இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான கசப்பான சட்ட மற்றும் அரசியலமைப்பு
பகை, அரசாங்கம் எதிர்க் கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை தகுதியற்றவராக்க சட்ட நடவடிக்கை
எடுப்பதாக அச்சுறுத்தியதை அடுத்து உக்கிரமடைந்துள்ளது. தேர்தல் தினத்தன்று வாக்காளர் பட்டியலில் பொன்சேகா
இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அதனால் வாக்களிக்க முடியாது என சட்ட ரீதியில் சவால் செய்யும்
அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
தான் 2008 வாக்காளர் பட்டியலில், தனது பெயரை நிரப்பியதாகவும் ஆனால் அது
பதிவுசெய்யப்படவில்லை எனவும் பொன்சேகா வலியுறுத்தினார். தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க
ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது: "ஒருவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பது [வேட்பாளராக
போட்டியிடுவதற்கு] ஒரு தகுதியின்மை அல்ல." எவ்வாறெனினும், வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம,
"இந்த வேட்பாளர் ஒரு வேட்பாளராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்ற காரணத்தால் அவரது தகுதி சம்பந்தமாக
நீதிமன்ற உத்தரவொன்றை பெற நாம் முயற்சிக்கின்றோம்," என தெரிவித்தார். அமெரிக்க கிரீன் கார்ட் வைத்திருக்கும்
பொன்சேகா, தகுதியானவரா என்றும் கூட அரசாங்கம் கேள்வியெழுப்பியுள்ளது.
இந்த பிரச்சினை, தற்போதைய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவோ அல்லது
பொன்சேகாவோ தேர்தல் முடிவுகளை அமைதியாக ஏற்றுக்கொள்வார்களா என்பது பற்றிய மேலுமொரு அறிகுறியாகும்.
கடந்த மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வியின் பின்னர், இலங்கை ஆளும்
வட்டராத்துக்குள் ஏற்பட்டுள்ள கூர்மையான வேறுபாடுகளையே இந்த கொடுரமான போட்டிகொண்ட தேர்தல்
பிரதிபலிக்கின்றது.
மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், உழைக்கும் மக்களின்
வாழ்க்கைத் தரத்தின் மீது கடுமையாகத் தாக்குதல் தொடுக்கவும் அரசியல் எதிர்ப்புக்களை நசுக்கவும் சிறந்த
அரசியல் உபகரணமாக இருப்பார் என ஆளும் தட்டின் சில பகுதியினர் ஜெனரல் பொன்சேகாவை கணிக்கின்றனர்.
அதே சமயம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உடனான நாட்டின் பாரம்பரிய உறவுகளின் செலவில், இராஜபக்ஷ
அரசாங்கம் உதவிக்கு சீனாவில் மேலும் மேலும் தங்கியிருப்பதையிட்டும் அவர்கள் கவலை கொண்டுள்ளனர்.
நேற்று தொடங்கிய வாக்கு எண்ணும் நடவடிக்கை தொடர்கின்றது. அண்மையில் எண்ணி
முடிக்கப்பட்ட ஒரு பகுதியின்படி, 59.7 வீதத்திலிருந்து 38.5 வீதம்வரை பெரும் இடைவெளியில் இராஜபக்ஷவுக்கு
மூன்றில் ஒரு பெரும்பான்மை வெற்றி கிட்டியிருந்தது. அரசாங்க ஊழியர்களின் வாக்குகள் உட்பட, ஆரம்ப தபால்
மூல வாக்குகள் இராஜபக்ஷவுக்கு ஆதரவாக இருந்தன. தேர்தல் நாளுக்கு முன்னதாக, இறுதி தேர்தல் முடிவுகள்
நெருக்கமாக அமையும் என பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்தனர்.
26 ஆண்டுகால யுத்தத்தில் சீரழிந்து போயுள்ள வடக்கில் வாக்களித்தோரின் அளவு
வெறும் 20 வீதமே என தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் மதிப்பிட்டிருந்தது. தீவின் தமிழ்
சிறுபான்மையினரில் பலர், வாக்காளிக்காமல் இருப்பதன் மூலம், 2006ல் யுத்தத்தை புதுப்பித்த இராஜபக்ஷவுக்கும்
இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்த பொன்சேகாவுக்கும் இடையில் ஒருவரை தேர்வு செய்வது பற்றி வெறுப்பை
வெளிப்படுத்தினர்.
தீவின் ஏனைய பகுதிகளில் வாக்களிப்பு 80 வீதமாக இருந்தது. ஆனால் இரு
வேட்பாளர்கள் பற்றியும் சிறு ஆர்வமே இருந்தது. புலிகளின் தோல்வியானது சமாதானமும் சுபீட்சமும் நிறைந்த
புதிய யுகத்தைக் கொண்டுவரும் என இராஜபக்ஷ கூறிக்கொண்ட போதிலும், அவர்களது வாழ்க்கைத் தரம்
தொடர்ந்தும் சீரழிந்து வருவதாக பல உழைக்கும் மக்கள் குறிப்பிட்டனர். பல இடங்களில், தாம் "குறைந்த
தீங்கு" என கருதியவர்களுக்கு வாக்களித்துள்ளனர்.
கொழும்பு புறநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆசிரியர்
உலக சோசலிச வலைத் தளத்துக்குத்
தெரிவித்த்தாவது: "நான் ஒரு கண்டன வாக்களிப்பாக பொன்சேகாவுக்கு வாக்களித்தேன். நான் ஜனாதிபதி
மஹிந்த இராஜபக்ஷவின் கட்சியின் நீண்ட கால ஆதரவாளராக இருந்தேன். ஆனால் அவரது ஆட்சி முறையை
எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் ஒரு சர்வாதிகாரி போல் செயற்படுவதோடு பாராளுமன்றத்தையும்
சட்டத்தையும் புறக்கணிக்கின்றார். தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட அவர் தேர்தல் விதிகளை
மீறியுள்ளார். உலகிலேயே பெரிய அமைச்சரவை அவருக்கு இருந்த போதும், அமைச்சர்கள் வெறும்
பொம்மைகளாக இருப்பதோடு அவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அவர் தனது சகோதரர்கள் உட்பட
ஒரு தட்டை கொண்டே நாட்டை ஆள்கின்றார்.
தேர்தல் தினம், வடக்கு நகரான யாழ்ப்பாணத்தில் நடந்த குண்டு வெடிப்புகள்
உட்பட வன்முறைச் சம்பவங்களால் குழம்பிப் போயிருந்தது. பிரதானமாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில்
கிட்டத்தட்ட 100 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்திய தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம், அந்த
எண்ணிக்கை 150 ஆக அதிகரிக்கக் கூடும் என்றும் சுட்டிக்காட்டியது. எல்லாமாக ஐந்து சாவுகள் உட்பட 1,000
தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பிரச்சார காலத்தில் இடம்பெற்றுள்ளன. அதிகமானவை எதிர்க்கட்சி
அரசியல்வாதிகள் மற்றும் அலுவலர்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ளன.
தனது எதிரிகளை அச்சுறுத்துவதற்காக இராஜபக்ஷ அரசாங்கம் அரச இயந்திரத்தைப்
பயன்படுத்துவதற்கான ஆதரங்கள் உள்ளன. திங்கட் கிழமை, ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பி.) தலைவர்
ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டில் ஆயுதம் இருப்பதாகவும் அதை தேடுவதற்கென்று பொலிஸ் குற்றப் புலணாய்வுத்
திணைக்களம் பிடி ஆணை பெற முயற்சித்தது. யூ.என்.பி. யும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) தமது
பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றன. பொலிஸ் முன்வைத்த விண்ணப்பத்தை
நீதிமன்றம் மறுத்தது.
இன்னுமொரு சம்பவத்தில், சண்டே டைம்ஸ்,
டெயிலி மிரர் மற்றும் ஏனைய பத்திரிகைகளையும் பிரசுரிக்கும் விஜய
பத்திரிகை குழுமத்தின் அலுவலகத்தில் தேடுதல் நடத்துவதற்கு பொலிசாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எதிர்க்
கட்சிக்கு ஆதரவளிக்கும் லங்கா ஈ நியூஸ்.கொம் என்ற இணையத் தளத்தின் ஆசிரியர் பிரகீத் எக்னெலிகொட பல
நாட்களாக காணாமல் போயுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக, அரசாங்க சார்பு கொலைப் படைகளால்
கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன நூற்றுக்கணக்கானவர்களில் பத்திரிகையாளர்களும் ஊடக சேவையாளர்களும்
அடங்குவர்.
யாழ்ப்பாணத்தில், திங்கள் மாலை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற
உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் வீட்டின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. அவரது சாரதியின் வீட்டையும்
மற்றும் அவரது வாகனத்தையும் கூட குண்டர்கள் தாக்கினர். புலிகள் தோல்வியடையும் வரை அவர்களின் ஊதுகுழலாக
செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, தனது ஆதரவை பொன்சேகாவுக்கு வழங்கியது.
வாக்கு மோசடிகள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. பலர், பிரதானமாக
வடக்கில் யாழ்ப்பாண குடாநாட்டிலும் அதைச் சூழவுள்ள பிரதேசத்திலும் வாழும் தமிழர்களுக்கு வாக்காளர் அட்டை
கிடைக்கவில்லை அல்லது தேசிய அடையாள அட்டை இல்லை அதனால் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை. ஏனையவர்கள்
யுத்தத்தால் இடம்பெயர்ந்திருந்ததால் அவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
யுத்தம் முடிவடைந்ததை அடுத்து, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த
280,000 சிவிலியன்களை சுற்றிவளைத்த இராணுவம், அவர்களை வவுனியா நகருக்கு அருகில் பிரமாண்டமான
சிறைமுகாங்களில் குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைத்திருந்தது. கடந்த மாதம், தமிழ் வாக்குகளைப் பெறும்
முயற்சியில், இராஜபக்ஷ அவர்களை சுதந்திரமாக நடமாட அறிவித்தார். ஆயினும், சுமார் 100,000 மக்கள்
இன்னமும் முகாங்களில் தங்கியிருக்கின்றனர்.
வவுனியா முகாங்களில், 24,000 மக்கள் மட்டுமே வாக்காளர்களாக பதிவுசெய்துகொண்டுள்ளனர்.
முகாங்களை விட்டு வெளியேறியவர்களில், கிளிநொச்சியில் தமது வாக்குகளை அளிக்கத் தகுதிபெற்ற சுமார் 8,000
பேர் உட்பட 16,000 பேர் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர். எவ்வாறெனினும், போதுமான போக்குவரத்தை
அதிகாரிகள் வழங்காததால் பலரால் கிளிநொச்சிக்கு பயணிக்க முடியாமல் போனது. தேர்தல் வன்முறை
கண்காணிப்பு நிலையம், வாக்குச் சாவடி 4 மணிக்கு மூடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாக சுமார் 300 பேர்
கிளிநொச்சி வாக்குச் சாவடிக்கு சென்றதோடு அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என சுட்டிக்
காட்டியுள்ளது.
பல தமிழர்கள் இராஜபக்ஷவை கண்டனம் செய்வதற்காக பொன்சேகாவுக்கு வாக்களிக்க
எதிர்பார்த்துள்ளனர். கொழும்பு புறநகர் பகுதியான வெள்ளவத்தையைச் சேர்ந்த ஒருவர் எமது வலைத்
தளத்துக்குத் தெரிவித்ததாவது: "நான் பொன்சேகாவுக்கு வாக்களித்தேன். எங்களுக்கு ஒரு மாற்றம் வேண்டும்.
அங்கும் இங்கும் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நான் கேள்விப்பட்டேன். இராணுவ ஒடுக்குமுறை காரணமாக
யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் தேர்தலைப் புறக்கணிப்பது பற்றி சிந்திக்கின்றார்கள். இரு வேட்பாளர்களும் [இராஜபக்ஷவும்
பொன்சேகாவும்] திருடர்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்களால் என்ன செய்ய முடியும்?"
பொன்சேகாவை வேட்பாளர் நிலையில் இருந்து தகுதியற்றவராக்குவதற்கான அரசாங்கத்தின்
அச்சுறுத்தல், கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தில் தொடரும் அரசியல் உள்மோதலில் ஒரு வெளிப்படையான சூட்டின்
பண்பைக் கொண்டுள்ளது. அவர் தோற்றால், பொன்சேகாவும் அவரது ஆதரவாளர்களும், வாக்கு மோசடி மற்றும்
வன்முறை என்ற அடிப்படையில் பெறுபேறுகளை சவால் செய்து தமது சொந்த சட்ட சவாலை விடுத்து பிரதிபலிக்கலாம்.
ஈரானிய ஜனாதிபதி தேர்தலோடு, கொழும்பில் அரசியல் செல்வாக்குக்காக பெரும் வல்லரசுக்கிடையிலான பரந்த
மோதல்களில் இலங்கை தேர்தல் முடிவுகள் சச்சரவானவையாகும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன.
ஆளும் தட்டின் எந்தவொரு பகுதியினரும் உழைக்கும் மக்களின் நலன்களை பிரதிநித்துவம்
செய்யவில்லை. நாட்டின் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் மீதும் வெகுஜனங்களின்
மீதும் தினிக்கும் தமது உறுதிப்பாட்டில் ஒட்டு மொத்த அரசியல் தட்டும் ஐக்கியமாக இருக்கின்றது.
ஆசிரியர் பின்வரும் கட்டுரைகளையும் சிபாரிசு செய்கின்றார்:
இலங்கை தேர்தல் ஆழமான அரசியல் நெருக்கடிக்கு களம் அமைக்கின்றது
2010 ஜனாதிபதி தேர்தலுக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் விஞ்ஞாபனம்
சமூக சமத்துவம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக போராடுவதற்கு ஒரு சோசலிச
வேலைத் திட்டம்