WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Austerity for workers, tax cuts for business-Europe’s class policy
தொழிலாளர்களுக்கு சிக்கனம், வணிகத்திற்கு வரி குறைப்புக்கள்-ஐரோப்பாவின் வர்க்கக் கொள்கை
Stefan Steinberg
8 July 2010
Use
this version to print | Send
feedback
ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளிவிவர அலுவலமான யூரோஸ்டாட் (Eurostat) கொடுத்துள்ள ஒரு புதிய அறிக்கை 1930களுக்குப் பின்னர் மிகத்தீவிர பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ஐரோப்பிய அராசங்கங்கள் பெருவணிக வரிகளைக் குறைப்பதை தொடர்வதுடன் தொழிலாளர்கள் மீது வரிச்சுமைகளை அதிகரித்துள்ளதை வெளிப்படுத்துகிறது.
ஐரோப்பிய அரசாங்கங்கள் பெருவணிக வரிவிதிப்பை கண்டம் முழுவதும் அதன் 2009 அளவான 23.5 சதவிகிதத்தில் இருந்து 23.2 க்கு விகிதத்திற்கு புதிய மிகக்குறைந்த அளவாக குறைத்துள்ளன என்று யூரோஸ்டாட் கூறுகிறது. இக்குறைப்பு பல ஆண்டுகளாக இருக்கும் போக்கின் தொடர்ச்சி என்றும் வரிக்கொள்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பா முழுவதும் மற்றும் சர்வதேச அளவில் அவை பெயரளவில் “இடது அல்லது கன்சர்வேடிவ் என்று இருந்தாலும் அவ்அரசாங்கங்களால் தொடரப்படும் இரக்கமற்ற வர்க்கக் கொள்கையின் ஒரு வெளிப்பாடுதான். இது தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ முறையின் நெருக்கடிக்கு விலை கொடுக்க வைத்துள்ளது. செல்வம் கீழ்மட்டத்தில் இருந்து பிரித்து மேலே கொடுக்கப்படுவதால் இதன் விளைவு சமூக சமத்துவமின்மையின் மட்டங்கள் அதிகரிப்பதையும் காட்டுகிறது.
பெருவணிகங்கள், வங்கிகள் மற்றும் கொழுத்த பணக்காரர்கள் ஆகிய பிரிவுகள் வரிகள் கொடுப்பதில் இருந்து பெருகிய முறையில் விடுவிக்கப்படுகின்றன. இதையொட்டி வரும் அரசாங்க வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைகள், அரசாங்க மீட்புப் பொதிகள் வங்கிகளுக்கு நூறாயிரக் கணக்கான பில்லியன்கள் மூலம் அதிகமாகின்றன. இப்பொழுது அவற்றை ஈடுகட்டுவதற்கு பெரும்பாலும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்படும் அதிக நுகர்வு வரிகள், மற்றும் மிருகத்தனமான சமூகநலச் செலவுக் குறைப்புக்கள் மற்றும் பொதுத்துறை வேலைகள், ஊதியங்கள் குறைப்புக்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
ஆரம்பத்தில் ஐரோப்பிய ஆணையம் ஒரு பெருநிறுவன வரிவிதிப்பு இலக்கு 45 சதவிதம் என்று கொண்டிருந்தது. இது பின்னர் 1992 இல் 30 சதவிகிதம் என்று கீழ்நோக்கி குறைக்கப்பட்டுவிட்டது.
கடந்த 12 ஆண்டுகளில் ஐரோப்பாவில் பெருநிறுவன வரிவிகிதங்கள் கிட்டத்தட்ட 12 சதவிகிதம் சரிந்துவிட்டன. தற்போதைய 23.2 சதவிகிதம் என்பது ஐரோப்பாவில் சராசரி விகிதம் அமெரிக்காவில் பெயரளவிற்கு உள்ள விகிதத்தைவிட 10 சதவிகிதம் குறைந்தது என்ற பொருளைத் தரும்.
1990களின் நடுவில் இருந்து ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜேர்மனி அதன் பெருநிறுவன வரிவிகிதத்தை அதிர்ச்சிதரும் வகையில் 27 சதவிகிதப் புள்ளிகள் குறைத்துவிட்டது. தனியார் வருமான வரி உயர்விகிதம் 9.5 புள்ளிகள் குறைக்கப்பட்டுவிட்டன. இதே காலத்தில் ஸ்பெயினும், பிரான்ஸும் அவற்றின் மிக உயர்ந்த வருமான வரிவிகிதங்களை கிட்டத்தட்ட 13 சதவிகிதப் புள்ளிகள் குறைத்தன. இத்தாலி அதன் பெருநிறுவன வரிவிதிப்பை 10.8 புள்ளிகள், உயர்மட்ட தனிநபர் வருமானவரி 6.1 புள்ளிகள் என்று குறைத்துவிட்டது.
ஜேர்மனிய வரிவிதிப்புப் போக்கு பற்றி குறிப்பிட்ட ஜேர்மனிய பொருளாதார வல்லுனர்கள் குழு உறுப்பினர் ஒருவரான Peter Bofinger Süddeutsche Zeitung பத்திரிகையில், “1998ல் இருந்த வரிவிகிதங்களைக் கொண்டால் இப்பொழுது ஆண்டு ஒன்றிற்கு 75 பில்லியன் யூரோக்கள் அதிகமாக வருமானம் கிடைக்கும்.” என்றார்.
புதனன்று ஜேர்மன் மந்திரிசபை அடுத்த நான்கு ஆண்டுகளில் நாட்டின் வரவு-செலவுத் திட்டத்தில் இருந்து 81.6 பில்லியன் யூரோக்களைக் குறைப்பதற்கு விவாதித்தது. இத்திட்டங்களில் சமூகநலச் செலவு பிரிவுகளில் பெரும் குறைப்புக்கள் உள்ளன; இதையொட்டி மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களுக்கு பேரழிவு தரும் விளைவுகள் ஏற்படும். அடுத்த நான்கு ஆண்டுகளில் அரசாங்கம் சேமிக்க விரும்பும் தொகை கிட்டத்தட்ட கடந்த இரு தசாப்தங்களாக பெருநிறுவன வரிவிதிப்புக்கள் குறைவினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள ஆண்டு இழப்பிற்கு சமம் ஆகும்.
பாரிஸ் பொருளாதாரப் பயிலகத்தில் பேராசிரியராக உள்ள Thomas Piketty எழுதினார்: “ஐரோப்பாவில் வரி பற்றிய போட்டி உள்ளது. இதன் விளைவு மிக எளிதானது: உற்பத்தியின் அசையும் காரணி, அதாவது மூலதனம் குறைவாகத் தொடர்ந்து வரிவிதிப்பிற்கு உட்படுகிறது. இதன் விளைவு குறைந்த அசையும் தன்மையுடைய காரணியான குறைந்த திறமையுடைய தொழிலாளிக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது.”
இவ்விதத்தில் தொழிலாளருக்கு கூடுதல் வரி என்பது வருமான, நுகர்வு வரிகளில் வாடிக்கையான அதிகரிப்பின் மூலம் ஏற்படுகிறது. யூரோஸ்டாட் அறிக்கைப்படி சராசரி வருமானவரி விகிதங்கள் ஐரோப்பா முழுவதும் 2009ல் இருந்த 37.1 சதவிகிதத்தில் இருந்து 37.5 என்று அதிகரித்துள்ளது. மதிப்புக்கூட்டு வரிகளும் (Vat) சராசரியாக 2009ல் கிட்டத்தட்ட 0.5 சதவிகிதம் உயர்ந்துவிட்டது.
2000ம் ஆண்டில் இருந்து 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 12 தங்கள் பொருட்கள் மீதான வரிகளை உயர்த்தியுள்ளன. மிக அதிக மதிப்புக்கூட்டு வரி (25 சதவிகிதம்) இப்பொழுது ஹங்கேரி, டென்மார்க் மற்றும் ஸ்வீடனில் விதிக்கப்படுகின்றன.
அரசாங்க வரவு-செலவுத் திட்டங்களுக்கு தொழிலாளரால் வளங்கப்படுவது தொடர்ந்து அதிகமாகிக் கொண்டு வருகிறது. தற்பொழுது வருமான வரி அளிப்புக்கள் அனைத்து அரசாங்க வருவாயிலும் 40 சதவிகிதம் என்று உள்ளன. நுகர்வு வரிகள் மற்றொரு 25 சதவிகிதம் என்று உள்ளன. வணிக வரிகளோ அரசாங்க வருவாயில் 15 சதவிகிதம்தான். இதனால் ஏற்படும் தவிர்க்கமுடியாத விளைவு சமத்துவ வளர்ச்சி அதிகரிப்பதுதான்.
கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பிரெஞ்சுப் பொருளாதார வல்லுனராக இருக்கும் Camille Landais பிரான்சில் 1990 களின் கடைசிப் பகுதியில் இருந்து “உயர் வருமானப் பங்குகளில் அதிகரிப்பு” என்று எழுதியுள்ளார்; இதில் வணிகங்களுக்கு வரிக் குறைப்புக்கள் பெரும் பங்கைக் கொண்டுள்ளன.
இந்த நிகழ்வுப்போக்கை சுருக்கிக் கூறுகையில் Landais ஐரோப்பா அமெரிக்காவை விட குறைந்த அளவு சமத்துவ நிலையற்ற தன்மையில் இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். “ஆனால் 1980 களில் இருந்து போக்குகள் அமெரிக்காவுடன் ஒத்து இருக்கின்றன. வரிவிதிப்பு முறைகள் -பலரும் நினைப்பதைவிட சீராக உள்ளது- முடிந்த வரை சீராகத்தான் இருக்கும். அடுத்த 20 ஆண்டுகளில் பிரான்ஸும், ஜேர்மனியும் அமெரிக்காவில் இருப்பதைப் போல் சமத்துவமற்ற நிலையில்தான் இருக்கும் என்று கூறமுடியும்.”
கட்டுரையாளர் Goran Therborn இத்தகைய தீவிர சமூக சமத்துவமற்ற நிலைகள் ஜனநாயகத்துடன் இயைந்து இருக்க முடியாதவை என்று வாதிட்டுள்ளார். அவர் சுட்டிக்காட்டுவதாவது: “உயர்மட்டத்தில் இருப்பவர்கள் வருமானத்திற்கும் சராசரித் தொழிலாளருக்கும் இடையே உள்ள வருமான இடைவெளி இப்பொழுது நவீன காலத்திற்கு முன்பு இருந்ததைவிட அதிகம் ஆகும். 1688ல் ஆங்கில பிரபுக்கள் தொழிலாளர்கள், வெளி வேலையாட்களைவிட கிட்டத்தட்ட 100 மடங்கு அதிக ஆண்டு வருமானம் கொண்டிருந்தனர். குடிசைகளில் உள்ளவர்கள், திவாலானவர்களைவிட 230 மடங்கு அதிகம் கொண்டிருந்தனர். 2007-8 ல் FTSE ன் 100 உயர்மட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் இங்கிலாந்தின் முழுநேர சராசரித் தொழிலாளியின் வருமானத்தைவிட 141 மடங்கு அதிகம் பெற்றனர்; “விற்பனை, வாடிக்கையாளர் சேவைத் தொழிலில் இருப்பவர்களைவிட 236 மடங்கு அதிகம் பெற்றனர்.”
இப்படி பெருவணிகத்திற்கும், செல்வக் கொழிப்புடையவர்களுக்கும் வரிவிதிப்பு வெட்டுக்கள் நடத்தும் பெருங்கூத்து அனைத்து அரசியல் கட்சிகளின் அரசாங்கங்களாலும் செய்யப்படுகிறது; ஆனால் கண்டத்தின் இரு பெரும் பொருளாதாரங்களான ஜேர்மனி, பிரான்ஸ் ஆகியவற்றில் பொதுவாக பெயரளவிற்கு “இடது” என்பவற்றால்தான் இந்த வழிவகை தொடக்கப்பட்டது.
ஜேர்மனியில், வணிகங்கள், வங்கிகள் ஆகியவற்றிற்கு முன்னோடியில்லாத வகையில் கொடுக்கப்படும் சலுகைகள் சமூக ஜனநாயகக் கட்சி கூட்டணி, சான்ஸ்லர் ஹெகார்ட் ஷ்ரோடர் (1998-2005) தலைமையில் கொடுக்கப்பட்டன.
பிரான்சில் பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் தலைமையில் இருந்த சோசலிஸ்ட் அரசாங்கம்தான் (1997-2002) பெருநிறுவன, உயர்வருமானம் பெறுவோருக்கு வரிவிதிப்பு விகிதத்தில் பெரும் குறைப்புக்கான வழிவகைகளை தொடங்கியது. இது பின்னர் வந்த கன்சர்வேட்டிவ் நிர்வாகங்களாலும் தொடரப்பட்டது. இது ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி தலைமையிலான அரசாங்கம் உட்பட அது பொருந்தும்.
இந்த “இடது” என்னும் முதலாளித்துவக் கட்சிகள் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு சற்றும் குறைந்த விரோதப் போக்கை உடையவை அல்ல. இவையும் அவற்றின் கன்சர்வேடிவ் கட்சிகளைப் போலவே நிதிய உயரடுக்கிற்குக் கட்டுப்பட்டு செயல்படுகின்றன.
சமூக சமத்துவமின்மை மோசமான தரங்களுக்கு அதிகரிப்பதும், அதையொட்டி சர்வாதிகார வகை ஆட்சி பற்றிய அச்சுறுத்தல்களுக்கும் ஒரே தீர்வு, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கம் அரசியல் வழியில் சுயாதீனமாக அணிதிரட்டப்பட்டு, வங்கிகள், பெருவணிகங்களின் இலாப நலன்களுக்கு பதிலாக சமூகத் தேவைகளை நிறைவு செய்ய சமுதாயத்தை மறுசீரமைப்பதற்குத் தேவையான அதிகாரத்தை எடுத்துக் கொண்டு செயல்படுத்துவதுதான். |