WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
Censorship and cover-up in the Gulf oil disaster
வளைகுடா எண்ணெய்க் கசிவுப் பேரழிவில் தணிக்கைகளும், மூடிமறைத்தலும்
Tom Eley
6 July 2010
Use
this version to print | Send
feedback
BP எண்ணெய்க் கசிவுப் பேரழிவு பற்றி தன் மூடிமறைத்தலை ஒபாமா நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. ஜூலை 1ம் திகதி அது பொதுமக்களும் செய்தி ஊடகமும் கடலோரப் பாதுகாப்புப் படையின் அனுமதியின்றி தூய்மை நடக்கும் இடங்களுக்கு 65 அடிக்குள் வரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்புத் தொழிலாளர்களைக் பாதுகாப்பதற்கு என்று இடப்பட்டுள்ள இந்த உத்தரவின் வெளிப்படையான நோக்கம் உண்மையில் BP எண்ணெய் வெடிப்பினால் ஏற்பட்டுள்ள பேரழிவை மக்கள் பார்க்காமல் தடுப்பதுதான்.
இந்தத் தடை உத்தரவு கடலோரப் பாதுகாப்புப் பிரிவின் அனுமதி பெறாதவர்கள் “எண்ணெய் வெளியேற்றச் செயல்களுக்கு அருகே, தள மேடை அல்லது எண்ணைக் கசிவை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு 20 மீட்டர் தூரத்திற்குள் (65 அடிக்குள்) வரக்கூடாது, வந்தால் சட்டப்படி அபராதம் விதிக்கப்படும்” என்று கூறுகிறது. “எண்ணெய்க் கசிவை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள்” என்பது முழு பாதிப்பிற்குட்பட்ட பகுதிகளையும் என்று குறிக்கலாம், இது மிசிசிபி டெல்டாவில் இருந்து புளோரிடா பான்ஹாண்டில் வரை படர்ந்துள்ளது.
“வேண்டுமென்றே” வெள்ளை மாளிகை உத்தரவை மீறும் செய்தியாளர்கள் D வகுப்புக் குற்றவாளிகள் போல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 40,000 டொலர் அபராதமும் விதிக்கப்படலாம். தடைக்கு விதிவிலக்குகள் கடலோரப் பாதுகாப்புப் பிரிவின் நியூ ஓர்லீயன்ஸ் துறைமுகத்தின் காப்டனால் வழக்கின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.
இந்த உத்தரவைக் பாதுகாக்கும் வகையில் கடலோரப் பாதுகாப்புத் தளபதி தாட் ஆலென் இந்த நடவடிக்கைகள் தூய்மைப்படுத்தும் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக என்றார். ஆனால் “அனுமதியற்ற நபர்களால்” பாதுகாப்பிற்கு ஊறு ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியைக் கூட அவரால் மேற்கோளிட முடியவில்லை.
வெள்ளை மாளிகை உண்மையில் கொண்டுள்ள கவலை தூய்மைப்படுத்தும் தொழிலாளர்கள் BP சுமத்தியுள்ள தடை உத்தரவை மீறி, தாங்கள் பணிபுரியும் ஆபத்தான நிலைமைகள் பற்றியும், சுற்றுச் சூழல் பேரழவின் உண்மைத் தன்மை பற்றியும் ஏதேனும் வெளிப்படுத்தி விடுவார்களோ என்பதுதான். இத்தொழிலாளர்களில் தெரியப்படாத எண்ணிக்கையில் பலர்—நூற்றுக்கணக்கில், ஏன் ஆயிரக்கணக்கில்கூட—எண்ணெய் மற்றும் நச்சுப் பொருட்களின் பாதிப்பினால் நோயுற்றுள்ளனர்—ஒருக்கால் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நோய்களையும் எதிர்கொள்ளலாம்.
இப்படி செய்தி ஊடகத்தை நெரிக்கும் புதிய முயற்சி மூன்று வாரங்களுக்கு முன்பு ஒபாமாவின் ஆலோசகர் டேவிட் ஆக்சில்ரோட் வளைகுடாப் பகுதியில் “தொற்று நோய்த் தளம்” உள்ளது என்று கூறியதை அடுத்து எதிர்கொள்ளும் நிர்வாகத்தின் தொடர்ந்த செயற்பாடாக இருக்கலாம். ஜூன் 11 முதல் ஜூன் 17 வரை தொடர்ச்சியான பொது உறவு நிகழ்வுகளில் ஜனாதிபதி ஒபாமா இரண்டு நாட்கள் வளைகுடாப் பகுதிக்குச் சென்றிருந்ததுடன், வெடிப்பு பற்றிய உரையை தேசியத் தொலைக்காட்சியில் ஓவல் அலுவலகத்தில் இருந்து நடத்தி, வெள்ளை மாளிகையில் BP யின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஸ்டூவர்ட் மற்றும் தலைவர் கார்ல்-ஹென்ரிக் ஸ்வான்பெர்க்கையும் சந்தித்திருந்தார்.
அக்கூட்டத்தை அடுத்து BP 20 பில்லியன் டொலர் இழப்பீட்டு நிதிக்குப் பணம் கொடுக்கும், இது “சுயாதீனமாக” நிர்வகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது எண்ணெய் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட பெரும் சலுகை என்றும் BP செயல்களின் விளைவாக வாழ்க்கை முறையே அழிக்கப்பட்டுவிட்ட ஆயிரக்கணக்கான வளைகுடா வாழ்மக்களுக்கு ஒரு பெரிய வரம் என்றும் ஒபாமாவால் கூறப்பட்டது.
உண்மையில் இந்த உடன்பாடு BP க்குத்தான் ஒரு வரம். அதன் பெரும் பொறுப்புக்களுக்கு இது உச்ச வரம்பு கட்டுகிறது. இந்தப் பேரழவின் மொத்த இழப்புக்கள் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் என்றுதான் இருக்கும். இது நிறுவனத்தை சட்ட வழக்குகள், இழப்பீட்டுக் கோரிக்கைகளில் இருந்து பாதுகாக்கும்.
“BP யில் முதலீடு செய்துள்ளவர்கள் வழக்காடு முறைக்குப் பதிலாக வேறு ஒரு மாற்றீடு வந்துள்ளது என்பதை அறியவேண்டும்” என்று Independent Claims Facility நிர்வாகியான கென்னெத் பீன்பெர்க் CNBC யிடம் கூறினார். “நீங்கள் ஒரு முதலீட்டாளர் என்றால் இது உண்மையில் உதவும் அடையாளம் ஆகும்.”
ஏற்கனவே பீன்பெர்க் வெடிப்பினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு இந்த நிதி உதவாது என்று அறிவித்துவிட்டார்—அதாவது சுற்றுலாத் தொழிலில் இருப்பவர்கள், ரொக்க அடிப்படையில் செயல்படும் மீனவர்கள், மற்றும் சொத்து மதிப்புக்கள் சரிந்துவிட்ட வளைகுடாக் கடலோரப் பகுதி வீட்டு உரிமையாளர்கள் போன்றோருக்கு.
இவ்விதத்தில் ஜூன் மாத நடுவில் கவனமாகத் தயாரிக்கப்பட்டு அளிக்கப்பட்ட தொடர் நிகழ்வுகள் BP க்கு எதிரான அரசாங்க நோக்கத்தை நிறுத்தும் ஒரு அடையாளம் ஆகும். மேலும் பேரழிவு பற்றி செய்தி ஊடகம் அளிக்கும் தகவல்கள் குறைக்கப்படவும் வகை செய்யும். இதன் விளைவு அமெரிக்க மக்கள் வளைகுடா நச்சுப்படுத்தப்பட்டது பற்றி கூறப்பட்டது, அதன் விளைவுகள் பற்றியும் கூறப்பட்டது. இவை BP ஆகஸ்ட் மாதம் அதன் மாற்றுக் கிணறுகள் வேலையை முடிக்கும் வரையில் தொடரும்—அல்லது இந்த நிலை பழகிவிடும்!
வளைகுடா நெருக்கடியைப் பற்றிய தணிக்கை நடவடிக்கை இந்த மூலோபாயத்துடன் இயைந்து, ஏப்ரல் 20 டீப்வாட்டர் ஹொரைசன் எண்ணெய் முறை வெடித்து 11 பேரைக் கொன்றது பற்றிய ஒபாமா நிர்வாகத்தின் கொள்கையுடனும் இயைந்துள்ளது. BP மற்றும் வெள்ளை மாளிகையின் முக்கிய கவலை மெக்சிகோ வளைகுடாவின் பரந்த பகுதிகள் மற்றும் குறைந்தபட்சம் நான்கு அமெரிக்க மாநிலங்களின் கடற்கரைகளிலும் நல்ல நிலங்களிலும் மாசு படர்ந்துள்ளதன் தீவிரத்தன்மையை மூடிமறைத்தல் என்று உள்ளது.
இப்பொழுது அபாயத்தில் இருப்பது கடலில், கரைகளில், வனவிலங்குகளுக்கு என்ன நேருகிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை. இவை அனைத்தும் BP யின் சொந்தச் சொத்துப் போல் கருதப்படுகின்றன. சேதத்தின் பரந்த தன்மை பற்றி ஒரு சுயாதீன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டால் ஒழிய போதுமான விடையிறுப்பைச் செயல்படுத்துவது இயலாதது ஆகும்.
செய்தியாளர்களும் குடிமக்களும் கடற்கரைகளில் இருந்து தடுத்து வராமல் இருக்கவும், நிலம், வான், கடல் வழியே கசிவு பற்றி காணாமல் தடைசெய்யவும் BP , மற்றும் கடலோரப் பாதுகாப்புப் பிரிவு ஆகியவை மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றி கணக்கிலடங்காத் தகவல்கள் வந்துள்ளன. ஜூன் நடுவில், கசிவுப் பகுதியில் 3,000 அடிக்குக் கீழே விமானங்கள், ஹெலிகாப்டர்கள் 1,500 அடிக்குக் கீழே பறப்பது வெள்ளை மாளிகையால் தடை செய்யப்பட்டது. சிறப்பு விதிவிலக்குகள் FAA எனப்படும் கூட்டாட்சி வான்வழித்துறை நிர்வாகத்தால் மட்டுமே கொடுக்கப்படும்.
CNN உடைய ஆண்டர்சன் கூப்பர் கடந்த வாரம் செய்தியாளர்கள் பலமுறையும் லூயிசியானாவில் உள்ள வெனிஸ் அரசாங்க நகரும் மருத்துவமனைக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இங்குத்தான் தூய்மைப்படுத்தும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை நடைபெறுகிறது.
BP யும் அதற்கு பொருட்களை அளிக்கும் நால்கோவும் Corexit என்னும் கலைப்பானின் வேதியியல் கூறுபாடுகளைப் பற்றி விஞ்ஞானிகளுக்குக் கூடத் தெரிவிக்க மறுத்துவிட்டன. இக்கலவைதான் வளைகுடாப்பகுதியில் எண்ணெயை முறிக்க நூறாயிரக்கணக்கான கலன்கள் ஊற்றப்படுகின்றன. அது ஒரு வணிக இரகசியம் என்று அவை கூறுகின்றன. EPA எனப்படும் சற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் ஒரு மாதத்திற்கு முந்தைய இன்னும் சோதனை முடியும் வரை Corexit பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்ற ஆணையை மீறியது. இவ்விஷயத்தைத் தொடரவேண்டாம் என்று ஒபாமா முடிவெடுத்து விட்டார்.
கிட்டத்தட்ட இரு மாதங்களாக BP யும் அரசாங்கமும் சுவரை எழுப்பியிருக்கும் தன்மையினால் வெடிப்பின் அளவு எவ்வளவு பெரிது என்று கூட மதிப்பிடுவது கடினமாகியுள்ளது. தொடக்கத்தில் இருந்தே BP தான் தூய்மைப்படுத்துவதற்கான “பொறுப்பைக் கொண்டுள்ளது” என்று கூறிய நிர்வாகம் எண்ணெய்ப் பெருநிறுவனத்திற்கு உடந்தையாக இருந்து வளைகுடா மேற்பகுதிக்கு ஒரு மைல் கீழிருந்து பெருகி வரும் எண்ணெய்க் கசிவு பற்றிய சுயாதீனப் பகுப்பாய்வைத் தடுத்துள்ளது. அறிவியல் வல்லுனர்கள் தொடர்ந்து குறைகூறிய பின்னர்தான் நிர்வாகமானது கடல் கீழ்பகுதியில் இருந்த வெடித்துவரும் எண்ணெய்க் கசிவு விகிதம் பற்றி உயர்த்திக் கூறியது. எப்படிப் பார்த்தாலும் இது வரலாற்றிலேயே மிகப் பெரிய கசிவு ஆகும்.
இவை அனைத்தும் BP மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் கரங்களில் இருந்து எண்ணெய்ப் பேரழிவை எதிர்கொள்ளுதல் அகற்றப்பட வேண்டிய தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
வளைகுடாப் பேரழிவிற்கு வெகுஜன விடையிறுப்பு தேவையாகும். முதலில் உலகிலுள்ள சிறந்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் வல்லுனர்கள் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டு, அவர்களுக்கு முழு, தடையற்ற பேரழிவு பற்றிய அனைத்துத் தகவல்களும் கிடைப்பது முக்கியமாகும். இதன் பின் நல்ல பயிற்சி பெற்ற, நல்ல உபகரணங்கள் கொண்ட, நல்ல ஊதியம் கொடுக்கப்படும் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவர்கள் பொறுப்பில் விடப்பட வேண்டும்.
இந்தச் செயலுக்குத் தேவையான வளங்களானது BP மற்றும் முழு எண்ணெய்த் தொழிலையும் தேசியமயமாக்கி அவற்றை ஒரு பொதுப் பயன்பாட்டாக சமூகத்தின் முழு நலனுக்காக தொழிலாளர்களால் ஜனநாயக முறைப்படி கட்டுப்படுத்துவதின் மூலம் தான் முடியும்.
இதற்கு, மக்களின் செலவுகளிலும் பூமியின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் இழப்பிலும் அடையக்கூடிய கணக்கிடமுடியாத சொத்துக்களை அடையும் பெருநிறுவனங்கள் மற்றும் நிதியாளர்களின் “உரிமைகள்” என்பவை நிராகரிக்கப்பட்டு, பெருவணிகத்தின் இரு கட்சிகளில் இருந்தும் சுயாதீனமான முறையில் ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் கீழ் தொழிலாள வர்க்கம் பரந்தளவில் அணிதிரட்டப்படுவது அவசியமாகும். |