணி ஒன்று 65 வீத சம்பள அதிகரிப்புக் கோரி மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்த போது, பீ.எஸ்.யூ.என்.யூ. மற்றும் ஏ.சீ.என்.யூ. அந்த நடவடிக்கையை எதிர்த்தன. ஆனபோதிலும், உறுப்பினர்கள் தொழிற்சங்கத் தலைவர்களை மீறி அதில் பங்குபற்றினர்.

யுத்தம் முடிவடைந்து ஒரு வருடத்துக்கும் மேல் கடந்துள்ள நிலையில், அரசாங்கம் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதலை உக்கிரப்படுத்தியுள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண், 2006ல் 140.8 வீதத்தில் இருந்து, 2009ல் 206.8 வரை அதிகரித்துள்ளது. மேலும் வாழ்க்கைச் செலவு கொடுப்பணவையும் 2006ல் நிறுத்திவிட்டது. அந்த ஆண்டு, மாத சம்பளத்தில் 1,759 ரூபா (15.50 அமெரிக்க டொலர்) அதிகரிப்பை தாதிமார் பெற்ற போதிலும், ஏனைய சுகாதார ஊழியர்கள் 1,000 ரூபா சராசரி அதிகரிப்பையே பெற்றனர். அதில் இருந்து ஊதியம் அதிகரிக்கப்படவே இல்லை.

இன்னுமொரு தொழிற்சங்கமான, அரசாங்க தாதி அலுவலர் சம்மேளனம் (ஜி.என்.ஓ.ஏ.) தனியான நிலைப்பாடொன்றை எடுத்து, ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இராஜபக்ஷ போலியாக வாக்குறுதியளித்த 2,500 ரூபா மாத சம்பள அதிகரிப்பை கோரி பொதுத் துறை தொழிற்சங்க முன்னணி மேற்கொண்ட மனுவில் கைச்சாத்திடும் பிரச்சாரத்துடன் இணைந்துகொண்டது. எவ்வாறெனினும், இந்த கோரிக்கையை நிறைவேற்றும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்பதை கடந்தவார வரவுசெலவுத் திட்டம் வெளிப்படுத்திவிட்டது.

கடந்த காலத்தில், ஏனைய தொழிற்சங்கங்களில் இருந்து வேறுபட்டிருப்பதாக காட்டிக்கொண்ட ஜி.என்.ஓ.ஏ. யுத்தத்தை எதிர்ப்பதாக கூறிக்கொண்டது. அது சுகாதார ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிலைமைகள் சம்பந்தமாக பல போராட்டங்களுக்கு அழைப்புவிடுத்த போதிலும், அரசாங்கத்துடன் எந்தவொரு மோதலையும் தவிர்த்துக்கொண்டது.

அரசாங்கத்தின் தற்போதைய சம்பள அதிகரிப்பு நிறுத்தமானது பிரமாண்டமான பொதுக் கடன் மற்றும் திறைசேரி பற்றாக்குறையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடி கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெற நெருக்கியது. வரவு செலவுத் திட்டத்தில், பற்றாக்குறையை மொத்த தேசிய உற்பத்தியில் கிட்டத்தட்ட 2 வீதம் வரை குறைப்பதன் மூலம் சர்வதேச நாணய நிதிய கடன் நிபந்தனைகளை நிறைவேற்ற அரசாங்கம் உறுதிகொண்டுள்ளது.

பூகோள பொருளாதார நெருக்கடியின் புதிய கட்டத்தின் பாகமாக, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசாங்கங்கள் அமுல்படுத்தும் சிக்கன நடவடிக்கைகளின் பாகமே இத்தகைய நடவடிக்கைகளாகும். இராஜபக்ஷ அரசாங்கம் ஏற்கனவே சுகாதாரம், கல்வி மற்றும் ஏனைய நலன்புரி திட்டங்களுக்கான செலவுகளை வெட்டித்தள்ள தொடங்கியுள்ளது. 2009ல் அது சுகாதாரத்துக்கான முழுச் செலவில் ஆறு பில்லியன் ரூபாவை வெட்டிக் குறைத்தது. 2008ல் 619 ஆக இருந்த அரசாங்க ஆஸ்பத்திரிகளின் எண்ணிக்கை 2009ல் 555 ஆக குறைக்கப்பட்டது.

ஆழமான வெட்டுக்களை திணிப்பதற்காக, அரசாங்கம் தொழிற்சங்கங்களின் சேவைகளை பட்டியலிடுகின்றது. பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம, வரவுசெலவுத் திட்ட உரையை ஆற்றும் போது, எதிர்கால சம்பள கட்டமைப்பை வரைய தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இதே போல், சுகாதார அமைச்சர் மைத்ரிபால சிறிசேனவும், சுகாதார சேவையை கொண்டு நடத்துவதற்கான ஒரு தொழிற்சங்க ஆலோசனை குழுவொன்றை அமைப்பது பற்றி முன்னறிவித்தார்.

தாதி ஒருவர் பேசும் போது, “ராக்கட் வேகத்தில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவை எவராலும் தாங்கிக்கொள்ள முடியாது. யுத்தத்தின் போது யுத்தம் முடியும் வரை பொறுமையாக இருக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டது. இப்போது அரசாங்கம் பொருளாதார யுத்தம் முடியும் வரை பொறுமையாக இருக்குமாறு கூறுகின்றது. இதற்குமேலும் எங்களால் பொறுமையாக இருக்க முடியாது. ஆனால் இந்தச் சுமைகளுக்கு எதிராக நாம் எப்படி போராடுவது? எங்களால் தொழிற்சங்கம் எதையும் நம்ப முடியாது. நான் ஒரு சங்கத்தில் இருந்து விலகி இன்னொன்று போராடக் கூடியது என்று எண்ணி அதில் இணைந்துகொண்டேன். ஆனால் அவர்களுக்குள் வேறுபாடு இல்லை என்பதை நிரூபித்துவிட்டனர். தாதிமார் மட்டுமல்ல, சகல அரசாங்க துறை ஊழியர்களும் அரசாங்கத்தின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் அதிருப்தியடைந்துள்ளனர்,” என்றார்.

தாதிமாரும் ஏனைய சுகாதார ஊழியர்களும் சகல தொழிலாளர்களுடன் சேர்ந்து அரசாங்கத்துக்கும் அதன் தொழிற்சங்க கருவிகளுக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை எதிர்கொள்கின்றனர். முதல் நடவடிக்கையாக, ஆஸ்பத்திரிகள், மருத்துவ நிலையங்கள் மற்றும் வேலைத் தளங்களிலும் உள்ள தொழிலாளர்கள், தொழிற்சங்களில் இருந்து சுயாதீனமாக தமது சொந்த நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புவதோடு பிரச்சாரம் ஒன்றைத் திட்டமிடவும் தமது சொந்த கோரிக்கைகளை வகுக்கவும் ஒன்றிணைய வேண்டும். அத்தகைய ஒரு சுயாதீனமான இயக்கத்தால் மட்டுமே, தனியார் இலாபத்துக்காக அன்றி மனிதத் தேவைகளின் அடிப்படையில் சமுதாயத்தை மறு ஒழுங்கு செய்யும் தொழிலாளர் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் இலக்கைக் கொண்ட சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் முன்செல்ல முடியும்.