World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The mass repression at the G20 summit in Toronto

டொரோன்டோவில் G20 உச்சிமாநாட்டின் போது பரந்த அளவிலான அடக்குமுறை

David Walsh
30 June 2010

Back to screen version

G20 உச்சிமாநாடு நடந்து கொண்டிருந்த டொரோன்டோவில் கடந்த வார இறுதியில் அதிகாரிகள் நடத்திய வன்முறை மற்றும் பரந்தளவிலான அடக்குமுறையானது ஒரு பொலிஸ் அரச வடிவத்திற்கான தகுதியைக் கொண்டிருந்தது. பாதுகாப்புப் பிரிவினர் ஒரு பெரும் படையென, சீருடை தரித்தும், சாதாரண உடை அணிந்தும், ஒரு முக்கிய உலக நகரமான டொரோன்டோ நகர முக்கியப் பகுதியைப் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, வலதுசாரி இதழான Toronto Sun கட்டுரையாளரின் சொற்களில், “இராணுவச் சட்ட” நிலைமைகளை தோற்றுவித்தனர்.

பொலிஸ் நடவடிக்கையானது உச்சிமாநாட்டின் பிரதிபலிப்பாக அரசாங்கங்களின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களால் பெரும்பாலும் அமைதியாக இருந்த அணியை வன்முறையாக அடக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாகவே, முன்கூட்டியே எதிர்ப்பிற்கான தலைவர்கள் எனக்கூறப்பட்டவர்களை பொலிசார் கைதுசெய்துவிட்டனர். இந்தப் பெரும் அரசாங்க நடவடிக்கை அடிப்படை பேச்சுரிமை, ஒன்றுகூடும் உரிமை ஆகியவற்றின் மீது ஒரு திமிர்த்தன தாக்குதல் ஆகும்.

சனிக்கிழமை “கறுப்பு அணி” அனார்க்கிஸ்டுகள் என்று கூறப்பட்டவர்கள் பெருமளவு ஜன்னல்களை உடைத்த நிகழ்வு, அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆத்திரமூட்டல் என்ற தன்மையைக் காட்டியிருந்தது, ஏராளமான பேர் கைது செய்யப்படவும், அடிக்கப்படவும் ஒரு போலிக்காரணமாக அது ஆயிற்று. அடுத்த 36 மணி நேரங்களில் CCIA எனப்பட்ட கனடிய சிவில் உரிமைகள் சங்கம் கூறியபடி “900 பேர் (ஒருவேளை 1,000 என்று கூட இருந்திருக்கலாம்), பொலிசாரால் கைது செய்யப்பட்டனர் —இது கனேடிய வரலாற்றிலேயே மிக அதிக பரந்தளவிலான கைது ஆகும். செய்தி ஊடகம், மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள், எதிர்ப்பாளர்கள், அப்பக்கம் சென்று கொண்டிருந்தவர்கள் என்ற அனைவரும் தெருக்களில் இருந்து அகற்றப்பட்டனர். காவலில் வைக்கப்பட்டவர்கள் ஒரு வக்கீலையோ தங்கள் குடும்பத்தினரையோ காண அனுமதிக்கப்படவில்லை. நகர் முழுவதும் பல இடங்களில் ஒருதலைப்பட்ச சோதனைகள் நடத்தப்பட்டன. பல இடங்களில் G20 உச்சிமாநாடு நடந்த இடத்தில் இருந்து தள்ளி இருந்த பகுதிகளிலும் இவை நடத்தப்பட்டன. அமைதியான எதிர்ப்பாளர்கள் வன்முறையினால் கலைக்கப்பட்டனர், அதற்காக பெரும் ஆற்றலும் பயன்படுத்தப்பட்டது. 100-150 குண்டர்களை கைப்பற்றிச் செயலிழக்கச் செய்ய பொலிஸ் ஆயிரக்கணக்கான மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை பொருட்படுத்தவில்லை.”

CCLA அறிக்கை அடக்குமுறைத் தரத்தை குறைவாகவே கூறுகிறது. பலதரப்பட்ட தகவலின்படி, கலகப் பிரிவு சீருடை அணிந்து, வாயுத் தடுப்பு முகமூடிகளையும் அணிந்த பொலிசார் மிகவும் ஆத்திரமூட்டல் தரும் விதத்தில் மிருகத்தனமாக நடந்து கொண்டு, அணிவகுத்துச் சென்றவர்கள், பார்வையாளர்கள் என்று வேறுபாடின்றி அனைவரையும் தாக்கி, ரப்பர் தோட்டாக்களைச் செலுத்தியும், அமைதியான கூட்டங்களில் ஆரவாரத்துடன் நுழைந்து அடித்தும், எதிர்ப்பாளர்களை பொறியில் நிறுத்தி மணிக்காணக்காக மழையில் காத்திருக்க வைத்தும், உணவு, மருந்துகள் கிடைக்காமல் செய்தும், மொத்தத்தில் மிக அடிப்படை உரிமைகளை துன்புறுத்துவதில் இன்பம் காணும் விதத்தில் மிதித்தனர். மக்களுக்கு எதிராக விருப்பப்படி நடந்து கொள்வதற்கு பொலிசாருக்கு பச்சை விளக்கு காட்டப்பட்டிருந்தது.

இது ஒரு நீண்ட வழிவகையின் உச்சக்கட்டம் ஆகும். CBC கருத்துப்படி, “கனேடிய பாதுகாப்பு உளவுத்துறைப்பணி, CSIS, கடந்த 12 முதல் 18 மாதங்களில் G20 கூட்டத்தின்போது “ஒருவேளை ஏற்படக்கூடிய சட்ட மீறல்களுக்கு” உதவுவதற்காக RCMP (கனேடிய அரசு குதிரைப்படைப் பொலிஸ்) உதவக்கூடும் என்ற நம்பிக்கையில் தகவல்களை சேகரித்து வந்தது.” எனத் தெரிகிறது.

ஓர் ஆழ்ந்த ஜனநாயக விரோதச் செயலில், மாநில மந்திரிசபையும் ஜூன் 2ம் திகதி ஒன்டாரியோ பொதுப் பணிகள் 1939 பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொலிசாருக்கு G20 கூட்டம் நடக்கும் இடத்திற்கு வரும் நபர்கள் அடையாள அத்தாட்சி காட்ட வேண்டும், சோதனைக்கு உட்படுத்தலாம், தேவையானால் கைதும் செய்யலாம் என்று அனுமதித்த ஒரு புதிய விதியை இயற்றியது.

எதிர்ப்புக் குழுக்கள் மற்றும் தனிநபர்களை “உச்சி மாநாடு நடப்பதற்கு முன்பும், நடக்கும்போதும்” துன்புறத்தி, மிரட்டினர் என்று டொரோன்டோ செய்தி ஊடக ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. “நான்கு சமூக அமைப்பாளர்கள் நேற்றைய “வன்முறை” ஆர்ப்பாட்டங்கள் தொடங்குவதற்கு பல மணி நேரம் முன்பே தெரிந்தெடுக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, சதிக்காகக் குற்றம் சாட்டப்பட்டனர்” என்று வலைத் தளம் தெரிவிக்கிறது. அமைப்பாளர்களில் ஒருவர் [மற்ற எதிர்ப்பு அமைப்பாளர்களின்] வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளைக் கண்டிப்பதற்கு ஒரு செய்தியாளர் கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தபோது தடுத்துக் காவலில் வைத்தனர்.

இவ்விதத்தில் G20 மாநாட்டிற்கு முன்னதாக ஜனநாயக உரிமைகள் தாக்கப்பட்டதும், கடந்த வார இறுதியில் நடைபெற்ற பெரும் பொலிஸ் நடவடிக்கையும் ‘100 முதல் 150 குண்டர்களை” பிடித்துக் காவலில் வைத்ததும்—இதில் பலர் பொலிஸ் ஏற்பாட்டில் இருந்த ஆத்திரமூட்டுபவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை—50-100 அல் கொய்தா உறுப்பினர்களை பிடித்தல் அல்லது அகற்றுதல் என்பதற்காக ஆப்கானிஸ்தானின் மீது நடத்தும் அமெரிக்கப் போரைப் போல்தான் இருந்தன.

டொரோன்டோ (மற்றும் ஹன்ட்ஸ்வில், ஒன்டாரியோவிலும் G8 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக) நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை, கனேடிய அரசாங்கத்திற்கு 1.2 பில்லியன் டொலர் செலவை ஏற்படுத்தியது. அரசியல் எதிர்ப்பை குற்றவியல் தன்மை உடையதாக மாற்றுதல், எதிர்ப்புக்களை மிரட்டுதல் மற்றும் இன்னும் கூடுதலான அடக்குமுறை நிலைமைகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டிருந்தது.

இது இன்னும் பெரிய செயற்பாடுகளுக்கு ஒரு ஒத்திகை பார்க்கும் தன்மையைக் கொண்டிருந்தது. G20 கூட்டத்திற்கு வெளியே அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை மெட்ரோ டொரோன்டோ மாநாட்டு மையத்திற்குள் நடைபெற்று வரும் கொள்கை விவாதங்களுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்தது. அங்கு உலகம் முழுவதும் இருக்கும் தொழிலாளர்கள் முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு விலை கொடுக்க வேண்டும் என்பதற்கான திட்டங்களை மையமாகக் கொண்டிருந்தன.

தங்கள் குடிமக்களாலேயே பெரும்பாலானவர்கள் இகழ்வுடன் கருதப்படும், கூட்டத்திற்கு வந்திருந்த ஒவ்வொரு அரசாங்கத் தலைவரும் உலகெங்கிலும் உள்ள நூறாயிரக்கணக்கான மில்லியன் மக்களின் வாழ்க்கைத் தரங்களை வெட்டும் நடவடிக்கைகள் கிரேக்க ஆர்ப்பாட்டங்கள் நிரூபித்துள்ளதுபோல சீற்றத்தையும் எதிர்ப்பையும் தூண்டிவிடும் என்பதை நன்கு அறிவர். கடும் சிக்கன நடவடிக்கைகள் அமைதியாகவும், ஜனநாயக முறைப்படியும் செயல்படுத்தப்பட முடியாதவை. அவை இறுதியில் பலத்தை பயன்படுத்தித்தான் சுமத்தப்பட முடியும்.

டொரோன்டோ மையப் பகுதியை இராணுவ முகாம் போல் மாற்றியது, முதலாளித்தவ அரசியல்வாதிகள் தன்னலக்குழுவைக் பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் உலக வங்கியின் தலைவரையும் சேர்த்துக்கொண்டமை உலகளவில் சமூக உறவுகளில் இருக்கும் உண்மை நிலையின் வெளிப்பாடு ஆகும். ஒரு புறத்தில் வங்கியாளர்கள், பெருநிறுவன உயரடுக்கு மற்றும் அவர்களின் அரசியல் எடுபிடிகள், மறுபுறத்தில் மக்களின் பரந்த தட்டுக்கள், தற்போதைய அரசியலில் தெளிவற்றவர்கள், ஆனால் தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் கௌரவமான நிலைக்கு போராட வேண்டும் என்ற உறுதியைக் கொண்டவர்கள் என்ற நிலை காணப்பட்டது.

ஆளும் உயரடுக்கு இந்தக் கட்டத்தில் அதன் நெருக்கடி, அதை ஒட்டி அது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி உயர்ந்த அளவு முழு நனவைக் கொண்டுள்ளது. கனடாவில், வலதுசாரிச் சிறுபான்மை ஸ்டீபன் ஹார்ப்பரின் கன்சர்வேடிவ் அரசாங்கம் ஓன்டாரியோ மாநில டால்டன் மக்கின்டியின் தாராளவாத அரசாங்கம் மற்றும் உள்ளூர் டொரோன்டோ அதிகாரிகளுடன் எதிர்ப்பாளர்களுடன் பெரும் மோதலைச் சந்திக்க பெரும் முயற்சி எடுத்துக் கொண்டனர். அது தங்கள் அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்தப்படலாம் என்று அவர்கள் நம்பியுள்ளனர்.

டொரோன்டோவிற்கு நடுவே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது கூட, ஒரு ஆத்திரமூட்டல் தன்மையைத்தான் பெற்றிருந்தது. நகரம் உலகந்தழுவிய முறை எதிர்ப்பு உணர்விற்கு ஒரு மையமாக இருந்து, வெகுஜன எதிர்ப்பு காட்டப்படல் உறுதியாக நடத்தப்படும் என்பதைக் காட்டியிருந்தது.

Vancouver Sun கட்டுரையாளர் ஒருவர், தான் கூற வேண்டியதை விட அதிகம் குறிப்பிட்டார் என்ற விதத்தில், “கடந்த இலையுதிர்காலத்தில் G20 உச்சிமாநாட்டை டொரோன்டோ மையப்பகுதி போன்ற நெரிசலான இடத்தில் நடத்தும் அரசாங்கத்தின் முடிவு பற்றி” வியப்புக் காட்டியதுடன், “ஏன் ஒட்டாவா தெரிந்தே தொந்திரவு கொடுக்க நினைப்பவர்களுக்கு ஒரு அரங்கு அமைத்துக் கொடுத்தது என்பது புரிந்து கொள்ள முடியவில்லை” என உரத்த சிந்தனையாகத் தெரிவித்துள்ளார். இது ஒரு நல்ல கேள்விதான், ஆனால் இதற்கு ஒரு கபடமற்ற விடை கொடுக்க இயலாது.

நடத்தப்பட்ட வன்முறையே திட்டமிட்டு நடந்தது. ஆயிரக்காணக்கான பொலிசார் இருக்கையில், எவரும் முக்கிய நகர்ப் பகுதியில் இருந்த கடைகள், வங்கிகளைப் பாதுகாக்க இருத்தப்படவில்லை. Ottawa Citizen ல் நேரடிச் சாட்சி எழுதிய கட்டுரை ஒன்று பாதுகாப்பிற்காக 1 பில்லியன் டொலர் செலவழிக்கப்பட்டாலும், “கனடாவின் மிக நீளமான தெருவில் [யாங் தெரு], கனடாவின் மிகப் பரபரப்பான நாற்சந்தியில், பிற்பகல் நடுவே, கூட்டங்களுக்கு இடையே கறுப்பு அணி எனப்படுபவர்கள் குறுக்கும் நெடுக்கும் ஓடி கோடரிகளை எடுத்து கடைகளின் முன் கண்ணாடி ஜன்னல்களை உடைக்க முடிந்த போது போலிஸ் தென்படாமல் போயிற்று? அப்பொழுது பொலிஸ் எங்கிருந்தது?“ என்று கேட்டுள்ளார்.

ஒன்றரை ஆண்டுகளாக G20 க்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களிடைய ஊடுருவிக் கண்காணித்த பொலிசார் தாங்கள் வன்முறையின் அளவைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாகக் கூறுவது நயமற்றதும் தீவிரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதும் வெளிப்படை. அனார்க்கிஸ்டுகளையும் விட அவர்களுடைய திட்டங்களை பொலிஸ் அறிந்திருந்தது என்பதில் ஐயமில்லை. சொல்லப்போனால் இவர்கள் தான் அதை இயற்ற அவர்களுக்கு உதவியிருக்கக் கூடும்.

“கறுப்பு அணி” சக்திகள் வழியில் (அவற்றுள் ஒன்றில் பெட்ரோல் சேமிப்பு மூடி அகற்றப்பட்டிருந்தது எனக் கூறப்படுகிறது), வசதியாக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் கார்கள் எரிக்கப்பட்டது, மற்றொரு சந்தேகத்திற்கு உரிய நிகழ்வு ஆகும். இது முக்கியமாக தேசிய செய்தி நிகழ்ச்சிகளுக்கான நோக்கத்தைக் கொண்டிருந்தது. அனார்க்கிஸ்டுகள் டொரோன்டோ தெருக்களில் “சூறையாடி”ச் செல்லும் காட்சி கனேடிய மக்களில் பின்தங்கிய, கபடமற்ற மக்களைத் தூண்டிவிட்டு அதன் சட்டம்-ஒழுங்கு, தொழிலாள வர்க்க எதிர்ப்புக் கொள்கைகள் பற்றி ஆதரவைப் பெருக்கும் என ஹார்ப்பர் அரசாங்கம் நம்புகிறது.

டொரோன்டோ நிகழ்வுகள் ஒரு தீவிர எச்சரிக்கையாகும். உத்தியோகபூர்வ வன்முறையின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. வரவிருக்கும் கொந்தளிப்பிற்கு எதிராக ஒவ்வொரு நாட்டிலும் அரசுகள் வெகுஜன அடக்குமுறைகளுக்கான திட்டங்களை தயாரிக்கின்றன.

ஒவ்வொரு நாட்டிலும் சமூக உறவுகள் மற்றும் அரசியலை மேலாதிக்கம் கொண்டுள்ள உலகப் பொருளாதார நெருக்கடிதான் மிகவும் உயர்ந்த கட்டத்தில் உள்ளது. அனைத்து வலியுறுத்தல்களும் இப்பொழுது தொழிலாள வர்க்கத்தின் முழு நனவு பெற்ற சோசலிச, சர்வதேச இயக்கத்தை வளர்ப்பதில் இருக்க வேண்டும். அது ஒன்றுதான் பொலிஸ் அரச ஆத்திரமூட்டல்கள் மற்றும் ஆளும் உயரடுக்குகளின் வன்முறைக்கு எதிரான முற்போக்கான விடையிறுப்பாகும்.