World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குUS Marines in Haiti: Back to colonialism ஹைட்டியில் அமெரிக்க மரைன்கள்: காலனித்துவ முறைக்கு மீண்டும் திரும்புதல் Bill Van Auken அமெரிக்கச் செய்தி ஊடகமானது ஹைட்டி பேரழிவு பற்றிக் கொடுத்துவரும் தகவல்கள் பெருகிய முறையில் அமெரிக்க சிப்பாய்களும் மரைன்களும் கரிபிய நாட்டில் செய்துவருவதாகக் கூறப்படும் மனிதாபிமானப் பங்கு பற்றிய கட்டுரைகள் மற்றும் ஒளிபரப்படுகின்ற அறிக்கைகளை தாங்கி வெளிவருகின்றன. இவை பொதுவாக எப்படி ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் "போரினால் உறுதியடைந்த" நீண்ட காலம் பணிபுரிந்தவர்கள் நிலநடுக்கத்தில் தப்பிப் பிழைத்துள்ளவர்களுக்கு உதவும் கரங்களை நீட்டுகின்றனர் என்று விளக்குகின்றன. ஹைட்டிய பேரழிவை எதிர்கொள்ளும்போது அமெரிக்கா அப்பகுதியை இராணுவமயமாக்குகிறது என்று பெருகிவரும் சர்வதேசக் குறைகூறலுக்கு பதிலளிக்கும் நோக்கத்தையே இத்தகவல்கள் கொண்டுள்ளன; மருத்துவத் தேவைகள், உணவு, நீர் என்று உயிர்களை காப்பாற்றத் தேவையானவற்றிற்கு பதிலாக போருக்குத் தயாராக இருக்கும் படைகளை இறக்குவதற்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. உதாரணமாக, எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர், "உணவைத் துப்பாக்கியுடன் வழங்குவதில் தீவிரக் குழப்பம் உள்ளது" என்பது பற்றிக் கவலை தெரிவித்தார். இந்த அமைப்பு பலமுறை, Port-au-Prince விமான நிலையத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த அமெரிக்க இராணுவத்தை இந்த அமைப்பு கொண்டுவந்த மருத்துவப் பொருட்கள் திருப்பி அனுப்பியது பற்றி முறையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. அதையொட்டி பல நோயாளிகள் இறந்துவிட்டதாகவும் அது கூறியுள்ளது. நூறாயிரக்கணக்கானவர்கள் இறந்தும், இன்னும் நூறாயிரக்கணக்கானவர்கள் காயமுற்ற நிலையில், ஹைட்டியில் உள்ள துருப்புக்களிடையே ஹைட்டிய மக்கள் படும் கஷ்டங்கள், பேரழிவின் தாக்கம் பற்றி சந்தேகமின்றி அதிர்ச்சியும், பரிவுணர்வும் உள்ளன. ஆனால் அவர்களை அங்கு அனுப்பிய வாஷிங்டனில் உள்ளவர்களும், அவர்கள் மீது கட்டுப்பாடு கொண்டுள்ள மூத்த அதிகாரிகளும் வேறு நோக்கங்களின் அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டு வருகின்றனர்; இதை அவர்களது பணி பற்றிய சமீபத்திய செய்தி ஊடகத் தகவல் ஒன்று தெளிவாக்குகிறது. திங்களன்று USA Today வெளியிட்ட "Marines Studied Their Own History in Hairi" என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரை ஒன்று, நாடு " மரைன் பிரிவுகளின் புலமை ஒரு முக்கிய பகுதியாகக் கொண்டிருந்தது" என்று விளக்கியுள்ளது. "1915ல் இருந்து 1934 வரை ஒரு அமெரிக்க எதிர்ப்புச் சர்வாதிகாரி பதவி ஏற்பதை தடுப்பதற்காக அனுப்பப்பட்ட பிரிவின் ஆக்கிரமிப்பிற்கு பின்னர் மரைன்கள் ஹைட்டியை நிர்வகித்தன. உயர் பதவியில்லாத யங் என்பவர் அதிக மேற்பார்வை இல்லாமலேயே ஹைட்டியை நிர்வகித்தார்." மரைன் விநியோகப் பிரிவின் தளபதி லெப்டினட் கேணல் Gary Keim தானும் மற்ற அதிகாரிகளும் ஆக்கிரமிப்பின் வரலாற்றை பயின்றுள்ளதாக ஹைட்டிக்கு செல்லுமுன் கூறினார்கள் என்று USA Today மேற்கோளிட்டுள்ளது. "நாங்கள் அதைப் படிக்குமாறு கூறப்பட்டோம். நாங்கள் அங்கு முன்பே இருந்திருக்கிறோம். வெற்றியுடனும் இருந்திருக்கிறோம்" என்றார் அவர். "மரைன்கள் நாட்டைக் கட்டமைக்கவும், எழுச்சி எதிர்ப்பு மூலோபாயங்களை கட்டமைக்கவும் முன்மாதிரியான ஆண்டுகள் என்று அவற்றைக் கண்டனர்" என்று கட்டுரையில் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளது. ஒபாமா நிர்வாகத்தினால் ஹைட்டிக்கு அனுப்பப்பட்ட மரைன்கள் முழு நனவுடன் தங்கள் பணியை, 1934ல் முடிவுற்ற 20 ஆண்டு "வெற்றிகரமான" ஆக்கிரமிப்பின் முன்மாதிரியில் கொண்டுள்ளனர் என்பது ஐயத்திற்கு இடமின்றி அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. 95 ஆண்டுகளுக்கு முன்பு மரைன்கள் முதலில் ஹைய்ட்டியின் மீது படையெடுத்தபோது, அதுவும் ஒரு மீட்புப் பணி, ஜேர்மனிய மேலாதிக்கத்தில் இருந்து அமெரிக்கா ஹைய்ட்டிய உயிர்களைக் காப்பாற்றுவதற்கு என்று கூறப்பட்டது. இராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதோடு, படையெடுத்த பிரிவு ஹைட்டியின் கருவூலம், சுங்கச் சாவடிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது; அதே நேரத்தில் ஆயுதமேந்திய மரைன்கள் நாட்டின் பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டு வாஷிங்டன் விரும்பியவரை ஜனாதிபதியாக இருத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது. அடுத்த இரு தசாப்தங்களில் 3,000 ஹைட்டியர்கள் ஆக்கிரமிப்பாளர்களால் கொல்லப்பட்டனர்; மரைன்கள் 16 பேர்தான் இறந்தனர். ஆக்கிரமிப்பின் ஆரம்ப ஆண்டுகள் காகோஸ் என்று அழைக்கப்பட்ட முன்னாள் ஹைட்டிய இராணுவ அதிகாரி சார்லமேன் பேரேல்டே தலைமையில் விவசாயிகளை தளமாகக் கொண்ட கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்பு இயக்கத்தின் எதிர்ப்பை அடக்கும் செயலைக் கண்டன. இந்த இயக்கம் ஹைட்டிய மக்களின் மிக ஒடுக்கப்பட்ட தட்டுகளின் பரந்த ஆதரவைப் பெற்றிருந்தது; இதற்குக் காரணம் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் பயன்படுத்திய மிருகத்தனமான வழிமுறைகள்தான்; நிலங்களில் இருந்து விவசாயிகள் அகற்றப்பட்டு சங்கிலி பிணைக்கப்பட்ட குழு தொழிலாளர்களாக மாற்றப்பட்டனர். USA Today கட்டுரை கூறுவதுபோல், மரைன்கள் புதிய "எழுச்சி-எதிர்ப்பு நடவடிக்கை தந்திரோபாயங்களை" அறிமுகப்படுத்தினார்கள்; இவைதான் பின்னர் வியட்நாமில் இருந்து ஆப்கானிஸ்தான் வரை பழையபடி செய்யப்படும்; இதில் அமெரிக்க இராணுவம் முதல் தடவையாக தரைப்படைத் தாக்குதல்கள் காகோஸ் மீதும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்த விவசாயிகள் மீது நடத்தப்பட்டதற்கு வான்வழி ஆதரவு கொடுத்தது. தற்போதைய அமெரிக்கப் போர்களில் இருப்பதை போலவே, கைதிகள் அடிக்கப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டன; பல சமயங்களில் விசாரணையின்றி தூக்குப் போடுதலும் நடந்தன.பேரால்டேயே கைப்பற்றப்பட்டு 1919ல் மரைன்களால் கொல்லப்பட்டார். அவருடைய சடலம், சிலுவை முறையில் ஒரு கதவில் அறையப்பட்டு மக்களை மிரட்டுவதற்காக பொதுப் பார்வையில் வைக்கப்பட்டது. ஹைட்டிய அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்து வெளிநாட்டினர் நிலம் வாங்க உரிமை உடையவர்கள் என்று முதல் தடவையாகக் கொண்டுவந்தது; 1804ல் பிரான்சில் இருந்து நாடு சுதந்திரத்தை அடிமை எழுச்சி மூலம் அடைந்ததற்கு பின்னர் முதல் தடவை அத்தகைய உரிமை கொடுக்கப்பட்டது. ஹைட்டிய அடக்குமுறைப் படை ஒன்றை அமெரிக்கா கட்டமைக்க முற்பட்டது; இதன்மீது Garde d'Haiti என்று அழைக்கப்பட்ட மரைன் அதிகாரிகள் கட்டுப்பாட்டை கொண்டிருந்தனர். இந்தப் பிரிவு தோற்றுவிக்கப்பட்ட அந்த நேரத்தில் அந்நாட்டை ஒரு அமெரிக்க காலனித்துவ மேலாதிக்கம் கொண்ட "ஹைய்ட்டிய வகையாக்குதல்" என்று செய்தி ஊடகம் குறிப்பிட்டது. ஹைட்டியில் இருந்த அமெரிக்க இராணுவம் பெருகிய மக்கள் எதிர்ப்பை அடுத்து வெளியேற நேர்ந்தது. கோப்பி விலைச் சரிவை அடுத்து, 1929ல் பொருளாதார நெருக்கடி நாட்டை சூழ்ந்ததால் ஏற்பட்ட வெகுஜன அமைதியின்மையினால் படைகளை திரும்பப் பெறும் முடிவு விரைவுபடுத்தப்பட்டது. மாணவர் வேலைநிறுத்தத்துடன் தொழிலாளர்கள், விவசாயிகள் வேலை நிறுத்தங்களும் பல பகுதிகளில் நடந்தன. தென்மேற்கில் Cayes ல் ஆயிரக்கணக்கான விவசாயிகள், கற்கள், தடிகள் மற்றும் கூரிய கத்திகளுடன் தானியங்கி ஆயுதங்களை வைத்திருந்த மரைன்களை டிசம்பர் 6, 1929ல் எதிர்கொண்டனர். மரைன்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 24 ஹைய்ட்டியர்கள் கொல்லப்பட்டனர், 51 பேர் காயமுற்றனர். ஒரு மரைன் காயமுற்றதாகக் கூறப்பட்டது. பின்னர் இப்பிரிவின் தளபதிக்கு, படுகொலைகளை இயக்கியதற்காக Navy Cross என்னும் விருது கொடுக்கப்பட்டது. 1931 ல் ஆரம்பத் தலையீட்டிற்கு தலைமை தாங்கிய மரைன் அதிகாரி Smedley Butler, இரு ஆண்டுகளுக்கு ஹைட்டிய பாதுகாப்புப் படைகளுக்கு தலைமை தாங்கி, தன்னுடைய பணியைப் பற்றிய வெளிப்படையான மதிப்பீட்டைக் கொடுத்தார். "நான் முதலாளித்துவத்திற்காக செயல்பட்டேன். National City நபர்கள் பணத்தை வசூல் செய்ய கெளரவ இடமாக ஹைய்ட்டியை மாற்ற உதவினேன்". சிட்டி வங்கிக்கு முன்னோடியான National City ஹைட்டியின் ரயில் பாதைகளையும் மற்றும் பெரிய வங்கியையும் கட்டுப்படுத்தியது. அமெரிக்க படையெடுப்பிற்கு பின்னர் அது ஹைட்டியின் கருவூலத்தின் பொறுப்பையும் எடுத்துக்கொண்டது.மரைன்களின் ஆக்கிரமிப்பு ஒரு சக்தி வாய்ந்த அமெரிக்க மேலாதிக்கம் நிறைந்த ஒரு இராணுவத்தை பல தசாப்தங்கள் நாட்டின் அரசியல் வாழ்வைக் கட்டுப்படுத்தும் செயலுக்காக விட்டுச் சென்றது; 1957ல் அதிகாரத்திற்கு Duvalier உடைய சர்வாதிகாரத்தை கொண்டுவந்தது; அதுவோ 30 ஆண்டுகள் காட்டுமிராண்டித்தன அடக்குமுறையை பயன்படுத்தி ஹைட்டியில் ஆட்சி செய்தது. இந்தக் கொடூரமான மரபு ஹைட்டிய மக்களை வறுமை, அடக்கு முறையில் தள்ளியதானது, ஜனவரி 12 நிலநடுக்கத்தால் இத்தகைய பெரும் மனித இறப்புக்களைப் பெற அனுமதித்த சமூகப், பொருளாதார நிலைமையை தோற்றுவித்தது. இன்றைய மரைன் தளபதிகள் 20ம் நூற்றாண்டு ஆரம்ப ஆக்கிரமிப்பை அவர்களுடைய தற்போதைய நடவடிக்கைக்கு முன்னோடியாக கருத்தில் கொள்ளுவது ஒரு எச்சரிக்கையை தருகிறது. மனிதாபிமானப் பணிகளுக்கு பின்னுள்ளது, வாஷிங்டனின் ஹைட்டி தலையீடு அமெரிக்க கண்டங்களிலும் உலகம் முழுவதும் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை உறுதியூட்டும் முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் உள்ளது. ஹைட்டியில் அமெரிக்க இராணுவம் அதன் தெற்கே இருக்கும் நாடுகளின் மீதான மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த நிலைப்படுத்தப்பட்டுள்ளது; இங்குத்தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ஆரம்பத்தை கொண்டுள்ளதோடு, இங்கே இப்பொழுது கூடுதலான சவால்களை ஐரோப்பிய, சீனப் பொருளாதார போட்டியாளர்களிடம் இருந்து எதிர்கொள்ளுகிறது. 1934ம் ஆண்டு தலையீட்டில் முடிந்ததை போலவே, அமெரிக்க துப்பாக்கிகள் தவிர்க்க முடியாமல் ஹைட்டிய தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக அவர்களை வறுமை, பட்டினி நிலை வைத்திருக்கும் ஊதியங்கள் மற்றும் ஆழ்ந்த சமூக சமத்துவமின்மையில் தள்ளுவதற்கு பயன்படுத்தப்படும். |