World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பர்மா

A reply to supporters of “humanitarian” intervention into Burma

பர்மாவில் ''மனிதாபிமான'' தலையீட்டை ஆதரிப்பவர்களுக்கு ஒரு பதில்

By Peter Symonds
7 June 2008

Back to screen version

''பர்மாவில் சர்வதேச தலையீட்டுக்கான பிரச்சாரம் ஏன்''? என்ற தலைப்பிலான எமது கட்டுரையை விமர்சிக்கும் பல மின்னஞ்சல்களை உலக சோசலிச வலைத் தளம் பெற்றுள்ளது. பர்மிய இராணுவ ஆட்சி வெளிநாட்டு உதவி பணியாளர்களையும் வெளிநாட்டு இராணுவத்திடமிருந்து மனிதாபிமான உதவிகளையும் பெறுவதற்கு நாட்டை திறந்து விடவேண்டும் என்ற சர்வதேச ஊடகங்களின் கோரிக்கைக்கு ஆதரவான பிரச்சாரதை நாம் நிராகரிப்பதை எதாவது ஒரு வழியில் எல்லோரும் எதிர்கின்றார்கள்.

அண்மையில் ஏற்பட்ட பேரழிவு சம்பந்தமாக உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்ட ஒவ்வொரு கட்டுரையிலும், ஜுண்டாவுக்கு எங்களுடைய எதிர்ப்பு ஐயத்திற்கு இடமற்றதாக போதும், பெரும்பான்மையான பழிதூற்றுகின்ற மின்னஞ்சல்கள், உலக சோசலிச வலைத் தளம் பர்மிய இராணுவ ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளன. எவ்வாறெனினும், மிகப்பெரிய பேரழிவின் மத்தியில் அரசியலை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, சம்பந்தப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டத்தை கருத்தில் கொள்ளாமல் உயிர்பிழைத்தோருக்கு சாத்தியமான எந்த வழியிலேனும் உதவிகள் விநியோகிக்கப்படவேண்டும், என்பதே விமர்சனத்தின் மத்திய புள்ளியாகும்.

எடுத்துக்காட்டாக, LW என்பவர் பிரகடனம் செய்வதாவது: ''பலவிதமான பூகோள ரீதியான போலி நடிப்புக்கள் அரசியல் விடயங்கள் மற்றும் பற்றாக்குறைகளும் உண்மையானவையாக இருக்கக் கூடிய அதேவேளை, அவை நெருக்கடி வரும் தருணத்தில் பொருத்தமற்றவை ஆகும். அமெரிக்க மற்றும் ஏனைய சர்வதேச உதவிகளை உடனடியாக ஏற்க மறுப்பது, கலப்படமற்ற இரத்தக்களரி மனநிலையாகும். இங்கு மன்னிப்பு இல்லை. தத்துவம் இல்லை. அரசியல் இல்லை. இது சாதாரணமாக மன்னிக்க முடியாதது. எனவே உங்களுடைய கட்டுரையின் முழு உள்ளடக்கமும், முழுமையாக வெறுக்கத்தக்கதும் மூடத்தனமானதுமாகும். இது ஒரு வெளிப்படையான மனித எதிர்பார்ப்புகள் சிதைந்து போனமை தொடர்பான பிரச்சினையாகும்."

LW உடைய கோபத்தில் ஒரு பொதுவான புரிந்துகொள்ள முடியாததுமான மனோபாவம் வெளிப்படுகின்றது. பர்மாவில் மனித துன்பங்கள் நிச்சயமாக இதயத்தை பிளக்கின்றன. ஏற்கனவே ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட மிகப்பெரிய பேரழிவு, எங்கள் கண்முன்னால் தெரிகின்றது. பெரும்பான்மையோர், உணவு, சுத்தமான தண்ணீர், மருந்து அல்லது உறைவிடம் இல்லாமல் இருப்பதோடு நோய் அல்லது பசியினால் மரணத்தைத் தழுவும் ஆபத்தில் உள்ளனர். நிச்சயமாக அரசியலுக்கு முன்னதாக அடிப்படையான மனிததேவைகள் கிடைக்க வேண்டும். மற்றும் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானாவர்களுக்கு வாழ்க்கைக்கான அடிப்படை தேவைகள் முடியுமானவரை விரைவாக விநியோகிக்கப்படவேண்டும்.

எவ்வாறெனினும், மிகவும் ஆரம்பத்திலிருந்தே திட்டவட்டமான ஒரு அரசியல் தொடர்புபட்டிருக்கின்றது. அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மனிதாபிமான கரிசனையுடன் செயற்பட்டிருந்தால், பர்மா அரசாங்கம் ஏற்கக்கூடிய வழியில் நிதி அல்லது பொருள் உதவிகளை வழங்கியிருக்க முடியும். ஆனால், உதவி வழங்கும் நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதபடி உள்நோக்கங்களை இணைந்துக்கொண்டே வருகின்றன. பர்மாவுக்கும் மற்றும் சூறாவளி தாக்கிய பகுதிகளுக்கும் வெளிநாட்டு அதிகாரிகள், நிவாரணம் வழங்கும் வல்லுனர்கள் மற்றும் இராணுவத்தினரும் ''தடையின்றி பிரவேசிப்பதற்கு'' அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் சர்வதேச உதவி பிணைக்கப்பட்டிக்கிறது. மதிப்பீடு, கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை என்ற சாக்குப் போக்கில், இந்த உதவி நடவடிக்கைகளை தாமே கட்டுப்படுத்துவதாக பெரும் வல்லரசுகள் வலியுறுத்துகின்றன.

அமெரிக்க ஐரோப்பிய அரசாங்கங்கள், பர்மாவில் ஆட்சி மாற்றத்திற்கான தமது நீண்டகால நோக்கத்தை வெளிப்படையாக மறைத்து வைத்துள்ளன. 1988 ம் ஆண்டில் எதிர்கட்சிகளின் வேலை நிறுத்தங்களையும் எதிர்ப்புக்களையும் கொடூரமான முறையில் ஒடுக்கியதை அடுத்து முதலாவது இராஐதந்திர, நிதி உதவி மற்றும் முதலீட்டுக்கும் தடை விதிக்கப்பட்டதுடன் அப்போதிருந்து நிலையாக இறுக்கமாக்கப்பட்டது. அவர்களுடைய நோக்கமாக இருப்பது, மேற்கு நாடுகளின் பொருளாதார, மூலோபாய நலன்களுக்கு மிகவும் ஆதரவாக இருக்கின்ற ஆங் சாங் சூகியிடமும் அவரது எதிர்க் கட்சியான ஜனநாயகத்திற்கான தேசிய கழகத்திடம் ஆட்சியை ஒப்படைப்பதற்கு பர்மா இராணுவத்தை நிர்பந்திப்பதாகும். இப்பொழுது அதே சக்திகள் சர்வதேச ஊடகங்களின் அசாதாரணமான பிரச்சாரத்தின் ஆதரவுடன், மேலும் ஆட்சியை கீழறுப்பதற்காக பர்மிய மக்கள் முகம்கொடுக்கின்ற பேரழிவை ஒரு அரசியல் நெம்பு கோலாக பயன்படுத்த சிடுமூஞ்சித்தனமாக பற்றிக்கொண்டுள்ளன.

சர்வதேச பேரழிவுகளும் பெரும் வல்லரசுகளின் செயற்படும் வழிமுறைகளும்

எமது விமர்சனத்தை சிறிது நேரம் நிறுத்திவிட்டு, பர்மாவில் சூறாவளியினால் பாதிக்கப்பட்டோர் சம்பந்தமாக முதலைக் கண்ணீர் வடிக்கின்ற இதே அரசாங்கங்கள், உலகம் பூராகவும் ஒவ்வொரு நாளும் நடக்கின்ற எண்ணற்ற பேரழிவுகளை புறக்கணிப்பது ஏன் என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும். வானளவு உயர்ந்து செல்கின்ற உணவுப் பொருட்களின் விலைகளினால் வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆசியா, ஆபிரிக்கா, லத்தின் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள, ஒரு மதிப்பீட்டின் படி 100 மில்லியன் மக்களின் சீற்றம் நிறைந்த வெளிப்பாட்டுக்கு ஒருவரும் செவிமடுப்பதில்லை அல்லது அவர்களுக்கு உதவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுப்பதில்லை. அல்லது ஒவ்வொரு வருடமும் மலேரியாவினால் பாதிப்படையும் அரை பில்லியன் மக்களுக்கும் மற்றும் இந்த தடுக்கக்கூடி நோயினால் ஆண்டு தோரும் உயிரிழக்கும் ஒரு மில்லியன் மக்களுக்கு -அவர்களில் அதிகமானவர்கள் சிறுவர்கள்- உதவுவதில்லை.

2004 ஆண்டு சுனாமி தாக்கியபோது உலகத் தலைவர்களின் ஆரம்ப பிரதிபலிப்பு என்னவாக இருந்தது? பல நாட்களாக அமெரிக்க ஐனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் பிரிட்டன் பிரதமர் டொனி பிளேயரும் தமது விடுமுறையை இடைநிறுத்திவிட்டு 300,000 உயர்களுக்கும் அதிகமாக பலிகொண்ட ஒரு அழிவு சம்பந்தமாக ஒரு அறிக்கையை தன்னும் வெளியிடவில்லை. உலக மக்களிடம் இருந்து அனுதாப அலைகள் பெருகியதுடன் மில்லியன் கணக்கான டொலர்கள் நிதியாக சேர்ந்த பின்புதான் பலவித உலகத் தலைவர்களும் நடவடிக்கை எடுக்க உந்தப்பட்டார்கள். எவ்வாறாயினும் அவர்கள் இந்த பேரழிவை உடனடியாக தமது சொந்த நோக்கத்திற்காக சுரண்டிக் கொண்டார்கள். அமெரிக்க இராஜாங்க செயலாளர் கொண்டோலீசா ரைஸ், இந்த அழிவு அமெரிக்காவின் கருணையை காட்டுவதற்கு ஒரு ''அற்புதமான சந்தர்ப்பம்'' மற்றும் அது ''எங்களுக்கு பெரும் பங்கை வழங்குகிறது'' என பிரகடனம் செய்தார். மனிதாபிமான கரிசினை என்ற போர்வையின் கீழ், வாஷிங்டன் நெருங்கிய இராணுவ மூலோபாய உறவை ஆசியாவுடன் ஏற்படுத்திக் கொண்டது. விசேடமாக இந்தோனேஷிய, இலங்கை இராணுவத்துடன் உறவை ஏற்படுத்திக் கொண்டது.

சர்வதேச ஊடகங்கள், பர்மா இராணுவ ஆட்சி மீதான தமது கண்டனங்களில் இருந்து மாறுபட்ட விதத்தில், சுனாமியில் உயிர்தப்பியோர் மீது இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து அரசாங்கங்கள் காட்டிய செயலின்மை மற்றும் கொடூரமான அலட்சியம் சம்பந்தமாக பெரும்பாலும் மௌனம் காத்தன. இந்தோனேஷிய அரசாங்கம் அழிவடைந்த பிரதேசங்களுக்கு வெளிநாட்டு துருப்புக்களை அனுமதிப்பதை தட்டிக்கழித்ததினால் அக்கே பிரதேசத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்றோ அல்லது முற்றிலும் பற்றாக்குறையான உதவி நடவடிக்கையை செயற்படுத்த சர்வதேச உதவி பணியாளர்களை அனுமதிக்க மறுத்ததற்காக இந்திய அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்றொ யாரும் முன்மொழியவில்லை.

குறிப்பிட்ட மனிதப் பேரழிவு ஒன்று வேறு ஒரு மனிதப் பேரழிவையும் விட சர்வதேச கவனத்துக்கு வருவதை தீர்மானிப்பது அரசியல் கணிப்புக்களேயாகும். 1999ல் இலட்சக்கணக்கான கொசோவிய அகதிகளை சேர்பிய இராணுவத்திடமிருந்தும் இராணுவக் குழுக்களிடம் இருந்தும் பாதுகாப்பதற்காக யூகோஸ்லாவியாவிற்கு எதிரான நேட்டோ யுத்தம் தொடுக்கப்பட்டதாக உலக மக்களுக்கு சொல்லப்பட்டது. உண்மையில் உலக சோசலிச வலைத் தளம் அந்த நேரத்தில் தெளிவுபடுத்தியது போல், அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும், எரிசக்தி வளம் நிறைந்த மத்திய ஆசியாவில் தமது பரந்த குறிக்கோளை முன்னெடுப்பதற்காக பால்கனில் நடவடிக்கை தளம் ஒன்றை ஸ்தாபிக்க செயற்பட்டன. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு பின்பு, பிரதான இராணுவத் தளங்கள் அமைக்கப்பட்டு ஏறத்தாழ நேட்டோவின் பாதுகாப்பில் இருக்கும் நாடாக கொசோவா மாற்றப்பட்ட அதே நேரத்தில், சேர்பியர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினரில் இருந்து பொது மக்கள் ''இனரீதியாக சுத்திரிக்கப்பட்டதுடன்'' பொருளாதார பின்னடைவில் மூழ்கிப் போயுள்ளனர்.

அதே வருடம், இந்தோனேஷியாவுக்கு ஆதரவான குண்டர்களிடம் இருந்து மக்களை பாத்துகாத்தல் என்ற பெயரில், அவுஸ்திரேலிய இராணுவம் கிழக்கு தீமோரில் தலையீடு செய்வதை நியாயப்படுத்தி ஒரு அசாதாரணமான பிரச்சாரம் தொடுக்கப்பட்டது. எப்படி இருந்தபோதும், இதன் நோக்கம் கிழக்கு தீமோர் மக்கள் பற்றிய கரிசினையாக இருக்கவில்லை. 1998ல் இந்தோனேஷிய சர்வாதிகாரி சுகார்டோவை வெளியேற்றுவதை சூழ ஏற்பட்ட எழுச்சியின் மத்தியில், கன்பரா தனது போட்டியாளர்களுக்கு எதிராக கிழக்கு தீமோரில் தனது பொருளாதார மூலோபாய நலனை பாதுகாப்பதில் உறுதியாக இருந்தது -குறிப்பாக தீமோர் மேட்டில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு மீது தனது பிடியை இறுக்குவதில் உறுதியாக இருந்தது. 199ல் இருந்து அவுஸ்திரேலியா சக்தி வளத்தை பங்குபோட்டுக்கொள்வது தொடர்பாக திலியில் உள்ள புதிதாக "சுததந்திரம்" அடைந்த அரசாங்கத்தை வாட்டியெடுத்தோடு, 2006ல் பிரதமர் மாரி அல்கட்டிரியை வெளியேற்றுவது தொடர்பாக சிறிய அரைத்தீவில் மீண்டும் ஆஸ்திரேலிய துருப்புக்கள் இறக்கப்பட்டதுடன், கன்பராவுக்கு ஆதரவான அரசாங்கம் அங்கு திணிக்கப்பட்டது. கொசோவோவை போன்று கிழக்கு தீமோர் மக்களில் பெரும்பான்மையானவர்கள் தொடர்ந்தும் வறுமையில் வாழ்கிறார்கள்.

சீனாவுடனான அதன் நெருங்கிய உறவிலேயே பர்மாவிலான வாஷிங்டனின் நலன்கள் மையங்கொண்டுள்ளன. சீனாவை ஒரு வளர்ச்சி கண்டுவரும் மூலோபாய மற்றும் பொருளாதார எதிரியாக வாஷிங்டன் கருதுகிறது. வடகிழக்கில் ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் இருந்து மேற்கில் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய குடியரசுகள் வரை சீனாவின் எல்லைகளை சூழ பரந்தளவில் பங்காளிகளையும் தளங்களையும் ஸ்தாபிக்கும் மிக வரிவான திட்டத்தின் ஒரு பாகமே பர்மா இராணுவ ஆட்சிக்கு எதிரான புஷ் நிர்வாகத்தின் பிரச்சாரமாகும். அதே நேரம், எண்ணெய், எரிவாயு மற்றும் உட்பட்ட வளங்கள் மற்றும் மலிவு உழைப்பும் பெருகும் இன்னுமொரு ஊற்றாக பர்மாவை திறந்து விடுவதற்கு பெரும் வல்லரசுகள் முயற்சிக்கின்றன.

எம்மை விமர்சிப்பவர்கள், பர்மாவுக்கு சர்வதேச உதவி கோரும் ''மனிதாபிமான'' மேள தாளங்களுடன் கூட்டு சேர்வதற்காக ஓடுவதற்கு முதல், தாம் எதனை ஆதரிக்கின்றோம் என்பதை மிகக் கவனமாக நோக்க வேண்டும். பால்கனிலும் கிழக்குத் தீமோரிலும் தலையீட்டை உற்சாகப்படுத்தி புகழ்பாடியோர் போல், விளைவுக்கான அரசியல் பொறுப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.

ஒரு மனிசியன் பொறி

LE என்ற மற்றொரு விமர்சகர், சிறிது வேறுபட்ட போக்கை எடுக்கின்றார். ஊடகங்களின் தற்போதைய பிரச்சாரத்துடன் நாம் கூட்டுச்சேர மறுப்பதை பர்மா ஜுண்டாவுக்கு ஆதரவு கொடுப்பதுடன் அவர் சமப்படுத்துகிறார்: ''என்னுடைய எதிரியின் எதிரி எனது நன்பன் என கருதும் மனிசியன் பொறிக்குள் சிக்காமல் பர்மா சம்பந்தமாக ஒரு நிலைப்பாட்டை எடுப்பதில் உங்களது கட்டுரைகள் இயலுமையற்று இருப்பதாகத் தெரிவதோடு, அமெரிக்க இராணுவ நோக்கத்துடன் கூட்டுச் சேராமல் ஜூண்டாவை கண்டிக்கவோ அல்லது அதற்கு அழுத்தம் கொடுக்கவோ முடியாது'' என அவர் கூறுகின்றார். இராணுவ உதவி இராணுவம் அல்லாத உதவிக்கும் இடையில் வேறுபாட்டை வரைய முயற்சிக்கும் அவர், உலக சோசலிச வலைத் தளம் வேறுபாட்டை உருமறைப்பதாக குற்றஞ்சாட்டுவதோடு பின்னர் கேள்வி எழுப்பும் முறையில் முன்மொழிவதாவது: ''அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு அல்லது இராணுவமல்லாத உதவிகளுக்கு எல்லைகளை திறந்து விடக் கோரும் அழுத்தங்களுக்கு உள்ளாகாமல் அவர்களால் (ஜுண்டா) இருக்க முடியுமா?"

கேள்வி என்னவெனில்: யாரால் எந்த வழியால் அழுத்தம் கொடுக்கப்படுகின்றது? என்பதாகும். பிரான்சினால் தலைமை தாங்கி நடத்தப்படும் பிரச்சாரம், இராணுவத் தலையீட்டுக்கும் இராணுவமல்லாத தலையீட்டுக்கும் இடையில் வேறுபாட்டை காட்டவில்லை. மனிதாபிமான உதவியை ஏற்க வேண்டும் அல்லது மறுத்தால் பெரும் வல்லரசுகளின் ஒருதலைப் பட்சமான பிரதிபலிப்பை எதிர்கொள்ள வேண்டும் என ஜுண்டாவை நெருக்குவதற்கு ஐ.நா. பாதுகாப்பு சபை தனது "பாதுகாப்பதற்கான பொறுப்பை" நடைமுறைப்படுத்த வேண்டும் என முதலில் யோசனை தெரிவித்தவர் பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர் பேனார்ட் குஷ்னெர் ஆவார். இந்த பயமுறுத்தலுக்கு பக்கபலமாக பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவும் யுத்தக் கப்பல்களை பர்மா கடற்கரைக்கு அருகில் நிறுத்தின. புஷ் நிர்வாகம், ஆட்சியாளரின் அணுமதியுடனோ அணுமதியின்றியோ ஐரவாடி ஆற்றுப் பிரதேசத்தில், விமானம் மூலம் நிவாரணங்களை போடும் திட்டத்தை மிதக்கவிட்டது.

அமெரிக்காவினதும் அதன் நேச சக்திகளினதும் திட்டங்களை எதிர்ப்பதன் மூலம், உலக சோசலிச வலைத் தளம் பர்மா ஆட்சியை ஆதரிக்கும் குற்றத்தை இழைக்கின்றது என்பதே LE இன் கூற்றாகும். ஏகாதிபத்தியத்தையும் அதன் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளையும் எதிர்ப்பவர்களை தூற்றுவதற்கு பல தசாப்தங்களாக இதே கிழட்டு வாதங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. இதே நிலைப்பாட்டின் அடிப்படையில், 1999ல் தீமோரில் ஆஸ்திரேலிய தலையீட்டை எதிர்த்த எவரும் இந்தோனேஷிய சார்பு ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை ஆதரிப்பவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகினர். யூகோஸ்லாவியாவிற்கு எதிரான நேட்டோ யுத்தத்தை எதிர்த்தவர்கள் மிலோசிவிக் அரசாங்கத்தின் பக்கபலமானவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டனர். அதேபோல், ஈராக்கை ஆக்கிரமித்தமைக்காக புஷ் நிர்வாகத்தின் குற்றவியல் யுத்தத்தை எதிர்ப்பவர்கள் சதாம் ஹுசேனின் ஆதரவாளராக குற்றஞ்சாட்டப்படுவார்.

அத்தகைய பண்புமயப்படுத்தல்கள் தொழிலாள வர்க்கத்தால் சுயாதீனமன அரசியல் பாத்திரத்தை வகிக்க முடியாது என்ற ஊகத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். எம்மை விமர்சிப்பவர்கள், சூறாவழியில் இருந்து உயிர் தப்பிய இலட்சக்கணக்கான பர்மியர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய துன்பத்தை சுட்டிக் காட்டும் அதேவேளை, தமது சொந்த நலன்களுக்காக போராடுவதற்கு தலையீடு செய்யும் சக்தி படைத்த சுயாதீனமான சமூக சக்தியாக பர்மாவில் உள்ள உழைக்கும் மக்கள் முன்னேற்றம் அடைவதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் வறுமையால் பீடிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள், வழமையாகவே துன்பத்தை ஏற்றுக்கொள்கின்ற பொருளாகவும் அணுதாபத்துக்கு உரியவர்களாகவும் நடத்தப்படுகிறார்களே அன்றி, தங்களுடைய சொந்த உரிமைகளுக்காக அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களாக கருதப்படுவதில்லை.

பர்மிய மக்களை உண்மையாக விடுதலை செய்யக்கூடிய ஒரே ஒரு சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டை ''யதார்தம் அற்றது'' எனவும் நிராகரிக்கின்றார்கள். இறுதி ஆய்வில், வறுமைக்கும் ஒடுக்குமுறைக்கும் காரணமாக இருப்பது, தற்போதைய ஜுண்டா ஆட்சி மாத்திரம் அன்றி, நூறாண்டுக்கும் மேலான காலனித்துவ ஆதிக்கமும் மற்றும் பின்னர், இப்போது மீண்டும் நுழைந்துகொள்ள முயற்சிக்கும் இதே ஐரோப்பிய, அமெரிக்க ஏகாபத்திய சக்திகளின் சுரண்டலுமே ஆகும்.

உலக சோசலிச வலைத் தளம் பர்மிய இராணுவ ஆட்சியை அகற்றுவதை சந்தேகமின்றி ஆதரிக்கின்றது. ஆனால் அது எவ்வாறு நிகழவேண்டும் மற்றும் அங்கு பதீலீடு செய்யப்படவேண்டியது என்ன என்பதில் அலட்சியமாக இருக்கவில்லை. அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் விரும்புகின்ற பதிலீடு, சூகியையும் மற்றும் அவரது என்.எல்.டி ஐயும் பதவியில் அமர்த்துவதாகும். இது எந்த வகையிலும் தொழிலாளர்களுக்கும் கிராமப்புற ஏழைகளுக்கும் முன்னேற்றமான நடவடிக்கை அல்ல. என்.எல்.டி. ''ஐனநாயகம்" என்ற பெயரில், பர்மாவை வெளிநாட்டு மூலதனத்திற்காக திறந்துவிட முயற்சிக்கும் பர்மிய முதலாளித்துவத்தின் ஒரு தட்டை பிரதிநிதித்துவம் செய்கிறது. பர்மிய மக்கள் முகம் கொடுக்கின்ற சமூக, பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கு பதிலாக, நாட்டை புதிய மலிவு உழைப்புக் களமாக மாற்றுவதானது தவிர்க்க முடியாதபடி செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமூகப் பிளவை ஆழமாக்கும்.

ஜுண்டாவுக்கு எதிராக இளைஞர்கள், தொழிளாளர்கள் மற்றும் விவசாயிகளை அணிதிரட்டுவதற்கு தீவிரமாக தயங்கும் என்.எல்.டி., அத்தகைய இயக்கங்கள் வெடிக்கும் ஒவ்வொரு சமயத்திலும், ஒரு அரசியல் தடையாக தொழிற்படுகின்றது. 1988ல் இராணுவ ஆட்சியை தனது காலடிக்கு கொணர்ந்த பரந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியிலும், இரண்டு வருடங்களுக்கு பின்னர் தேர்தலை நடத்தும் முடிவுக்கு பிரதியுபகாரமாக எழுச்சியை முடிவுக்கு கொண்டுவர உடன்பட்டதன் மூலம் இராணுவ ஜெனரல்களுக்கு சூகி உயிர் கொடுத்தார். நிலைமையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஜுண்டா, தேர்தல் முடிவை நிராகரித்ததோடு என்.எல்.டி. தலைமையை தடுப்புக்காவலில் வைத்தது.

கடந்த செப்டெம்பரில், இராணுவ ஆட்சிக்கும், அது விலைவாசி மானியங்களை அகற்றியதற்கும் மற்றும் அதன் ஐனநாயக விரோத நடவடிக்கைக்கும் எதிராக, பத்தாயிரக்கணக்கான பர்மியர்கள் வீதிக்கு இறங்கினர். ஆனால், 1988ல் போன்று வேலை நிறுத்தம் எந்தவகையிலும் விரிவடைவதை தடுப்பதற்கு என்.எல்.டி. செயற்பட்டது. ஆனால் என்.எல்.டி. யின் கோரிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்ட சீர்திருத்தத்திற்காக பர்மிய இராணுவத்திடம் கோழைத்தனமான வேண்டுகோள் விடுப்பதாக இருந்தன. ஜுண்டாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு இந்த எதிர்பை சுரண்டிக்கொண்ட அதே நேரத்தில், இராணுவத்தை போல் என்.எல்.டி. யும் முதலாளித்துவ ஆட்சியை அச்சுறுத்துகின்ற எந்தவொரு கிளர்ச்சி இயக்கத்தையிட்டும் பீதியடைந்துள்ளது.

இன்று என்.எல்.டி. அதன் சார்பில் தலையிடுமாறு பர்மிய மக்களுக்கு அன்றி சர்வதேச சமூகத்திற்கே வேண்டுகோள் விடுக்கின்றது. மே 10ம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கை பிரகடனம் செய்வதாவது: "மக்களால் அதிகாரம் அளிக்கப்பட்ட ஐனநாயகத்திற்கான தேசிய கழகம் ஆகிய நாம், மனிதாபிமான உதவிகளையும் நிபுணர்ளையும் அனுப்பி, பர்மாவில் நிவாரண மற்றும் காப்பாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கிடைக்கக்கூடிய எல்லா வழிவகைகளையும் பிரயோகிக்குமாறு மீண்டும் ஒரு முறை ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுகின்றோம்.'' "கிடைக்கக்கூடிய எல்லா வழிவகைகளையும்'' பாவிப்பது -வெளிநாட்டு இராணுவ படைகள் உட்பட- தமது சொந்த ஆட்சியை ஏற்படுத்துவதற்கான முயற்சிக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்க முடியும் என என்.எல்.டி. தெளிவாக நம்புகின்றது.

ஒரு எதிர் கட்சி தம்மை ஆட்சிக்கு கொண்டுவர உதவுவதற்கு "சர்வதேச சமூகத்திற்கு" அழைப்பு விடுப்பதற்காக சாதாரண மக்களின் துயரங்களை சுரண்டிக்கொள்வது இது முதல் தடவையாக இருக்க முடியாது. 1999ல் சுதந்திர ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தோனேஷிய சார்பு படைகள் வன்முறையில் ஈடுபட்ட போது, கிழக்கு தீமோரிய தலைமைகளான செனான குஸ்மாவோ மற்றும் ஜொசெ ராமோஸ் ஹொட்ராவும் தமது ஃலன்டில் போராளிகளை பாசறையில் இருக்குமாறு வலியுறுத்தி, பின்னர் வெளிநாட்டு இராணுவத் தலையீட்டுக்கும் சர்வதேச உதவிகளுக்கும் அழைப்பு விடுக்கவும் மற்றும் தமது சொந்த அரசியல் குறிக்கோள்களுக்கு ஆதரவாகவும் இந்த வன்முறையை பயன்படுத்திக்கொண்டது.

பர்மாவில் உள்ள தற்போதைய பேரழிவுக்கு இலகுவான அல்லது விரைவன தீர்வு கிடையாது. அதனை ஜுண்டாவினாலோ அல்லது பேரரசுகளினாலோ தீர்க்க முடியாது. ஏகாதிபத்தியத்தை தூக்கிவீசி, கம்பனிகளின் இலாபத்திகாக அன்றி மனித தேவைக்காக சமூகத்தை மாற்றியமைப்பதை நோக்கமாக கொண்ட, சர்வதேச தொழிலாளவர்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கம் ஒன்றின் தலையீட்டின் ஊடாகவே அதனை தீர்க்கமுடியும். ஏகாதிபத்தியங்களின் எந்தவொரு தலையீடும் புதியதும் மோசமானதுமான அழிவுக்கே களம் அமைக்கும்.

சோசலிசத்திற்கான நடிப்பு

TR என்ற இன்னுமொருவர் தெரிவிப்பதாவது: ''எனவே பர்மிய அரசாங்கத்தின் கொடூரம் பற்றிய உங்களது விளக்கங்கள் நீங்கள் சோசலிசத்திற்கு ஆதரவு திரட்டுகிறீர்கள் என்ற உண்மைக்கு எதிராக உங்களை நிறுத்தும் என நீங்கள் நினைக்கின்றீர்கள். மேற்கு நாடுகள் பர்மாவுக்கு உதவியை அணுப்புவது தொடர்பாக நீங்கள் கரிசனை காட்டுவது, ஒரு முறை பிழையாய் போன சோசலிச பரிசோதனையின் அழிவில் இருந்து முதலாளிகள் மீண்டும் எழுவதற்கு வழிவகுப்பதாலேயே ஆகும். பர்மிய மக்கள் பட்டினியால் இறந்தாலும், பர்மாவில் மீண்டும் முதலாளித்துவம் நிலைபெறுவதை பற்றியே நீங்கள் கவலைப்படுகிறீர்கள்." TR பொதுவில் சோசலிஸ்ட்டுகளுக்கு எதிராகவும், குறிப்பாக கார்ல் மார்க்சுக்கு எதிராகவும் வசைமாரி பொழிகின்றார்.

முதலாவதாக, பர்மா ''சோசலிச பரிசோதனை பிழையாய் போன'' நாடு அல்ல. மூன்றாவது உலக நாடுகள் என்று சொல்லப்படுவனவற்றில், 1950களிலும் 1960களிலும் பொதுவானவையாக இருந்த, உயர்ந்த மட்டத்தில் ஒழுங்குபட்டு பாதுகாக்கப்ட்ட முதலாளித்துவ வடிவத்தில் எஞ்சியுள்ள ஒருசில உதாரணங்களில் ஒன்றாகும். 1962ல் அமைக்கப்பட்ட பர்மிய இராணுவ ஆட்சிக்கும் சோசலிசத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இருக்கவில்லை. அந்தக் காலத்தின் ஏனைய பல தேசிய தலைவர்களைப் போல், ஜெனரல் நீ வின்னும் மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பதன் பேரில் தன்னுடைய கொள்கைகளுக்கு ''சோசலிசத்திற்கான பர்மிய வழி'' என்ற ஆடையை உடுத்த நிர்ப்பந்திக்கப்பட்டார். அதே சமயம், அவர் தொழிலாள வர்க்கம், பலவித சிறுபான்மை இனங்கள் மற்றும் பர்மிய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிவுகளில் இருந்தும் எழுந்த எதிர்ப்பை இரக்கமின்றி நசுக்கினார்.

சோசலிசத்திற்கு ஆதரவு திரட்டுவதற்காக உலக சோசலிச வலைத் தளத்தின் அரசியல் தகவமவை மறைப்பதாக அதை குற்றம் சாட்டுவது கடினமாகும். நாங்கள் உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அனைத்துலக சோசலிசத்திற்கான போராட்டத்தை வெளிப்படையாக பரிந்துரைக்கின்றோம். சூறாவளி, பூமி அதிர்ச்சி, சுனாமி ஆகியன இயற்கை சம்பவங்களாக இருக்கும் அதேவேளை, அவற்றால் ஏற்படுத்தப்படும் அழிவானது, உலக சனத்தொகையின் அதி பெரும்பான்மையானவர்களின் நலன்களுக்கு மேலாக லாபத்தையும் வசதியையும் முன்நிறுத்தும் சமூக ஒழுங்கின் விளைவே ஆகும். முதலாளித்துவ இலாப அமைப்பினதும் மற்றும் பூகோளம் பூராவும் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் தொழில் நிலைமைகளை கீழ்நோக்கித் தள்ளுவதற்காக பிரமாண்டமான மலிவு உழைப்பு படையை அது பராமரிக்க வேண்டி தேவையினதும் நேரடி உற்பத்தியே பர்மாவின் பொருளாதார பின்னடைவாகும்.

உலக சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு சில இலகுவான பதிலீடுகள் உள்ளன என நம்புகின்றவர்கள், 20ம் நூற்றாண்டின் வரலாற்றை கவனமாக படிக்க வேண்டும். சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை விட்டுக்கொடுத்து ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்து போன அரசியல் கட்சிகள், வேலைத்திட்டங்ள் மற்றும் தலைமைத்துவங்களால் உருவாக்கப்பட்ட அழிவுகளால் 20ம் நூற்றாண்டு குப்பைகூழமாகியுள்ளது. இந்த வரலாற்றின் அரசியல் படிப்பினைகள், சகலவிதமான சந்தர்ப்பவாதங்களுக்கும் எதிராக அனைத்துலக ட்ரொட்ஸ்கிச இயக்கம் முன்னெடுத்த போராட்டத்தில் உள்ளடங்கியுள்ளன. அந்த அரசியல் படிப்பினைகளே தூய்மையான சோசலிசத்தின் மறுபிறப்புக்கு அடித்தளம் அமைக்க வேண்டும். பர்மாவிலான அழிவு பற்றி கரிசினை உள்ள இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் எல்லா உழைக்கும் மக்களும் இந்த இயக்கத்திலேயே இணைய வேண்டியது கட்டாயத் தேவையாக உள்ளது.