World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

SPD, Greens, Left Party groomed for new role in German politics

சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைவாதிகள், இடது கட்சி ஜேர்மன் அரசியலில் புதிய பங்கு வகிக்க தயார்செய்கின்றன

Ulrich Rippert
9 July 2010

Back to screen version

வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (NRW) மாநிலத்தில் சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சியின் சிறுபான்மை அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளமை ஜேர்மனிய அரசியலில் மத்திய ஆட்சி மட்டத்தில் பெரும் அரசியல் தாக்கங்களை கொண்டுள்ளது.

பல மாதங்களாக கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) மற்றும் தாரளவாத ஜனநாயகக் கட்சி (FDP) உள்ளடங்கிய கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU) தலைமையிலான பேர்லின் கூட்டாட்சி அரசாங்கத்தின்மீது செய்தி ஊடகக் குறைகூறல் பெருகி வருகிறது.

வணிகச் செய்தித்தாட்கள், குறிப்பாக வடக்குரைன் வெஸ்ட்பாலியா மாநிலத் தலைநகரான டுஸ்ஸல்டோர்ப் நகரில் வெளியிடப்படும் Handelsblatt, Frankfurther Allegemeine Zeigung, Der Spiegel ஆகியவை சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுக்கு எதிராக கணைகளை விடுத்த வண்ணம் உள்ளன.

ஆளும் உயரடுக்கின் சில பிரிவுகள் மேர்க்கெல் அரசாங்கம் வங்கிகளும் பெருவணிகமும் கோரும் கடும்சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்த இயலாமல் வலுவற்று உள்ளது என்று நம்புகின்றன. நடவடிக்கைகள் கூட்டணிப் பங்காளிகளிடம் உள்பூசல்கள் இருப்பதால் ஒத்தி வைக்கப்படுகின்றன. மேர்க்கெல்மீது பலவீனமான தலைமைக்காக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கூட்டாட்சி அரசாங்கம் “பொருளாதாரத்திற்கு இன்றியமையாத சீர்திருத்தங்களைச்” செய்வதற்கு முடியாமல் உள்ளது (Handelsblatt): மேலும் செய்தி ஊடகத் திறனாய்வாளர்கள் கருத்துப்படி தன் வலுவற்றை தன்மையை மூடிமறைக்கும் வகையில் கடுமையான சமூக நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அறிவித்து, தேவையில்லாமல் எதிர்ப்புக்களை தூண்டுகிறது.

மேர்க்கெலைக் குறைகூறும் இதே சேய்தி ஊடகங்கள், எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் கூடுதலாக பசுமைவாதிகளுக்கு ஆதரவாகப் பேசுகின்றன.

சமீபத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட வடக்குரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் அமைக்கப்படவுள்ள சமூக ஜனநாயக கட்சி-பசுமைக்கட்சி சிறுபான்மை அரசாங்கம் மத்திய அளவிலும் அரசாங்க மாற்றம் பற்றிய திசையை பிரதிபலிக்கும் கட்டமாகும். இதில் ஒன்று அல்லது இரண்டு எதிர்க்கட்சிகளுக்கும் தொடர்பிருக்கலாம்.

வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் அதிகார மாற்றத்தின் விளைவாக மேர்க்கெல் அரசாங்கம் பாராளுமன்றத்தின் மேல் பிரிவில் அதன் பெரும்பான்மையை இழந்துவிட்டது; இப்பொழுது அது எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன்தான் சட்டங்களை இயற்ற முடியும். சமூக ஜனநாயக கட்சியின் ஹனலோர கிராவ்ட் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அடுத்த வாரம் நடக்க இருக்கும் தேர்தல் Frankfurter Rundschau பத்திரிகையினால் “சமூக ஜனநாயக கட்சி-பசுமைக் கட்சி எதிர்காலத்திற்கான உதயம்” என்று வரவேற்கப்பட்டுள்ளது.

சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சி இரண்டுமே முன்பு வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவிலும் மத்திய மட்டத்திலும் அரசாங்கங்களை அமைத்துள்ளன. இப்பொழுது இந்தப் புதிய “சிவப்பு-பச்சை” கூட்டணி வெஸ்ட்பாலியாவில் புதிதாக இருப்பது இடது கட்சியையும் ஒரு பெரிய மேற்கு ஜேர்மன் அரசாங்கத்தின் முக்கிய காரணியாக சேர்த்திருப்பதுதான்.

டுஸ்ஸல்டோர்பில் உள்ள சமூக ஜனநாயக கட்சி-பசுமைக் கட்சிக் கூட்டணி இந்த இலையுதிர்காலத்தில் மாநில வரவு-செலவுத் திட்டத்தை இயற்றத் தேவைப்படும் வாக்கு எண்ணிக்கையில் ஒன்றைக் குறைவாகக் கொண்டிருக்கின்றது. அதற்கு தேவையான வாக்கை CDU அல்லது FDP யில் இருந்து பெறுவது கடினமாகும். இக்கூட்டணி இடது கட்சியை அந்த வாக்கைக் கொடுக்க நம்பியிருக்க வேண்டும்; அதையொட்டித்தான் சமூக ஜனநாயக கட்சி-பசுமைவாதிகள் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் பதவியில் இருக்க முடியும். தன்னுடைய பங்கிற்கு இடதுகட்சி தன் விசுவாசமான ஆதரவைத் தெரிவிக்க விரைந்துள்ளது.

கொலோன் நகரில் உள்ள Stadt-Anzeiger பத்திரிகைக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் இடதுகட்சித் தலைவர் கெஸீன லொட்ஸ் புதனன்று கூறினார்: “ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் ருட்கர்ஸை [வெளியேறும் CDU பிரதமர்] ஐ அகற்றுவோம் என்று கூறிவந்தோம்; கொள்கை மாற்றத்தை விரும்புகிறோம். திருமதி, கிராவ்ட் பதவியை எடுத்துக் கொள்ளுவதை நாங்கள் தடுக்க மாட்டோம்.”

இடது கட்சி இவ்விடயத்தில் “முற்றிலும் நம்பிக்கைக்கு உரியது” என்று கெஸீன லொட்ஸ் தொடர்ந்து கூறி, முக்கிய பிரச்சினைகளில் “80 சதவிகித உடன்பாடு இருப்பதாகவும்” மற்றவை பற்றி பேச்சுக்களை நடத்த விருப்பம் உடையது என்றும் கூறினார்.

வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் புதிய அரசாங்கம் அமைப்பதற்கும் 18 மாதங்கள் முன்பு ஹெஸ்ஸ மாநிலத்தில் அமைக்கப்பட்ட நிலைமைக்கும் இடையே பாரிய வேறுபாடு உள்ளது. 2008 ஹெஸ்ஸ மாநிலத் தேர்தலுக்குப் பின்னர் சமூக ஜனநாயகக் கட்சியின் பிராந்தியத் தலைவர் இடது கட்சியுடன் ஒரு கூட்டணி அரசாங்கம் அமைக்க முயன்றார். ஆனால் செய்தி ஊடகம், மத்திய சமூக ஜனநாயகக் கட்சி, அவருடைய பாராளுமன்றப் பிரிவிலேயே உள்ள சமூக ஜனநாயகக் கட்சிக்குள் உள்ள வலதுசாரி பிரிவினரால் அம்முயற்சி முறியடிக்கப்பட்டது.

இப்பொழுது அனைத்தும் மாறிவிட்டன. ஆரம்பத்தில் முன்பு வணிக ஆலோசகராக செயல்பட்டு, சமூக ஜனநாயக கட்சி வலதுசாரி பிரிவிற்கு மிகநெருக்கமாக இருந்த ஹனலோர கிராவ்ட் இடது கட்சியுடன் ஒத்துழைப்பு பற்றி தன்னுடைய எதிர்ப்பை ஒன்றும் இரகசியமாக வைத்திருக்கவில்லை. சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் சிக்மார் காப்பிரியேல் மற்றும் செய்தி ஊடகத்தின் பெரும்பகுதி அழுத்தங்கள்தான் இவ்வம்மையாரை தன் நிலைப்பாட்டை மாற்ற வைத்துள்ளன.

சமூக ஜனநாயக கட்சி மற்றும் செய்தி ஊடகத்தின் பரந்த பிரிவுகளில் இத்தகைய மனமாற்றம் எப்படி விளக்கப்பட முடியும்?

2008 இறுதியில், பொருளாதார நெருக்கடி அப்பொழுதுதான் வெடித்ததுடன், கட்டுப்பாட்டுக்கள் வந்து விடும் எனத் தோன்றியது. அப்பொழுது கூட்டாட்சி அரசாங்கம் CDU, சமூக ஜனநாயகக் கட்சியின் பெரும் கூட்டணியில் இருந்தது. ஆளும் வர்க்கம் அக்கூட்டணி தொடரும் அல்லது அதற்குப்பதிலாக ஒரு CDU-CSU-FDP கூட்டணி வரும் என்று எதிர்பார்த்தது. இடதுகட்சி ஒரு உறுதியற்ற காரணியாகக் கருதப்பட்டது; அரசாங்கத்தில் அதன் தொடர்பு தீமை பயக்கும், தேவையற்றது என்று கருதப்பட்டது.

ஆனால் 15 மாதங்களுக்குப் பின்னர் பொருளாதார நெருக்கடியின் முழுப்பாதிப்பு உணரப்பட்டுள்ளது. ஆளும் வர்க்கம் எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கம் நெருக்கடிக்கான விலையை பாரிய சலுகைக் குறைப்புக்கள் மூலம் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளது. இதனால் போருக்குப் பிந்தைய சமூக நலன்புரி அரசு அழிக்கப்படும். இப்பொழுதுள்ள கூட்டணி முதலாளித்துவத்தின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்துள்ளது. அதில் உட்பூசல்கள் நிறைந்துள்ளன. இது தனக்கு ஆதரவானோருக்கு சார்பான அரசியலை நடத்தி மக்களிடம் இருந்து பெருகிய எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது.

இச்சூழ்நிலையில், இடது கட்சிக்கு சமூக ஜனநாயக கட்சி-பசுமைக் கட்சி அரசாங்கத்திற்கு ஒரு போலி இடதுதிரையை கொடுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தன் பங்கிற்கு இக்கூட்டணி அதன் பணிகளை செய்யும் என்பது பற்றிச் சந்தேகம் எதுவும் இல்லை.

வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் உள்ள “சிகப்பு-பச்சை” அரசாங்கம், இடது கட்சியின் ஆதரவுடன், மிக அதிக உள் ஐக்கியத்தை காட்டி தொழிற்சங்கங்களுடன் அது கொண்டுள்ள நெருக்கமான உறவுகளைப் பயன்படுத்தி இன்னும் திறமையுடன், இரக்கமின்றி தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக தற்பொழுதைய மத்திய கூட்டணி அரசு செயல்பட்டு வருவதைவிட நடந்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜேர்மனிய ஆளும் உயரடுக்கை நடத்துபவர்கள் கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் சமூக ஜனநாயக அரசாங்கங்கள், தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்துகின்றன என்பதை நன்கு அறிவர்.

வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவின் புதிய அரசாங்கம் 1998-2005 பதவியில் இருந்த ஹெகார்ட் ஷ்ரோடர் தலைமையிலான சமூக ஜனநாயக கட்சி- பசுமைக் கூட்டணியில் இருந்தும் பேர்லின் செனட்டில் சமூக ஜனநாயக கட்சி-பசுமைக்கட்சி-இடது கட்சி ஆகியவற்றின் கிளவுஸ் வோவரைட் தலைமையிலான ஆட்சியில் இருந்தும் கருத்துக்களை எடுத்துக் கொள்ளும். இரண்டிலும் சமூகநலத் திட்டங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றின் மீது மிருகத்தனமான தாக்குதல்கள் முதலாளித்துவத்தின் “இடது” கட்சிகளால் நடத்தப்பட்டன.

கடந்த ஆண்டு இறுதியில் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவின் அரசாங்கக் கடன் €122.1 பில்லியன் என்று இருந்தது. அது இப்பொழுது இந்த ஆண்டு €129.1 பில்லியன் என உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பொழுது €4.6 பில்லியனாக உள்ள வங்கிகளுக்குக் கொடுக்கப்படும் வட்டிப் பணமும் அதிகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமூகநலச் செலவுகளில் பெரும் வெட்டுக்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகள் அரசாங்கத்திற்கு வரும் வாய்ப்பை பாதிக்காதவிதத்தில் இந்த இலையுதிர்காலம் வரை மோசமாக வெட்டுக்களடங்கிய வரவு-செலவுத் திட்ட பேச்சுக்களை ஒத்திவைத்துள்ளன. தொழிற்சங்கங்கள் மற்றும் சமூகநல அமைப்புக்களின் ஆதரவைப் பெறுவதற்காகவே கூட்டணி உடன்பாட்டில் கல்விக் கட்டணங்கள் அகற்றப்படுதல், பிள்ளைகளுக்கான பகல் பாதுகாப்பு நிலையங்கள் விரிவாக்கம் என்பன உறுதியளிக்கப்பட்டன. ஆனால் இலையுதிர்காலம் வந்தபின் அறிவிக்கப்பட உள்ள சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த அவற்றின் ஆதரவு தேவை. கூட்டணி உடன்பாடு அறிவிக்கப்பட்ட உடனேயே, IG Metall தொழிற்சங்கத்தின் மாவட்ட இயக்குனர் ஒலிவர் பேர்க்ஹார்ட் அவருடைய தொழிற்சங்கம் புதிய அரசாங்கத்திற்கு அதன் முழு ஆதரவு மற்றும் ஒத்துழைப்பைக் கொடுக்கும் என்று அறிவித்தார்.

மத்திய ஆட்சி மட்டத்தில் அரசியல் மறுஒழுங்கமைப்பி்ற்கான பரிசோதனை ஓட்டம் போல் உள்ள இந்த நிலையில், இடது கட்சி தனது நம்பகத்தன்மை மற்றும் முதலாளித்துவ ஆட்சிக்கு முக்கிய தூண் போல் பணிபுரிய விருப்பம் கொண்டதை நிரூபிக்க வேண்டும்.

இடது கட்சியை உள்ளடக்கியதோ அல்லது அதன் ஆதரவைப் பெற்ற ஒரு சமூக ஜனநாயக கட்சி-பசுமைக் கட்சி தேசிய அரசாங்கம் ஒடுக்குமுறை ஆட்சிமுறைகளை அறிமுகப்படுத்தும் திறனைக் கொண்டது. அத்தகைய அரசாங்கம் அதுவோ அல்லது தொழிற்சங்கங்களோ கட்டுப்படுத்த முடியாத சமூக எதிர்ப்பை எதிர்கொள்வதற்கு மிருகத்தன நடவடிக்கைகளைப் பயன்படுத்த தயங்காது.

1930 களில் ஸ்பெயினிலும், பிரான்ஸிலும் இருந்த மக்கள் முன்னணி அரசாங்கங்கள் போன்றவை பற்றிய கடந்த கால காட்சி “இடது” அரசாங்கங்கள் என்று அழைக்கப்பட்டவை சமூக எதிர்ப்பை அடக்கி, வலதுசாரி மற்றும் பாசிச ஆட்சிகள் வருவதற்குப் பாதை அமைத்ததை எடுத்துக்காட்டுகின்றன. அத்தகைய போக்கின் ஆபத்து சமீபத்திய ஹங்கேரி, நெதர்லாந்து நிகழ்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளிலும் சமூக ஜனநாயகக் கட்சிகள் சமூகச் சரிவின் பேரழிவை மேற்பார்வையிட்டு தீவிர வலதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு வலுப்பெறவும் உதவின.

சமூக ஜனநாயக கட்சி-பசுமைக்கட்சி-இடதுகட்சி அரசாங்கம் தற்போதைய மத்திய கூட்டணி அரசாங்கத்தை விட ”குறைந்த தீமையாக” இருக்கும் என்று ஒப்பிடுவது தவறானதாகும். தொழிலாள வர்க்கம் இது கட்சியின் சந்தர்ப்பவாதக் கொள்கைகளை நிராகரித்து, சுயாதீன அரசியல் சக்தியாக தலையிடவேண்டும். இதற்கு முதலாளித்துவத்தை எதிர்த்து, பிரச்சினைகளை அவற்றின் வேர்களில் கையாளும் ஒரு புதிய கட்சியாக சோசலிச சமத்துவ கட்சியை (Partei fur Soziale Gleichheit) கட்டமைக்கப்படுவது முக்கியமாகும்.