சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!
|
|
WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The international significance of the political coup in Australia
ஆஸ்திரேலியாவில் அரசியல் சதியின் அனைத்துலக முக்கியத்துவம்
Patrick O'Connor
7 July 2010
Use this version to print | Send
feedback
ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ரூட் கடந்த மாதம் அரசியல் சதியொன்றில் திடீரென வெளியேற்றப்பட்டமை, ஆஸ்திரேலியா ஒரு சமூக ஸ்திரத்தன்மையுடைய மற்றும் அரசியல் அமைதியுடைய நிலப்பரப்பு என்று உள்நாட்டிலும் உலகைச் சுற்றிலும் முன்னிலைப்படுத்தப்பட்ட கட்டுக்கதையை சிதைத்துள்ளது. ஜனநாயக விரோதமான முறையில் ஜூலியா கில்லர்ட் நியமிக்கப்பட்டமை, பூகோள பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்பின் வளர்ச்சிக்கு அறிகுறியாக இருப்பதோடு, ஆளும் தட்டு புதிய ஒடுக்குமுறை ஆட்சி முறையின் பக்கம் திரும்புவது பற்றி தொழிலாள வர்க்கத்துக்கு எச்சரிக்கையும் விடுக்கின்றது.
கில்லர்ட் வெளியேற்றப்பட்ட விதம், ஆஸ்திரேலிய அரசியலில் முன்னொருபோதும் இல்லாததாகும். முன்னர், போட்டியாளர்களுக்கான வெளிப்படையான சவால்கள், பல்வேறு வாதங்களுடன் பகிரங்கமாகவும் திரைக்குப் பின்னாலும் நடக்கும் பல கூட்டங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் (கட்சியின் அனைத்து பாராளுமன்றப் பிரதிநிதிகளுக்கும் அமைக்கப்பட்ட) தேர்தல் குழு கூட்டங்களில் நடத்தப்படும் வாக்கெடுப்புகள் மற்றும் ஒரு பிரதமரில் இருந்து அடுத்தவருக்கு இடையிலான பொதுவில் இருக்கும் நீண்ட பதவிக்கால மாற்றங்கள் போன்றவற்றை சம்பந்தப்படுத்தியே தொழிற் கட்சி அரசாங்கத்துக்குள் தலைமைத்துவ மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். மாறாக, ரூட்டின் அரசியல் வெளியேற்றம், முன்னறிவிப்பு இன்றி, மற்றும் ரூட்டைப் பற்றி எந்தவொரு விடயம் சம்பந்தமாகவும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒரு பகிரங்க விமர்சனத்தைக் கூட முன்வைக்காத நிலையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது. பதிலாக, பெரும் பல்தேசிய சுரங்கத்துறை கூட்டுத்தாபனங்களதும் ஏனைய வர்த்தக மற்றும் நிதி மூலதனத் தட்டினரதும் நேரடி உத்தரவின்படி செயற்படும் ஒரு சில முகமற்ற உட்கட்சிகுழு தலைவர்கள், ஒரு 24 மணிநேர நிகழ்வில் கில்லர்ட்டை சாதாரணமாக நியமித்துள்ளனர்.
கட்சியின் பொது உறுப்பினர்கள் ஒருபுறம் இருக்க தொழிற் கட்சி தேர்வுக் குழு, இந்த முன்னெடுப்பில் எந்தவொரு பாத்திரத்தையும் வகிக்கவில்லை. அரசாங்கத்தின் சகல சக்தியும் படைத்த “நால்வரின் குழு” எனக் கருதப்பட்ட ரூட், கில்லர்ட், மற்றும் பொருளாளர் வைன் ஸ்வான் போன்றோரை சார்ந்த இன்னொருவரான நிதி அமைச்சர் லின்ட்சே டன்னர் கூட, என்ன நடக்கின்றது என்பது பற்றிய எந்தவொரு முன்கூட்டிய அறிவும் இல்லாமல் தொலைக்காட்சியில் பரப்பப்பட்ட தலைமைத்துவ சவாலை பார்த்திருந்தார். அடுத்தநாள் காலை கில்லர்ட் தலைவராக பதவியேற்ற போது, ரூட் உட்பட எவரும் எந்தவொரு எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. ஒரு கட்சி உறுப்பினர் வாக்கெடுப்பு கூட நடத்தப்படவில்லை.
இந்த அசாதாரணமான நிகழ்வுகளுக்கு காரணமான பிரதான காரணிகளில் ஒன்று, ரூட் பிரேரித்திருந்த சொத்து சிறப்பு இலாப வரியை (Resource Super Profits Tax) பன்னாட்டு சுரங்கத்துறை கம்பனிகள் எதிர்த்ததே ஆகும். தொழிற் கட்சி இயக்குனர்கள், நன்கொடை பெறுதல், தனிப்பட்ட உறவுகள் மற்றும் வேலையால் பரிமாற்றங்கள் போன்றவை உட்பட ஆயிரம் நூல்களால் இந்த சொத்து இராட்சதர்களுடன் பிணைக்கப்பட்டுள்ளார்கள். ரூட் வெளியேற்றப்ட்டு ஒரு வாரத்துக்குள் புதிய வரிகளை இரத்துச்செய்ய சுரங்கத்துறை பணமுதலைகள் விதித்த காலவரையறையை அடைந்த கில்லர்ட், பலவித சலுகைகள் ஊடாக பல பில்லியன் டொலர் திடீர் அதிருஷ்டத்தை அவர்களுக்கு பரிசளித்தார்.
இத்தகைய இழிந்த சதித்திட்டங்கள், முதலாளித்துவ ஜனநாயகம் என சொல்லப்படுவதனுள் உண்மையில் அரசியல் அதிகாரம் இருக்கும் இடத்தினை வெளிப்படுத்திக் காட்டுகின்றது. மக்களால், ஜனநாயக முறையிலான தேர்வின் ஊடாக, பதிலளிக்கும் பொறுப்புள்ள பிரதிநிதிகளை தேர்வு செய்யும் அவர்களின் விருப்பத்தை பிரதிநித்துவம் செய்யும் வகையில் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகள் தீர்மானிக்கப்படுவதற்கு மாறாக, தமது கோரிக்கைகளை அமுல்படுத்த ஈவிரக்கமற்று திரைக்குப் பின்னால் செயற்படும் சக்திவாய்ந்த கூட்டுத்தாபன மற்றும் நிதி நலன்களின் பிரதிநிதிகளால் அவை தீர்மானிக்கப்பட்டுள்ளன. ஒரு முறை பிரெடரிக் ஏங்கெல்ஸ் விளக்கியது போல், முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகம் என்ற போலித் தோற்றத்துக்கு பின்னால், அரசின் ஆதரவுடன் “ஆயுததாரிகள் மற்றும் துணைக்கருவிகளை கட்டவிழ்த்துவிடுதல், சிறைச்சாலைகள் மற்றும் சகல வகையிலுமான பலாத்கார நிறுவனங்கள் போன்றவற்றுடன் மூலதனத்தின் சர்வாதிகாரம் நின்றிருக்கின்றது.”
இறுதி ஆய்வுகளில், ஆஸ்திரேலியாவில் அரசியல் சதிப் புரட்சியானது துரிதமாக ஆழமடைந்துவரும் பூகோள முதலாளித்துவ நெருக்கடியினால் இயக்கப்பட்டதாகும்.
ஒரு குறைந்த கூட்டுத்தாபன வரியின் ஊடாக ஏனைய வர்த்தக மற்றும் நிதி தட்டுக்கள் நன்மையடையவும் மற்றும் இராட்சதர்களின் ஓய்வூதிய நிதியை ஊதிப் பெருகச் செய்யவும் இந்த சுரங்கத்துறை வரியின் கீழ் திட்டமிட்டிருந்த அதே வேளை, ரூட் அவற்றை சுரங்கத் தொழிலாளர்களின் பிரச்சாரத்துக்கு எதிராகவும் அவற்றை தனது அரசாங்கத்துக்குப் பின்னாலும் அணிதிரட்டிக்கொள்ள முடியாதவர் என்பதை ஒப்புவித்துள்ளார். மூர்டொக் ஊடக இராச்சியம் உட்பட ஆளும் தட்டின் சக்திவாய்ந்த பிரிவினர், தாம் கோரிய, தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமை மீதான பெரும் தாக்குதலை முன்னெடுப்பதற்கு மேலும் வல்லமை படைத்தவர் அல்ல என்ற முடிவுக்கு வந்தனர். கி்ல்லர்ட் நியமிக்கப்பட்டமை புதிய தொழிற்கட்சி அரசாங்கத்தை மறு ஒழுங்கு செய்வதை சமிக்ஞை செய்கின்றது. இது நிதி மூலதனத்தின் கோரிக்கைகளுக்கான இன்னுமொரு பதிலிறுப்பாகும். உற்பத்தியை துரிதப்படுத்துவதற்காக சந்தை-சார்பு “மறு ஒழுங்குபடுத்தல்”, தனியார்மயமாக்கல் மற்றும் “பொருளாதார மறுசீரமைப்பின்” ஒரு புதிய அலையை அமுல்படுத்துவதே அவரது கடமையாகும். இது பிரமாண்டமான வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையை குறைக்கவும் மற்றும் நலன்புரி சேவை, பொதுத்துறை தொழில்கள் மற்றும் சம்பளம், சுகாதாரம், கல்வி, மற்றும் சமூக உட்கட்டமைப்பு உட்பட்ட பகுதிகளில் பொதுச் செலவுகளை வெட்டித்தள்ளும் ஒரு தொகை சிக்கன நடவடிக்கைகளின் ஊடாக தடைகளை நசுக்கிக்கொண்டு பயணிக்கவும் இன்றியமையாததாக அமையும்.
அத்தகைய திட்டத்தை ஜனநாயக முறையில் அமுல்படுத்த முடியாது. ஆஸ்திரேலியாவிலும் உலகம் பூராவும், ஆளும் தட்டின் தேவைகள், ஜனத்தொகையில் பரந்த பெரும்பான்மையினரின் நலன்கள் மற்றும் உணர்வுகளுக்கு நேர் எதிராக இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, அடிப்படையில் ஒரு ஜனநாயக வடிவிலான ஆட்சியில் காணமுடியாத சமூக சமத்துவமின்மை, கடந்த மூன்று தசாப்தங்களாக முன்னெப்போதும் இல்லாத மட்டத்துக்கு அதிகரித்துள்ளது. புதிய வடிவிலான அதிகாரத்துவ மற்றும் சர்வாதிகார ஆட்சியை நோக்கிய பூகோள நகர்வின் பின்னணியில் இருப்பது இதுவே. நீண்ட காலகட்டமாக அபிவிருத்தியடைந்துவரும் உலக முதலாளித்துவ பொருளாதாரத்திலேயே உள்ள அடிப்படை முரண்பாடுகள், இப்போது அரசியல் வாழ்வின் மேற்பரப்புக்கு வெடித்துக் கிளம்பி, ஐரோப்பா, ஆசியா, மற்றும் வட அமெரிக்கா பூராவும் ஒரு தொடர்ச்சியான கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. அதே சமயம், அமெரிக்காவின் பூகோள மேலாதிக்க நிலையிலான வரலாற்று வீழ்ச்சி நிலைமையின் கீழ், பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான உறவுகள் முன்னெப்போதும் இல்லாதவாறு முறிகின்றன.
ஐரோப்பாவுக்குள் சர்வாதிகார மற்றும் பாசிச போக்குகளின் எழுச்சியானது உள்நாட்டில் உயர்ந்த மட்டத்திலான வர்க்கப் பதட்ட நிலைமையினதும் மற்றும் போட்டி தேசிய அரசுகளுக்கு இடையிலான மோதல்களினதும் அழுத்தத்துடன் முதலாளித்துவ ஜனநாயக வடிவிலான ஆட்சியால் ஒன்றியிருக்க முடியாது என்ற உண்மையை பிரதிபலிக்கின்றது என 1929ல் லியோன் ட்ரொட்ஸ்கி விளக்கியிருந்தார். “மின்சார பொறியியலுடன் ஒப்புமைபடுத்தி” அவர் எழுதியதாவது, தேசிய அல்லது சமூகப் போராட்டங்களால் மிகைப்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கு எதிரான பாதுகாப்பு மின்விசைக்குமிளாகவும் (switches) மற்றும் மின்சார சுழற்சி தடைகளாகவும் (circuit breakers) ஜனநாயகத்தை வரையறுக்கலாம். எமது காலத்தைப் போல் மனித வரலாற்றில் வேறெந்த காலகட்டமும் -தொலைவிலும் கூட- இந்தளவு பகைமைகளால் குவிந்திருக்கவில்லை. மின்கம்பிகளில் மிகைப்படுத்தலானது ஐரோப்பிய அதிகார தொகுதியில் பல்வேறு இடங்களில் மேலும் மேலும் அடிக்கடி நிகழ்கின்றது. மிகவும் அதிகமாக வலுப்படுத்தப்பட்டுள்ள வர்க்க மற்றும் சர்வதேச முரண்பாடுகளின் தாக்கத்தின் கீழ், ஜனநாயகம் என்ற பாதுகாப்பு மின்விசைக்குமிள்கள் ஒன்று எரிந்துபோகும் அல்லது வெடிக்கும். இதைத்தான் சர்வாதிகாரம் என்ற மின்சார இடைக்கசிவு பிரதிநிதித்துவம் செய்கின்றது.”
ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் பொருளாதார வாழ்க்கை எப்பொழுதும் அதிகாரத்தின் பூகோள மூலோபாய சமநிலையில் மாற்றங்களையிட்டு மிகவும் கூருணர்ச்சியுடன் இருந்துவருகின்றது. |