WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
Hyundai workers in India speak out against reprisals and poor working conditions
அடக்குமுறைகளுக்கு எதிராக குரலெழுப்பும் இந்தியாவின் ஹூண்டாய் தொழிலாளர்கள்
By M. Kailasam and K. Sundaram
26 June 2010
Back to screen version
சென்னை திருபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் சுமார் 300 ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வந்ததை மு. கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி காவல்துறையினர் முறியடித்த சூழலில் பத்திரிகையாளர்கள் குழு அந்த கார் தயாரிப்பு தொழிற்சாலையை பார்வையிட்டனர். திருபெரும்புதூர், தமிழ்நாடு மாநிலத் தலைநகர் சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது.
இரண்டு நாள் உள்ளிருப்புப் போராட்டத்தை முறியடிப்பதற்காக காவல்துறையினர் 282 ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்ற ஆண்டு தொழிற்சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்கும், ஹூண்டாய் மோட்டார் இந்தியத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு (எச்.எம்.இ.ஐ.யு) தொழிற்சங்கத்தை அங்கீகரித்ததற்கும் பழிவாங்கும் நோக்கத்துடன் நிர்வாகத்தினரால் பணிநீக்கம் செய்யப்பட்ட 67 ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்பதே ஆயிரக்கணக்கிலான ஹூண்டாய் ஊழியர்களின் ஆதரவுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் கோரிக்கையாக இருந்தது.
இந்த உள்ளிருப்பு போராட்டம் முறியடிக்கப்பட்ட அடுத்த நாளிலேயே, இந்திய தொழிற் சங்க மையம் (சி.ஐ.டி.யு) என்னும் இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தொழிலாளர் சங்கம், போராட்டம் வலுப்படுமோ என்ற பயத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடவிருந்த அதன் உறுப்பினர்களிடம் வேலைக்கு திரும்ப வலியுறுத்தியது. அரசு நடுநிலையி்ல் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது, ஒரு சிலரது பணி நீக்கம் தொடர்பாக பரிசீலனை செய்வதாக அந்நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டி தொழிற் சங்கம் இதை நியாயப்படுத்தியும் உள்ளது. எச்.எம்.இ.ஐ.யு (HMEIU) தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிறுவனம் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதாக எந்த ஒரு வாக்குறுதியும் வழங்கவில்லை.
ஜூன் 11-ஆம் தேதியன்று, இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு பின்னர், உள்ளிருப்பு போராட்டத்தை முறியடிக்கும் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த 282 ஊழியர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அந்த ஊழியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறப்போவதாக நிறுவனம் ஏற்கனவே கூறியிருந்தாலும் அவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படவி்ல்லை. இதன் மூலம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ளும் நிலையி்ல் தான் உள்ளனர். (காணவும்- “தென்னிந்தியாவில் ஹூண்டாய் வளாகத்தில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை முறியடித்த காவல்துறையினர்”)
நாங்கள் ஹூண்டாய் வளாகத்தை பார்வையிட்டபோதும் கூட அங்கு ஏராளமான காவல்துறையினர் சீருடையிலும், சிவில் உடையிலுமாக, தொழிலாளர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அந்த வளாகத்தின் நுழைவு வாயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் நின்று கொண்டிருந்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போலீஸ் நடவடிக்கைகள் மற்றும் தற்போது அவ்விடமெங்கும் போலீசாரால் நிரப்பப்பட்டுள்ள நிலையில் இது குறித்து பேசுவதற்கே ஊழியர்கள் தயங்குவதை உணர முடிந்தது. உள்ளிருப்பு போராட்டத்தை முறியடிக்க வளாகத்திற்குள் நுழைவதற்கும் முன்பே போலீசார் அந்த வளாகத்தின் நுழைவுவாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த குடில்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.
நிர்வாகத்தின் கடுமையான நடவடிக்கைகளுக்கு பயந்து, தங்களது பெயர் விவரங்களை வெளியிட வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் சிற்றுண்டியகத்தின் அருகே நின்று கொண்டிருந்த சில ஊழியர்கள் எங்களிடம் பேசத் தயாராகினர்.
எஸ்.கே. என அறிமுகம் செய்து கொண்ட 28 வயது வாலிபர் இந்த போராட்டம் பற்றி கூறுகையில்: நான்கு ஊழியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்தது தான் உள்ளிருப்புப் போராட்டம் தொடங்க காரணம். கடந்த மே 23-ஆம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் யோகா, சொற்பொழிவுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் போன்றவை அடங்கிய பயிற்சி முகாம் ஒன்று நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகளில் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களின் மன நிலையை மாற்றும் நோக்கத்துடன் இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பயிற்சி முகாமின் போது ஒரு நாள் விடுப்பு எடுத்ததாகவும், பயிற்சி முகாமிற்கு பின்னர் பணிக்கு காலதாமதமாக வந்ததாகவும் கூறி இந்த நான்கு ஊழியர்களை நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்தது என்று எஸ்.கே. கூறுகிறார். இந்த ஒழுங்கு நடவடிக்கையால் கோபம் அடைந்த பல நூறு ஊழியர்கள் கடந்த ஜூன் 6-ஆம் தேதியன்று இரவு நேர ஷிப்ட் தொடங்கும் நேரத்தில் வாகன உதிரிபாகங்களை பொருத்தும் அசெம்பிளி லைனில் உட்கார்ந்து கொண்டனர்.
அவர்களின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து பிற தொழிலாளர்களும் உற்பத்தி சாலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அந்த உற்பத்தி சாலையின் அனைத்து பணிகளும் நின்று விட்டன.
இரவு ஷிப்ட் பணியாளர்களின் உள்ளிருப்பு போராட்டத்தில் காலை ஷிப்ட் பணியாளர்களும் சேர்ந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் நிர்வாகம் அனைத்து ஊழியர்களுக்கும் திங்கட்கிழமையிலிருந்து விடுமுறை அறிவித்து அவர்கள் ஆலையின் உள்ளே நுழைந்து உள்ளிருப்பு போராட்டத்தில் சேர்வதை தடுத்து நிறுத்தியது.
ஹூண்டாய் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது நிர்வாகம் போலி குற்றச்சாட்டை எழுப்பியது. இதன் படி வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஜூன் 8-ஆம் தேதியன்று காலை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கைது செய்தனர்.
ஹூண்டாய் நிறுவனத்தில் ஒரு நிரந்தர ஊழியருக்கு கிடைக்கும் அடிப்படை மாதச் சம்பளம் 7760 ரூபாய் (165 டாலர்கள்) ஆகும். வாடகை, கல்வி, மருத்துவம் போன்ற தேவைகளுக்கான பல்வேறு சலுகைகள் உட்பட ஒரு நிரந்தர ஊழியரின் மாதச் சம்பளம் 29000 ரூபாய் (620 டாலர்கள்) ஆகும். ஆனால் திருபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலையில் பணிபுரியும் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கினர் கூட நிரந்தர ஊழியர்கள் அல்ல. அங்கு பணிபுரிவோரில் முக்கால் வாசிப் பேரும் தற்காலிக பணியாளர்கள், பயிற்சியாளர்கள் போன்ற நிரந்தர அந்தஸ்து இல்லாத ஊழியர்கள் தான். உலகப் பொருளாதார நெருக்கடி அல்லது அதே போன்று வேறு ஏதேனும் பிரச்சனையின் பெயரைச் சொல்லி தங்களது சலுகைகளை குறைக்க ஹூண்டாய் முயலுமா என்று நிரந்தர ஊழியர்கள் பயப்படுகின்றனர்.
பயிற்சியாளர்கள், பயிற்சி பெறும் தொழில்நுட்பத் தொழிலாளர்கள், தற்கால மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தர ஊழியர்களின் கண்காணிப்பிலேயே வேலை செய்ய வேண்டுமென, தொழிலாளர்களை பிரித்தாளும் கொள்கையை ஹூண்டாய் செயல்படுத்தி வருகிறது. நிரந்தர ஊழியர்கள் செய்யும் பணிகளையெல்லாம் தேவைப்படும் பட்சத்தில் தற்காலத் தொழிலாளர்களே செய்தாக வேண்டும், இல்லையென்றால் உடனடியாக அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என மிரட்டலும் விடுத்துள்ளது.
நிரந்தர ஊழியர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்களின் உரிமைகளை நிர்வாகம் எவ்வாறு படிப்படியாக பறித்துக்கொண்டிருக்கிறது என்பது பற்றி ஆர்.கே. (25) என்பவர் கூறுகையில்: நிரந்தர ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 7 நாட்கள் மருத்துவ விடுப்பும், 3 நாட்கள் தனிநபர் விடுப்பும், 8 நாட்கள் தற்செயல் விடுப்பும் எடுக்க உரிமை உண்டு. அதே சமயம் ஊதியத்துடன் வழங்க வேண்டிய விடுப்புகளுக்கு நிர்வாகம் ஊதியம் வழங்க மறுத்து வருகின்றது. உதாரணத்திற்கு ஒரு நிரந்தர ஊழியர் உடல்நலக்குறைவு காரணமாக ஒரு நாள் மருத்துவ விடுப்பு எடுக்க வேண்டுமானால் அவரது ஒரு நாள் சம்பளத்தை பறிகொடுத்தே ஆக வேண்டும்.
ஹூண்டாய் தொழிற்சாலையில் ஒருவர் நிரந்தர ஊழியராக வேண்டுமானால் முதல் ஆண்டு அப்ரெண்டிஸ் பயிற்சி, இரண்டு ஆண்டுகளுக்கு தொழில்நுட்ப அப்ரெண்டிஸ் பயிற்சி, கடைசி ஓர் ஆண்டு தொழில்நுட்ப பயிற்சி என தொடர்ந்து நான்கு ஆண்டுகால கடுமையான பயிற்சி தேவை.
தொழில் உறுதி அல்லது பாதுகாப்பு என்று ஏதும் நடைமுறையில் இல்லை. யாரேனும் நிர்வாகத்தின் ஆணைகளுக்கு விரோதமாக எதிர்ப்பு தெரிவித்தால் உடனடியாக அவரை பணி நீக்கம் செய்யவோ அல்லது உடல் ரீதியாக மேலும் கடுமையான சிரமத்தை ஏற்படுத்தும் பணிகளை அவரிடம் ஒப்படைப்பதோ நிர்வாகத்தின் வழக்கம்.
பயிற்சி என்ற பெயரில் தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்திற்கு கடுமையாக பணிபுரிய வேண்டும். பயிற்சி பெறுபவர்களுக்கு மாதம் 3500 ரூபாய் (75 டாலர்கள்) ஊக்கத்தொகை மட்டுமே கிடைக்கும். ஆண்டுதோறும் இரண்டே நாட்கள் தான் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும். கடந்த 2001-ம் ஆண்டுக்கு பின்னர் ஒருவர் கூட நிரந்தர ஊழியராக்கப்படவில்லை.
தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தினசரி 100 ரூபாய் (2 டாலர்கள்) முதல் 120 ரூபாய் (2.15 டாலர்கள்) வரையிலும் கூலி கிடைக்கும். அவர்களுக்கு விடுப்பு என்று ஏதும் இல்லை என்பது மட்டும் அல்லாமல், பிற ஊழியர்களுக்கு வழங்கும் தேநீர் கூட வழங்கப்படுவதில்லை. கேன்டீனில் அவர்களுக்கு உணவு கிடைப்பதில்லை என்பதால் அவர்கள் வெளியிலிருந்து தான் உணவை வாங்கி சாப்பிட்டுக்கொள்ள வேண்டும்.
நிறுவனத்தின் கேன்டீனில் கிடைக்கும் உணவும் தரமானது அல்ல. கடித்தால் உடையாத சப்பாத்தி (கோதுமை மாவினால் செய்யப்படும் வடநாட்டு ரொட்டி) மற்றும் ரப்பர் போன்று வேகாத அரிசியாலான சாதம் தான் அங்கு வழங்கப்படுகின்றன.
ஒரு லட்சம் கார்களை தயாரிப்பதோடு முதல் கட்ட முதலீட்டை திரும்பப்பெற முடியும் என பத்தாண்டுகளுக்கு முன்பு ஊழியர்களிடம் உரையாற்றுகையில் ஹூண்டாய் மேலாண்மை இயக்குநர் கூறியிருந்தார். அதன் பின்னர் இது வரையில் ஹூண்டாய் வளாகத்தில் 1.5 மில்லியன் (15 லட்சம்) கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 2000 நிரந்தர ஊழியர்களுடன் சென்னையில் இயங்கி வந்த ஸ்டான்டர்ட் மோட்டார் நிறுவனம் ஒரு நாளுக்கு 22 கார்களை மட்டுமே தயாரித்திருந்தது. அதே சமயத்தில் ஹூண்டாய் தொழிற்சாலையில் மணிக்கு 56 கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தில் மட்டும் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
அரசை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு பணியாளர்களின் உழைப்பை சுரண்டும் ஹூண்டாய் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் மோதுவதற்கு உழைக்கும் வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமை இன்றியமையாதது என நாங்கள் ஹூண்டாய் ஊழியர்களிடம் கூறினோம். இதற்கு எஸ்.வி. என அறிமுகம் செய்து கொண்ட ஒருவர் - இங்கு எங்களை ஒருங்கிணைப்பதற்கென்று யாரும் இல்லை. நாங்கள் போராட்டத்தில் ஈடுபடும்போதெல்லாம் பிற தொழிற்சாலைகளிலிருந்து தொழிற்சங்க தலைவர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை அப்படியே விட்டு விட்டுச் செல்வது தான் வழக்கமாக உள்ளது என்றார். இது குறித்து சி.ஐ.டி.யு.வின் மாநிலத் தலைவர் சவுந்தரராஜனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: நாங்கள் அனைவரும் ஒருங்கிணைவதற்கென்று ஒரு நேரம் வரும். நீங்கள் சொல்வதிலிருந்து நாம் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையிலான ஒரு அமைப்பு தேவை என்ற தெளிவான கருத்து புரிகிறது என்றார்.
ஹூண்டாய் ஊழியர்களின் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்.)யின் பங்களிப்பு குறித்து ஆர்.ஜே. (25) என்னும் எச்.எம்.ஐ.யு. தொழிற் சங்க அதிகாரியிடம் கேட்டபோது - எங்களது போராட்டத்திற்கு சி.பி.எம். தலைமை தாங்குவது குறித்து சவுந்தரராஜனிடம் கேட்டதற்கு அவர், கட்சியும் தொழிற்சங்கமும் இரு வேறுபட்ட அமைப்புக்கள் என்றும், கட்சியானது தொழிற்சங்கத்திடமிருந்து வித்தியாசமாக இயங்கும் அமைப்பு. ஆனால் தொழிற்சங்கத்தின் போராட்டங்களில் கட்சி தலையிடாது என்றும் பதிலளித்தார்.
கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ஆட்சியில் உள்ள சி.பி.எம். அரசுகள் அம்மாநிலங்களில் முதலீடு செய்ய முன்வரும் முதலாளிகளுக்கு வரிச்சலுகை, சிறப்பு பொருளாதார மண்டலம் என ஏராளமான சலுகைகளை வழங்கி வரவேற்பதைப் பற்றி விளக்கிய போது அவர் இவ்வாறு பதிலளித்தார்: அவர்கள் (சி.பி.எம். மாநில அரசுகள்) பல்வேறு மண்டல - பிராந்திய விருப்பங்களுக்கேற்ப செயல்படுகின்றனர். இந்த விளக்கத்திலிருந்தே அவர்கள் செயல்படுவது உழைக்கும் வர்க்கத்திற்காக அல்ல, முதலாளித்துவத்தை வளர்ப்பதற்கே என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் சி.பி.எம். கட்சிக்கும் அதனது இடது முன்னணிக்கும் ஆதரவாக இருந்து வந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான மாநில அரசு குறித்து கேட்டதற்கு என்.கே. என்பவர் - கருணாநிதி (தி.மு.க. முதல்வர்) எங்களுக்காக எதையும் செய்யப்போவதில்லை என்று நன்கு தெரியும். நோக்கியா தொழிற்சாலையில் தி.மு.க.வுடன் இணைக்கப்பட்டுள்ள எல்.பி.எப். (தொழிலாளர் முற்போக்கு முன்னணி) என்னும் தொழிற்சங்கத்தை நிறுவுவது சாத்தியமாக இருந்தது. ஆனால் இங்கு எங்களது தொழிற்சங்கத்திற்கு மட்டும் அங்கீகாரம் கிடைப்பது சிரமமாக உள்ளது.
பொது சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பின் தேவை குறித்து விளக்கம் கூறியபோது அதற்கு ஏராளமான ஹூண்டாய் ஊழியர்கள் ஆதரவு தெரிவித்தனர். அவர்களை (பன்னாட்டு நிறுவனங்களை) இங்கு வரவழைப்பது நம் ஆட்சியாளர்களே ஆவர். நீங்கள் சொன்னதைப் போன்று நாம் செயல்பட வேண்டியது மிகவும் முக்கியமானது. சாதி, மத, மொழி வேறுபாடுகளின்றி தொழிலாளர்கள் அனைவரும் ஐக்கியப்பட்டே ஆக வேண்டும்.
|