World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Tensions high as incumbent wins Sri Lankan presidential poll

இலங்கை ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி வெற்றிபெற்றுள்ள நிலையில் பதட்டம் அதிகரிக்கின்றது

By K. Ratnayake
28 January 2010

Back to screen version

செவ்வாய் கிழமை நடந்த ஜனாதிபதி தேர்தலில் தற்போது பதவியில் இருக்கும் மஹிந்த இராஜபக்ஷ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றும் இலங்கையில் பதட்டமான அரசியல் சூழ்நிலை தொடர்ந்தது. பெரும் இடைவெளியில் வெற்றி பெற்ற போதும், தோல்வியை ஏற்றுக்கொள்ளாத எதிர்க் கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, பெறுபேறுகளை சவால் செய்வதாக அறிவித்தார்.

செய்தியாளர்களுடன் பேசிய பொன்சேகா, தேர்தல் முடிவுகளை திரிபுபடுத்தப்பட்டவை என கண்டனம் செய்ததோடு சட்ட ரீதியில் சவால் செய்யப்போவதாகவும் தெரிவித்தார். "வெற்றி எங்களிடம் இருந்து அரசாங்கத்தால் அபகரிக்கப்பட்டுள்ளது. இங்கு ஜனநாயகம் கிடையாது," என அவர் தெரிவித்தார். இராஜபக்ஷ அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்துள்ளார், தன்னை தாக்குவதற்கு அரச ஊடகங்களைப் பயன்படுத்தியதோடு இடம்பெயர்ந்த தமிழர்கள் வாக்களிப்பதை தடுத்தார் அன்ற அடிப்படையில் வாக்குகளை இரத்துச் செய்யுமாறு கோரி, தேர்தல் ஆணையாளருக்கு ஜெனரல் கடிதமெழுதியுள்ளார்.

அரச இயந்திரங்கள் மீதான தனது கட்டுப்பாட்டை அரசாங்கம் முழுமையாக சுரண்டிக்கொண்டதோடு அரச ஊடகத்தை அதன் பிரச்சார உபகரணமாக பயன்படுத்திக்கொண்டது என்பதில் சந்தேகம் கிடையாது. முன்னைய தேர்தல்களை போலவே, வடக்கு நகரான யாழ்ப்பாணத்தில் நடந்த குண்டு வெடிப்புகள் உட்பட, தேர்தல் தினம் வன்முறைகளால் நிறைந்து போயிருந்தது. பிரச்சாரத்தின் போது, சுமார் 900 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியின் பின்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த பத்தாயிரக்கணக்கான தமிழ் பொது மக்களின் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.

எவ்வாறெனினும், பொன்சேகா பெற்ற 40 வீத வாக்குகளுக்கு எதிராக இராஜபக்ஷ 58 வீத வாக்குகளை அல்லது கிட்டத்தட்ட இரண்டு மில்லியனுக்கு நெருக்கமான வாக்குகளைப் பெற்றுள்ளார். இதுவரை இந்த முடிவுகளை திருத்தக் கூடிய அளவுக்கு வாக்கு மோசடி நடந்ததாக செய்திகள் வரவில்லை. எதிர்க் கட்சிகளான வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) மற்றும் சிங்கள அதிதீவிரவாத மக்கள் விடுதலை முன்னிணியும் (ஜே.வி.பி.) பொன்சேகாவை ஒரு ஜனநாயக மாற்றீடாக முன்னிலைப்படுத்திய போதிலும், அவர் நாட்டின் உயர்மட்ட ஜெனரல் என்ற வகையில், இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் பகிரங்கமான ஜனநாயக உரிமை மீறல்களுக்கு இராஜபக்ஷவைப் போல் அவரும் பொறுப்பாளியாவார். புலிகளின் தோல்வியின் பின்னர் தான் ஓரங்கட்டப்பட்டதை அடுத்தே, பொன்சேகா இராஜபக்ஷவிடம் இருந்து பிரிந்து சென்றார்.

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் பொன்சேகா வெற்றி பெற்றுள்ள அதே வேளை, முன்னர் புலிகளின் ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் கூட்டமைப்பின் ஆதரவு ஜெனரலுக்கு கிடைந்திருந்தும் கூட, இரு வேட்பாளர்கள் மீதான பகைமையும் அதிருப்தியும் வாக்களித்தோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததில் ஒப்புவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில், தொகுதிவாரியான வாக்களிப்பு வெறும் 26 வீதமாகவே இருந்தது. உள்நாட்டு யுத்தத்தின் கடைசி மாதங்களில் அழிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில், ஜனத்தொகையில் பெரும்பகுதியினர் இடம்பெயர்ந்திருந்ததன் ஒரு பகுதியாக, அங்கு வாக்களித்தோரின் எண்ணிக்கை முறையே வெறும் 14 மற்றும் 8 வீதமாகவே இருந்தன.

ஆயினும், சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில், இராஜபக்ஷ கணிசமான பெரும்பான்மையைப் பெற்றுள்ளார். பிரதானமாக கிராமப்புற பிரதேசங்களில் இந்த அளவு மிகப் பெரியதாக இருந்தது. அடிப்படை வேறுபாடுகள் அற்ற மற்றும் நம்பக்கூடிய ஒரு சில வாக்குறுதிகளை மட்டுமே வழங்கிய இரு வேட்பாளர்களுக்கிடையில், பெரும்பான்மையான வாக்காளர்கள் ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதியை தேர்வு செய்துகொண்டனர். மொத்தமாக, நாட்டின் 22 மாவட்டங்களில் 16 மாவட்டங்களை இராஜபக்ஷ வென்றுள்ளார். இந்த பெறுபேறுகள், புலிகளின் தோல்வியின் பின்னர் கடந்த ஆண்டு நடந்த ஒரு தொகை மாகாண சபை தேர்தல்களின் முடிவுக்கு சமாந்தரமாக இருந்தன.

இந்த பிரச்சாரத்தின் கொடுரத் தன்மை கொழும்பு அரசியல் ஸ்தாபனத்திற்குள் நிலவும் ஆழமான வேறுபாடுகளை பிரதிபலிக்கின்றது. புலிகளின் தோல்வியானது தசாப்த காலங்களாக உத்தியோகபூர்வ தமிழர்-விரோத பாரபட்சங்களால் எரியூட்டப்பட்ட, கடைசியாக 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தமாக வெடித்த இனவாத பிளவுகளைத் தீர்க்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த மோதல்கள் நாட்டின் பெரும்பகுதியை அழிவுக்குள்ளாக்கியதோடு நாட்டின் மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியை மேலும் குவித்துள்ளது.

ஆளும் கும்பலின் சக்திவாய்ந்த பகுதினர், சர்வதேச நாணய நிதியத்தின் வயிற்றிலடிக்கும் கோரிக்கைகளை அமுல்படுத்தவும் எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் நசுக்கவும் சிறந்த வழிமுறையாக பொன்சேகாவை ஆதரித்தன. இலங்கையிலான அரசியல், பெரும் வல்லரசுகளுக்கு இடையில் வளர்ச்சி கண்டுவரும் பகைமைக்குள்ளும் அகப்பட்டுக்கொள்கின்றது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடனான நாட்டின் பாரம்பரிய திசையமைவின் செலவில், இராஜபக்ஷ அரசாங்கம் இலங்கையை சீனாவுடன் மிகவும் நெருக்கமாக பிணைப்பது சம்பந்தமாகவும் ஆளும் வட்டாரத்துக்குள் கணிசமான கவலை காணப்படுகிறது.

தேர்தலின் பின்னர் பதட்ட நிலைமைகள் மறைவதற்கு மாறாக, கூர்மையடைகின்றன. எதிர்த் தரப்பினரை அச்சுறுத்தும் ஒரு நடவடிக்கையில், பொன்சேகாவும் அவரது குடும்பமும் மற்றும் அவரது ஆதரவாளர்களும் தங்கியிருந்த மத்திய கொழும்பில் அமைந்துள்ள சினமன் லேக்சைட் ஹோட்டலைச் சூழ நேற்று நூற்றுக்கணக்கான கன ஆயுதம் தரித்த துருப்புக்களும் பொலிசாரும் நிலைகொண்டிருந்தனர். யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி. யின் அனுர குமார திசாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ரவுப் ஹக்கீம் உட்பட ஏனைய எதிர்க் கட்சிகளின் தலைவர்களும் அங்கிருந்தனர்.

ஹோட்டலில் இராணுவத்தை விட்டோடிய 400 பேர் இருக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொண்ட பின்னர் "பாதுகாப்பு நடவடிக்கையை" இராணுவம் மேற்கொண்டதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார ஊடகங்களுக்குத் தெரிவித்தார். "அவர்கள் 100 அறைகளை ஒதுக்கியுள்ளார்கள். அவர்கள் உயர்மட்டத்தில் பயிற்றப்பட்ட இராணுவச் சிப்பாய்கள். அவர்கள் கூடியிருந்ததைப் பற்றி நாங்கள் சந்தேகப்படுகிறோம்," என அவர் கூறினார். நுழைபவர்களையும் வெளியேறுபவர்களையும் சோதனையிட்ட படையினர் அருகில் உள்ள வீதிகளை மூடினர். "அவர் [பொன்சேகா] சதிப் புரட்சியை நோக்கிய முதல் நடவடிக்கையை" எடுப்பதை தடுப்பதற்கே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என ஒரு பெயர் குறிப்பிடாத அதிகாரி ராய்ட்டருக்குத் தெரிவித்தார்.

இராணுவத்தை விட்டோடியவர்கள் தன்னுடன் இருந்தனர் என்பதை மறுத்த பொன்சேகா, அரசாங்கம் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார். தனது பாதுகாப்பு அதிகாரிகளையும் குண்டு துளைக்காத கார்களையும் திருப்பித் தருமாறு கோருவதன் மூலம் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக அவர் இராஜபக்ஷ மீது குற்றஞ்சாட்டினார். "இந்த ஹோட்டல் விலை கூடியது என்பதால் என்னால் இங்கு இருக்க முடியாது. இது என்னை கொல்வதை இலக்காகக் கொண்ட ஒரு பயிற்சியாகும்" என அவர் தெரிவித்தார். பொன்சேகா கைதுசெய்யப்படுவார் என்பதை அரசாங்க அதிகாரிகள் மறுத்ததோடு அவர் நேற்றிரவு ஹோட்டலை விட்டு வெளியேறினார்.

பகை அரசியல் முகாங்களுக்கிடையில் கேட்பாரற்ற மோதல்கள் நடப்பதையே இந்த சம்பவம் முன்னறிவிக்கின்றது. நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் தமிழர்களை கொலை செய்ய அரசாங்க-சார்பு கொலைப் படைகளை பயன்படுத்துவது உட்பட யுத்தமொன்றை முன்னெடுத்த இராஜபக்ஷவும் பொன்சேகாவும், அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவும் பற்றிக்கொள்ளவும் எந்தவொரு வழிமுறையையும் நாடக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இராஜபக்ஷவை வெளியேற்ற, பொன்சேகாவும் எதிர்க் கட்சிகளும் இராணுவம் மற்றும் அரச இயந்திரத்தில் உள்ள ஏனைய சக்திகளையும் பயன்படுத்தக் கூடும் என்ற அரசாங்கத்தின் ஆழமான விழிப்புணர்வையே அந்த ஹோட்டலை சுற்றிவளைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பிரதிபலிக்கின்றன.

தேர்தல் முடிவுகளை எதிர்க்க வீதிப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்க எதிர்பார்க்கின்றீர்களா என டெலிகிராப் செய்தியாளர் கேட்ட போது, "நாங்கள் உடனடியாக மக்களை வீதிக்கு வருமாறு இன்னமும் கேட்கவில்லை. விடயங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். நான் உங்களை ஆச்சரியத்துக்குட்படுத்துவேன், பொறுத்திருந்த பாருங்கள்," என பொன்சேகா பதிலளித்தார். அதை அவர் விரிவுபடுத்தவில்லை. தற்காலிகமாகவேனும் ஜெனரல் இலங்கையை விட்டு வெளியேறலாம் என்பதற்கான சில அறிகுறிகள் காணப்படுகின்றன.

தேர்தல் மோசடி மற்றும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஜனநாயக-விரோத பண்பை வலியுறுத்தும், தேர்தல் மற்றும் முடிவுகள் பற்றிய சர்வதேச செய்தி வெளியீட்டில் ஒரு தெளிவான பக்கச்சார்பை காணக்கூடியதாக உள்ளது. உதாரணமாக, பிரித்தானியாவை தளமாகக் கொண்ட நேற்றைய டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரைக்கு, இராஜபக்ஷவுக்கு அரசுக்குச் சொந்தமான ஊடகம் வெளிப்படையாக பிரச்சாரம் செய்ததை வெளிச்சம் போட்டுக் காட்டி, "அதிகாரத் துஷ்பிரயோகம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகிறது" என தலைப்பிடப்பட்டிருந்ததோடு ஜனாதிபதி, "மேற்கத்தைய ஜனநாயக பயன்பாடு தனது நாட்டுக்குத் தேவையில்லை என நீண்டகாலமாக வாதிடுகின்றார்" என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் செலவில் இலங்கையில் சீனா செல்வாக்கை வளர்த்துக்கொள்வதைப் பற்றி பைனான்சியல் டைம்சும் கவனத்தை திருப்பியுள்ளது. "யுத்தத்தின் போது, ஆயுதங்களை வழங்கி, தீவின் அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்கள் பற்றிய விசாரணைக்கான ஐ.நா. அழைப்பை தடுத்து பெய்ஜிங் இலங்கைக்கு முக்கிய ஆதரவாளராக இருந்துள்ளது. இலங்கை இந்து சமுத்திரத்தின் கடல் மார்க்கத்தின் மூலோபாய முக்கியத்துவத்துடன் அமைந்திருப்பதால் சீனா இலங்கையை நேசிக்கின்றது என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்; ஜனாதிபதியின் சொந்த நகரான அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்றை கட்டுவதற்காக பெய்ஜிங் உதவுகின்றது," என அந்தப் பத்திரிகை பிரகடனம் செய்கின்றது.

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் வேட்பாளர் விஜே டயசும், தமது தேர்தல் பிரச்சாரத்தின் போது, அடுத்த அரசாங்கம் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளில் இருந்து விடுபடும் முயற்சியில் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மீது கொடூரமான தாக்குதலை துரிதமாக தொடுக்கும் என எச்சரிந்திருந்தனர். பொன்சேகாவுக்கும் இராஜபக்ஷவுக்கும் இடையிலான இரக்கமற்ற பகைமை, ஆபத்தை தணித்துவிடவில்லை. மாறாக, ஆளும் வர்க்கத்துக்கு பணயமாக வைக்கப்பட்டுள்ளது என்ன என்பதைப் பற்றிய ஒரு கூர்மையான அறிகுறியாகும். இரு அரசியல் முகாங்களும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள் மீது சுமத்த உறுதிபூண்டுள்ளன.

முன்னாள் இடதுசாரிகளான ஐக்கிய சோசலிச கட்சி மற்றும் நவசமசமாஜக் கட்சிக்கும் எதிராக, சோசலிச வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்துவதன் பேரில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான போராட்டத்தில் சகல முதலாளித்துவ கும்பல்களுக்கும் எதிராக சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலம் மட்டுமே தொழிலாளர்களால் தமது அடிப்படை ஜனநாயக உரிமைகளை காக்க முடியும் என சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்தியது. கொழும்பில் அரசியல் நெருக்கடி ஆழமடைகின்ற நிலையில், அத்தகைய போராட்டத்துக்கான தேவை மேலும் இன்றியமையாததாகியுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் விஜே டயசுக்கு ஒரு சிறிய ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த வாக்குகள் கிடைத்துள்ளன. 2005 ஜனாதிபதி தேர்தலில் கிடைத்ததை விட இம்முறை கூடுதலாக 4,195 வாக்குகள் கிடைத்துள்ளன. கட்சி நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் மற்றும் தேர்தல் தொகுதிகளில் அனைத்திலும் வாக்குகளைப் பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், பிரதானமாக தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் முக்கியமான தட்டினரிடம் இருந்து வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சி 657 வாக்குகளை பெற்றுள்ளது. தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பு மீதான சோசலிச சமத்துவக் கட்சியின் இடையராத எதிர்ப்பின் காரணமாக பெருமளவான பெருந்தோட்ட தொழிலாளர்கள் வாழும் நுவரெலியா மாவட்டத்தில் 310 வாக்குகளைப் பெற்றுள்ளது.

மாறுபட்ட விதத்தில், முன்னாள் தீவிரவாதிகளின் ஆதரவு பெருமளவில் சரிந்து போயுள்ளது. யூ.என்.பி. யின் "சுதந்திரத்துக்கான மேடையில்" அதனுடன் சந்தர்ப்பவாத கூட்டணியை வைத்திருந்த ஐக்கிய சோசலிச கட்சி, 8,352 வாக்குகளையே பெற்றுள்ளது. இது 2005ல் பெற்ற 35,425 வாக்குகளோடு பார்க்கும் போது பெரும் வீழ்ச்சியாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்த எம்.கே. சிவாஜிலிங்கத்துடன் தேர்தல் கூட்டை ஏற்படுத்திக்கொண்ட நவசமசமாஜக் கட்சி, 2005 தேர்தலில் பெற்ற 9,296 வாக்குகளை விட இம்முறை 7,055 வாக்குகளையே பெற்றுள்ளது. பொன்சேகா மற்றும் இராஜபக்ஷ மீது தமிழ் மக்கள் மத்தியில் இருந்த அதிருப்திக்கு அழைப்புவிடுக்க முயற்சித்த சிவாஜிலிங்கம், 9,662 வாக்குகளையே பெற்றார்.

இந்த சந்தர்ப்பவாத போக்குகளைப் போல், அடிநிலையில் உள்ள அரசியல் முன்னெடுப்புகளின் திரிபுபடுத்தப்பட்ட வெளிப்பாடாக தோன்றும் உத்தியோகபூர்வ தேர்தலில் பெறும் வாக்குகளின் எண்ணிக்கையில் தனது வெற்றியையோ அல்லது தனது முன்நோக்கின் மதிப்பையோ சோசலிச சமத்துவக் கட்சி மதிப்பிடுவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சோசலிச சமத்துவக் கட்சி பெற்ற வாக்குகள், இந்த சந்தர்ப்பத்தில் மட்டுப்படுத்தப்பட்ட, ஒரு நிச்சயமான புள்ளியை, அதாவது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தட்டினர் மத்தியிலான தீவிரமயமாதலை சுட்டிக்காட்டுகிறது. சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களித்தவர்கள் செய்யவேண்டிய மிக முக்கியமான நடவடிக்கை எதுவெனில், எமது வேலைத்திட்டத்தையும் முன்நோக்கையும் கவனமாக படிப்பதோடு அடுத்து வரவுள்ள வர்க்க யுத்தத்திற்கு தேவையான தலைமைத்துவமாக கட்சியை கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ள விண்ணப்பிப்பதுமாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved