World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

New Australian prime minister pledges support for US alliance and Afghan war

புதிய ஆஸ்திரேலிய பிரதம மந்திரி அமெரிக்க கூட்டுக்கும் ஆப்கானிய போருக்கும் ஆதரவை உறுதியளிக்கிறார்

By Peter Symonds
3 July 2010

Back to screen version

கடந்த வார தலைமைச் சதியை அடுத்து, ஆஸ்திரேலிய தொழிற் கட்சி அரசாங்கத்தின் பிரதம மந்திரி ஜூலியா கில்லர்டின் தலைமையில் வெளியுறவுக் கொள்கையின் தொடர்ச்சி இருக்கும் என்பதை வலியுறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு அமெரிக்க-ஆஸ்திரேலியக் கூட்டிற்கு ஆதரவை உறுதி கொடுத்ததுடன் ஆப்கானிஸ்தானில் நடக்கும் அமெரிக்கத் தலைமையிலான போரில் ஆஸ்திரேலிய ஈடுபாட்டிற்கும் உறுதி அளித்தார்.

ஜூன் 24ம் தேதி பிரதம மந்திரி என்னும் முறையில் தன்னுடைய முதல் செய்தியாளர் கூட்டத்தில் கில்லர்ட் அரசாங்கம் “நம் நாட்டிற்கு மிகவும் முக்கியமான அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடனான கூட்டுக்களுக்கு அவருடைய அரசாங்கம் பெருமதிப்பு அளிக்கும்” என்று அறிவித்தார். மறுநாள் ஒரு 20 நிமிடத் தொலைபேசிப் பேச்சின்போது அவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம் தொழிற் கட்சி அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு பங்களிக்கும் என்றும் உத்தரவாதம் அளித்தார்.

ஒபாமா மோதலை அதிகரித்து இறப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ள நேரத்தில் கில்லர்ட் ஆப்கானிய போருக்கு ஆதரவு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஜூன் மாதம் இறந்த வெளிநாட்டுத் துருப்புக்கள் போரிலேயே மிக அதிகமான 102 என்று ஆனதுடன், ஜூன் 2009 ல் இருந்ததைவிட இரு மடங்கு அதிகமாகும். கில்லர்ட் பதவியேற்ற அதே வாரத்தில் மூன்று ஆஸ்திரேலிய கமாண்டோக்கள் அவர்களுடைய ஹெலிகாப்டர் தரையில் மோதியதில் கொல்லப்பட்டு, மொத்த இறப்பு எண்ணிக்கை 16 இற்கு உயர்ந்தது. கருத்துக் கணிப்புக்களின்படி, ஆஸ்திரேலிய மக்களில் பாதிக்கும் மேலானவர்கள் போரை எதிர்ப்பதுடன் படைகள் திரும்பப்பெற வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.

ஒபாமாவுடன் பேசிய பின்னர், கில்லர்ட் மிகவும் உற்சாகமாக இருந்தார். கடந்த வெள்ளியன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாடல் ஒரு “பெரும் மதிப்பையும், சிறப்பையும் கொடுத்தது” என்றார். ஆஸ்திரேலியாவின் அமெரிக்காவுடனான “நீடித்த மூலோபாயக் கூட்டை” மீண்டும் வலியுறுத்தும் வகையில், மீண்டும் பின்வருமாறு கூறினார்: “(ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதை) நான் தற்போதைய நிலையை முற்றிலும் ஆதரிக்கிறேன்.” இக்கருத்தை அடிக்கோடிடும் வகையில், அன்றே பின்னேரம் அவர் ஆஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்க தூதரான Jeffrey Bleich ஐ சந்தித்து காமெராக்களுக்காக முத்தங்களைப் பகிர்ந்து “அமெரிக்க அரசியல் பால் தான் பெரும் ஈடுபாடு கொண்டுள்ளதாகவும்” அறிவித்தார்.

இதே செய்திதான் திங்களன்று வெளியுறவு மந்திரி ஸ்டீபன் ஸ்மித்தினாலும் வளங்கப்பட்டது. அவர் வெளியேற்றப்பட்ட பிரதம மந்திரி கெவின் ரூட்டை அப்பதவிக்கு நியமிக்கலாம் என்ற ஊகங்கள் வந்திருந்தபோதிலும், அவருடைய பதவியிலேயே தொடர்ந்து உள்ளார். வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைகளில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று விரைவில் கூறிய அவர், “அவற்றில் ஆசிய பசிபிக்கில் ஈடுபாடு, அமெரிக்காவுடன் கூட்டு, மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்புகள் ஆகியவை அடங்கும்” என்றார்.

செய்தி ஊடகம் சுரங்கத் தொழிலில் கொழுத்த இலாபத்திற்கான வரிகள் மீது அதிக அளவு விவாதங்களைக் கொண்டிருந்தாலும், பல பகுப்பாய்வாளர்களும் கில்லர்ட் தொழிற் கட்சியின் “இடது” என அழைக்கப்படும் பிரிவுடன் கொண்டு கூட்டு வெளியறுவுக் கொள்கையில் எந்த மாற்றத்தையும் பிரதிபலிக்காது என்றும் இந்த ஆட்சி ஆஸ்திரேலிய ஏகாதிபத்திய நலன்களைத் தொடர நம்பப்படலாம் என்று கூறியுள்ளனர். சிலர் கில்லர்ட், ரூட்டை விட வரவேற்கத்தக்க மாற்றம் என்றும், ரூட் ஒரு முன்னாள் தூதராகவும் சீன மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் உறவுகளை, குறிப்பாக சீனாவுடன், கசப்பாகச் செய்துவிட்டார் என்றனர்.

வியாழனன்று “வெளிவிவகாரங்களில் தொடர்ச்சி, ஆனால் கேள்விகள் நிலைத்துள்ளன” என்னும் தலைப்புடைய கட்டுரையில் மர்டோக்கின் Australian இதழின் வெளிநாட்டுப்பிரிவு ஆசிரியர் கிரெக் ஷெரிடன், “குறைந்த பட்சம் தேர்தல் முடியும் வரை பல விதங்களில் கில்லர்ட் இன்னும் கன்சர்வேடிவ் ஆகவும், ஆனால் சிறிய சி முதலெழுத்து உடையவராகவும் ரூட்டை விட இருப்பார். ரூட்டையும் பிற வெற்றிகர ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளைப் போல் கில்லர்ட் முற்றிலும் அமெரிக்க கூட்டிற்கு உறுதியுடன் இருப்பவர்” என்று எழுதியுள்ளார்.

தொழிற் கட்சியின் “இடது” என்னும் அங்கத்துவம், குறிப்பிடத்தக்க வகையில் அமெரிக்க உடன்பாட்டுடன் சந்தேகம் கொண்டிருந்தது, பிரதம மந்திரியாவதற்கு ஒரு தடையாக இருந்தது. ஆனால், “துணைத் தலைவராக ஆனதில் இருந்தே கில்லர்ட் கெட்டிக்காரத்தனமாகவும், திறமையுடன் தன் மீது இருந்த அந்த தடுப்பதிகாரத்தை அகற்றிவிட்டார். குறிப்பாக ஆஸ்திரேலிய அமெரிக்கத் தலைமை உரையாடல் அமைப்பு இன்னும் இஸ்ரேலுடனான அத்தகைய உரையாடல் அமைப்பு போன்றவற்றில் கலந்து கொண்டவிதத்தில் இதை அகற்றினார்.” என்று ஷெரிடன் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஒரு கணிசமான அளவிற்கு கில்லர்ட் “ரூட்டை விடத் தைரியமாக தன் கட்சியின் இடது பிரிவை வீழ்த்துவதில் ஊக்கமாக பார்க்கிறார்” என்று ஷெரிடன் பாராட்டும் விதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலிய இஸ்ரேல் தலைமை பற்றி அரங்கில் 2008ல் இவர் அதிகப் பங்கு பெறவில்லை என்ற குறைகூறலைக் குறிப்பிட்டு ஷெரிடன் எழுதினார். “ஆனால் அவர் அதை மீறி, ஜெருசலத்தில் King Davi Hotel இல் ஆஸ்திரிலேய இஸ்ரேல் நட்பைக் கொண்டாடியது மட்டும் இல்லாமல், இரு நாடுகளின் பொது மதிப்புக்கள் பற்றியும் அருமையான உரை ஆற்றினார். காசாமீது இஸ்ரேல் நடத்திய 2008-09 கொலைகாரப் போருக்கு கில்லர்ட் கொடுத்த ஆதரவு பற்றியும் ஷெரிடன் புகழ்ந்துதான் எழுதியுள்ளார். துணை பிரதம மந்திரி என்னும் முறையில், அவர், “ஒவ்வொரு நாளும் உறுதியுடன் பெரும் வர்ணனையாளர் தொகுப்பின் பெரும் விரோதப் போக்கிற்கு எதிராக இஸ்ரேலின் சுய பாதுகாப்பு உணர்விற்கு ஆதரவு கொடுத்தார்.”

இதற்கு மாறாக, இஸ்ரேலிய தூதர் ஒருவர் துபாய் படுகொலைச் செயலில் கடந்த ஜனவரி மாதம் பொய் ஆஸ்திரேலிய கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தியற்கு சமீபத்தில் வெளியேற்றப்பட்டது, உள்நாட்டு அரசியலில் ரூட்டிற்கு பெரும் தீமையை அளித்த ஒற்றை வெளியுறவுப் பிரச்சினையாக இருந்திருக்கும்” என்று ஷெரிடன் விளக்கியுள்ளார். இக்கருத்து ஆஸ்திரேலிய அரசியலில் பொதுவாகவும் தொழிற் கட்சியில் குறிப்பாகவும் சியோனிச செல்வாக்குக்குழு கொண்டுள்ள செல்வாக்கை உயர்த்திக் காட்டுவதுடன் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் தன் நிலைப்பாட்டை கில்லர்ட் முயன்று வளர்த்தார் என்பதையும் உயர்த்திக் காட்டுகிறது.

“அமெரிக்க கூட்டிற்குத் தன் முழு இசைவை” ஆஸ்திரேலிய அமெரிக்க தலைமை உரையாடல் கூட்டங்களில் கில்லர்ட் கொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டபின், ஷெரிடன் அமெரிக்க கொள்கையை பகிரங்கமாக கடைசி தொழிற் கட்சி தலைவர் குறைகூறியதின் விளைவை குறிப்பாக நினைவுகூருகிறார்: “மார்க் லாதம் ஒரு தலைவர் என்ற முறையில் குறைமதிப்பிற்கு உட்பட்டது தேசியப் பாதுகாப்பு பற்றிய கேள்விகள் முதலில் எழுந்ததால்தான் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். லாதமின் நினைவுக் குறிப்புக்களில் முந்தைய தலைவர் அமெரிக்க உறவுடன் விரோதப் போக்கு உடையது மற்றும் ஆஸ்திரேலிய படையினரின் ஆழ்ந்த பாரபட்ச அணுகுமுறை பற்றியும் வெளிப்பட்டிருந்தன.”

உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி ஷெரிடன் குழப்புகிறார். பரந்திருந்த போர் எதிர்ப்பு உணர்வை பயன்படுத்த, 2004 தேர்தல் பிரச்சாரத்தின்போது லாதம் ஆஸ்திரேலிய துருப்புக்கள் ஈராக்கில் இருந்து திரும்பப் பெறப்பட வேண்டும், நாட்டிற்கு அருகே பயன்படுத்தப்படுவதற்காக, அதாவது ஆஸ்திரேலியாவின் கிழக்கு திமோர் மற்றும் சாலோமன் தீவுகளில் புதிய காலனித்துவ நடவடிக்கைகளுக்காக என்றார். இதற்கு விடையிறுக்கும் வகையில் புஷ் நிர்வாகம் ஆஸ்திரேலிய உள்நாட்டு அரசியலில் அசாதாரணமான தலையீட்டைச் செய்தார். ஜனாதிபதி புஷ், துணை ஜனாதிபதி டிக் சென்னி மற்றும் உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் பகிரங்கமாக ஆஸ்திரேலிய படைகள் திரும்பப் பெறப்படுவது “பேரழிவைக் கொடுக்கும்”, மேலும் அமெரிக்க-ஆஸ்திரேலியக் கூட்டிற்கு ஒரு அச்சுறுத்தலைத் தரும் என்றும் கூறனர். லாதம் விரைவில் நடைமுறையுடன் இணைந்தார், ஆனால் தேர்தலில் தோற்று தொழிற் கட்சித் தலைவர் என்ற நிலையில் இருந்தும் அகற்றப்பட்டுவிட்டார்.

லாதமின் விதி ஆஸ்திரேலிய நடைமுறை அரசியலில் ஒரு அடிப்படை உண்மையை கொண்டுவந்தது. பிரதம மந்திரி பதவிக்கு எவரேனும் ஆசைப்பட்டால் அதற்கு அடிப்படை முன்தேவை அமெரிக்கக் கூட்டிற்கு நிபந்தனையற்ற விசுவாசம் தேவை என்பதே அது. கில்லர்டை போல் தன்னுடைய தொழிற் கட்சி தலைவர் என்ற முறையில் தன் முதல் செய்தியாளர் கூட்டத்தில் ரூட் அமெரிக்க-ஆஸ்திரேலியக் கூட்டிற்கு “கல் போன்று உறுதியைக்” கொண்டுள்ளதாக கூறினார். ஈராக்கில் இருந்து போர்த்துருப்புக்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று அவர் அழைப்புவிடுத்தாலும், பல முறையும் அந்த வழிவகை படிப்படியாகத்தான், நம் நட்பு நாடுகள் ஆலோசனையுடன் நடக்கும் என்று பலமுறை வலியுறுத்தினார்.

கடந்த வாரத் திடீர் சதி பற்றி வாஷிங்டன் முன்கூட்டியே அறிந்து, முன்னதாகவே கில்லர்ட் பற்றி இசைவு கொடுத்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. அமெரிக்கா இன்னும் நேரடிப் பங்கு கூட கொண்டிருந்திருக்கும் என்பதும் ஏற்கத்தக்கதே ஆகும். ஜனாதிபதி ஒபாமா இந்த ஆண்டு ஆஸ்திரேலிய வருகையை இருமுறை இரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டின் அவசரப் பிரச்சினைகளை ஒபாமா எதிர்கொண்டார் என்பதில் ஐயம் இல்லை-முதலில் அவருடைய உடல்நிலைக் குறைவு இருந்தது, இரண்டாம் முறை வளைகுடா எண்ணெய் பேரழிவு நடந்தது. ஆனால் அதே நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒரு தேர்தல் ஆண்டில் ரூட்டிற்கு ஒரு முக்கியமான வருகை என இருந்திருக்கக்கூடிய செயலை மேற்கொள்ள ஜனாதிபதி குறிப்பிடத்தக்க வகையில் முயற்சி ஏதும் கொள்ளவில்லை. ஒரு பிரச்சினை தெளிவாகிறது. அமெரிக்கா ஒருமுறைக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியா கூடுதல் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளது; ஆனால் அதற்கு மூக்குடைப்புத்தான் கிடைத்தது.

பதவியின் முதல் வாரத்தில் கில்லரட் அனைத்துச் செயல்களையும் திறம்பட செய்துள்ளார். ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்த அரசாங்கங்களை தொல்லைக்கு உட்படுத்தியுள்ள ஆழ்ந்த சங்கடம் பற்றி அவர் இன்னும் ஏதும் கூறவில்லை-ஆஸ்திரேலியாவின் பூகோளமூலோபாயம், அமெரிக்கா பற்றிய இராணுவக் கூட்டு ஒரு புறமும், ஆசியாவில் இது கொண்டுள்ள பெருகிய நம்பிக்கை நிலை, குறிப்பாக சீனாவுடன் என்பது மறுபுறத்திலும் உள்ளது. அந்தச் சமசீர்படுத்த வேண்டிய செயல் வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே அழுத்தங்கள் பெருகிய நிலையில் இன்னும் ஆபத்தாக உள்ளது. சீனாவோ ஆஸ்திரேலியாவின் தற்போதைய மிகப் பெரிய வணிகப் பங்காளி ஆகும்.

இந்தச் சிக்கலை தீர்க்கும் விதத்தில் ரூட் தன்னையும் ஆஸ்திரேலியாவையும் பிரச்சினை தீர்க்கும், சமாதானம் கொண்டுவரும் ஆற்றல் உடையவை எனக் காட்டிக்கொள்ள முன்வந்தார். ஆசிய-பசிபிக் சமூகம் நிறுவப்பட வேண்டும் என்று கூறிய அவர், அதில் சீனாவும் அமெரிக்காவும் இருக்க வேண்டும் என்றார்; அது பிளவுகளை தீர்க்க ஒரு அரங்கம் அமைக்கும் என்றார். ஆனால் ரூட்டின் பெரும் திட்டம் அது தீர்க்க விரும்பிய அழுத்தங்களின் பாதிப்பாகவே போய்விட்டது. சீனாவின் ஆதரவிற்கு உட்பட்ட ASEAN எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம், பிராந்தியத்திலேயே முக்கிய அமைப்பாகப் போய்விட்டது -இது அமெரிக்காவை ஒரு புறமாக ஒதுக்கியதுடன், ஆசிய பசிபிக் சமூகம் என்ற ரூட்டின் திட்டத்தை அநேகமாக ஒன்றுமில்லாமலும் செய்துவிட்டது

ஆனால் கில்லர்ட் பெரிதும் தவிர்க்க விரும்பினாலும், “சீன காரணி” எளிதில் தீர்க்கப்பட முடியாத பிரச்சினை ஆகும். ஏற்கனவே ரூட் வெளியுறவு மந்திரிப் பதவியை விரும்பிது பற்றிய விவாதத்தில் வெளிப்பட்டது. தன்னுடைய கட்டுரையில் அமெரிக்கக் கூட்டிற்கு வலுவான ஆதரவு கொடுக்கும் ஷெரிடன் கில்லர்டை ரூட்டிற்கு உடனே வேலை கொடுக்கத் தவறியதற்கு சாடியுள்ளார். ஆனால் மற்ற வர்ணனையாளர்கள் இப்பொழுதும் வருங்காலத்திலும் அவர் நியமிக்கப்படுவதை எதிர்த்துள்ளனர்-ஆசியாவில் அவர் தோல்வியுற்றதை உயர்த்திக் காட்டுகின்றனர்.

தற்செயல் என்றில்லாமல், குறிப்பிடத்தக்க வகையில் கடுமையான ஆட்சேபனைகள் Business Spectator ன் Robert Gottliebsen இடம் இருந்து வந்துள்ளது. அந்நாளேடு சீனாவிற்கு விற்பனையை அதிகம் நம்பியுள்ள சுரங்க நிறுவனங்கள் மீது கொழுத்த வருமானத்திற்கான வரிகளை எதிர்த்துள்ளது. “ரூட்டை அமைச்சராக ஏன் கில்லர்ட் நியமிக்கக்கூடாது?” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் Gottiebsen முதலில் அதிக நம்பிக்கைகள் இருந்தன என்று குறிப்பிட்டார். “கெவின் ரூட் பிரதம மந்திரியானவுடன், சீனாவுடன் ஆஸ்திரேலிய உறவுகள் அதிகமாகும், அதுவும் சீன மொழியான மந்தாரினை சரளமாகப் பேசும் திறனை இவர் கொண்டுள்ளதால்” என்று நினைத்தோம்.”

ஆனால் நெருக்கமான உறவுகளும் பெரும் ஆதாயம் தரும் பொருளாதார வாய்ப்புக்களும் ஏற்படவில்லை. “மந்தாரினை சரளமாகப் பேசும் தன் திறனை மனித உரிமைகள் பற்றி ஆஸ்திரேலிய கண்ணோட்டம் பற்றி பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் பேசுவதற்குத்தான் ரூட் பயன்படுத்தினார். அது சீனத் தலைமைக்கு அதிக எரிச்சலை ஊட்டியது. பின்னர், நம்முடைய பாதுகாப்பு பற்றிய வெள்ளை அறிக்கை ஆசியாவில் பெயரிடப்படாத நாடு ஒன்றைக் குறிப்பிட்டது; அது நம் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் சாத்தியம் கொண்டதாக எழுதப்பட்டது. இந்த பெயரிடப்படாத நாடு சீனாவாகத்தான் இருக்க முடியும். சீனத்தலைமை இந்நிகழ்வுகள் பற்றி கடும் சீற்றம் கொண்டது; மேலும் ரூட்டின் பிற நடவடிக்கைகள் பற்றியும் சீற்றம் கொண்டது. ஆஸ்திரேலியாவிற்கு வந்திருந்த வணிகர்கள் ரூட் இருக்கும்போதே குழுக்களில் (இதுபற்றி) பேசினர்” என்று Gottiebsen எழுதியுள்ளார்.

கோபன்ஹெகனில் வெப்பமாதல் பற்றிய உச்சிமாநாட்டில் உறவுகள் குறைந்த மட்டத்தை அடைந்தன. ETS எனப்படும் வெளிவருதல் வணிகத்திட்டத்தை செயல்படுத்துவது பற்றி ரூட் அதிக அரசியல் ஆதாயம் பெற விரும்பினார். ஆஸ்திரேலியாவை ஆசியாவில் அதிக இலாபம் தரும், விரிவாக்கமடைந்து கார்பன் வணிச் சந்தையை நிலைநிறுத்த முயன்றார்; இதற்கான உடன்பாடு கோபன்ஹேகனில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரூட்டின் திட்டங்கள், உள்நாட்டில் சுரங்க நிறுவனங்களாலும், எரிபொருள் செல்வாக்கு குழுக்களாலும் எதிர்க்கப்பட்ட, அமெரிக்கத் திட்டங்களை சீனா குறிப்பாக எதிர்த்த விதத்தில், தடுமாற்றத்தை அடைந்தன. பெரும் ஏமாற்றத்திற்கு உட்பட்ட ரூட் இதுபற்றி அதிகாரிகள், செய்தியாளர்கள் குழு ஒன்றில், “அந்தச் சீன எலி……. நம்மை எலி……என்கின்றது.” என்றார்.

Gottiebsen குறிப்பிட்டபடி, ரூட் சமீபத்தில் சீனாவின் வருங்கால அதிபராக வரக்கூடிய, தற்பொழுது துணை ஜனாதிபதியாக உள்ள ஜி ஜின் பிங்கை ஆஸ்திரேலியாவிற்கு வருமாறு அழைத்து உறவுகளைச் சீராக்க முயன்றார். இது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவுகளில் “ஒரு புத்துணர்ச்சியை உட்செலுத்தும் அரங்காக அமையும் என்றும் நினைத்தார். Austrialian ஒரு China Daily தலையங்கம் பற்றி கவனத்தைச் செலுத்தியது; அதில் தலைமை மாற்றம் என்பது “இரு சக்திகளுக்கும் இடையே தொடர்புகளை இனிதாக்கலாம்” என்று அறிவித்திருந்தது. இத்தலையங்கம் “சீன இராஜதந்திர, வணிக வட்டங்கள் திரு.ரூட் பெய்ஜிங்கில், அவருடைய சீன மொழித் தேர்ச்சி இருந்தாலும் அதிகம் மதிக்கப்படவில்லை என்றும் அங்கு அவர் தந்திர, இரட்டை முகம் உடையவர் என்றும் அழைக்கப்பட்டார் என்று எழுதியுள்ளது.

ஒரு வாரத்திற்கு சற்று அதிகம் பதவியில் இருந்துள்ள நிலையில், கில்லர்ட் அரசாங்கத்தின் கீழ் வெளியுறவுக் கொள்கையில் “தொடர்ச்சி” பற்றி சாதகமான கருத்துக்களைத்தான் செய்தி ஊடகங்கள் கூறியுள்ளன. ஆனால் அவை அடையாளம் காட்டக்கூடியது, தீவிரப் போட்டிகளில் இருக்கும் உலக அரங்கில் கில்லர்டின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது அதிகம் தெளிவாக இல்லை.